வித விதமான சமையல்கள்...003
தக்காளி முட்டை சட்னி
அனைவரும் தக்காளி சட்னியை சுவைத்திருப்போம். ஆனால் தக்காளி முட்டை சட்னியை சுவைத்திருக்கமாட்டோம். அதிலும் முட்டையை சட்னி செய்து சாப்பிட்டால் என்று சொன்னாலே அனைவரும் முகமும் பல கோணங்களில் செல்லும். ஆனால் உண்மையிலேயே தக்காளி முட்டை சட்னி மிகவும் சுவையாக அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு வித்தியாசமாக சமைக்க ஆசை இருந்தால், இந்த தக்காளி முட்டை சட்னியை செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த தக்காளி முட்டை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த தக்காளி - 3-4 (பெரியது மற்றும் நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை போட்டு தீயை அதிகரித்து, 3-4 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
பின் தீயை குறைத்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
கலவையானது சட்னி போன்று நன்கு வதங்கியதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு முறை கிளறி, உடனே இறக்கி விட வேண்டும். ஒருவேளை அப்படியே அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால், சட்னியானது முட்டைப் பொரியல் போன்று ஆகிவிடும்.
இறுதியில் அதனை தோசை, இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
மசாலா மீன் ப்ரை
இதுவரை எத்தனையோ மீன் ப்ரையை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மசாலா மீன் ப்ரையை சுவைத்ததுண்டா? சரி, உங்களுக்கு மசாலா மீன் ப்ரை எப்படி செய்வதென்று தெரியுமா? இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. அதுமட்டுமில்லாமல் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
சரி, இப்போது அந்த மசாலா மீன் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
மீன் - 5 துண்டுகள்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 1
சின்ன வெங்காயம் - 4-5
பூண்டு - 2 பற்கள்
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!!
கொத்து முட்டை மசாலா இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி 3 ( உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும் )
முட்டை 3
வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1/2 ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பில்லை ( கொஞ்சம் பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் ( கொஞ்சம் பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு
மட்டன்/ நாட்டுக்கோழி / குருமா குழம்பு - 4 குழம்பு கரண்டி
குரு மிளகு தூள் 1 தேக்கரண்டி
மரச்செக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
செய்முறை
1. இட்லியை நன்றாக இட்லி உப்புமாக்கு உதிர்த்து கொள்வது போல் உதிர்த்து கொள்ளவும்.
2. இப்பொழுது வடைச்சட்டியில் 2 மேஜைக்கரண்டி மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் , அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
3. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.அதில் 3 கரண்டி மட்டன் / நாட்டுக்கோழி / குருமா குழம்பு ஊற்றி நன்றாக ஒரு கிளறு கிளறி சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.
5. அதில் வர மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறவும். அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கொத்தி கிளறவும்.
6. இப்பொழுது நன்றாக உதிர்த்த இட்லியை வடச்சட்டியில் முட்டை கலவையில் சேர்த்து கொள்ளவும். அதில் மட்டன் / நாட்டுக்கோழி/ குருமா குழம்பு 1 கரண்டி சிறிது சிறிதாக ஊற்றி , அதில் குரு மிளகு தூள் சேர்த்துகோங்க நன்றாக சுருள சுருள கிளறவும்.
7. இச்சமயத்துல பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்பு
1. இதற்கு நீங்கள் பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து செய்யலாம்.
சிக்கன் சாப்பிடும் போது எலுமிச்சை அவசியமா?
அசைவம் என்று யார் சொல்லக் கேட்டாலும், உடனே “சிக்கன்” தான் நினைவுக்கு வரும். கூட எச்சிலும் ஊறும். அசைவப் பிரியர்கள் அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது சிக்கன். இந்த சிக்கனை சமைப்பதில் கடைகளும் சரி, வீடுகளும் சரி சளைப்பதாயில்லை. சிலர் வீடுகளில் வாரத்தில் ஞாயிறென்றால் சிக்கன். ஆனால், பாஸ்புட் கடைகளில் அன்றாடம் சிக்கன். சில்லி சிக்கன், சிக்கன் ரைஸ், கிரில்டு சிக்கன் என்று நாவை சுண்டியிழுக்கும் வகையறாக்கள் ஏராளம்.
ருசி நன்றாக இருக்கிறது என்று உண்டு விடுகிறோம். ஆனால், விளைவுகள் ஏராளம். இருந்தாலும் கூட வீட்டு சமையலை விட ஹோட்டல்களில் சமைக்கும் சாப்பாட்டுக்கு பலரும் அடிமையாக உள்ளனர். அதிலும், சிகப்பு நிறத்தில் எண்ணெயில் பொறித்து எடுத்து அழகாக பரிமாறப்படும் சிக்கனுக்கு ரசிகர்கள் ஏராளம்.
சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் & சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் & சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
வான்கோழி குழம்பு
வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு...
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!!!
காரமான தக்காளி மீன் குழம்பு
வார இறுதியில் எப்போதும் சிக்கன், மட்டன் செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இந்த வார இறுதியில் தக்காளி மீன் குழம்பு செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மீன் குழம்பானது மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும்.
மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். அந்த அளவில் இந்த தக்காளி மீன் குழம்பானது ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த காரமான தக்காளி மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மீன் - 6-7 துண்டுகள்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 6 (அரைத்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6-8 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான மற்றும் தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுத்து, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து, அதில் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதின் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.
மீனானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காரமான தக்காளி மீன் குழம்பு ரெடி!!!
ஆந்திரா ஸ்டைல்: மட்டன் கைமா குழம்பு
மட்டன் கைமாவை பலருக்கும் சரியாக சமைத்து சாப்பிடத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதனைக் கொண்டு வெறும் வடை தான் செய்யத் தெரியும். ஆனால் அதனைக் கொண்டு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா?
அதிலும் ஆந்திரா ஸ்டைலில் சுவையாக மட்டன் கைமா குழம்பு செய்து சாப்பிடலாம். இங்கு அந்த ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 250 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டன் கைமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின அதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளி, ஊற வைத்த கைமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியை திறந்து பார்த்து, குழம்பு போதாதெனில் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பு ரெடி!!!
[28/05, 4:45 PM] +673 889 5752: வாங்கும் மீன் நல்ல மீனா, கெட்ட மீனான்னு எப்படி தெரிஞ்சுக்குறது?
மார்கெட் சென்றால் வெண்டைக்காயை உடைத்துப் பார்த்து வாங்குவோம், பீட்ரூட்டை கீறிப் பார்த்து வாங்குவோம், தேங்காயை ஆட்டிப் பார்த்து வாங்குவோம். அதேப்போல் மீனை எப்படி வாங்குவது? தொடர்ந்து படியுங்கள்.
வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் மீனை சேர்க்க வேண்டும். அதுவும் கடல் மீன்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், அயோடின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
சொல்லப்போனால், சிக்கனை விட மீன் மிகவும் நல்லது. பலருக்கும் நாம் வாங்கும் மீன் நல்லதா கெட்டதா என்று தெரியாது. மார்கெட் சென்றால் வெண்டைக்காயை உடைத்துப் பார்த்து வாங்குவோம், பீட்ரூட்டை கீறிப் பார்த்து வாங்குவோம், தேங்காயை ஆட்டிப் பார்த்து வாங்குவோம். அதேப்போல் மீனை எப்படி வாங்குவது என்று நீங்கள் தெரியாமல் இருக்கலாம்.
அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மீனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தகவல் #1
மீன் மார்கெட் சென்று மீன் வாங்கும் போது, அது பார்க்கும் போதே புதிது போல் பிரஷ்ஷாக இருந்தால், அது நல்ல மீன்.
தகவல் #2
மீனின் கண்களைப் பார்க்கும் போது, அது தெளிவாக இருந்தால், அது நல்ல மீன். ஒருவேளை அதன் கண்கள் மங்கலாக இருந்தால், அந்த மீனை வாங்காதீர்கள்.
தகவல் #3
நீங்கள் சாப்பிட ஆசைப்பட்ட மீனின் மீது ஏதேனும் காயங்கள் இருந்தால், அதை வாங்காதீர்கள்.
தகவல் #4
மீன்களின் செவுளைத் திறந்து பார்க்கும் போது, அது செந்நிறத்தில் இருந்தால் நல்ல மீன். அதுவே சாம்பல் நிறத்தில் இருந்தால், அது கெட்ட மீன்.
தகவல் #5
எந்த மீன் ருசியாக இருக்கும் என தெரிய வேண்டுமா? மீனின் மேல் செதில்கள் அதிகமாகவோ, முள் அதிகமாக இருந்தாலோ, அந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.
தகவல் #6
மீனைத் தொடும் போதே, அது நொளநொளவென்று இருந்தால், அது மீன் கெட்டுப் போயுள்ளதைக் குறிக்கும்.
கிராமத்து கருவாட்டு தொக்கு
உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள்:
கருவாடு - 10 துண்டுகள்
பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, கருவாட்டை சேர்த்து மசாலாவுடன் சேர்த்து 5-6 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், கிராமத்து கருவாட்டு தொக்கு ரெடி!!!
மட்டன் லிவர் மசாலா
ஆட்டு ஈரல் உடலில் இரத்த அணுக்களின் உற்பத்திக்கு சிறந்த ஒன்று. இத்தகைய ஆட்டு ஈரலை வாங்கி வாரத்திற்கு ஒருமுறை மசாலா செய்து வளரும் குழந்தைகளுக்கு மற்றும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு கொடுப்பது நல்லது.
உங்களுக்கு மட்டன் லிவர் மசாலா எப்படி செய்வதென்று தெரியுமா? இங்கு மட்டல் லிவர் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் லிவர்/ஈரல் - 500 கிராம்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஈரலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பால் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 சிட்டிகை மிளகாய் தூள், உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள ஈரலை சேர்த்து 5 நிமிடம் கிளறி வேக வைத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தேங்காய் பொடி மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி 5-10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
மசாலா நன்கு வெந்ததும், அதில் ஈரல் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை மேலே பிழிந்தால், மட்டன் லிவர் மசாலா ரெடி!!!
வறுத்தரைச்ச மீன் குழம்பு
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறையாவது தவறாமல் மீன் சாப்பிட வேண்டும். அதிலும் அந்த மீனை குழம்பு வைத்து சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். மீன் குழம்பை பலவாறு சமைக்கலாம்.
இப்போது அதில் ஒன்றான வறுத்தரைச்ச மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீன் (உங்களுக்கு விருப்பமானது)- 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
வறுத்து அரைப்பதற்கு...
தேங்காய் - 1 கப் (துருவியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 4
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பற்கள்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளியைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க வேண்டும்.
பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளிச்சாற்றினை சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் அந்த அரைத்த மசாலாவை போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததுட், மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை மீண்டும் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் மீன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து, மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும். அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குழம்புடன் சேர்த்து இறக்கினால், வறுத்தரைச்ச மீன் குழம்பு ரெடி!!!
கணவா மசாலா ஃப்ரை
இந்த கணவா ஃப்ரை மிகவும் ருசியான உணவாகும். இது கடல் உணவாகும்.
இந்த கணவா மசாலா சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை பெரும்பாலும் புதிய தம்பதியர்களுக்கு உணவாக வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் அடங்கும்.
பிள்ளை வரம் வேண்டி காத்து கொண்டு இருப்பவர்களும் இந்த கணவா உணவை வாரத்தில் ஒரு தடவை சேர்த்துகோங்க.
இதில் அதிகமாக ஜிங்க் வளம் அதிகமாக இருப்பதாக உறுதி செய்யபட்டுள்ளது. விந்து அணுக்கள் குறைவாக உள்ளவர்கள் இதை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கணவா 500 கிராம் ( வட்டமாக நறுக்கியது )
சின்ன வெங்காயம் விழுது 1/4 கப்
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
தக்காளி விழுது 1/4 கப்
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 4 ( அம்மிகல்லில் நசுக்கியது)
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
குரு மிளகு தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் ( பொடியாக நறுக்கியது)
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கணவா எடுத்து நன்றாக சுத்தமாக கழுவி கொள்ளவும்.
2. இப்பொழுது தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு , அதில் மரசெக்கு கடலெண்ணய் மற்றும் கறிவேப்பிலை தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசிறி குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
3. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் விடாமல் ஊறவைத்தள்ள கணவா மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்.
4. அதில் இப்பொழுது தண்ணீர் வெளியேறும் அதிலேயே வறுக்க வேண்டும். தண்ணீர் முழுவதுமாக ஆவி அடைந்த பின்னர் மரசெக்கு கடலெண்ணய்யை விடவும்.
5. அதை சுற்றி சுற்றி எண்ணெயை ஊற்றிய பின்னர் நன்றாக பொன்னிறமாக சிவக்கும் வரை வதக்கவும்.
6. அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
ஊத்துகுளி மட்டன் ஃப்ரை
இந்த மட்டன் ஃப்ரையை நான் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி செய்து உள்ளேன்.
ஆனால் உண்மையில் இதை பசுநெய் மற்றும் பசுவெண்ணை ஊற்றி செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் 1 கிலோ
உப்புத்தூள் தேவையான அளவு
மஞ்சள்தூள் 2 சிட்டிகை
வரமிளகாய் தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
தேங்காய் பால் 1/4 கப்
கசாகசா பேஸ்ட் 1 மேஜைக்கரண்டி
மட்டன் மசாலா பொடி:
லவங்கம் 12
ஏலக்காய் 2
மிளகு 2 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
அண்ணாச்சி மொக்கு 1
கொத்தமல்லி இலைகள் 1/2 கட்டு ( பொடியாகநறுக்கிய)
சின்ன வெங்காயம் 15( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 8 ( பொடியாக நறுக்கியது)
தண்ணீர் 1 கப்
மரச்செக்கு கடலெண்ணய் 6 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் மட்டன் மசாலா பொடி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.
2. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் , மட்டன் மசாலா தூள், தண்ணீர் 1 கப் மற்றும் கொத்தமல்லி இலைகளை தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 3 விசில் விட்டுகோங்க.
3. நன்றாக ஆவி அடங்கிய பின்னர் பிரஷர் குக்கரின் மூடியை திறக்கவும்.
4. இப்பொழுது ஒரு இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும்அதில் பிரஷர் குக்கரில் உள்ள வேகவைத்த மட்டன் கலவையை போட்டு நன்றாக 20 நிமிடங்கள் வரை வதக்கவும்.
5. மட்டன் துண்டுகளை பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும், பின்பு அதில் பொடியாக பொடித்து வைத்துள்ள மட்டன் மசாலா தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
6. இடை இடையே மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக சிறுதீயில் கிளறவும்.
7. இறுதியில் கொத்தமல்லி இலைகளை தூவி நன்றாக வதக்க வேண்டும். பிறகு இறக்கி பரிமாறவும்.
நான்வெஜ் ரெசிப்பிக்கள்
* திருக்கை மீன் குழம்பு
* சுறாமீன் இறால் வறுவல்
* நண்டு பிரட்டல்
* நெத்திலிக் கருவாடு வறுவல்
* மட்டன் சுக்கா
* எலும்பு ரசம்
* கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி
* நாட்டுக் கோழி வறுவல்
* கோழி கொத்துக்கறி
திருக்கை மீன் குழம்பு
தேவையானவை:
திருக்கை மீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
பூண்டு - 30
புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க:
மிளகு - 3 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -
4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - சிறிதளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். மேலே அரைக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை புளிக்கரைசலுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இதில் வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறம்மாற வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இதில் புளிக்கரைசல் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும்.
சுறாமீன்
தேவையானவை:
சுறாமீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10
மஞ்சள்தூள் - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சுறாமீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மீன் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். வெந்தபின் மீன் துண்டுகளை தனியே எடுத்து மீன் முள்ளினை நீக்கி விட்டு அதன் தசைப் பகுதியை உதிர்த்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (தட்டியது) பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், தேங்காய்த்துருவல் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். இத்துடன் உதிர்த்து வைத்துள்ள மீனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நன்கு கிளறிப் பரிமாறவும்.
இறால் வறுவல்
தேவையானவை:
இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
இறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சோம்புத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வைத்து வறுத்தெடுத்துப் பரிமாறவும்.
நண்டு பிரட்டல்
தேவையானவை:
நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
சோம்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கிய பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு நண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அரைக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போய், நண்டு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
நெத்திலிக் கருவாடு வறுவல்
தேவையானவை:
நெத்திலி மீன் கருவாடு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நெத்திலி மீன் கருவாட்டை அதன் தலைப்பகுதியை நீக்கி விட்டு வெந்நீரில் நன்கு அலசி எடுத்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாற வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலிக் கருவாட்டினை சேர்க்கவும். தீயை மிதமாக்கி கருவாடு வெந்ததும் கிரேவி டிரையாகி கருவாட்டோடு சேரும் அளவுக்கு நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.
மட்டன் சுக்கா
தேவையானவை:
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20
சின்ன வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
அன்னாசி மொக்கு - 2
ஏலக்காய் - ஒன்று
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 5
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் இதைச் சேர்த்து சிறிதளவு இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு முழு சின்ன வெங்காயம், சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி 3-4 விசில் விட்டு வேக விட்டு அடுப்பை அணைக்கவும். வாணயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சுருள வதக்கவும். மீதம் இருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கவும். இத்துடன் மீதம் இருக்கும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, வேக வைத்த மட்டனைச் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். அரைத்த தேங்காய்க் கலவையை இத்துடன் சேர்த்து வதக்கி, மட்டனோடு சேர்ந்து வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
எலும்பு ரசம்
தேவையானவை:
நெஞ்செலும்பு, கொழுப்பு, நல்லி (அனைத்தும் சேர்த்து) - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
எலுமிச்சைப்பழம் - ஒன்று
அரைக்க:
பூண்டு - 5 பல்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
சுத்தம் செய்த எலும்பு, கொழுப்பு மற்றும் நல்லி இவற்றை குக்கரில் சேர்த்து இதனுடன் மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். இதில் மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு வேக விடவும். அரைக்க வேண்டியதை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். மட்டனையும் அது வெந்த தண்ணீரையும் தனியாகப் பிரித்து வைக்கவும். மட்டன் வெந்த தண்ணீரில் அரைத்தவற்றைச் சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விடவும். இதில் தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்துவிட்டு இறக்கவும். விருப்பப்பட்டவர்கள் ரசத்தில் வேக வைத்த கொழுப்பு மற்றும் நல்லியைச் சேர்த்து சாப்பிடலாம்.
கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி
தேவையானவை:
கொத்துக்கறி - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
இஞ்சி-பூண்டு - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 5
கிராம்பு - 5
பட்டை - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - அரை பழம்
உப்பு - தேவையான அளவு
நெய் + எண்ணெய் - தலா 100 மில்லி
செய்முறை:
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் நன்கு சுத்தம் செய்த கொத்துக்கறியையும், பட்டாணியையும் போட்டு நன்கு வதக்கி இத்துடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி கழுவி வைத்துள்ள அரிசியையும் சேர்த்து அரிசி: தண்ணீர், 1:1.5 (ஒன்றுக்கு ஒன்றரை பங்கு விகிதம்)என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சைச்சாறு பிழிந்து ஒரு விசில் விட்டு ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து இறக்கி பிறகு பரிமாறவும்.
நாட்டுக் கோழி வறுவல்
தேவையானவை:
நாட்டுக் கோழிக் கறி- அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - ஒன்று
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு - தேவையான அளவு
செய்முறை:
நாட்டுக் கோழியை நன்கு சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் உப்பு, சிறிது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியவுடன் மீதம் இருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கி, இதில் நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும், இதனுடன் வெந்த கோழிக் கறியையும் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். பிறகு தண்ணீர் சேர்க்காமல் அரைத்த தேங்காய், மிளகு விழுதைச்சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுத்துப் பரிமாறவும்.
கோழி கொத்துக்கறி
தேவையானவை:
கோழிக்கறி (எலும்பு இல்லாதது) - அரை கிலோ
வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கோழிக்கறியை சுத்தம் செய்து, கொத்தி வாங்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, தட்டி வைத்த பூண்டு, வெங்காயம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். பின்பு, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கொத்தி வைத்துள்ள கோழிக்கறியையும் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து, கோழி நன்கு வெந்தவுடன் தேங்காய்த்துருவல் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.
ஆம்பூர் பிரியாணி சைட் டிஷ்
ஆம்பூர் பிரியாணி கத்திரிக்காய் ஹட்டா. இது தான் வேலூர் மாவட்ட பிரியாணிகளின் சரியான பக்க உணவாகும்.
தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
(அ) புளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
வெல்லம் - 2 சிறிய துண்டு (கடைசியில் சேர்க்க)
முதலில் தாளிக்க:
மரசெக்கு கடலை எண்ணெய் - 3 மேஜை கரண்டி
மிளகு - 10
கருவேப்பிலை - 10 இலை
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
.உப்பு தூள் - தேவையான அளவு
வறுத்து பொடித்து கொள்ள :
வேர்க்கடலை - 3 மேஜைக்கரண்டி
எள் - 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
1. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அதனை மைய பொடித்து கொள்ளவும்.
(கவனிக்க : வேர்க்கடலை + வெந்தயத்தினை முதலில் வறுத்த பிறகு எள் சேர்த்து வறுக்கவும்.எள் சீக்கிரமாக வறுப்பட்டுவிடும். நான் வேர்க்கடலையினை தோலுடனே அரைத்து கொண்டேன். விரும்பினால் தோல் நீக்கி கொள்ளவும்.)
2. கத்திரிக்காயினை நான்காக வெட்டவும். கத்திரிக்காய் காம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர் பக்கம் வெட்டவும். இப்படி வெட்டினால் கத்திரிக்காய் உடையாமல் இருக்கும்.
3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு + கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
4. இத்துடன் வெட்டி வைத்துள்ள கத்திரிக்காயினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.
5. பிறகு அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள்யினை சேர்த்து கிளறிவிடவும்.
6. புளியினை 1 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். இப்பொழுது கத்திரிக்காயில் கரைத்து வைத்து இருக்கும் புளி கரைசலை ஊற்றி 4 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
7. இப்பொழுது பொடித்து வைத்துள்ள பொடியினை கத்திரிக்காயில் சேர்த்து கலந்து விடவும்.
8. அனைத்து பொருட்களும் நன்றாக சேரும் மாறு கிளறிய பிறகு,அதனை கண்டிப்பாக தட்டு போட்டு மூடி சிறிய தீயில் சுமார் 8 நிமிடங்கள் வைக்கவும்.
9. இப்பொழுது எண்ணெய் தனியாக பிரிந்து வருவதே. அதுவே சரியான பதம் ஆகும். அப்பொழுது சிறிய வெல்லம் துண்டினை சேர்த்து கிள்றிவிடவும்.
(கண்டிப்பாக தட்டு போட்டு மூடி வேகவிடவும் அப்படி செய்தால் தான் எண்ணெய் தனியாக வரும். இல்லை என்றால் thick ஆக நிறைய நேரம் எடுத்து சுவையில் வித்தியசம் இருக்கும். )
10. சுவையான பிரியாணி கத்திரிக்காய் ரெடி.இதனை பிரியாணியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
நாசிக்கோரி
*தேவையான பொருட்கள்:*
இறால் - 100 கிராம்
பெரிய துண்டு கருவாடு - ஒரு துண்டு
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 4
பட்டாணி - கால் கப்
காரட் - 2
கலர் பவுடர் - 2 சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
முட்டை - 2
எண்ணெய் - அரை கப்
மிளகாய் வற்றல் - 6
பூண்டு - 4 பல்
வெங்காயம் - ஒன்று
சாதம் - 4 கப்
*செய்முறை:*
மூன்று பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டை தோல் சீவி விட்டு நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். ஒரு கிண்ணத்தில் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்து அரைத்தால் எளிதில் அரைக்க முடியும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.
ஒரு வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் பூண்டு, வெங்காயம், ஊற வைத்த மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இறால் மற்றும் கருவாடு துண்டை தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
கருவாடை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். சாதத்தை பொலபொலவென்று வடித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் கலர் பவுடர், கால் தேக்கரண்டி உப்பு போட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதை போட்டு அதனுடன் கருவாடு துண்டுகளையும் போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.
பின்னர் அதில் காரட், பட்டாணி, தக்காளி, அரைத் தேக்கரண்டி உப்பு போட்டு 10 நிமிடம் காய்கள் நன்கு வேகும் வரை வதக்கி விடவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பிலையை பிய்த்து போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து காய்கள் நன்கு வெந்ததும் பொரித்து எடுத்து வைத்திருக்கும் முட்டை மற்றும் இறால் இரண்டையும் மசாலாவுடன் போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
அதன் பிறகு வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு மசாலாவுடன் சாதம் சேரும்படி நன்கு கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான நாசிக்கோரி தயார். பரிமாறும் போது மேலே பொரித்து வைத்திருக்கும் கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.
*இது ஒரு இஸ்லாமிய உணவு இஸ்லாமியர்களின் இல்லங்களில் விருந்தின் போது செய்வார்கள்.*
சூப்பரான வாழைத்தண்டு புலாவ் செய்வது எப்படி
வாழைத்தண்டு நீர்ச்சத்து நிறைந்தது. இன்று வாழைத்தண்டை வைத்து எளிமையான முறையில் சூப்பரான, சுவையான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வாழைத்தண்டு - பெரிய துண்டு
மோர் - ஒரு கப் + சிறிதளவு (வாழைத்தண்டை ஊற வைக்க)
தண்ணீர் - ஒரு கப்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து, மோரை வடித்துவிட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
* அடுப்பில் குக்கரை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும்.
* அடுத்து அதில் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (மோரும் வாழைத்தண்டும் சேர்ந்து அரிசியில் இரண்டு மடங்காக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்).
* கொதி வந்தவுடன் ஊறிய பாஸ்மதி அரிசியை கொதிக்கும் கலவையில் சேர்த்து, அரிசி உடையாமல் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப்போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
* பிறகு அடுப்பை அணைத்து, உடனே இறக்கி, பிரஷர் நீங்கியதும் சூடாக தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
* வாழைத்தண்டு புலாவ் ரெடி.
கமகம கமர்கட்
தேவையானவை: தேங்காய் துருவல் - 2 கப், பாகு வெல்லம் - ஒன்றரை கப், நெய் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி, தேங்காய் துருவல் சேர்த்து, அடுப்பை 'சிம்’ மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும் (இதில் கொஞ்சம் எடுத்து சற்று ஆறவிட்டு, உருட்டிப் பார்க் கும்போது உருட்ட வந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்). கலவை சற்று சூடாக இருக்கும்போதே, கையில் நெய்யை தொட்டு சின்னச் சின்ன உருண்டை களாகப் பிடிக்க... கமகம கமர்கட் தயார்.
காளான் ரைஸ் !!!
தேவை?
எண்ணெய் -தேவையான அளவு
பாசுமதி அரிசி - 2கப்
காளான் - 100கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுதூள் -சிறிது
உப்புதூள் தேவையான அளவு
எப்படி செய்வது?
உதிராக சாதம் வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து சோயாசாஸ், சில்லிசாஸ், வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும். பொடியாக நறுக்கிய வெங்காயதாள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி பரிமாறவும்.
ஆட்டுக்கறி சமோசா.....
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
1 வெங்காயம், நன்றாக நறுக்கியது
2 பல் பூண்டு – நசுக்கியது
2 தேக்கரண்டி சீரகம்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் காற்சில்லு சர்க்கரை
2 தேக்கரண்டி உப்பு
500g நன்றாக நறுக்கிய இளம் ஆட்டுக்கறி
1/4 கப் தண்ணீர்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1/2 கப் உறைந்த பட்டாணி
1/4 கப் கொத்தமல்லி நறுக்கியது
4 பேஸ்ட்ரி தாள்கள் (பொங்கியமாப்பசை)
1 முட்டை, நன்றாக அடித்துகொள்ளவும்
மாம்பழ சட்னி, பரிமாற
அனைத்து பொருட்கள் தேர்வு
செய்முறை
செய்முறை 1
ஒரு கடாயில் மிதமான தீயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, அதனுடன், வெங்காயம், பூண்டு, சீரகம், கரம் மசாலா தூள், சர்க்கரை, நன்றாக நறுக்கிய ஆட்டுக்கறி மற்றும் உப்பு சேர்க்கவும். இதை ஒரு மர கரண்டியால் 3 முதல் 5 நிமிடம் வரை நன்கு வெந்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.
செய்முறை 2
இதனுடன் தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் பட்டாணி சேர்த்து, 8 நிமிடங்கள் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். தண்ணீர் முற்றிலும் வற்றியவுடன் கொத்தமல்லி இலையை தூவி மசாலாவை நன்கு ஆறவிடவும்.
செய்முறை 3
200 ° சி நுண்ணலை(மைக்ரோவேவ்) அடுப்பில். 2 ம் அடுக்கு தட்டுகளில், ஒவ்வொரு தாளையும் 9 x 8cm வட்டங்களில் வெட்டி, ஒவ்வொரு வட்டத்தின் மையத்தில் கலவையை ஒரு கரண்டி வைக்கவும். பிறகு இதை அரை வட்டமாக தண்ணீர் தொட்டு மடிக்கவும மடித்த முனைகளை நன்றாக விரல் நுனியில் அழுத்தி விடவும். இதை மின்சார அடுப்பு தட்டுக்களின் மீது வைக்கவும்.
செய்முறை 4
தட்டுகளில் வைக்கும் முன், நன்கு அடித்து வைத்துள்ள முட்டை கலவையை, சமோசா மீது தடவி 20 முதல் 25 நிமிடம் வரை நுண்ணலை(மைக்ரோவேவ்) அடுப்பில் வைக்கவும். 10 நிமிடம் ஒரு முறை தட்டுக்களை மாற்றி வைக்கவும் அல்லது சமோசா நன்கு பொரிந்து பொன்னிறமாகும் வரை வைக்கவும். தொட்டுக்கொள்ள சட்னியுடன் பரிமாறவும்.
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது)
புதினா - 1 கப்
குங்குமப்பூ - 1 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
சிக்கன் ஊற வைப்பதற்கு...
பச்சை மிளகாய் - 4 (அரைத்தது)
இஞ்சி பூண்டூ பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் . 1/2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் -2
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
சாதம் செய்வதற்கு...
பாஸ்மதி அரிசி - 2 கப்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லி மற்றும் புதினா தவிர்த்து, இதர பொருட்களை போட்டு வறுத்துக் கொண்டு, பின் அதனை குளிரை வைக்க வேண்டும்.
வறுத்த பொருட்கள் குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, இறுதியில் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து ஓரளவு அரைக்க வேண்டும்.
பின் சிக்கனை எடுத்துக் கொண்டு, அதில் சிக்கன் ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து, பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, அரிசிக்கு வேண்டிய தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், ஊற வைத்து கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் உப்பைப் போட்டு, மூடி வைத்து, அரிசியை பாதியாக வேக வைத்து, இறக்கி விட வேண்டும்.
அடுத்து பாலில் குங்குமப்பூவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தனியாக வைக்க வேண்டும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தாராளமாக எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள சிக்கனைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் பாதியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, அதன் மேல் மீதமுள்ள நெய் ஊற்றி, பின்பு பொன்னிறமாக வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா மற்றும் குங்குமப்பூ பால் சேர்த்து, காற்று புகாதவாறு நன்கு மூடி, தீயை குறைவில் வைத்து, 20-30 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி ரெடி!!!
சமச்சீர் டயட் - பெண் உடல் மேம்படட்டும்!
உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்திருக்கப் பலவழிகளில் முயற்சி செய்கிறோம். உடற்பயிற்சி, டயட் என மெனக்கெடுகிறோம். கட்டுப்பாடுகள் நிறைந்த டயட், உடலை வருத்திக்கொண்டு கடைப்பிடிக்கும் டயட், அசைவத்தைத் தவிர்க்கும் டயட், கொழுப்பை மட்டும் உண்ணும் டயட் எனப் பலவகை டயட்டுகள் உள்ளன. இவை அனைவருக்கும் பொருந்துமா எனக் கேட்டால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்.
புரதம், நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், கொழுப்பு, மாவுச்சத்து ஆகியவை சரிவிகித்ததில் இருப்பதே சமச்சீர் டயட் (Balanced Diet). மேற்சொன்ன அனைத்துச் சத்துகளும் உடலுக்குத் தேவை என்பதே நிதர்சன உண்மை. அறுசுவைகளும் கலந்த உணவை சாப்பிடுவதே அனைவருக்கும் ஏற்றது. பாதுகாப்பானது. சிறந்தது.
பேலன்ஸ்டு டயட்
நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைச் சமஅளவில் பெற உதவுகிறது. இந்த வகை டயட்டில் குறைந்த காலத்தில் உடல் எடை குறைப்பது போன்ற முறைகள் பின்பற்றப் படுவதில்லை. பேலன்ஸ்டு டயட்டில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கும். இது முறையான ஊட்டச்சத்து உணவுப்பட்டியலைக் கொண்டது. டாக்டர்களால் பெரிதும் பரிந்துரைக்கக்கூடியது. சில டயட்டுகளைப் பின்பற்றினால் மற்ற உணவுகளின் மேல் கிரேவிங் என்கிற தேடல் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால், பேலன்ஸ்டு டயட்டைச் சாப்பிட்டால் அந்த உணர்வு இருக்காது. ஏனெனில், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் அளவோடு சாப்பிடுகிறோம்.
பேலன்ஸ்டு டயட் ஏன் முக்கியம்?
* உடல் சீராக இயங்கத் தேவையான ஆற்றலைத் தரும்.
* இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ், உடலில் உள்ள செல்கள், திசுக்கள் மற்றும் உள்ளுறுப்புகளின் இயக்கத்துக்கு உதவும்.
* சீரான உடல் எடையைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
* நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க உதவும்.
* நிம்மதியான தூக்கம் பெற உதவும்.
* உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்ற உணர்வை அறிய உதவும்.
பேலன்ஸ்டு டயட்டின் பலன்கள்
* தொற்றா நோய்களான உடல்பருமன், சர்க்கரைநோய், இதயநோய், எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் பல வகைப் புற்றுநோய்களிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறது.
* பேலன்ஸ்டு டயட்டில் எடுத்துக்கொள்ளப்படும், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
* பேலன்ஸ்டு டயட்டின் மிக முக்கியமான பலன்களில் ஒன்று எனர்ஜி. இந்த டயட்டில் பின்பற்றப்படும் உணவுப்பட்டியலில் புரோட்டீன், மினரல்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் சமஅளவில் உள்ளன. அவை, நாள் முழுவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிவகுக்கின்றன.
உணவுப் பட்டியலின் பிரமிட்
* முதல் அடுக்கு: கொழுப்பு, எண்ணெய் மற்றும் இனிப்பு வகை உணவுகள்
* இரண்டாம் அடுக்கு முதல் பகுதி: பால், யோகர்ட், சீஸ்
* இரண்டாம் அடுக்கு இரண்டாம் பகுதி: இறைச்சி, மீன், பீன்ஸ், முட்டை மற்றும் நட்ஸ்
* மூன்றாம் அடுக்கு முதல் பகுதி: பச்சைக் காய்கறிகள், சாலட் மற்றும் சூப்
* மூன்றாம் அடுக்கு இரண்டாம் பகுதி: பழங்கள் மற்றும் பழச்சாறுகள்
* நான்காம் அடுக்கு: சிறுதானியங்கள், தீட்டப்படாத அரிசி மற்றும் தானியங்கள்
குறிப்பு: தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருநாளைக்கு 40 நிமிடங்களென வாரத்துக்கு ஐந்துமுறை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பின்பற்ற வேண்டிய உணவுப் பட்டியல் அதிகாலை (6 மணி அளவில்)
* பெருஞ்சீரகத் தண்ணீர் 200 மி.லி. மற்றும் 5 பாதாம்காலை உணவாக (7 முதல் 9 மணிக்குள்)
* முழுதானியங்கள்
* அரை கப் கேழ்வரகு கஞ்சி மற்றும் பழத்துண்டுகள் (ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பப்பாளி)
* இட்லி அல்லது தோசை, சாம்பார், சட்னி. (புதினா, தக்காளி, வெங்காயம், தேங்காய் சட்னி போன்றவற்றில் ஏதேனும் ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.)
* அவித்த முட்டை மற்றும் பால் சேர்க்காத டீ.
முன்பகல் உணவு (காலை 11.00 முதல் 11.30 மணிக்குள்)
* 1 ஆப்பிள் அல்லது ஆரஞ்சுப் பழம்
* 1 கப் யோகர்ட்/தயிருடன் பழத்துண்டுகள் சேர்த்துச் சாப்பிடலாம்.
* காய்கறி சாலட்
* 2 கப் தர்பூசணி அல்லது நட்ஸ் மதிய உணவு (12.30 - 1.30 மணிக்குள்)
* 2 ரொட்டி/புல்கா (நெய் மற்றும் எண்ணெய் இல்லாதது), 1 கப் காய்கறி, 1/2 கப் பருப்பு, 1 கப் கீரைகள்
* 1 கப் சாதம், 1/2 காய்கறி கூட்டு, 1/2 கப் ரசம்
* வாரத்தில் இரண்டு நாள்கள் சிக்கன்/மட்டன்/முட்டை/மீன் (1/2 கப் எண்ணெய் சேர்த்துச் செய்யலாம்)
ஸ்நாக்ஸ்... (மாலை 3.30 - 4.30 மணி வரை)
* முளைகட்டிய தானியங்கள், சுண்டல் அல்லது பிரெட் சாண்ட்விச், 1 கப் கிரீன் டீ.
இரவு உணவு... (இரவு 7 முதல் 8 மணிக்குள்)
* இட்லி, இடியாப்பம், புட்டு, தோசை இவற்றில் ஏதாவது ஒன்று. சாம்பார், சட்னி. (புதினா அல்லது வெங்காயச் சட்னியுடன் சாப்பிடலாம். தக்காளி, தேங்காய்ச் சட்னியைத் தவிர்க்கலாம்.)
* சப்பாத்தி, பட்டாணிக் குருமா.
* அரிசி உணவுகளைத் தவிர்க்கலாம்
தூங்கும் முன் (இரவு 9.00)
* ஒரு டம்ளர் பால்.
* இளஞ்சூடான நீருடன் உப்பு கலந்த எலுமிச்சைச் சாறு
* பழங்கள் 1/2 கப் (சளி பிடிக்கும் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கவும்)
டிப்ஸ்
* கறி, கிரேவி செய்யும்போது எண்ணெயுடன் சிறிது தண்ணீரையும் பயன்படுத்துங்கள்.
* நீண்டநேரம் சமைப்பதைத் தவிர்த்து, குறைவான நேரத்தில் சமைத்துச் சாப்பிடுங்கள்.
* வேகவைத்த முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* ஃப்ரெஷ்ஷான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* சீரகத் தண்ணீர், இளநீர், சூப், பழச்சாறுகள், பால் போன்ற திரவ உணவுகளை அதிகம் பருகுங்கள்.
அளவான உணவே ஆரோக்கியம்
* வயதுக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது ஆரோக்கியத்தைத் தரும். கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை அளவாகச் சாப்பிடுவது நல்லது.
* பழச்சாறுகள், இனிப்புகள், பொரித்த உணவுகள் மற்றும் வெள்ளை ரவையை அளவாகச் சாப்பிடலாம்.
* வாரத்துக்கு இரண்டுமுறை, அசைவ உணவுகளைச் சாப்பிடலாம்.
* உருளை, கருணை போன்ற கிழங்கு வகைகளை அளவாகச் சாப்பிடலாம்.
* மூன்று வேளையும் மாவுச்சத்து உணவுகளைச் சாப்பிடாமல் இருவேளை மட்டும் சாப்பிடுவது நல்லது.
* சிறுதானியங்களைத் தினமும் ஒரு நேரம் சாப்பிடுவது நல்லது.
(மருத்துவரின் ஆலோசனை பெற்றபிறகே இந்த டயட்டைப் பின்பற்றுவும்.)
பெண்களுக்கான பேலன்ஸ்டு டயட் உணவுகள்
சங்குப்பூ டீ
தேவையானவை: வயலட் கலர் சங்குப்பூ - 5, தண்ணீர் - 200 மி.லி., தேன் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன்.
செய்முறை: சங்குப்பூவை அலசி வைத்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்த நீரில் சங்குப்பூவை போட்டு 10 நிமிடம் வாணலியை மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் பூவில் உள்ள எசென்ஸ் நீரில் கலந்திருக்கும். பிறகு அந்த நீரை வடிகட்டி டம்ளரில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.
பலன்கள்: சங்குப்பூ ரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்யும். குடற்புழுக்களைக் கொல்லும்; செரிமானத்துக்கு உதவும். தலைவலியைச் சரிசெய்யும். சோர்வைப் போக்கிப் புத்துணர்வு பெற உதவும்.
ஸ்வீட் பச்சைப் பயறு
தேவையானவை: பச்சைப் பயறு - 1 கப், பொடித்த வெல்லத்தூள் - கால் கப், தேங்காய்த் துருவல் - கால் கப், நெய் - 1 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை, சுக்குத்தூள் - 2 சிட்டிகை.
செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை மிதமான தீயில் வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். ஊறிய பச்சைப் பயறை குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். வெந்த பச்சைப் பயறை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, வெந்த பச்சைப் பயறு, வெல்லக்கரைசலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாக வந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.
பலன்கள்: பச்சைப்பயறு கொழுப்பைக் குறைக்கும். ரத்தச்சோகையைச் சரிசெய்யும். சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் வெல்லம், இரும்புச்சத்து நிறைந்தது. சுக்கு, அலுப்பை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும்.
ராகி ஸ்வீட் சேமியா
தேவையானவை: ராகி சேமியா - 1 கப், தேங்காய்த் துருவல் - கால் கப், நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: முந்திரிப்பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். ராகி சேமியாவுடன் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து வடித்துவிடவும். பின்னர் அதை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெந்த ராகி சேமியா சூடாக இருக்கும்போது மீதமுள்ள நெய், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
பலன்கள்: ராகி, எலும்புகளை பலமாக்கும். பற்கள் வலுவாகும். உடலில் உள்ள தேவையற்ற சதையைக் குறைக்க உதவும். நாட்டுச் சர்க்கரை அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. ஏலக்காய், செரிமானத்துக்கு உதவும். முந்திரியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவடையச்செய்வதோடு புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும்.
முருங்கைக்கீரை முட்டைப் பொரியல்
தேவையானவை: முருங்கைக்கீரை - 1 கப் (உருவியது), முட்டை - 1, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்கீரையை அலசி வைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். முட்டையை உடைத்து, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அலசிய முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து வேகும்வரை வதக்கவும். வெந்ததும், முட்டைக் கலவையை ஊற்றிக் கிளறவும். முட்டை, முருங்கைக்கீரையுடன் சேர்ந்து வெந்ததும் இறக்கவும்.
பலன்கள்: வைட்டமின் - ஏ சத்து அதிகம் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். நீண்ட நேரத்துக்குப் பசி தாங்கும். உடல் சூட்டைத் தணிக்க உதவும். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் இதை உட்கொள்வது நல்லது. முடி உதிர்தல் பிரச்னை குறையும்.
வாழைப்பூ பொரியல்
தேவையானவை: சிறிய வாழைப்பூ - ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 5, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை மேல்தோல் உரித்து, நரம்பு நீக்கி ஆய்ந்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த வாழைப்பூ, வேகவைத்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
பலன்கள்: வாழைப்பூ, குடலை சுத்தம் செய்து, செரிமானக் கோளாறை சரிசெய்யும். உளுந்து உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். துவரம்பருப்பு, குடல் புண்களைக் குணப்படுத்தும். சின்ன வெங்காயம் வயிற்றுக்கோளாறைச் சரிசெய்யும்.
டேட்ஸ் பர்ஃபி
தேவையானவை: பேரீச்சம்பழம் - 100 கிராம், தேங்காயில் எடுக்கப்பட்ட சர்க்கரை (Coconut Sugar) - 100 கிராம், பால் - 50 மி.லி, நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பாதாம் பருப்பு - 5.
செய்முறை: பாதாம்பருப்பைத் துருவிக் கொள்ளவும். பாலை இளஞ்சூடாகக் காய்ச்சிக்கொள்ளவும். பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, அரை மணி நேரம் பாலில் ஊற வைக்கவும். ஊறவைத்த பேரீச்சம்பழம், தேங்காய் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கி, அரைத்த பேரீச்சை விழுதைச் சேர்த்து கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும், ஏலக்காய்த்தூள், பாதாம் துருவல் சேர்த்து, நெய் தடவிய தட்டில் போட்டு சமப்படுத்தவும். ஆறியவுடன் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: பாதாமில் உள்ள புரதம், முகப்பொலிவு மற்றும் சருமப் பொலிவுக்கு உதவும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் கொண்ட பேரீச்சை, எலும்புகளை வலுப்படுத்தும். ரத்தச்சோகை நீங்கும். மலச்சிக்கல் தீரும். தேங்காய்ச் சர்க்கரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
உளுந்தங்களி
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், வெல்லம் - 1 1/4 கப், தண்ணீர் - 3 கப், நெய் - எண்ணெய் கலவை - அரை கப்.
செய்முறை: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் - நெய் கலவையை விட்டுச் சூடாக்கி, உளுத்தம் மாவைச் சேர்த்து, நுரைத்து வரும்வரை கிளறவும். பிறகு, வெல்லக் கரைசலை ஊற்றி, அல்வா போல் சுருண்டு வரும் வரை கிளறவும். அவ்வப்போது மீதமுள்ள எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்துக்கொள்ளவும்.
பலன்கள்: மாதவிடாயின்போது ஏற்படக்கூடிய முதுகு வலி, இடுப்புவலியைக் குறைக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு இது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். வாந்தி மற்றும் பித்தத்தைப் போக்கும்.
ஏ பி சி ஜூஸ்
தேவையானவை: ஆப்பிள் - பாதி அளவு, பீட்ரூட் - பாதி அளவு, கேரட் - பாதி அளவு, நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 கப், ஐஸ்கட்டிகள் (விருப்பப்பட்டால்) - தேவையான அளவு
செய்முறை: ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள், பீட்ரூட், கேரட் துண்டுகள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்தக் கலவையை வடிகட்டி, தேவையான தண்ணீர் சேர்த்து, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகவும்.
பலன்கள்: இதயம் மற்றும் நுரையீரலைப் பலப்படுத்தும். இதயநோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பார்வைத் திறன் மேம்படும். கண் எரிச்சலைப் போக்கும். பல வகைப் புற்றுநோய்களைத் தடுக்கும்.
எள்ளுருண்டை
தேவையானவை: எள் - 1 கப், வெல்லத்தூள் - அரை கப், நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை: எள்ளை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும்வரை வறுக்கவும். எள் ஆறியதும், வெல்லத்தூளையும் எள்ளையும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்கள்: தாமிரம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகள் இதில் நிறைந்துள்ளன. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். எலும்புகள் வலுவடைய உதவும். எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும்.
சுண்டைக்காய் பொடிமாஸ்
தேவையானவை: சுண்டைக்காய் - 1 கப், வேகவைத்த கடலைப்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - 10, பூண்டுப் பல் - 5, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: சுண்டைக்காயை காம்பு நீக்கிப் பாதியாக நறுக்கி, தண்ணீரில் அலசி எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, சுண்டைக்காயையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சுண்டைக்காய் வெந்ததும், வேகவைத்த கடலைப்பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
பலன்கள்: வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும். குடல் புண்களை ஆற்றும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
கவுனி அரிசி இனிப்பு பொங்கல்
தேவையானவை: கவுனி அரிசி - 1 கப், தண்ணீர் - 4 கப், நாட்டுச் சர்க்கரை - 1 கப், தேங்காய்த் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன் .
செய்முறை: கவுனி அரிசியைக் கழுவி பாத்திரத்தில் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன், மீதமுள்ள 2 கப் தண்ணீரையும் சேர்த்துக் குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்துக் குக்கரைத் திறக்கவும். வெந்த கலவையில் நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றியதும் இறக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தது. சரும ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.
அத்திப்பழ கீர்
தேவையானவை: உலர் அத்திப்பழம் - 4, பால் - 200 மி.லி, சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன், பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - 1 சிட்டிகை.
செய்முறை: உலர் அத்திப்பழத்தை சிறிதளவு தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த கலவையைப் பாத்திரத்தில் போட்டு, பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பனங்கற்கண்டு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பனங்கற்கண்டு கரைந்ததும் இறுதியாக சுக்குதூள், சாரைப்பருப்பு சேர்த்து இறக்கவும்.
பலன்கள்: ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்க உதவும். மலச்சிக்கலை சரிசெய்யும். கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள்கூட அளவாகச் சாப்பிடலாம்.
கொய்யா இலை டீ
தேவையானவை: கொய்யா இலை - 6, தண்ணீர் - 200 மி.லி., பனங்கற்கண்டு அல்லது தேன் - 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கொய்யா இலையை அலசி வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை அணைத்து பாத்திரத்தை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் மூடியைத் திறந்தால், இலைகளின் எசென்ஸ் கலந்திருக்கும். பிறகு வடிகட்டி, நீரை டம்ளரில் எடுத்துக்கொள்ளவும். பனங்கற்கண்டு அல்லது தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.
பலன்கள்: ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். வயிற்றுவலி மற்றும் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும். உடல் எடை அதிகரிக்க உதவும். புத்துணர்வு பெற உதவும்.
பீட்ரூட் சூப்
தேவையானவை: சிறிய பீட்ரூட் - 1, துவரம்பருப்பு வேகவைத்த நீர் - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, சோம்பு - 2 சிட்டிகை, கல்பாசி - சிறிதளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பீட்ரூட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் தனித்தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, சோம்பு, கல்பாசி தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பீட்ரூட்டை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், துவரம்பருப்பு வேகவைத்த நீர் ஊற்றவும். அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: ரத்த உற்பத்திக்கு உதவும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும். ரத்தச்சோகை வராமல் தடுக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொத்தமல்லித்தழை செரிமானத்துக்கு உதவும்.
சிவப்பரிசி பாயசம்
தேவையானவை: சிவப்பரிசி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப், நாட்டுச் சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை: சிவப்பரிசியை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் ரவை போல உடைக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிவப்பரிசி ரவையைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். நன்றாக வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
பலன்கள்: கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, பித்தப்பைக் கற்கள், ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
சோயா உருண்டை மசாலா
தேவையானவை: சோயா உருண்டைகள் - 1 கப், பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், தக்காளி - 1, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். சூடு ஆறியதும் நீரை வடிகட்டிக் கையால் பிழிந்து, மீண்டும் நீர் ஊற்றிப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சோம்பு, பட்டைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, நறுக்கிய சோயா உருண்டைகள் போட்டுக் கிளறவும். மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். தண்ணீர் வற்றியதும், நன்றாகக் கிளறி இறக்கவும்.
பலன்கள்: உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். பட்டை, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.
தினை கேசரி
தேவையானவை: தினை - அரை கப், நாட்டுச் சர்க்கரை - அரை கப், தண்ணீர் - 2 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உலர் திராட்சை, முந்திரி தலா - 10, கேசரி கலர் - 1 சிட்டிகை
செய்முறை: வாணலியில் நெய் விட்டுச் சூடாக்கி, உலர் திராட்சை, முந்திரியை வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் தினையை வறுக்கவும். பிறகு ஆறவிட்டு, மிக்ஸியில் ரவை போல் அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, தினை ரவையைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும் (இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும்). இறுகியதும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
பலன்கள்: தினை கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறைக்க உதவுகிறது. தினையில் நிறைந்துள்ள புரதச்சத்து உடலை வலுவாக்கும். வாயுக் கோளாறைப் போக்கும். பசியை உண்டாக்கும். மற்ற தானியங்களைவிட தினையில் இரும்புச்சத்து அதிகம்.
நெல்லிக்காய் சாதம்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 2, வேகவைத்த சாதம் - 1 கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: நெல்லிக்காயைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பொன்னிறமானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய் சேர்த்துக் கிளறவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையைச் சாதத்தில் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: இதய நோய், மஞ்சள்காமாலை வராமல் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும். பார்வைத்திறன் மேம்படும். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். ரத்த உற்பத்திக்கு உதவும்.
முளைகட்டிய பயறு சாலட்
தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப், நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1 (நறுக்கவும்), மாங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கறுப்பு உப்பு - 2 சிட்டிகை, ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்.
செய்முறை: நறுக்கிய பச்சை மிளகாய், குடமிளகாய், முளைகட்டிய பச்சைப் பயறு, கேரட் துருவல், மாங்காய்த் துருவல், கறுப்பு உப்பு, ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கிளறவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: முளைகட்டிய பயறில் அதிக அளவு புரதம், வைட்டமின்கள் மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளன. இந்த சாலட் உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. கேரட், ரத்த உற்பத்திக்கும் சருமப் பராமரிப்புக்கும் உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த குடமிளகாய், உடல் புத்துணர்வு பெற உதவுகிறது.
மாதுளை லஸ்ஸி
தேவையானவை: கெட்டித் தயிர் - 1 கப், மாதுளை முத்துகள் - 1 கப், நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), புதினா இலை - சிறிதளவு
செய்முறை: மிக்ஸியில் கெட்டித் தயிர், மாதுளை முத்துகள், நாட்டுச் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை டம்ளரில் ஊற்றி, மாதுளை முத்துகள், புதினா இலை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: மாதுளை, முடி உதிர்வதைத் தடுக்கும். சருமச் சுருக்கங்களைச் சரிசெய்யும். நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு உதவும். புதினா, புத்துணர்வு பெற உதவும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
புதினா ஜூஸ்
தேவையானவை: புதினா இலை - 30, வறுத்த சீரகத்தூள் - 2 சிட்டிகை, மிளகுத்தூள் - 1 சிட்டிகை, தண்ணீர் - 2 கப், தேன் - 3 டீஸ்பூன், கறுப்பு உப்பு - 1 சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: புதினா, தேன், சீரகத்தூள், மிளகுத்தூள், கறுப்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையில் மீதமுள்ள தண்ணீர் சேர்த்து, ஐஸ்கட்டிகள் போட்டுப் பருகவும்.
பலன்கள்: ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. மேலும், ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. வயிற்றுப்போக்கை சரிசெய்யும். வயிற்றைச் சுத்தம் செய்யும். செரிமான சக்தியை அதிகரிக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
செம்பருத்திப்பூ ஜூஸ்
தேவையானவை: செம்பருத்திப்பூ - 4, தண்ணீர் - 1 கப், நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 4.
செய்முறை: செம்பருத்தி இதழ்களை மட்டும் தனியாக ஆய்ந்து வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்தத் தண்ணீரில் செம்பருத்தி இதழ்களைப் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை 10 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு திறந்து பார்த்தால், எசென்ஸ் கலந்து நீர் சிவப்பாக இருக்கும். இந்த நீரை வடிகட்டி, இதனுடன் நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, ஐஸ்கட்டிகள் போட்டுப் பரிமாறவும்.
பலன்கள்: இதயநோய்கள் வராமல் தடுக்கும். ரத்தக்குழாய் அடைப்பு, வலிப்பு மற்றும் படபடப்பை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறைச் சரி செய்யும்.
முட்டை ப்ரைடு ரைஸ் - எளிய முறையில் செய்வது எப்படி
வீட்டிலேயே எளிய முறையில் முட்டை ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 2
கேரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
பச்சை பட்டாணி - 1 /2 கப்
வெங்காயத்தாள் - 1
குடைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
முட்டை - 3
சில்லி சாஸ் - 1 மேஜைகரண்டி
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் -1 மேஜைகரண்டி
நெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் பாதி வெங்காயத்தாளை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அதன் பின் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து கலர் மாறாமல் வதக்கவும்.
* அடுத்து அதில் குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
* அனைத்து வெந்ததும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேகவைக்கவும். காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம், பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும்.
* முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி.
தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை சூப்
தேவையானவை:
நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தக்காளி – 3, தேங்காய்ப் பால் - அரை கப், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.
இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.
பலன்கள்:
உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.
கெட்டுப்போன முட்டையை கண்டுபிடிப்பது எப்படி
நாம் பொதுவாக சந்தைகளுக்கு சென்று காய்கறிகள், பழங்கள், மற்றும் இறைச்சிகள் வாங்கினால் அதனுடைய வெளித் தோற்றம் மற்றும் வாசனைகளை வைத்து, அது கெட்டுப் போனதா இல்லையா என்று தெரிந்துக் கொள்வோம்.
ஆனால் முட்டைகள் வாங்கும் போது, அது கெட்டு போன முட்டையாக இருந்தாலும் அல்லது நல்ல முட்டையாக இருந்தாலும் அந்த முட்டையில் இருந்து எந்தவித வாசனையும் வராது.
மேலும் அந்த முட்டையின் வெளிப்புறத்தில் உள்ள ஓட்டில் எந்த வித்தியாசமும் தெரியாது.
எனவே நாம் கடைக்குச் சென்று முட்டை வாங்கும் போது அது நல்ல முட்டையா அல்லது கெட்டுப் போன முட்டையா என்பதை நாம் எப்படி தெரிந்துக் கொள்வது என்ற குழப்பம் பலபேரிடம் இருக்கும் அல்லவா?
கெட்டுப் போன முட்டையை மிகவும் எளிதாக கண்டுப்பிடிக்க சூப்பரான டிப்ஸ் இதோ.
ஒரு முட்டையை எடுத்து அதிகமான தண்ணீர் நிறைத்த பாத்திரத்தில் போடவும். முட்டை பாத்திரத்தின் அடி பாகத்தில் அல்லது பக்கவாட்டு பகுதியை ஒட்டி இருந்தால் அது நல்ல முட்டை. அதே சமயத்தில் அந்த முட்டை தண்ணீரில் மிதந்தவாறு காணப்பட்டால் அது கெட்டு போன முட்டை.
முட்டையை உடைத்து பார்க்கும் போது, அந்த முட்டையின் வெள்ளை கருவின் நிறம் தெளிவான வெள்ளை நிறமாக இருந்தால் அது நல்ல முட்டை. அதே நேரத்தில் வெள்ளைக் கருவின் நிறம் பல வேறுபாடுடன் மங்கி இருந்தால், அந்த முட்டை கெட்டுப் போனது.
முட்டையை நம்முடைய காதுக்கு பக்கத்தில் வைத்து ஆட்டிப்பார்த்தல், ஒரு விதமான சலசலவென்ற சத்தம் வரும் இவ்வாறு சத்தம் வந்தால், அந்த முட்டை முற்றிலுமாக கெட்டுப் போனது.
முட்டையை உடைத்துப் பார்க்கும் போது, மஞ்சள் கரு வட்டமாக இல்லாமல் சிதறியோ அல்லது கலங்கிய நிலையில் இருந்தால், அது கெட்டுப் போன முட்டை.
ஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்தும் நல்லமிளகு
நாட்டு மருத்துவத்தில் பக்கவிளைவில்லாத உணவையே மருந்தாக்கும் வகையில் உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று காரத்தன்மை கொண்டதும் தொண்டைக்கு இதமளிக்க கூடியதுமான நல்லமிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
கேரளாவில் அதிகம் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் ஒன்று நல்லமிளகு. காரத்தன்மை கொண்ட மிளகினை அடிக்கடி உணவில் சேர்ப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஏ, சி மற்றும் பைரிடாக்சின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறிய அளவிலான இந்த மிளகு மணத்தையும், பல மருத்தவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், துத்தநாகம் உள்ளிட்ட உப்புக்கள் உடல் செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குரல் வளத்தை தூண்டச்செய்கிறது. பாலில் கலந்து குடிப்பதால் நல்ல தூக்கத்தை தந்து உடல் களைப்பினை அகற்றுகிறது. மிளகினை பயன்படுத்தி எளிதான மருந்து தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.
அஜீரணம், கழிச்சலை சரிசெய்யும் சூரணம்:
தேவையான பொருட்கள்: மிளகு, கசகசா
வானலியில் மிளகு மற்றும் கசகசாவை வறுத்துக் கொள்ளவும். கசகசா பொரிந்ததும், பெருங்காயப்பொடி சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அஜீரண கோளாறு நேரங்களில், ஒரு கப் நீரில் இந்த பொடியுடன், சுவைக்கு உப்பு சேர்த்து அருந்துவதால் உடல் உபாதை சரியாகும். மிளகில் பெப்பரின் என்ற வேதிப்பொருளும், நோய் தடுப்பான் என்றழைக்கப்படும் கெரட்டீன் என்ற வேதிப்பொருளும் இருப்பதால் வாயுவை வெளித்தள்ளி உடலை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது. கழிச்சலை தவிர்க்கிறது. செரிமானத்தை சீர்செய்கிறது.
நரம்புகளை பலப்படுத்தும் மிளகு:
தேவையான பொருட்கள்: மிளகு, பாதாம், பனங்கற்கண்டு
வறுத்த மிளகு(1 பங்கு), பாதாம்(5 பங்கு), பனங்கற்கண்டு.மிளகு, பாதாம், பனங்கற்கண்டு ஆகிய மூன்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். தினமும் இந்த பொடியில் ஒரு தேக்கரண்டியை பாலில் கலந்து குடித்து வருவதால், நரம்புகள் பலப்படும். கை, கால் வலி சரியாகும். உடலுக்கு சூட்டினை தருகிறது. மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பல் வலி, ஈறுகளின் வீக்கத்துக்கு மருந்தாகும் மிளகு:
தேவையான பொருட்கள்: மிளகுப்பொடி, பெருங்காயப்பொடி, உப்பு.
மிளகுப்பொடி, பெருங்காயப்பொடி, உப்பு மூன்றையும் சமஅளவு எடுத்து பற்களில் பூசலாம். அதுமட்டுமல்லாது ஈறுகளில் வலி எடுக்கும்போது அவற்றின் மேல் வைத்து அழுத்தினால் சிறிது நேரத்தில் வலி குறையும். ஈறுகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. ஈறுவீக்கங்களில் இருக்கின்ற கெட்ட நீரினை பெருங்காயம் வெளித்தள்ளி, இதமான சூழலை ஏற்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இந்த கலவையை பற்களுக்கு பயன்படுத்தி வருவதால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்த கசிவு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.
இன்றைய சமையல் அறை டிப்ஸ்.
எண்ணெய் அதிகம் பயன்படுத்தாமல் தோசை சுட வேண்டுமா..
சிம்பிள் ! வாய் அகன்ற கிண்ணத்தில் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள் இரண்டா நறுக்கிய கத்திரிக்காய் வெங்காயம் அல்லது பிரெட்டின் கனமான அடி பாகம் இதில் எதாவது ஒன்றை எண்ணெயில் ஒற்றி எடுங்க தோசைக் கல்லின் மேல் தேயுங்கள் இனி தோசை உற்றி எடுங்கள் கல்லிலே எண்ணெய் இருப்பதால் தோசை மீது எண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியமில்லை தேவையென்றால் கல்லில் தேய்த்த பிரெட்டை தோசை மீது ஒற்றியெடுங்கள். எண்ணெய் அதிகம் குடிக்காத சுவையான தோசை ரெடி.
உப்பு நீரை வெளியேற்றி - வாதம் பித்தம் போக்கும் புடலங்காய்!
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில், நிச்சயம் சமைக்கப்படும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள், தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காயை நம் முன்னோர்கள் காலந்தொட்டு, நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு என்பதால், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது நல்லது.
இதில் உள்ள சத்துக்கள்:
உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ஆகியவை. இது சற்று நீரோட்டமுள்ள காய் என்பதால், இது சூட்டு உடம்புக்கும் ஏற்றதாகும். உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். எளிதில் சீரணமாகி, நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் திரிதோசத்தைப் போக்கும்.
வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய வலிமையைக் கொடுக்கவல்லது. புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்பாடுகள் சிலவற்றை பார்க்கலாம்.
1. ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக புடலங்காய் இருக்கிறது. காமத்தன்மையை பெருக்கும் வல்லமையும், புடலங்காய்க்கு உண்டு.
2.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தேகம் பருமன் அடையும்.
3. புடலங்காய் அஜீரண தொல்லையை போக்குவதோடு, உணவை எளிதில் சீரணமாக்கி நல்ல பசியை உண்டாக்கும்.
4. குடல் புண்ணை ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
5. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
6. மூல நோய் உள்ளவர்களுக்கு, புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
7. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலையும், கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும். கண்பார்வையை அதிகரிக்க செய்யும்.
9. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால், உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.
10. பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களையும் போக்கும்.
சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு - சீரக சாதம்.
சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.
* வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய்
கொஸ்துடன் பரிமாறவும்.
* சத்தான மிளகு, சீரக சாதம் ரெடி.
கவனிக்க: அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும். அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.
எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம். அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
பச்சைக் காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.
100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது.
அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு அமிலம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. அன்னாசியில் கால்சியம், பொட்டாஷியம், மாங்கனீஸ் அதிகளவில் இருக்கிறது. ஒரு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதச்சத்தை பெற்று விடலாம்.
இச்சத்து நம் எலும்பை பலப்படுத்த உதவுகிறது. இப்பழத்தை சாறாகவும், பதப்படுத்தியும் சாப்பிடலாம். எப்பொழுதுமே எந்தப்பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிட்டால் தான் அதில் இருக்கும் சத்துக்களின் முழுப்பயனையும் அடைய முடியும்
நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை நோயில் இருந்து விடுபடலாம். இரத்த சோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
நாட்டுக்கோழி குழம்பு
இந்த குழம்புடன் சுடு சாதத்துடன் உண்டு பாருங்கள், உங்கள் நாவு அடைந்த ருசிக்காக சமைத்த கைக்கு தங்க காப்பு போட தோன்றும்.
தேவையான பொருட்கள:
நாட்டுகோழி 1 கிலோ
இஞ்சி-பூண்டு விழுது 3 மேஜைக்கரண்டி
தயிர் 1 கப்
உப்புத்தூள் தேவையான அளவு
மிளகு தூள் 2 மேஜைக்கரண்டி
காஸ்மீரி மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் 15
பூண்டு பற்கள் 7
பச்சை மிளகாய் 6
கொத்தமல்லி இலைகள் 1/4 கப்
கசகசா 2 மேஜைக்கரண்டி ( வறுத்தது )
முழு முந்திரி பருப்பு 15
பட்டை 2
கிராம்பு 2
குழம்புக்கு:
சின்ன வெங்காயம் 8 பெரியது ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1 பெரியது ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/2 மேஜைக்கரண்டி
வேர்கடலை எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
ஊத்துக்குளி வெண்ணை 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது )
செய்முறை
1. சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பின்னர் சிக்கனில் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள், மற்றும் உப்புத்தூள் , மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசிறி குறைந்தது 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. வடைச்சட்டியில் அடுப்புல வைத்து கசகசா வை போட்டு நன்றாக வறுக்கவும் மிக்சியில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பட்டை, கிராம்பு, வறுத்த கசகசா, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக 3 விசில் விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.
4. இப்பொழுது பிரஷர் குக்கர் பேன் எடுத்து அதில் கடலை எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
5. பிறகு பொடியாக நறுக்கிய வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இந்த கலவை நன்கு கூழ் போல் ஆனதும் அதில் கரம்மசாலா தூள் சேர்த்துகோங்க நன்றாக வதக்கவும்.
6. அதில் வேகவைத்துள்ள நாட்டுக்கோழி மற்றும் சாற்றை சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்கவும்.
7. இப்பொழுது நாட்டுகோழி கலவை கொதிக்க ஆரம்பித்த உடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
8. மசாலாவின் பச்சை வாசனை போய் குழம்பின் வாசனை மூக்கை துளைக்கும் சமயத்துல உப்பு, காரம், நாட்டுக்கோழி வெந்த தண்மை , குழம்பின் கெட்டித்தன்மை அனைத்தையும் சரிப்பார்க்கவும். குழம்பில் எண்ணெய் தனியாக பிரிந்து வரும் அந்த சமயத்துல வெண்ணையை குழம்பில் சேர்த்துகோங்க பிறகென்ன குழம்பை இறக்கி வைத்து விடலாம்.
ரொட்டி
செ.தே.பொ:-
கோதுமை மா - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 10 (சிறிதாக நறுக்கி)
பச்சை மிளகாய் - 6 (சிறிதாக நறுக்கி)
துருவிய கரட் - 1/2 கப்
சிறிதாக வெட்டிய லீக்ஸ் - 1/4 கப்
தேங்காய்ப் பூ - 1/4 கப்
உப்பு - தே.அளவு
மாயரின் - 2 மே.கரண்டி
தண்ணீர் - தே.அளவு
எண்ணெய் - தே.அளவு
செய்முறை:-
*எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு அடித்துக் குழைக்கவும்.
* 15 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக எடுத்து, ரொட்டியாக தட்டி தோசை கல்லில் சுட்டு எடுத்து பரிமாறவும்.
*(தோசை கல்லில் எண்ணை விட்டும் ரொட்டிகளை சுட்டு எடுக்கலாம்)
*** குறிப்பு :: இதனை பொரிச்ச மிளகாய் சம்பலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.