புதன், 12 ஜூலை, 2017

எலுமிச்சை - கொத்தமல்லி சூப்!



எலுமிச்சை - கொத்தமல்லி சூப்!


சமீபத்தில் என் நண்பர் எலுமிச்சை - கொத்தமல்லி சூப் என்றொரு நூதன ருசிமிகு திரவத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அருந்தி முடித்ததுமே அடுத்த கப் ஆர்டர் செய்யலாமா என்று யோசிக்க வைத்த தரம். எளிய கிரியேடிவிடிதான்.

 பிடி கொத்தமல்லியை அலசிப் போட்டுக் கொதிக்கவிட வேண்டியது.

நாலு துண்டு வெள்ளரி, நாலு துண்டு கேரட் தவிர வேறு அலங்காரங்கள் ஏதும் கிடையாது.

 இருக்கவே இருக்கிறது மிளகு, சீரக சேர்மானங்கள்.

 கொதி வந்து இறக்கியதும் தேவைக்கு எலுமிச்சை சாறு பிழிந்தால் முடிந்தது.

 கொத்தமல்லியின் ருசியோடு எலுமிச்சைப் புளிப்பு சேரும்போது கிடைக்கிற அனுபவமே இதனைக் குறிப்பிட வைக்கிறது.

பிரச்சினை என்னவென்றால் உணவகங்களில் இந்த சூப் வகையறாக்களில் கண்ணை மூடிக்கொண்டு சோள மாவைக் கொட்டிவிடுவார்கள்.

 அது உடம்புக்கு அத்தனை நல்லதல்ல என்பது தவிர, ஒரு பானம் எதற்காக திடகாத்திரமாக இருக்க வேண்டும்?


கேட்டால், அதுதான் சமையல் குறிப்புகளில் உள்ளது என்று சொல்லிவிடுவார்கள் மகானுபாவர்கள்.

 எல்லாம் வெள்ளைக்கார சதி.
அடிப்படையில் இந்த சூப் இனத்தின் ஆதி வடிவம் நமது ரசம்தான்.

மனித குலம் நெருப்பின் பயன்பாட்டைக் கண்டுபிடித்த சொற்ப காலத்துக்குள்ளாகவே ரசம் முயற்சி செய்யப்பட்டுவிட்டது.

 அதை ஒரு ருசிகர பானமாக்கியது அநேகமாக நாமாகத்தான் இருப்போம்.

எனக்கு ரசத்தின் ருசியைக் காட்டிலும் அது தயாராகும் போது எழும் வாசனை ரொம்பப் பிடிக்கும்.

 இன்ஹேலர் அடிமைகளைப் போல் நான் ரச வாசனை அடிமை.

 ஒரு நல்ல ரசத்தின் வாசனையானது, உள்ளே அது கொதிக்கும்போது வீதியில் அடிக்க வேண்டும் என்பது இலக்கணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக