பாகற்காய் தொக்கு!
“தினமும் ஒரு க்ளாஸ் பாகற்காய் ஜூஸ் சாப்பிட்டால்” என்று ஆரம்பித்தால் போதும்... தலைதெறிக்க ஓடுவார்கள். நினைத்துக்கூட பார்க்க மனமில்லாமல் வெறுத்து ஒதுக்கும் பாகற்காயில் நிறைய நன்மைகள் உள்ளன. நமக்குத் தெரியும். இருந்தாலும் பாகற்காயைத் தவிர்த்து மற்ற காய்கறிகளையே வாங்குவோம். பிள்ளைகளுக்கு விடுமுறை நாள்கள், வெள்ளி, செவ்வாய், விருந்தினர் வருகை இவற்றையெல்லாம் தவிர்த்த மீதமுள்ள நாள்களிலேயே பாகற்காய்க்கு இடமளிப்போம். சரி, அவ்வப்போது பாகற்காயைப் பயன்படுத்த எளிய வழி, அதில் தொக்கு செய்துவிட்டு ஊறுகாயைப்போல் அடிக்கடி தொட்டு சாப்பிடலாம்.
தேவையானவை:
பாகற்காய் - 4, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், புளி - சிறிதளவு, வெல்லம் - சிறு துண்டு, உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்து பொடி செய்து கொள்ள:
அரிசி - 2 டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் பாகற்காயைக் கழுவி சுத்தம் செய்து, விதைகளை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புளியைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
பொடி செய்ய வேண்டியவற்றை வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்று பொரித்து இறுதியில் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இறுதியில் பாகற்காயைப் போட்டு நன்கு வதக்கவும். பாகற்காய் எண்ணெயில் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். பிறகு, தக்காளி சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும். தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்து மூடி நன்றாக கொதிக்க விடவும்.
காய் நன்றாக வெந்து வரும்போது, வெல்லத்தைப் பொடி செய்து சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்போது, பொடித்து வைத்திருக்கும் தூளைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கலந்துவிடவும். தொக்கு திரண்டு, வேண்டிய பதத்துக்கு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
பாகற்காய் என்றாலே பதறி ஓடும் நபர்களுக்கு இது மிகச்சிறந்ததாக இருக்கும். இனிப்பு, கசப்பு, காரம் என பல சுவைகளுடன் கூடிய இந்த பாகற்காய் தொக்கை பக்குவமாகச் சமைத்து பலருக்கும் பரிமாறுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக