ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்



மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்

* மருந்துச் சோறு
* பூண்டு லேகியம்
* காய்ச்சிய எண்ணெய்
* உளுத்தம்பருப்புப் பால்
* கருவாடு பத்தியக் குழம்பு
* வெந்தயக் கூழ்
* சுக்குத் தண்ணீர்
* இஞ்சிச் சாறு
* சளி கஷாயம்
* இருமல் பால்

பூண்டு, இஞ்சி, மஞ்சள் என நம் உணவே ஆரோக்கியமும் மருத்துவக் குணங்களும் நிரம்பியதுதான். உங்களுக்காக இங்கே மருத்துவக் குணம் நிரம்பிய ஸ்பெஷல் ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த ஹசீனா செய்யது.

மருந்துச் சோறு

தேவையானவை:

 புழுங்கல் அரிசி - இரண்டரை கப்
 கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
 சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 2 கப்
 நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
 மட்டிப் பட்டை - ஒரு அங்குல துண்டு
 சதக்குப்பை - அரை டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - 4 கப்

செய்முறை:

தேங்காய்த்துருவலை மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, நன்கு அரைத்துப் பிழிந்து பால் எடுத்து தனியாக வைக்கவும். கசகசாவை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். மட்டிப் பட்டை மற்றும் சதக்குப்பையை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில், எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், 4 கப் தண்ணீர், உப்பு, பொடித்த மட்டிப் பட்டை சதக்குப்பை, அரைத்த கசகசா விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். ஓரங்களில் நுரை கட்டியதும், கழுவிய அரிசியைச் சேர்த்து கலக்கி வேகவிடவும். சாதம் வெந்ததும் சூடாக கருவாட்டுக் குழம்பு, கறிக்குழம்பு அல்லது நாட்டுக் கோழிக் குழம்புடன் பரிமாறவும்.

குறிப்பு:

வாரம் ஒரு முறை மருந்துச் சோற்றை உட்கொண்டால், உடல் வலி பறந்துவிடும். நாட்டு மருந்துக் கடைகளில் மட்டிப் பட்டை என்று கேட்டால் கொடுப்பார்கள். மசாலா உணவுகளை சமைக்கப் பயன்படுத்தும் பட்டையை இதற்கு உபயோகிக்கக் கூடாது

பூண்டு லேகியம்

தேவையானவை:

 உரித்த பூண்டு - 200 கிராம்
 துருவிய தேங்காய் - ஒன்று (அரைத்து பால் எடுத்து வைக்கவும்)
 கருப்பட்டி - கால் கிலோ
 இஞ்சி - 75 கிராம்
 கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
 நல்லெண்ணெய் - 200 மில்லி
 பசு நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல் நீக்கி நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி, அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு தெளிந்த இஞ்சிச் சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். கருப்பட்டியைப் பொடித்துக்கொள்ளவும். பிறகு கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியைச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து உரித்த பூண்டு, பெருங்காயம், தெளிந்த இஞ்சிச் சாறு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதுடன் தேங்காய்ப்பால், கருப்பட்டி பாகு சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு பூண்டு-கருப்பட்டிக் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு சுருள கிளறவும். இத்துடன் பசு நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கி ஆறவிட்டு, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒன்றரை மாதம் வரை  வைத்துக்கொள்ளலாம். இதை இரண்டு நாட்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும்.

குறிப்பு:

இஞ்சியை அரைத்து வடிகட்டும் போது, மேலாக தெளிவாக இருக்கும் சாற்றை மட்டும் எடுக்கவும். அடியில் வெள்ளை நிறத்தில் தங்கியிருக்கும் துகள்களை கொட்டி விடவும். லேகியம் கிண்டும் கரண்டியில் துளியும் ஈரம் இருக்கக் கூடாது. பரிமாறும்போது ஒரு முறை சூடாக்கி, பிறகு பரிமாறவும். இது வாய்வுத் தொல்லையை அறவே நீக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தாலும், உபயோகப்படுத்தும் முன், ஒரு முறை நன்கு சூடுப்படுத்தி பிறகு உபயோகப்படுத்தவும்.

காய்ச்சிய எண்ணெய்

தேவையானவை:

 நல்லெண்ணெய் - 2 லிட்டர்
 பசும்பால் - 200 மில்லி
 வெற்றிலை - 3
 இஞ்சி - ஒரு துண்டு (தட்டிக்கொள்ளவும்)
 ஓமம் - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 5
 மிளகு - ஒரு டீஸ்பூன் (தட்டிக்கொள்ளவும்)
 சீரகம் - ஒரு டீஸ்பூன் (தட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் நல்லெண்ணெயை சேர்த்து சூடுபடுத்தவும். இத்துடன் பசும்பாலையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். வெற்றிலையைக் கிழித்துவைத்துக் கொள்ளவும். எண்ணெயின் சலசலப்பு சத்தம் நின்றவுடன், வெற்றிலைத் துண்டுகள், காய்ந்த மிளகாய், தட்டிய இஞ்சி, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மிளகு, சீரகம், சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி, ஆற விடவும். பிறகு வடிகட்டி சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடிவைக்கவும். 3 மாதம் வரை வெளியில் வைத்து உபயோகிக்கலாம்.

குறிப்பு:

வாரம் ஒரு முறை இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உச்சந்தலையில் தினமும் ஒரு சொட்டு தொட்டுவைத்தால் இருமல், சளித் தொல்லை வராது. எண்ணெயோடு பால் சேர்வதால், முதலில் இரண்டும் ஒட்டாது. பிறகு கொதிக்க வைக்கும்போது இரண்டும் ஒன்றாகும். காய்ச்சும் போது பால் பொங்கி வருவது போல இதில் பொங்காது.

உளுத்தம்பருப்புப் பால்

தேவையானவை:

 தோல் நீக்கிய உளுந்து - கால் கப்
 காய்ச்சிய பால் - ஒரு கப்
 கருப்பட்டி - 60 கிராம்
 சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்
 தண்ணீர் - ஒன்றரை கப்
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரும் வரை வறுத்தெடுக்கவும். பிரஷர் குக்கரில் உளுத்தம்பருப்பு, தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்த உளுத்தம்பருப்பை நன்றாக மசித்து காய்ச்சிய பால், சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், கருப்பட்டி, தேங்காய்த்துருவல் சேர்த்து சிம்மில் கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

இரும்பு மற்றும் புரோட்டீன் சத்துக்கள் நிரம்பிய இந்த உணவை எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து முகம்பொலிவு பெறும்.

கருவாடு பத்திய குழம்பு

தேவையானவை:

 சுறா கருவாடு - 100 கிராம்
 முழு மிளகு - 2 டீஸ்பூன்
 ஓமம் - 2 டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
 சுக்கு - கால் அங்குலம்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 பூண்டு - 10 பல்
 நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
 சின்னக் கத்திரிக்காய் - 3 (நீள நீளமாக நறுக்கவும்)
 முருங்கைக்காய் - ஒன்று (விரல் அளவு நறுக்கவும்)
 தக்காளி - 2 (நறுக்கியது)
 கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், ஓமம், முழு மிளகு, சுக்கு, மல்லித்தூள் (தனியாத்தூள்), பூண்டு என தனித்தனியாக பொன்னிறமாகப் பொரித்து எடுத்து ஆறவிடவும். பிறகு, மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பொரித்தவற்றைச் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சுத்தம் செய்த கருவாடு, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். கருவாடு மற்றும் காய்கறிகள் வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது கறிவேப்பிலை தூவி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

கருவாடு பிடிக்காதவர்கள் ஃப்ரெஷ்ஷான வஞ்சிரம் மீன் வைத்து, இந்தக் குழம்பை செய்யலாம். குழந்தை பிறந்தவர்களுக்கு மருந்துச் சோற்றில் இந்த குழம்பை ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தை பெற்றவர்களின் உடல் வலுவுக்கு இது பெரிதும் உதவிடும். சைவ உணவு சாப்பிடுபவர்கள், கருவாட்டுக்கு பதில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். சுக்கு போன்ற மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டதால், நார்மல் புளிக்குழம்பு போல இருக்காது. புளி சேர்க்காத மருந்துக் குழம்பு இது.

வெந்தயக் கூழ்

தேவையானவை:

 பச்சரிசி - ஒரு கப்
 தோல் நீக்கிய வெள்ளை உளுந்து - ஒரு கப்
 வெந்தயம் - கால் கப்
 தேங்காய்ப்பால் - ஒரு கப்
 கருப்பட்டி - கால் கிலோ
 தண்ணீர் - 3 கப் + 2 கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, வெள்ளை உளுந்து மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் 6 மணி நேரம் ஒன்றாக ஊறவிடவும். பிறகு, தண்ணீரை வடித்து கிரைண்டரில் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கி வைக்கவும். கருப்பட்டியைப் பொடித்து 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரையும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டி எடுக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் மாவைச் சேர்த்து கட்டி விழாமல் 10 நிமிடங்கள் கிளறவும். இத்துடன் கருப்பட்டிக் கரைசலை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து கட்டி விழாமல் கலக்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் கிளறி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடம்பில் சூடு தணியும்.

சுக்குத் தண்ணீர்

தேவையானவை:

 சுக்கு - 20 கிராம்
 வாய்விளங்கம் - ஒரு டீஸ்பூன்
 சித்தரத்தை - ஒரு துண்டு
 நறுக்குமூலம் - 10 கிராம்
 முழுமிளகு - ஒரு டீஸ்பூன்
 திப்பிலி - ஒன்று
 கருப்பட்டி - 60 கிராம்
 தண்ணீர் - 2 டம்ளர்

செய்முறை:

அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும். இனி, கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து பொடித்தவற்றைச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீரைச் சேர்க்கவும். தண்ணீர் பாதியாக சுண்டும் வரை வற்றவிடவும். பிறகு வடிகட்டி சூடாகக் குடிக்கவும்.

குறிப்பு:

உடம்பு வலி, வாய்வுப் பிரச்னை, இருமல், சளி உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் ஆரோக்கியம் பலப்பட்டு நோய்கள் அண்டாது. இங்கே குறிப்பிட்டுள்ள மூலிகைப் பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இஞ்சிச் சாறு

தேவையானவை:

 இஞ்சி - 50 கிராம்
 தேன் - 50 கிராம்
 கருப்பட்டி - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயம் - 1/8 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்

பொடிக்கத் தேவையானவை:

 அக்கரக்காரம் - 5 கிராம்
 சித்தரத்தை - 10 கிராம்
 முழுமிளகு - 5
 அதிமதுரம் - ஒரு குச்சி

செய்முறை:

பொடிக்க கொடுத்துள்ளப் பொருட்களையும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்தெடுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். இஞ்சியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்து, 10 நிமிடங்கள் தனியே வைத்துவிடவும். பிறகு மேலே தெளிந்து நிற்கும் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் மண்சட்டியை வைத்து சூடாக்கவும். சட்டி புகையும்போது தேன், தெளிந்த இஞ்சிச் சாறு ஊற்றிக் கொதிக்க விடவும். இத்துடன் பொடித்த பொடி, மஞ்சள்தூள், சுக்குப்பொடி, கருப்பட்டி சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

உடல் வலி மறைவதுடன் புளித்த ஏப்பம் வருவது போன்ற உபாதைகள் நீங்கும். சட்டி புகையும் போதுதான் நாம் ஊற்றுகிற தேனும், இஞ்சிச் சாற்றின் ஓரங்களும் நுரைபோல பொங்கி வரும். 10 நாளைக்கு ஒரு தடவை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து இந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதன் பிறகு அரை மணி நேரம் வரை தண்ணீர் போன்ற பானங்களைக் குடிக்கக் கூடாது. குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சளி கஷாயம்

தேவையானவை:

 இஞ்சி - 50 கிராம்
(தோல் சீவிக்கொள்ளவும்)
 ஆடாதொடை இலை- ஒன்று
 தூதுவளை - 5
 கண்டங்கத்திரி இலை - 3
 துளசி இலை - 10
 முழு மிளகு - ஒரு டீஸ்பூன்
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

தேன் மற்றும் மிளகு தவிர்த்து, மற்ற அனைத்துப் பொருட்களையும் தண்ணீர் சிறிதளவு விட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதைப் பிழிந்து வடிகட்டி சாறு எடுக்கவும். மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு, முழு மிளகு சேர்த்து வெடிக்க விடவும். தேன் சேர்த்து பொங்க விடவும். இத்துடன் வடிகட்டிய சாற்றை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அடுப்பை அணைத்து, இளம் சூட்டில் குடிக்கவும்.

பின்குறிப்பு:

தென் மாவட்டங்களில் சளி, ஆஸ்துமா காரணமாக சிரமப்படுபவர்களுக்கு, இந்த பானத்தைக் குடிக்கச் சொல்வார்கள் இதை மண்சட்டியில் மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் தேன் பொங்கும். வழக்கமான சமையல் பாத்திரங்களில் இதன் பலன் கிடைக்காது.

இருமல் பால்

தேவையானவை:

 பசும் பால் - ஒரு டம்ளர்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 முழுமிளகு - ஒரு டீஸ்பூன் (கொரகொரவென அரைத்தது)
 பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். பால் நன்கு கொதித்ததும் தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி கொதித்ததும் மஞ்சளின் பச்சை வாசனை போனதும், அப்படியே டம்ளரில் ஊற்றி சூடாகக் குடிக்கவும்.

குறிப்பு:

இருமலில் அவதிப்படுபவர்கள் இதை சூடாகக் குடித்தால் இருமல் கட்டுப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக