வாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!..
மழைக்காலங்களில் வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவர உயிரினம் காளான். இது மண்ணில் வளரும் ஒரு தாவரம். ஆனாலும், பெரும்பாலும் மக்கிப்போன பொருள்களின் மீது வளரக்கூடியது. இயற்கையாக வளரக்கூடிய காளான்களில், சில விஷமற்றவை, சில விஷமுள்ளவை. பொதுவாக, விஷக்காளான்கள் பல வண்ணங்களில் காணப்படும். துர்நாற்றம் வீசக்கூடியவையாகவையும் இருக்கும். உண்ணத் தகுந்த விஷமற்ற காளான்கள், சுவையுள்ளவை. அதிகச் சத்துகள் நிறைந்த. அதோடு, நிறைய மருத்துவப் பயன்கள் கொண்டவை. பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் இவை பலதரப்பட்ட சூழல்களில் வளருபவை. முற்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் உணவாக இருந்தது காளான். இப்போது பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நாட்டுக் காளான் தொடங்கி, பால், அரிசி, முட்டை, மொக்கு, சிப்பி, பூஞ்சை, நாய்க்குடை காளான் உள்ளிட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 2,000 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இதில், பச்சையம் இல்லாததால், ஒளிச்சேர்க்கை இல்லாமலேயே தனக்குவேண்டிய உணவைப் பெறக்கூடியது. எனவேதான், காளான்கள் உணவுக்காகப் பிற உயிர்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒட்டுண்ணியாகவும் சாறுண்ணியாகவும் இருப்பதால் இவை தம் உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றன. உதாரணமாக, நச்சுக்காளான்கள் மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துகளை உறிஞ்சி அவற்றைப் பட்டுப்போகச் செய்துவிடுகின்றன. காய்கறிகள் அழுகிப்போகவும் இவை காரணமாக இருக்கின்றன.
பேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும் ஈஸ்ட் காளான் மிகவும் அவசியம். அதே நேரத்தில் தொண்டை மற்றும் வாயில் கொப்பளங்களை ஏற்படுத்தித் தொல்லை தருவதும் அந்த ஈஸ்ட் காளான்தான்.
காளானில் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்திருப்பதால், இறைச்சிகளுக்கு இணையான ஓர் உணவுப்பொருள் இது எனலாம். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதச்சத்து. இறைச்சி மற்றும் முட்டையில் புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. ஆனால் அவை ரத்தக்குழாயில் கொலஸ்ட்ராலைச் சேமித்து, அபாயத்தை ஏற்படுத்திவிடும். மாறாக, காளானில் கொழுப்புச்சத்து இல்லாததால், அந்தப் பிரச்னை எதுவும் இல்லை. ஆகவேதான் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல் மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி போன்றவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக