புதன், 21 மார்ச், 2018

எல்லாம் வல்ல ABC ஜூஸ்..!(Miracle Drink)


எல்லாம் வல்ல ABC ஜூஸ்..!(Miracle Drink)

ABC டிரிங்க் கேள்விப்பட்டிருக்கீங்களா?
Apple, Beetroot, Carrot இந்த மூன்றும் சேர்ந்த கலவைதான் ஏ.பி.சி ஜுஸ். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஜூஸ் என்பதால் ‘மிராக்கிள் டிரிங்க்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான மூலிகை மருந்தாக சீன மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.பி.சி ஜூஸ், உடல் மற்றும் மூளை ஆராக்கியத்துக்குப் பயன்படும் அற்புத குணங்களைப் பெற்றிருப்பதால் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல் என்ற நம் சந்தேகத்துக்கு ஏபிசி ஜூஸின் பலன்களைப் பட்டியலிடுகிறார் உணவியல் நிபுணர் லஷ்மி.

சத்துக்களின் கலவை
உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் கலவைதான் இந்த பானம். ஆப்பிள், பீட்ரூட், காரட் ஜுஸ் வகைகளை தனித்தனியாக பருகுவதால் கிடைக்கும் ஒட்டு மொத்த பலன்களும் இந்த ஒரே பானத்தில் கிடைத்துவிடுகிறது. A, B1, B2, B6, C, E மற்றும் K வைட்டமின்களும், ஃபோலேட், சிங்க், காப்பர், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசயம், நியாசின், சோடியம் மற்றும் மங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்கள் அனைத்தும் ஒருங்கே அடங்கியுள்ளது.

முதுமைத் தோற்றத்தை தவிர்க்கிறது
ABC டிரிங்கில் உள்ள A, B-Complex, C, E மற்றும் K வைட்டமின் சத்துக்கள் மினுமினுப்பாக தோற்றத்தைத் தருவதால் உண்மையான வயதைவிட மிகவும் இளமையாகத் தெரிவீர்கள். இதிலுள்ள தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் உறுப்புகளுக்கு புத்துயிர் அளித்து, அதன் இயக்கங்களை மேம்படுத்துகிறது.

சிவப்பழகைத் தரும்
முகப்பரு, கரும்புள்ளிகளுக்காக எவ்வளவோ க்ரீம்களையும், லோஷன்களையும் தடவி சலித்து போயிருப்பீர்கள். இவற்றுக்குக் காரணமான, உடலில் உள்ள தேயைற்ற ரசாயனக் கழிவுகளையும், நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி விடுகிறது. இந்த அற்புத பானத்தை நாள் தவறாமல் குடித்து வந்தால் முகம் பளிச்சென்று சிவப்பாக மாறிவிடும். எந்த கிரீமும், லோஷனும் தடவ வேண்டிய அவசியமே இருக்காது.


கண்ணாடி இனி தேவை இல்லை
கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் வேலை செய்வதால் கண்களில் நீர்வறண்டு, கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைந்து விடும். அந்த கண் பார்வையை மேம்படுத்தும் ஏ வைட்டமின் அதிகம் இருப்பதால் கண் தசைகளை பலப்படுத்தும். கண்பார்வையை கூர்மையடையச் செய்யும்.

நினைவாற்றலைத் தூண்டுகிறது
பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற, விலையுயர்ந்த பானங்களை வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை வளர்க்கும் ABC பானத்தை தினமும் ஒரு கிளாஸ் கொடுத்துப் பாருங்கள். விளையாட்டு, படிப்பு என எல்லவாற்றிலும் சுறுப்பாவதுடன் நம்பர் ஒன்னாகவும் ஜொலிப்பார்கள்.

உள்ளுறுப்புகளின் வலிமைக்கு...
கல்லீரல், இதயம், சிறுநீரகம் இந்த மூன்று உறுப்புகள்தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியைச் செய்கின்றன. இந்த மூன்றைத் தவிர மற்ற உள்ளுறுப்புகளும் அதனதன் பணியைச் செய்ய அவற்றை பாதுகாப்பது அவசியம். ABC பானத்தில் கிடைக்கும் முக்கிய மூலப்பொருட்களான ஆல்ஃபா, பீட்டா கரேட்டின் மூலப்பொருட்கள் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தி, செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், இதயநோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
காய்ச்சல், ஆஸ்துமா, ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலுவாக இருக்க வேண்டும். ஹிமோகுளோபீன் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை ரத்தத்தில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ABC ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தி உத்தரவாதம் தந்து நோய்களை அண்டவிடாமல் காக்கிறது.

புற்றுநோய் அழற்சி குறையும்
பீட்ரூட்டில் பீட்டாசியின் என்னும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் பீட்ரூட்டில் உள்ள இரும்புசத்து சிவப்பணுக்கள் மீளுருவாக்கத்துக்கு உதவி புற்றுநோய் செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. இதன்மூலமும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.

எடையைக் குறைக்க...
கலோரிகள் குறைந்த ABC ட்ரிங் நிச்சயமாக உடல் பருமனை குறைக்க உதவும். உடற்பயிற்சி செய்து முடித்தபிறகு இந்த பானத்தை எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சியும் கொடுக்கும். இப்ப சொல்லுங்க இது மிராக்கிள் டிரிங்க்தானே !


எப்படி தயாரிப்பது?

ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். அதை ஒரு டம்ளரில் போட்டு, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலக்கினால் மிராக்கிள் டிரிங்க் ரெடி. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தினமும் ஒரு டம்ளர் தவறாமல் குடித்து வந்தால் அற்புதமான பலன்கள் கண்கூடாகவே தெரிய வரும்.

நன்றி குங்குமம் டாக்டர்

செவ்வாய், 20 மார்ச், 2018

முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !!



முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !!
#health tips...

முதியவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். எனவே அவர்களுக்கான உணவு முறைகள் பற்றி இங்கு காண்போம்.

முதியோர்கள் அன்றாட உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கப்பெற்று உடல் வலிமையை பெறும்.

கால்சியம் அதிகம் நிறைந்துள்ள பால், தயிர், கீரை வகைகள், மீன் வகைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கால்சியம் சத்துக்களும் வயதானவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

முதியோர்கள் மூன்று வேளையும் அரிசி உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். எனவே அரிசி உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து கோதுமை மற்றும் சிறுதானியங்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுதானியங்களை உண்பதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் எலும்புகளை உறுதியடையச் செய்யும். மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது.

பாகற்காய், புடலங்காய், காலிஃபிளவர், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் போன்றவையும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும் உணவுகளாகும். இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கலாம் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

முதியவர்கள், குறிப்பாக நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் வரை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

சோயா, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உயர்ரக காளான் போன்றவற்றிலும் புரதம் நிறைந்துள்ளது. எனவே வாரம் இருமுறையாவது இவ்வகை உணவுகளை வயதானவர்கள் சாப்பிட வேண்டும்.

சிறுநீரக நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீரை அருந்த வேண்டும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பக்கதுணையாக இருப்பது பழங்கள். எனவே முதியோர்கள் ஆரோக்கியமான வாழ்வினைப் பெறுவதற்கு கண்டிப்பாகப் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லையெனில் எளிதில் நோய்கள் நம்மைத் தாக்கும். பொதுவாக வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தே காணப்படும். எனவே இவர்கள் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.

வயதானவர்களுக்கு ஏற்படும் பெரிய பிரச்சனை மறதி. எனவே உலர் திராட்சை, முட்டையின் மஞ்சள் கரு, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய கோதுமை, வாழைப்பழம், பட்டை, வல்லாரைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதனை எளிதாக சரிசெய்ய முடியும்.


வியாழன், 15 மார்ச், 2018

அறுசுவை உணவுகள்



அறுசுவை உணவுகள்:-

அறுசுவை  எனப்படுவது நாக்கு  அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய  மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை  ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை  ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

இனிப்புச் சுவை (sweet) தொகு

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை  போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு  போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour) தொகு

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப்  பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்  போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent) தொகு

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு  போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt) தொகு

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.

இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.

உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்  போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

துவர்ப்புச் சுவை (Astringent) தொகு

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக்  கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.

இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய்  போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter) தொகு

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத்  தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம்  போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

திங்கள், 12 மார்ச், 2018

கோடை வெயிலை சமாளிக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள் !




கோடை வெயிலை சமாளிக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள் !


கோடையில் உண்ண வேண்டிய பழங்களின் வகைகள்* !



தர்பூசணியின் பயன்கள்

தர்பூசணி வெளிர் பச்சை மற்றும் கரும் பச்சை நிறமும் வரி வரியாக ஒன்றை அடுத்து ஒன்று காணப்படும். இதன் உள்ளே நன்கு சிவந்த உண்ணத்தகுந்த சதை பகுதி காணப்படும்.

 இந்த சதை பகுதி முழுக்க முழுக்க நீர் நிறைந்து காணப்படும். இந்த சதை பகுதியில் கருப்பு நிற கொட்டைகள் அதிகமாக காணப்படும்.


தர்பூசணி கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் உண்டால் தாகத்தையும், கலைப்பையும் தணிக்க கூடிய அற்புதமான பழம்.


இதில் வைட்டமின் பி1, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தை சேர்ந்தது.


இப்பழத்தை கோசாப்பழம் என்றும் கூறுவர்.
தர்பூசணி அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி,

ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


முலாம் பழத்தின் பயன்கள்

முலாம் பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.


முலாம் பழத்தை சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.

அஜீரணத்தை குணப்படுத்தும் தன்மை முலாம் பழத்திற்கு உண்டு.
முலாம் பழ சதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.

*இளநீரின் பயன்கள்* :🥥🥥🥥

கோடை காலம் வந்துவிட்டது. கொதிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை.

கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.

காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது உடலுக்கு ஊக்கமும், சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது.

இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளது. இதுத் தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.

*நுங்கின் பயன்கள்* :

கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து,

 கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.


திங்கள், 5 மார்ச், 2018

30 வகை நாட்டுப்புற சமையல்!


30 வகை நாட்டுப்புற சமையல்!

பச்சை மொச்சை காரக்குழம்பு
தேவையானவை: வேகவைத்த பச்சை மொச்சை 200 கிராம், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தக்காளி 4, சின்ன வெங்காயம் கால் கிலோ, பச்சை மிளகாய் 4, புளிக்கரைசல் அரை கப், உப்பு தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க: பூண்டு 4 பல், சோம்பு அரை டீஸ்பூன், தனியா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் கால் கப், மிளகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: கடாய் அல்லது மண்சட்டியில் எண் ணெய் விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, விழுதாக அரைக்கவும். மீண்டும் கடாய் (அ) மண் சட்டியை சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இதில் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கொஞ்சம் கொதித்து வருகையில் வேகவைத்த மொச்சையை சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது.
சேமியா தேங்காய் இனிப்பு பொங்கல்
தேவையானவை: வேகவைத்து, நீரை வடித்த சேமியா ஒரு கப், தேங்காய்த் துருவல் கால் கப், வெல்லப்பாகு ஒன்றரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு அரை கப், நெய் 150 கிராம், கேசரி பவுடர் ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை.

செய்முறை: சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துருவலை சிவக்க வறுக்கவும். அதனுடன் வெல்லப்பாகு. வெந்த சேமியா, வேகவைத்த பாசிப்பருப்பு, கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு நன்கு கிளறி, சற்று தளர இருக்கையில் இறக்கி… வறுத்த முந்திரி திராட்சை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, இளம் சூட்டில் பரிமாறவும்.
அகத்திக்கீரை பொங்கல்
தேவையானவை: ஆய்ந்து, அலசி, நறுக்கிய அகத்திக்கீரை ஒரு கப், பச்சரிசி 200 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், பெருங்காயம் ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்), சீரகம், பொடித்த மிளகு தலா அரை டீஸ்பூன், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பாசிப் பருப்பைக் கழுவி மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்க்கவும். இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் நீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் நெய்யைக் காயவிட்டு… பொடித்த மிளகு, சீரகம் தாளித்து, அகத்திக்கீரை சேர்த்துக் கிளறி… அரிசி, பருப்பை நீருடன் ஊற்றி குக்கரை மூடி, 4 (அ) 5 விசில் விட்டு இறக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, விருப்பப்பட்டால் மேலும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும்.
ஏகாதசி விரதம் முடித்து, துவாதசியன்று சாப்பிடும் உணவில் இது இடம் பெறும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணுக்கு சிறந்த நிவாரணி இது.
பனங்கல்கண்டு ரவை பொங்கல்
தேவையானவை: வறுத்த ரவை 200 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், பனங்கல்கண்டு 400 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம், நெய் 100 கிராம், ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்.

செய்முறை: பனங்கல்கண்டில் கால் கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும். நெய்யில் ரவையை சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பாசிப்பருப்பை குழைய வேகவிட்டு, வறுத்த ரவை மற்றும் வடிகட்டிய பனங்கல்கண்டு பாகு சேர்க்கவும். வெந்து வருகையில் இறக்கி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.
சேமியா மிளகு பொங்கல்
தேவையானவை: வேகவைத்த சேமியா ஒரு கப், வேகவைத்த பாசிப்பருப்பு அரை கப், கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்), நெய் 100 கிராம், மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

தாளிக்க: முந்திரி 25 கிராம், மிளகு (பொடித்தது), சீரகம் தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, துருவிய இஞ்சி அரை டீஸ்பூன்.
செய்முறை: வேகவைத்த பாசிபருப்பு, உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள், வேகவைத்த சேமியா ஆகியவற்றை வாணலியில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு மேலும் கிளறவும். பிறகு இறக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்க்கவும். புதினா, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
புதினா மிளகு துவையல்
தேவையானவை: ஆய்ந்து, அலசிய புதினா ஒரு கப், மிளகு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, தோலுடன் கூடிய உடைத்த கறுப்பு உளுந்து 2 டேபிள்ஸ்பூன், பூண்டு 2 பல், புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி… உப்பு, புளி தவிர மற்ற பொருட்களை சிவக்க வறுக்கவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
இதை கஞ்சி, சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், அசத்தலான சுவையில் இருக்கும்.
சிவப்பு பூசணி துவையல்
தேவையானவை: சிவப்பு பூசணி கால் கிலோ (தோல் சீவி, துருவி, வதக்கவும்), தேங்காய் அரை மூடி (துருவிக்கொள்ளவும்), மஞ்சள்தூள் சிறிதளவு, புளி சிறிய எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.
வறுத்துக்கொள்ள: உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 10, பூண்டு 2 பல், எண்ணெய் ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து… புளி, உப்பு, மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல், பூசணி துருவல் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து அரைத்து எடுக்கவும் (சிறிய துண்டு வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம். பூண்டு தேவை இல்லை என்றால் நீக்கிவிடவும்).
நாட்டுக்காய் கதம்ப சாம்பார்
தேவையானவை: கத்திரிக்காய், வாழைக்காய் வெள்ளைப் பூசணி துண்டுகள் (சேர்த்து) 2 கப், தக்காளி 2 (நறுக்கவும்), புளிக்கரைசல் கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு 100 கிராம் (மசிக்கவும்), மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 100 கிராம் (நறுக்கவும்), கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

தாளிக்க: காய்ந்த மிளகாய் 2, கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளிக்கரைசலில் மேலும் அரை கப் நீர் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்களை சேர்த்து வேகவிடவும். சின்ன வெங்காயம், தக்காளியை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி, வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்க்கவும். சாம்பார் பொடியையும் சேர்க்கவும். மசித்த துவரம்பருப்பில் சிறிதளவு நீர் விட்டு விளாவி இதில் சேர்த்துக் கொதிக்க விடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, இதனுடன் சேர்த்து இறக்கி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.
இடித்த இஞ்சி ரசம்
தேவையானவை: நாட்டுத் தக்காளி 2, இஞ்சி ஒரு இஞ்ச் அளவு துண்டு, பருப்பு நீர் 2 கப் (50 கிராம் துவரம்பருப்பை வேகவிட்டு, தண்ணீர்விட்டு கரைக்கவும்), மஞ்சள்தூள், புளி சிறிதளவு, பூண்டு 2 பல், சீரகம் அரை டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சிறுகட்டி (தூளாக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, கடுகு சிறிதளவு, நெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை நறுக்கவும். இஞ்சியை இடித்துக் கொள்ளவும். பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை அம்மி (அ) உரலில் நசுக்கிக்கொள்ளவும் (மிக்ஸியிலும் பொடிக்கலாம்). மண்சட்டி அல்லது வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். நறுக்கிய தக்காளி, இடித்த இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து, வதங்கியபின் புளி, உப்பு, பருப்பு நீர் சேர்க்கவும். நசுக்கிய பூண்டு சீரகம் மிளகு சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
இது இருமலைத் தணிக்க உதவும்.

111
கேப்பை தோசை
தேவையானவை: கேப்பை (கேழ்வரகு) மாவு 250 கிராம், அரிசி மாவு 50 கிராம், உளுத்தம்பருப்பு 50 கிராம், பச்சை மிளகாய் 3, சீரகம் ஒரு டீஸ்பூன், வெங்காயம் ஒன்று (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை கால் கட்டு, எண்ணெய் 50 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் கேப்பை மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெங்காயம் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். 5 (அ) 6 மணி நேரத்துக்குப் பிறகு தோசை சுடவும். 5, 6 மணி நேரம் புளிக்க வைக்க முடியா விட்டால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கரைத்து உடனடியாக தோசை வார்க்கலாம்.
தினை கம்பு அடை
தேவையானவை: தினை, கம்பு, பச்சரிசி தலா அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு தலா கால் கப், காய்ந்த மிளகாய் 10, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் கால் கப், உப்பு, பெருங்காயம் தேவையான அளவு, எண்ணெய் 100 மில்லி.

செய்முறை: தினை கம்பு, அரிசி ஆகியவற்றை மெஷினில் கொடுத்து ரவையாக பொடிக்கவும். இதை உப்பு கலந்த நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊறவிட்டு மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும் இத்துடன் ஊறிய தினை கம்பு அரிசி கலவை, நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்வும்.
இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி குறையும்.
கேப்பை இனிப்பு பணியாரம்
தேவையானவை: கேப்பை (கேழ்வரகு) மாவு ஒரு கப், அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, சோடா உப்பு தலா அரை சிட்டிகை, தேங்காய்த் துருவல் கால் கப், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, கரைத்த வெல்ல நீர் ஒரு கப் (200 கிராம் வெல்லம் போதுமானது), நெய் எண்ணெய் கலவை 100 கிராம்.

செய்முறை: மாவு வகைகளுடன் உப்பு, சோடா உப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெல்ல நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். பணியாரக் கல்லில் சிறிதளவு நெய் எண்ணெய் கலவையை விட்டு, முக்கால் பாகத்துக்கு கரைத்த மாவு நிரப்பி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்
தேவையானவை: தோல் சீவி நறுக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு கால் கிலோ, பொடித்த வெல்லம் 2 டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சிறிதளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு, நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெல்லம் சேர்த்து இளகவிடவும். வேகவைத்த வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி எடுக்கவும்.
இதை மண்சட்டியில் செய்தால் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.
அவல் இனிப்பு பொங்கல்
தேவையானவை: கெட்டி அவல் 200 கிராம் (10 நிமிடம் ஊறவிடவும்), வேகவைத்த பாசிப்பருப்பு 100 கிராம், பாகு வெல்லம் 250 கிராம் (கரைத்து வடிகட்டவும்), நெய் 100 கிராம், குங்குமப்பூ சில இதழ்கள், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள் தலா 2 டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை

செய்முறை: வேகவைத்த பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசல், நெய் ஊற்றி நன்கு கிளறவும். கெட்டியாகும்போது, ஊறவைத்த அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும் (அதிக நேரம் கிளற வேண்டாம். அவல் சிதைந்துவிடும்). இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.
பாசிப்பருப்பு இஞ்சிக் கடைசல்
தேவையானவை: பாசிப்பருப்பு 200 கிராம், துருவிய இளம் இஞ்சி ஒரு டீஸ்பூன், நாட்டுப் பூண்டு 4 பல் (நசுக்கவும்), நாட்டுத்தக்காளி 4 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை சிறிதளவு, பச்சை மிளகாய் 4 (இடிக்கவும்), காய்ந்த மிளகாய் 2, கடுகு, மஞ்சள்தூள் சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை அகலமான மண் சட்டியில் மலர வேகவிடவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மத்தால் நன்கு கடையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளிக்கவும். நசுக்கிய பூண்டு, துருவிய இளம் இஞ்சி, நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, பருப்புக் கடைசலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
தினை தேன் புட்டு
தேவையானவை: தினை மாவு (கடைகளில் ரெடிமேட் ஆகவும் கிடைக்கிறது) 200 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் கால் கப், தேன் 100 மில்லி, உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை: தினை மாவில் உப்பு கலந்த சுடுநீர் தெளித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் உதிர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், தேன் விட்டு பிசிறி பரிமாறவும்.
சேனை பொரியல்
தேவையானவை: சேனைக்கிழங்கு கால் கிலோ, இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், புளி விழுது ஒரு டீஸ்பூன், எண்ணெய் 100 கிராம், உப்பு தேவையான அளவு.

செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி, சதுரமாக நறுக்கி… உப்பு, புளி விழுது கலந்த நீரில் சேர்த்து, அரைவேக்காடு பதத்தில் வேகவிட்டு நீரை வடிக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்பு ஆகியவற்றை நன்கு குழைத்து, சேனைக்கிழங்கு சதுரங்களின் மீது மேலும் கீழும் பூசி, சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
மேலே மொறுமொறுப்பாக, உள்ளே மிருதுவாக அசத்தும் இந்தப் பொரியல்.
இனிப்பு பால் பொங்கல்
தேவையானவை: புதிய பச்சரிசி 200 கிராம், பால் 600 மில்லி, சர்க்கரை 300 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை சிறிதளவு, நெய் 100 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அடிகனமான, பெரிய பாத்திரத்தில் பாலை நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசியைச் சேர்த்து பாதி குழைந்தபின் சர்க்கரை, நெய் சேர்க்கவும். அடிபிடிக்காமல் கவனமாக கிளறவும். பால் அரிசி கலவை நன்கு சுண்டி வருகையில் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
அவரைக்காய் வேர்க்கடலை கூட்டு
தேவையானவை: அவரைக்காய் 250 கிராம், பச்சை வேர்க்கடலை 100 கிராம் (உப்பு சேர்த்து வேகவிடவும்), தேங்காய் ஒரு மூடி, சோம்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 8, தக்காளி 2, பூண்டு 2 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு சிறிதளவு.

செய்முறை: தேங்காய், சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். அவரைக்காயை பொடியாக நறுக்கி… மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் (அ) மண்சட்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்த வேர்க்கடலை, அவரைக்காய் சேர்த்து நன்கு கொதித்தபின் இறக்கவும்.
புளி சேர்க்காத இந்த கூட்டு, சுவையில் அசத்தும்.
பச்சைத் துவரை துவட்டல்
தேவையானவை: பச்சைத் துவரை (உரித்தது) 200 கிராம், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் (நறுக்கியது) கால் கப், பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், நறுக்கிய புதினா ஒரு கைப்பிடி அளவு, கடுகு அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பச்சைத் துவரையை உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சோம்பு தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து, வெந்த பச்சை துவரையையும் சேர்த்து வதக்கி, பொட்டுக்கடலை மாவு தூவி இறக்கவும்.
குறிப்பு: இந்த சீஸனில் பச்சை துவரைக் காய் நிறைய காய்கறி கடைகளில் கிடைக்கும்.
பிஞ்சு மக்காச்சோள பிரட்டல்
தேவையானவை: பிஞ்சு மக்காச்சோளம் (ஒரு இஞ்ச் அளவுக்கு நறுக்கியது) 20 துண்டுகள், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்க வும். இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளற வும். பிறகு, சோளப்பிஞ்சை சேர்த்து சிறிது நீர் தெளித்து வேக விடவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.
கல்கண்டு பொங்கல்
தேவையானவை: சிறிய கல்கண்டு (டைமண்ட் கல்கண்டு) 200 கிராம், பச்சரிசி 100 கிராம், பாசிப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை சிறிதளவு, ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை லேசாக வறுத்து, குழைய வேகவிடவும். இதில் கல்கண்டு சேர்க்கவும். சிறிது நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு, நெய் விட்டு நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி, ஆறியபின் பரிமாறவும்.
கேப்பை வெல்ல அல்வா
தேவையானவை: கேப்பை (கேழ்வரகு) மாவு 100 கிராம், வெல்லம் 200 கிராம், நெய் 50 கிராம், எண்ணெய் 50 மில்லி, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேப்பை மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். கடாயை அடுப்பில் ஏற்றி வெல்லக் கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த கேப்பை மாவை ஊற்றவும். கலவை கெட்டியாகும்போது நெய், எண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கவும்.
இதை அப்படியே பரிமாறலாம். வில்லை களாக்கியும் சாப்பிடலாம்.
வெள்ளைச் சோள மாவு ரொட்டி
தேவையானவை: வெள்ளைச் சோள மாவு 200 கிராம் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, வெங்காயம் ஒன்று, உப்பு சிறிதளவு, எண்ணெய் 50 கிராம்.

செய்முறை: வெள்ளைச் சோள மாவு. மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது சுடு நீர் தெளித்து ரொட்டி (சப்பாத்தி) மாவு மாதிரி பிசையவும். கையில் எண்ணெய் தடவி சாத்துக்குடி அளவு மாவு எடுத்து உருட்டவும். இதை எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து ரொட்டியாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, ரொட்டியைப் போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
இதைச் சூடாக சாப்பிட வேண்டும்.
மக்காச்சோள சுண்டல்
தேவையானவை: வேகவைத்து உதிர்த்த நாட்டு மக்காச்சோளம் ஒரு கப், பூண்டு 2 பல் (நசுக்கவும்), காய்ந்த மிளகாய் 2, நறுக்கிய சின்ன வெங்காயம் கால் கப், கடுகு, சோம்பு தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பூண்டு, காய்ந்த மிளகாயை தாளிக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி… உப்பு, உதிர்த்த சோளமணிகள் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.
பூண்டு சீரகத் துவையல்
தேவையானவை: நாட்டுப் பூண்டு (உரித்தது) 10 பல், சீரகம் ஒரு டீஸ்பூன், தக்காளி 2, காய்ந்த மிளகாய் 6, துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

தாளிக்க: சமையல் எண்ணெய் ஒரு டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு.
செய்முறை: சிறிதளவு எண்ணெயில் பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்துக் கலக்கவும்.
அவல் காரப்பொங்கல்
தேவையானவை: அவல் 200 கிராம் (ஊறவைக்கவும்), வேகவைத்த பாசிப்பருப்பு 100 கிராம், கீறிய பச்சை மிளகாய் 4, சீரகம் அரை டீஸ்பூன், மிளகு சிறிதளவு, பெருங்காயம் ஒரு சிறு கட்டி (தூளாக்கவும்), கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சீரகம், பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வேகவைத்த பாசிப்பருப்பு, உப்பு, ஊறவைத்த அவல் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, அவல் சிதையா வண்ணம் கிளறி இறக்கவும்.
குறிப்பு: சிவப்பு அவலிலும் செய்யலாம். ருசி மேலும் பிரமாதமாக இருக்கும்.
கீரை தக்காளி தாளிதம்
தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை ஒரு கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), தக்காளி ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு 2 டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் 2, கடுகு, பெருங்காயம் (தூளாக்கவும்) சிறிதளவு, பூண்டு 2 பல் (நசுக்கவும்), எண்ணெய் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு சிறிதளவு.

செய்முறை: மண்சட்டி (அ) கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், பூண்டு தாளிக்கவும். இத்துடன் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய கீரை, தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கீரை தக்காளி பாதி வெந்தவுடன் பருப்பு சேர்த்து, மேலும் வேகவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இது கெட்டியாகத்தான் இருக்க வேண்டும்.
மல்லி சாதம்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் 2 கப் (நன்கு ஆறவிடவும்).
வறுத்துப் பொடிக்க: மல்லி விதை (தனியா) 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் ஒரு சிறு கட்டி, நல்லெண்ணெய் 50 கிராம், புளி சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: வறுக்க கொடுத்த பொருட்களை (புளி, உப்பு தவிர) வெறும் கடாயில் சிவக்க வறுத்து, உப்பு, புளி சேர்த்து பொடியாக்கவும். நல்லெண்ணெயை நன்கு பொங்க காய்ச்சி, சாதத்தின் மேல் ஊற்றி, அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். சுட்ட அப்பளம் அல்லது பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.
நீராகாரம்
தேவையானவை: சாதம் வடித்த கஞ்சி ஒரு கப், சிலுப்பிய தயிர் அரை கப், முதல் நாள் இரவு வடித்த சாதத்தின் மீது ஊற்றிய நீர் ஒரு கப் (சாதத்தை நன்கு கிளறி அது மூழ்கும் வரை நீர் விடவும்), உப்பு தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை (வெங்காயம் தவிர) நன்கு கலந்து விளாவி, வெங்காயம் தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், பச்சை மிளகாயை கடித்துக்கொண்டு நீராகத்தை பருகலாம். இது கிராமத்தினர் பலரின் வழக்கம்.

 நன்றி:-.vikatan