புதன், 12 ஜூலை, 2017

ரசம் டிப்ஸ்



ரசம் டிப்ஸ்

எனக்கு ரசத்தின் ருசியைக் காட்டிலும் அது தயாராகும் போது எழும் வாசனை ரொம்பப் பிடிக்கும்.

 இன்ஹேலர் அடிமைகளைப் போல் நான் ரச வாசனை அடிமை.

 ஒரு நல்ல ரசத்தின் வாசனையானது, உள்ளே அது கொதிக்கும்போது வீதியில் அடிக்க வேண்டும் என்பது இலக்கணம்.

 என் அம்மா வைக்கிற ரசத்துக்கு அந்தக் குணம் உண்டு.

 இத்தனைக்கும்  அசகாய சேர்மானங்கள் ஏதும் பயன்படுத்த மாட்டார்கள்.

தாளிக்க ஒரு ஸ்பூன் நெய் என்பது தவிர, வேறெதுவுமே கூடுதலாக இராது.

*சூட்சுமமானது, அந்தப் பொடியில் உள்ளது.*

 மெஷினுக்கு எடுத்துச் சென்று அரைத்து வந்து டப்பாவில் வைத்துக் கொண்டு தினசரி நாலு ஸ்பூன் பயன் படுத்தும் பொடியானது அத்தனை சிலாக்கிய மானதல்ல.

*தனியா, மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, சீரக ரகங்களைக் கொஞ்சம் போல் வறுத்து, வறுத்த கையோடு இடித்துக் கொட்டினால்தான் ரசத்துக்கு சிங்காரம்.*

இன்னொன்று, ரசமானது பாதி கொதிக்கும்போதே அடுப்பை அணைத்துவிட வேண்டும் என்பது.

 *முழுக்கக் கொதித்து முடித்து, பொங்கும் தறுவாயில் இறக்கி வைத்தால் ருசி போய்விடும்*😊🙏


ரசம் டிப்ஸ் 2

கர்நாடகத்துக்காரர்கள் ரசத்தில் வெல்லம் போடுவார்கள். அந்த அசட்டுத் தித்திப்பு என்னத்துக்கு என்று எனக்குப் புரியவே புரியாது.

*ஆனால், கொதித்து அடங்கிய ரசத்தில் தாளிப்புக்கு முன்னால் கால் ஸ்பூன் சர்க்கரை போட்டால் ருசி அள்ளும் என்று என் அம்மா சொல்லுவார்.

ரசம் டிப்ஸ் 3

*புளிப்பு...இனிப்பு.. காரம்.*

புதிய புளியில் ரசம் வைக்கிறபோது அதில் தேங்காய் துருவிச் சேர்த்தால் புளிப்பும் இனிப்பும் தனித்தனியே தெரியும்.

இதுவே எலுமிச்சை ரசத்தில் தேங்காய் போட்டால், அதில் தக்காளியும் சேருகிற பட்சத்தில் இதே சுவை அதிலும் வரும்.

*என்னைக் கேட்டால் ரசத்துக்குப் புதிய புளி ஆகாது என்பேன்.*

*நல்ல, கெட்டிப்பட்ட பழைய புளிதான் சரி.*

ஒரு குலோப் ஜாமூன் சைஸுக்கு உருட்டி எடுத்து உப்புப் போட்ட வெந்நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்துக் கரைத்து ஊற்ற வேண்டும்.

*சிலபேர் கடைசிக் கசண்டையும் சேர்த் துப் போட்டுக் கொதிக்கவிடுவார்கள். அது கூடாது. புளிச்சாறு மட்டும் போதும்.*


ரசம் டிப்ஸ் 4

*ரொம்ப முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், இஞ்சி.*

 இஞ்சியைத் தோல் சீவி வெறுமனே நறுக்கிப் போடுவது ரசத்துக்குச் செய்கிற அவமரியாதை.

 *துருவிப் போட்டால் ருசி. நசுக்கிப் போட்டால்தான் அதிருசி.*

இஷ்டமிருந்தால் ஒரு காரியம் செய்து பாருங்கள்.

பருப்பு சேர்க்காத மிளகு ரசம், சீரக ரசம் கொதிக்கிறபோது நாலு துண்டு வெள்ளரி நறுக்கிப் போட்டுக் கொதிக்கவிடுங்கள்.

 *ஆனால், அடுப்பை அணைப்பதற்கு முன்னால் நறுக்கிப் போட்ட வெள்ளரித் துண்டுகளை எடுத்துப் போட்டுவிட வேண்டும்.*

*ஒரு ஸ்பூன் நெய்யில் மிளகு வெடிக்கத் தாளித்துக் கொட்டி, கப்பென்று மூடி வைத்துவிட்டு பத்து நிமிஷம் கழித்து அந்த ரசத்தை எடுத்து அருந்திப் பாருங்கள்.*

சூப் எல்லாம் சும்மா என்பீர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக