சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு
உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? விடுமுறை நாட்களில் இறாலை சுவையாக சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவையுங்கள். அதன் செய்முறையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைப்பதற்கு...
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2-4
குழம்பிற்கு...
சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் இறாலை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக