மாங்காய் இஞ்சி ரெசிப்பிகள்
மாங்காய் இஞ்சி - பச்சை மிளகு ஊறுகாய்
மாங்காய் இஞ்சி தொக்கு
மாங்காய் இஞ்சி சட்னி
மாங்காய் இஞ்சி - சன்னா பச்சடி
மாங்காய் இஞ்சி சாதம்
மாங்காய் இஞ்சி மசாலா மோர்
மாங்காய் இஞ்சி பச்சடி
மாங்காய் இஞ்சி ரசம்
மாங்காய் இஞ்சி குழம்பு
மாங்காய் இஞ்சி வெஜிடபிள் சாலட்
மாங்காய் இஞ்சியை நினைத்தாலே நாவூறும். ஊறுகாய், பச்சடி, சாலட் குழம்பு என மாங்காய் இஞ்சியில் செய்யக்கூடிய விதம்விதமான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அன்னம் செந்தில்குமார்.
மாங்காய் இஞ்சி - பச்சை மிளகு ஊறுகாய்
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - பச்சை மிளகு - தலா 100 கிராம் எலுமிச்சைப் பழம் - ஒன்று (பெரியது) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தண்ணீர் - 50 மில்லி கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சி, பச்சை மிளகைக் கழுவிக் கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகு கொத்தை அரை இஞ்ச் நீளத்துக்கு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். எலுமிச்சைப் பழத்தை பிழிந்து சாறு எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது நறுக்கிய மாங்காய் இஞ்சி, பச்சை மிளகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து ஊறவிடவும். நன்றாக ஊறியவுடன் பரிமாறவும். இரண்டு நாள்கள் கழித்து ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம். பச்சை மிளகுக்குப் பதில் பச்சை மிளகாயையும் வட்டவட்டமாக நறுக்கி சேர்க்கலாம்.
மாங்காய் இஞ்சி தொக்கு
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - கால் கிலோ எலுமிச்சைப் பழம் - 4 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் - 50 மில்லி கடுகு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சியைக் கழுவி, தோல் சீவி துருவிக்கொள்ளவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு, வெடித்தவுடன் பெருங்காயத்தூள், துருவிய மாங்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும் (அடுப்பை `சிம்’மில் வைத்து செய்யவும்).
மாங்காய் இஞ்சி சட்னி
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 10 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் புளி - கோலிக்குண்டு அளவு கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். உளுத்தம்பருப்பு சிறிது சிவந்தவுடன், காய்ந்த மிளகாய், மாங்காய் இஞ்சி, புளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் அதை அரைத்த மாங்காய் இஞ்சி சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.
இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.
மாங்காய் இஞ்சி - சன்னா பச்சடி
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 100 கிராம் சன்னா (வெள்ளைக் கொண்டைக்கடலை) - ஒரு கப் வெங்காயம், தக்காளி - தலா ஒன்று பச்சை மிளகாய் - 6 கறிவேப்பிலை - சிறிதளவு புளி - நெல்லிக்காய் அளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சன்னாவை 12 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி சிறு சதுர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பாதியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து... கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கியவுடன் வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேகவிடவும். மாங்காய் இஞ்சி நன்றாக வெந்தவுடன் புளித் தண்ணீரைச் சேர்த்து, நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும். வெள்ளை கொண்டைக்கடலைக்குப் பதில் பச்சை வேர்க்கடலையையும் ஊறவைத்து, வேகவைத்து சேர்க்கலாம்.
மாங்காய் இஞ்சி சாதம்
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 2 இஞ்ச் துண்டு சாதம் - ஒரு கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 எலுமிச்சைப் பழம் - பாதி அளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், வேர்க்கடலை - 10, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும். எல்லாம் நன்றாக பொரிந்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மாங்காய் இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும். உதிரியாக வேகவைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கிளறவும். சாதம் புளிப்பாக இருந்தால் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
மாங்காய் இஞ்சி மசாலா மோர்
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு தயிர் - ஒரு கப் புதினா - 4 இலை பெருங்காயத்தூள் - சிறிதளவு பச்சை மிளகாய் - பாதி சீரகத்தூள் - 2 சிட்டிகை உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு பிளெண்டரில் (Blender) மாங்காய் இஞ்சி, புதினா இலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். நன்றாக அரைபட்டவுடன் தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் பிளெண்டரை ஒரு சில நிமிடம் ஓடவிடவும். பின்னர் கண்ணாடிக் கிளாஸில் ஊற்றி மேலே புதினா இலைகளை மிதக்கவிட்டு பரிமாறவும். அரைக்கும்போது வறுத்த சீரகத்தூள் சேர்த்து அரைத்தால் மோர் கூடுதலான சுவையுடனும், மணத்துடனும் இருக்கும்.
மாங்காய் இஞ்சி பச்சடி
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 2 இஞ்ச் துண்டு தயிர் - ஒரு கப் பச்சை மிளகாய் - ஒன்று தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - அரை டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் வெந்தயம் - 10 காய்ந்த மிளகாய் - ஒன்று பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சியை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு, சிறிதளவு தயிர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையை மீதமுள்ள தயிரில் சேர்த்துக் கலக்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, தயிர் கலவையில் சேர்க்கவும். இது கலந்த சாதங்களுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
மாங்காய் இஞ்சி ரசம்
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு பச்சை மிளகாய், எலுமிச்சைப் பழம் - தலா ஒன்று துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகு, சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும். மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து, தேவையான அளவு (2 கப்) தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்து கொதிக்கவிடவும். இதில் அரைத்து வைத்துள்ள மாங்காய் இஞ்சி கலவையையும், உப்பையும் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). நுரைத்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சேர்க்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ரசத்தில் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு:
எலுமிச்சைப் பழச்சாற்றை சிறிது சிறிதாக தேவையான அளவு சேர்க்கவும். மொத்தமாக ஊற்றிவிட்டால் ரசம் சில சமயம் புளிப்பாக இருக்கும்.
மாங்காய் இஞ்சி குழம்பு
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 50 கிராம் பூண்டு - 20 பல் (சிறியது) புளி - நெல்லிக்காய் அளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6 மல்லி (தனியா) - 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் - கால் டீஸ்பூன்
செய்முறை:
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். பூண்டை சிறிய பற்களாக எடுத்துக் கொண்டு தோலுரித்துக்கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிது வதங்கியவுடன் மாங்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், உப்பு, அரைத்து வைத்த பொடி சேர்த்துக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மாங்காய் இஞ்சி, பூண்டு நன்றாக வெந்த உடன் புளித்தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
மாங்காய் இஞ்சி வெஜிடபிள் சாலட்
தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 2 இஞ்ச் துண்டு கேரட் - ஒன்று (சிறியது) வெள்ளரிக்காய் - பாதியளவு நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப் பச்சை மிளகாய் - ஒன்று எலுமிச்சைப் பழம் - ஒரு மூடி ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
அலங்கரிக்க:
மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை:
மாங்காய் இஞ்சி, கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றின் தோலைச் சீவி, துருவிக்கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். துருவிய, நறுக்கிய காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் கலந்து வைத்துள்ள சாலட் டிரெஸ்ஸிங்கை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலே மாதுளை முத்துகள், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக