முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !!
#health tips...
முதியவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். எனவே அவர்களுக்கான உணவு முறைகள் பற்றி இங்கு காண்போம்.
முதியோர்கள் அன்றாட உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கப்பெற்று உடல் வலிமையை பெறும்.
கால்சியம் அதிகம் நிறைந்துள்ள பால், தயிர், கீரை வகைகள், மீன் வகைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கால்சியம் சத்துக்களும் வயதானவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
முதியோர்கள் மூன்று வேளையும் அரிசி உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். எனவே அரிசி உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து கோதுமை மற்றும் சிறுதானியங்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுதானியங்களை உண்பதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் எலும்புகளை உறுதியடையச் செய்யும். மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது.
பாகற்காய், புடலங்காய், காலிஃபிளவர், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் போன்றவையும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும் உணவுகளாகும். இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கலாம் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
முதியவர்கள், குறிப்பாக நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் வரை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
சோயா, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உயர்ரக காளான் போன்றவற்றிலும் புரதம் நிறைந்துள்ளது. எனவே வாரம் இருமுறையாவது இவ்வகை உணவுகளை வயதானவர்கள் சாப்பிட வேண்டும்.
சிறுநீரக நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீரை அருந்த வேண்டும்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு பக்கதுணையாக இருப்பது பழங்கள். எனவே முதியோர்கள் ஆரோக்கியமான வாழ்வினைப் பெறுவதற்கு கண்டிப்பாகப் பழங்களை உட்கொள்ள வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லையெனில் எளிதில் நோய்கள் நம்மைத் தாக்கும். பொதுவாக வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தே காணப்படும். எனவே இவர்கள் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
வயதானவர்களுக்கு ஏற்படும் பெரிய பிரச்சனை மறதி. எனவே உலர் திராட்சை, முட்டையின் மஞ்சள் கரு, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய கோதுமை, வாழைப்பழம், பட்டை, வல்லாரைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதனை எளிதாக சரிசெய்ய முடியும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக