வடாம் வகைகள்...
🏵 ஜவ்வரிசி வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி - 3 கப், புளித்த மோர் - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 15 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), இஞ்சிச் சாறு - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை நன்கு அலசி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்து மிளகாய் விழுது, உப்பு, இஞ்சி சாற்றை ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்கு கிளறவும். பெரிய அடிகனமான பாத்திரத்தில் 4 - 5 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசி கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
ஜவ்வரிசி நன்கு வெந்த பதம் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, புளித்த மோர், நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.
நல்ல வெயிலில் சுத்தமான துணி அல்லது பெரிய பாலித்தீன் கவரை பரப்பி, சிறு கரண்டியால் மாவினை எடுத்து சின்ன, சின்ன வட்டங்களாக ஊற்றி வைக்கவும். 3-4 நாட்கள் காயவைத்து எடுத்து, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.
🏵 தக்காளி வடாம்
தேவையானவை: தக்காளி - 5, ஜவ்வரிசி - ஒரு கப், இஞ்சிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழம் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை 7 மணி நேரம் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தக்காளிக் கூழ், இஞ்சிச் சாறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பை அணைத்து இறக்கி வைத்து, எலுமிச்சை பழத்தைப் பிழிந்து கலக்கவும். இந்தக் கலவையை ஸ்பூனால் சிறிது சிறிதாக எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் (அ) சுத்தமான துணியில் ஊற்றிப் பரப்பி காயவிடவும். 3-4 நாட்கள் காயவேண்டும்.
கலர்ஃபுல்லான இந்த வடாமை தேவைப்படும்போது சூடான எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.
🏵 புதினா வடாம்
தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கப், பச்சை மிளகாய் - 4, புதினா (ஆய்ந்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - 2 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து, களைந்து, மையாக அரைக்கவும். 2 மணி நேரம் ஜவ்வரிசியை ஊறவைக்கவும். புதினா, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் (7-8 டம்ளர்) ஊற்றி கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசியைப் போட்டு வேகவிடவும். அரைத்து வைத்த அரிசி மாவு, புதினா விழுது ஆகியவற்றை இதனுடன் சேர்த்துக் கிளறவும் (கட்டித்தட்டாதவாறு, அடிபிடிக்காதபடி, கைவிடாமல் கிளறவும்). நன்றாக வெந்ததும் இறக்கவும்.
மாவை பிளாஸ்டிக் ஷீட்டில் கரண்டியால் வட்டமாக ஊற்றி, வெயிலில் காயவிட்டு, மாலை அதை உரித்து திருப்பி போட்டு,
காயவிடவும். 2-3 நாட்கள் வெயிலில் காயவிட்டு எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
🏵 நீள வடாம்
தேவையானவை: சாதம் - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள், ஓமம் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். முறுக்கு அச்சின் உள்ளே எண்ணெய் தடவி இக்கலவையைப் போட்டு, பெரிய பாலித்தீன் கவர் மீது நீள நீளமாக பிழிந்து, 5 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
இந்த வடாமை 10 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
🏵 இடியாப்ப வடாம்
தேவையானவை: இடியாப்ப மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 4 (விழுதாக அரைக்கவும்), தண்ணீர் - 3 கப், உப்பு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் பச்சை மிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, இடியாப்ப மாவைப் போட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். இட்லிப் பானையில் அடியில் ஒரு கப் நீர் விட்டு, அதன் மேல் இட்லி தட்டு வைத்து, எண்ணெய் தடவி (அ) துணி போட்டு, ஓமப்பொடி அச்சில் வெந்த இடியாப்ப மாவை போட்டு ஒவ்வொரு இட்லி குழியிலும் பிழிந்து மூடி வைத்து, 10-15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதை பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு, வெயிலில் காயவிட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக