மதிய சாப்பாடு: தக்காளி புலாவ்
தேவையானவை: தக்காளிப்பழம் - 6, கொத்தமல்லி - ஒரு கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சின்ன துண்டு, பூண்டு - 6 பல், அரிசி - 2 டம்ளர், பெரிய வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா இரண்டு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
செய்முறை: கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளிப்பழத்தை கழுவி மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அரிசியை நன்கு கழுவி, தண்ணீரை வடியுங்கள். அரைத்த கொத்தமல்லி விழுதை அரிசியுடன் கலந்து, இருபது நிமிடம் ஊற வையுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடாக்கி, ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசிக் கலவையை இதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். இதில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். கொதித்து குமிழ்கள் கிளம்ப ஆரம்பித்ததும்... அடுப்பை 'சிம்’மில் வைத்து, வெந்ததும் இறக்குங்கள். இதுவே, குக்கரில் வைப்பதாக இருந்தால்... அடுப்பை 'சிம்’மில் வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.
பொதுவாக தக்காளி புலாவுக்கு தண்ணீர் சேர்க்கும்போது சாதாரண ரக அரிசியாக இருந்தால், ஒரு டம்ளர் அரிசிக்கு, இரண்டு டம்ளர் தண்ணீர்... பிரியாணி அரிசியாக இருந்தால் ஒரு டம்ளர் அரிசிக்கு, ஒன்றரை டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும்.
இந்த புலாவுக்கு சைட் டிஷ் தேவையில்லை. விருப்பப்பட்டால்... கத்திரிக்காய் வதக்கல் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக