செவ்வாய், 3 ஜனவரி, 2017

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

தேவையானவை:

கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்
தக்காளி - 2 
வேக வைத்த பருப்பு - கால் கப்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு -தேவையான அளவு
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

மிளகு சீரகத்தை பொடித்து மிக்சியில் கொள்ளவும்.

கண்டந்திப்பிலியையும் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் கரைத்த புளிதண்ணீர் தக்காளி சேர்த்து மசித்து வேகவிடவும்.

அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் பொடித்த கண்டந்திப்பிலிப் போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்

ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் கெட்டியாக இருக்கும்

ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

பின் சிறிய கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதை ரசத்தில் கலக்கி விடவும். இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். 

பொன்னாங்கண்ணி ரசம்

பொன்னாங்கண்ணி ரசம்

தேவை:

பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.
புளி - தேவைக்கு. 
பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.
வெல்லம் - சிறிது. 
மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை:

புளியைக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். 

பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் வெல்லம், பருப்புத் தண்ணீ ர் 2 கப் தண்ணீ ர் கலக்கவும். இதையும் கொதிக்கும் கலவையில் சேர்த்து விடுங்கள். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.

தேங்காய் பால் ரசம்

தேங்காய் பால் ரசம்

தேவையான பொருள்கள்: 

தேங்காய் பால் - 1கப் 
புளி - சிறிதளவு 
பருப்பு தண்ணீர் - 2கப் 
மஞ்சள் தூள்,உப்பு - தேவையான அளவு 
கடுகு ,கருவேப்பிலை - சிறிதளவு 
பெருந்காயம் -1 துண்டு 
ரசப்பொடி - 1 ஸ்பூன் 

செய்முறை: 

புளியை கரைத்து அதனுடன் உப்பு ,மஞ்சள்தூள் ரசப் பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும் 
பருப்பு தண்ணீரும் அதனுடன் ஒருகப் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து இதனுடன் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு ,கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து கொட்டவும் 

பூண்டு குழம்பு

பூண்டு குழம்பு

தேவையான பொருள்கள் 

சின்ன வெங்காயம் - 15 
பூண்டு - 15 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
குழம்பு மிளகாய் தூள் - 3 ஸ்பூன்

செய்முறை

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்து வைத்து கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து பூண்டு போட்டு வதக்கி, வெங்காயத்தை வதக்கவும். 

பின் புளிக்கரைசலை சேர்க்கவும். கறிவேப்பிலை, உப்பு, குழம்புப் பொடியை சேர்த்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்

கத்திரிக்காய் சாப்ஸ்

கத்திரிக்காய் சாப்ஸ்

இந்த கத்திரிக்காய் சாப்ஸ் , எங்கள் வீடுகளில் மிகவும் பிரபலம். பிஞ்சு கத்திரிக்காய் கிடைத்து விட்டால், எங்கள் வீட்டில் ஒன்று எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இல்லையெனில் கத்திரிக்காய் சாப்ஸ் தான்.

தேவையான பொருட்கள்
பிஞ்சு கத்திரிக்காய் 500 கிராம்
மரசெக்கு கடலெண்ணய் 6 மேஜைக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கைப்பிடி
பூண்டு பற்கள் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது )
சின்ன வெங்காயம் 6 ( அம்மிகல்லில் நசுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 30
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
பட்டை 1 இன்ச்
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
இலவங்கம் 4
அண்ணாச்சி மொக்கு 1
கொத்தமல்லி விதை 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 8
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது)
சீரகம் 1/2 தேக்கரண்டி
மிளகு 3/4 மேஜைக்கரண்டி
வறுத்த வேர்கடலை 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
பூண்டு பற்கள் 8
இஞ்சி 1 இன்ச்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை
1. முதலில் மசாலா அரைக்க கொடுத்துள்ளபொருட்களை ,மிக்ஸியில் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர் சேர்த்து சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் ஒரு மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி அரைத்து வைத்துள்ள மசாலாவை வடச்சட்டியில் போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அடுப்புல இருந்து இறங்கி ஆற வைக்கவும்.

3. பிஞ்சு கத்திரிக்காயை நன்றாக தண்ணீரில் அலசி அதனை நன்றாக கீரி கொள்ளவும். ஆனால் கத்திரிக்காய் கொத்தாக தான் இருக்க வேண்டும்.

4. இப்பொழுது கீறி வைத்துள்ள பிஞ்சு கத்திரிக்காய்னுள் அரைத்து ஆறவைத்துள்ள மசாலா கலவையை திணிக்க வேண்டும். நன்றாக மசாலாவை பூச வேண்டும்.

5. இரும்பு வடச்சட்டியை அடுப்புல வைத்து அதனுள் மரச்செக்கு கடலெண்ணய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் , சீரகம் சேர்த்து நன்றாக பொறிய வைக்கவும்.

6. அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

7. பிறகு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்த பின் , அதில் மசாலா நிரப்பபட்டுள்ள பிஞ்சு கத்திரிக்காயை சேர்த்து நன்றாக சிறுதீயில் வதக்கவும். துளிகூட தண்ணீர் சேர்க்ககூடாது.

9. தேவையெனில் மரச்செக்கு கடலெண்ணய்யை சுற்றி விட்டு நன்றாக சிறுதீயிலே வதக்க வேண்டும்.

குறிப்பு
வடச்சட்டியில் போட்டு வறுக்கும் சமயத்தில்  கத்திரிக்காய் ஒடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கொங்கு முட்டை சுக்கா

கொங்கு முட்டை சுக்கா

இந்த முட்டை சுக்கா கொங்கு கிராமியத்து பகுதிகளில் எங்கள் அப்பத்தா வீட்டில் இந்த முட்டையை நாட்டுக்கோழி முட்டையில் செய்வார்கள்.

இந்த முட்டை சுக்காவை தண்ணீர் சாம்பார் ( வெங்காய சாம்பார் ) உடன் செய்வார்கள். நாங்கள் போட்டி போட்டு சாப்பிட்ட காலம்.

தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை 4 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
தக்காளி 1 பொடியாக நறுக்கியது
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது உப்புத்தூள் மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். முட்டையை தோலுரித்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல போட்டு வதக்கவும்.

3. பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.அதில் பச்சை மிளகாய் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

5. அதில் மஞ்சள் தூள் , வர மிளகாய் தூள், கரம்மசாலா தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக இந்த கலவை கூழ் போல் ஆகும் வரை வதக்கவும்.

6. இப்பொழுது நன்றாக பொடியாக நறுக்கி வைத்துள்ள வேகவைத்த முட்டையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி நன்றாக சுருள வதக்கவும்.

7. இதை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.

வெங்காயம் தக்காளி குழம்பு


வெங்காயம் தக்காளி குழம்பு

மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளாக ஏதேனும் குழம்பு செய்ய நினைத்தால், வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சிம்பிளாக ஒரு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இது செய்வதற்கு ஈஸியாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த வெங்காயம் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

*தேவையான பொருட்கள்:*

வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி - 2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
புளிச்சாறு - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

*செய்முறை:*

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு
வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து தக்காளி மென்மையாக வதங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் மல்லி தூள், மிளகாய் தூள், புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் தேங்காய் பாலை சேர்த்து குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், வெங்காயம் தக்காளி குழம்பு ரெடி!!!

ரவா கிச்சிடி.

ரவா கிச்சிடி.

*தேவையானவை :*

ரவை - 2 கப்
பீன்ஸ் - 6
காரட் - சிரியது - 1
வெங்காயம் - 1
பச்சை பட்டாணி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலை பருப்பு - 1 தே. கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே. கரண்டி
தண்ணீர் - 3 கப்

*செய்முறை :*

ரவையை வாசனை வரும் வரை வருத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை சிரிது சிரிதாக நருக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளை போட்டு, தேவையான தண்ணிர் ஊற்றி வேகவிடவும். உப்பு சேர்க்கவும்.வெங்காயம் சேர்க்கவில்லை என்றால் பெருங்காயம் சேர்க்கவும்.

காய்கள் வெந்த பின் வருத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளரவும். சிறிது தளராக இருக்கும் போது இறக்கவும்.

சட்னி/சாம்பார்/ஊறுகாய் வைத்து சாப்பிடவும்.

கொத்தமல்லி இலையுடன் பால் சேர்த்து தினமும் குடித்து வர?

கொத்தமல்லி இலையுடன் பால் சேர்த்து தினமும் குடித்து வர?

தினமும் அரைத்த கொத்துமல்லி தழையுடன் சர்க்கரை சேர்த்த பால் கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?

கொத்தமல்லி, இதன் தழை பல உணவுகளுக்கு சுவையூட்டுவதற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. இதன் விதையான தனியாவிலும் மருத்துவ குணங்கள் பல உண்டு.

தினமும் கொத்த‍மல்லி தழையை எடுத்து சுத்த‍ப்படுத்தி, அரைத்து எடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்த‍ பால் கலந்து, 100 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் எப்பேற்பட்ட‍ மனநோய் ஆக இருந்தாலும் குணமாகி, மனம் தெளிவடையும், உடல் உற்சாகத்தை பெறுமாம்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல் ஜூஸ்

*தேவையான பொருட்கள் :*

அருகம்புல் - 1 கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
தண்ணீர் - தேவையான அளவு

*செய்முறை :*

•• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.

•• அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

•• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

•• விருப்பபட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

அடை உப்புமா

அடை உப்புமா

*தேவையான பொருட்கள் :*

அடை – இரண்டு (உதிர்த்து கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
புளி கரைச்சல் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப

*செய்முறை :*

•• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.

•• பிறகு, அதில் மிளகாய் தூள், புளி கரைச்சல், உப்பு சிறிதளவு, உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும்.

•• பின், தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும்.

சுவையான தக்காளி தோசை

சுவையான தக்காளி தோசை

*தேவையான பொருட்கள் :*

பச்சரிசி - 1கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
உளுந்து - கால் கப்
நறுக்கிய தக்காளி - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 6
வெங்காயம் - 1
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

*செய்முறை :*

•• இரண்டு அரிசியையும், உளுந்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

•• ஒரு கடாயில் என்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

•• ஆறியவுடன் மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்துக் கொள்ளவும்.

•• தேவையான உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

•• தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

•• சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

•• சுவையான தக்காளி தோசை ரெடி.

•• இதற்கு கார சட்னி தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

*குறிப்பு :*
தோசை மாவு இருந்தால் அதையும் பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம்.

இரவில் சாப்பிட வேண்டியவை...கூடாதவை ! #Dinner

இரவில் சாப்பிட வேண்டியவை...கூடாதவை ! #Dinner

`காலையில் அரசனைப்போல சாப்பிடுங்கள்; மதியம் இளவரசனைப்போல் உணவருந்துங்கள்; இரவு பிச்சைக்காரனைப்போல உண்ணுங்கள்’... இது நம் ஆரோக்கிய வாழ்வுக்குச் சொல்லப்பட்ட, நாம் அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு பழைய பழமொழி. நம்மில் பெரும்பாலானோர் இதை தலைகீழாகச் செய்துகொண்டிருக்கிறோம். பெரு நகரமோ, சிறு நகரமோ இரவு நேரத்தில்தான் துரித உணவுக் கடைகளிலும் ஹோட்டல்களிலும் கூட்டம் நிரம்பிவழிகிறது. மனித உடலுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2000 - 2500 கலோரிகள் தேவைப்படுகிறது. உடல் உழைப்பு, உயரம், பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், குறைவான அளவில், எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் நன்கு தூக்கம் வரும். தினமும் இரவில் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைத் தவிர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளைக் குறைவாகச் சாப்பிடவேண்டும்? தெரிந்துகொள்வோமா..?  

இரவு சாப்பிட ஏற்ற உணவுகள்...

இட்லி

இது, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற, எளிதில் செரிமானமாகக்கூடிய இரவு உணவு. குறிப்பாக, இரவுநேரப் பேருந்து, ரயில் பயணங்களின்போது வயிற்றில் மந்தத்தன்மையை ஏற்படுத்தாது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இட்லியை, பருப்பு சாம்பாரோடு சாப்பிடலாம்.

கோதுமை உணவுகள்

50 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் கோதுமை ரவை உப்புமா, சப்பாத்தி, கோதுமைக்கஞ்சி உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடலாம். கொழுப்பை உண்டாக்கும் வெற்று கலோரிகள் இல்லாதவை. கோதுமை உணவுகளை 7.30 மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது.  

பருப்பு வகைகள்

அதிகப் புரதம் மற்றும் நார்ச்சத்து உடைய உணவுகள் இவை. பருப்பு, கொண்டைக்கடலை சேர்த்த உணவுகளை எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தியோடு சேர்த்துச் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்; செரிமானம் எளிதாகும்; மலச்சிக்கல் நீங்கும்.

ராகி, கம்பு, கேழ்வரகு

ராகி தோசை, கம்பு, அடை, கம்மஞ்சோறு, கேழ்வரகுக் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால், கொழுப்பு இல்லை.

பால்

கொழுப்பு அதிகம் இல்லாத பசும்பால் அருந்தலாம். உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கும். அதிகக் கொழுப்பு நிறைந்த எருமைப்பாலைத் தவிர்க்க வேண்டும். `லாக்ட்டோஸ் இன்டாலரன்ஸ்’ எனப்படும் பால் பொருட்கள் ஒவ்வாமை உடைய குழந்தைகளுக்கு சோயா பால் கொடுக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட 'ஸ்கிம்டு மில்க்' சாப்பிடலாம்.   

பழங்கள்

வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கும். உணவு சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் செரிமான அமிலச் சுரப்பு ஹார்மோன்கள் குழப்பமடையும். சாப்பிட்டு ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின்னர், வாழைப்பழம் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இரவு உணவாக, அளவோடு ஃபுரூட்சாலட் சாப்பிடலாம்.

தேன்
 
தேனை, பாலில் கலந்து குடிக்கலாம். இது நன்கு தூக்கம்வர உதவும்.

தவிர்க்கவேண்டிய உணவுகள்....

கஃபைன் பானங்கள்

டீ, காபி உள்ளிட்ட கஃபைன் நிறைந்த பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவேண்டும். கஃபைன், மூளை நரம்புகளைத் தூண்டும் ரசாயனம். தூங்கப்போவதற்கு முன்னர் டீ, காபி, சாக்லேட் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால் தூக்கம் வரத் தாமதமாகும்.

அசைவம்

சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் அதிகப் புரதம் உள்ளது. எனவே, செரிமானமாக பல மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும். இரவு உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ளக் கூடாது.

கீரை

இரவில் கீரை சாப்பிடக் கூடாது. இதில் அதிக தாது உப்புகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கீரையை இரவு உணவில் அசைவத்தோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. கீரையைச் சாப்பிட்டுவிட்டு, எந்த வேலையும் செய்யாமல் தூங்கச் செல்வதால், செரிமானம் தாமதப்படும். புளிப்பு ஏப்பம், மந்தத்தன்மை ஏற்படும்.

மசாலா மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள்

நெய், வெண்ணை, சீஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிகக் காரம் கொண்ட மசாலா உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இவற்றை செரிமானம் செய்ய, இரைப்பை அமிலம் அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

நொறுக்குத்தீனிகள்

பீட்சா, பர்கர், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது. இவை மூளையில், தூக்கம் வர உதவும் மெலடோனின் (Melatonin) ஹார்மோன் சுரப்பைத் தாமதப்படுத்தும்.

மது, புகை மற்றும் கோலா பானங்கள்

மது அருந்தாமல் இருப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. குறிப்பாக இரவு படுக்கப்போகும் முன்னர் கட்டாயம் மது, கோலா பானங்கள் அருந்தக் கூடாது. ஆல்கஹால் உடலில் உள்ள நீர்அளவை வற்றவைக்கும். இதனால் எச்சில் உலரும். தூக்கத்துக்கு இடையில் நாக்கு வறட்சி ஏற்பட்டு, அடிக்கடி தாகம் எடுக்கும். சிகரெட்டில் உள்ள நிகோட்டின் ரசாயனம் மூளை நரம்புகளைத் தூண்டும். இதனால் தூக்கம் வரத் தாமதமாகும்.

மைதா பொருட்கள்

பரோட்டா, பட்டர் நான் உள்ளிட்ட மைதாவில் செய்யப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவை செரிமானமாகத் தாமதமாகும். மேலும், சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால், உடலில் கொழுப்பு அதிகளவில் சேரும். உடல்பருமன் அதிகரிக்கும்.

அதிக அளவு எடுத்துக்கொள்ளப்படும் அரிசி சாதம்

சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல், அனைவருமே இரவில் முடிந்தவரை அதிக அளவில் அரிசி சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால், ஆண்களுக்கு அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து, தொப்பை ஏற்படும். இரவுப் பணிசெய்பவர்கள், தங்களது உடலுழைப்புக்கு ஏற்றாற்போல் அளவாக அரிசி சாதம் சாப்பிடலாம்.