மார்கழிப் பொங்கலும் மதி நிறைந்த நினைவுகளும்...
மார்கழி முதல் நாளும் எங்கள் இல்லத்தில் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல் வழக்கம். கோலங்கள், கோதையர்கள், கோயில் தெய்வீகக் கீதங்கள் என்று குளிர் காலை அதி சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும். காற்றில் தெய்வீக மணம் கமழ, பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் விடிகாலையிலேயே துவங்கி இருக்கும்.
அச்சு வெல்லத்தை உருண்டையான ஒரு கருங்கல்லால் உடைத்துக்கொடுப்பதே என் பணி. செய்தித்தாள் கிழியாமல் கருங்கல்லில் ஒட்டாமல் வெல்லத்தைச் செல்லமாக உடைக்க வேண்டும். ஏலக்காயைப் பிரித்து விதைகள் எடுத்து பொடித்துக் கொடுப்பதும் அடுத்த வேலை. மற்றபடி ஏதேனும் மறந்துபோன அயிட்டங்கள் இல்லையென்றால் கடைக்கு ஓடுதலும் கடைக்குட்டியாகிய எம் கடன். எப்போது எப்படி பொங்கல் ஆயிற்று என்றெல்லாம் தெரியாது. அப்பாவிற்கு அவர் சொல்லும் மந்திரங்களுக்கு ஏற்ற இடைவெளிகளில் விக்ரகங்கள் முன் துளசியையும், மலர்களையும் தூவ வேண்டும்.
“பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு!”
என ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெய்வத் திருமந்திரங்களையும், பாடல்களையும் சிரத்தையாய் வாசிப்பார். பரிபூரண வைஷ்ணவராக வாழ்ந்தவர். பூஜையறையில் அவர் வாசித்த சொற்களே என்னில் தமிழ் மீது தனித்த பற்றை உருவாக்கியிருக்க வேண்டும். வீட்டில் சௌராஷ்டிரா மொழியைப் பேசினாலும் தமிழ் மீது எனக்கு எப்போதும் காதல் உண்டு.
உயர்நிலைப்பள்ளியின் தமிழாசியர்களும் மொழியின் மீது ஈர்ப்பு உண்டாகும் விதத்தில் தமிழைக் கற்பித்தனர். அந்த ஊக்குவிப்பே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் தமிழ் பாடத்தில் முதன்மை பெற்று “திருவாசகத்தை”ப் பரிசாகப் பெறும் வாய்ப்பை நல்கியது. இன்று முகநூல் வாசகர்கள் என் பதிவுகளை சிலாகித்துப் பேசுவதைக் காணும்போது அதற்கு வித்திட்ட ஆசிரியப் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வருவோம். மேற்குறிப்பிட்ட நினைவலைகளால் இன்றைய சிறப்புணவு சர்க்கரைப் பொங்கல் என முடிவாகி, முதலில் நித்ய படைப்பான குழம்பு, பொரியலை அதிக ஆர்ப்பாட்டமின்றி எளிமையாக முடித்தேன்.
கருணை கிழங்குக் குழம்பும், கோஸ் பொரியலும். கருணைக் கிழங்கைப் பார்க்கும்போது அது மேல் தோல் காய்ந்துபோய் கருணையற்ற கரடுமுரனான கிழங்காய்த் தோன்றியது. கத்தி வளைந்தது. மாற்றுக் கத்தியை எடுத்து அழுத்தி வெட்டிக் தோலைக் களைந்தேன். கல்லுக்குள் ஈரமாய் உள்ளே நீர்ப்பதம் அப்படியே இருந்தது. சிறுசிறு செவ்வகங்களாய் வெட்டவும் கையில் வலிமை வேண்டியிருந்தது. ஆனால் கோஸ் அப்படியல்ல. அது புல்லை நறுக்குவதுபோல் எளிதாக இருந்தது. குறுக்கிலும் நெடுக்கிலும் கத்தி குதித்துக் குதித்து வெட்டி விளாசித் தள்ளியது. வாழ்க்கையும் இப்படித்தான். கடினமான ஒரு விஷயத்தைக் கடந்தபின் எளிதாய் சமாளிக்கும்படியான ஒரு விஷயமும் வரும்.
ஒரு பக்கம் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டே உருண்டை வெல்லத்தை உடைத்தேன். குக்கரில் இரண்டு கப் நீரும் ஒரு கப் பாலும் சேர்த்துக் கொதிக்கவிட்டேன். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசி எடுத்துக்கொண்டேன். கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொண்டு லேலாக வறுத்து அதனில் கலந்து அலசி கொதிக்கும் பால், நீருடன் சேர்த்தேன் குக்கரை மூடி அக்கரை சென்று இதர வேலைகள் பார்த்தேன். மூன்று விசிலுக்குப் பின் குக்கரை இறக்கி, வாணலியை அடுப்பேற்றி முந்திரி மற்றும் திராட்சைகளை தனித்தனியாய்ப் பொரித்து ஒன்றாய் இணைத்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டேன்.
மற்றுமொரு பாத்திரத்தில் வெல்லப்பாகை உருவாக்கி, வெந்த அரிசி, பருப்பில் கலக்கினேன். ஏலக்காய் பொடியைத் தூவினேன். நெய்யை நான்கு ஸ்பூன்கள் காட்டினேன். சில நிமிடங்களில் பொங்கல் பக்கத்து நகர் வரை மணம் பரப்பியதாக செய்தி வந்தது. முந்திரி, திராட்சைகளைக் கலந்து பழங்கள், மற்றும் பூக்களுடன் சூடிக்கொடுத்த சுடர் கொடிக்குப் படைத்தேன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக