புதன், 29 நவம்பர், 2017

மோர் அமுதம்


மோர் அமுதம்:

உங்களால் நேரம் ஒதுக்கி படிக்க முடிந்தால் படியுங்கள். விருப்பப்பட்டால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.

தெரிந்ததை சொல்லுங்கள் என்னும் மொழிக்கேற்ப பகிரப்பட்ட பதிவு இது.

தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம்.

அன்றைய காலங்களில் வீடுகளில் வெயிலில் களைத்து வருபவர்களுக்கும் இல்லத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் அன்புடன் மோர் தருவது வழக்கம்.

இப்போது குளிர்பானங்கள் அருந்துவதே நாகரிகம் என்று மோர் அருந்தும் வழக்கம் குறைந்து விட்டது.

எத்தனை வண்ணங்களில் குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா?

எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்கவல்ல மோரினால் கிடைக்கும்

மோரின் நன்மைகள்:

கோடையின் உஷ்ணத்தைத் தணிக்கவும் நோய் நொடிகளின்றி வாழவும் மோரைப் பருகுவோம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

மோரினால் கிட்டும் நன்மைகள்:

1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.

2.உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.

3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.

4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.

5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.

6. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.

7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.

8. நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!

9. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!

10. பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

11. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.

12. வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம்.

மோரை அ‌ப்படியே அ‌ளி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.

13.காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.

14.எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.

சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:

1. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வருவது தெ‌ரியு‌ம். சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.

2. சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.

3. தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

குறிப்புகள்:

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குத்‌ தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.

நீர் மோர் செய்யும் முறை:

தேவையானவை:

தயிர் – 1/2 கப்

தண்ணீர் – 1 ½ கப்

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)

மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)

இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)

பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு (2 கப் மோருக்கு. காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம்- சிறிதளவு

வெந்தயம்- 4 (விரும்புவர்கள் சேர்க்கலாம்)

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும்.

தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றிப் பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு: தயிர் மத்து இல்லாதவர்கள், வேறென்ன செய்ய ?

மிக்சியில் தயிரை இட்டு ஒரேயடியாக ஒட்டாமல் மூன்று முதல் ஐந்து வினாடிகள் விட்டு விட்டு ஒரு நிமிடம் வரை ஒட்டினால் மோர் தயார்.

மோர்க் குழம்பு  செய்முறை:

தேங்காய் துருவல் - 1 1/2 மேசை கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

மேலே கூறியவற்றை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசி - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

இவை இரண்டையும் சிறிது நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

அவித்த சேப்பங் கிழங்கு, அவித்த உருளைக் கிழங்கு, சுரைக் காய், வெண் பூசணி போன்ற நீர்க் காய்களில் ஏதேனும் ஒன்று எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சிறிது போட்டு தாளிக்கவும்.

பின்பு அரைத்த விழுது, காய் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு, அரைத்த அரிசி, கடலை பருப்பு மாவு, உப்பு, மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி, மல்லித்தூள் 2 1/2 தேக்கரண்டி, சேர்த்து கொதித்ததும், மோர் 2 கப் சேர்த்து, மல்லித் தழை தூவி இறக்கவும்.

பி.கு: குழம்பு வைத்த பிறகு கடைசியில் தாளித்தால் மிகச் சுவையுடன் இருக்கும்.

220 மில்லி மோரின் கலோரி அட்டவணை:

1) கலோரீஸ்: 110

2) கொழுப்பிலிருந்து கிடைக்கும் கலோரீஸ்: 20

3) கொழுப்பு: 2.5 கிராம்

3.1) நிறைவுற்ற கொழுப்பு: 1.5 கிராம்

3.2) சிதையும் கொழுப்பு: 0 கிராம்

4) சிதையாக் கொழுப்பு: 10 மில்லி கிராம்

5) சோடியம்: 260 மில்லி கிராம்

6) கார்போ ஹைட்ரேட்: 13 கிராம்

7) இனிப்பு ( அ ) சீனி: 13 கிராம்

8) புரதம் ( அ ) புரோட்டின்: 9 கிராம்

மற்றும் விட்டமின் எ, விட்டமின் சி, கால்சியம்.

திங்கள், 27 நவம்பர், 2017

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை



பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை


பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 அந்த கூட்டு பெருங்காயம் ...
 இந்த கூட்டு பெருங்காயம் ...
 அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...
பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

உங்களது வயிறு வலிக்கும் பகுதியை வைத்து அதன் தன்மையை அறியலாம்.


உங்களது வயிறு வலிக்கும் பகுதியை வைத்து அதன் தன்மையை அறியலாம்.

வயிறு ஒரு பைபோல் அதில் கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை, விந்துப்பை, சின்னப்பை என்ற உறுப்புகள் உள்ளது.

வயிறு வலிக்கும் இடத்தை வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நீங்களே கண்டுபிடிக்கலாம்.


மேல்வயிறு வலது மூலையிலும் வலி இருந்தால் அது ஈரல் மற்றும் பித்தப்பை கல் சம்பந்தமான பிரச்சனைகளாக இருக்கலாம்.

மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அலசர்.

நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி இருந்தால் நீர்கடுப்பு, கிட்னி ஸ்டேன் பிரச்சனை.

தொப்புளை சுற்றி வலித்தால் ஃபூட் பாய்சனாக இருக்கலாம்.

அடிவயிறு வலது மூலை வலித்தால் அப்பண்டிஸ்.

அடிவயிறு நடுவில் வலித்தல் சிறுநீர்ப்பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்.

அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்.

இவை அனைத்தும் நீங்கள் தொரிந்துக்கொள்ளவே.

 மேலும் டாக்டரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுப்பது அவசியம்.

பனீர் ப்ரெட் ரோஸ்ட் / Toasted Bread paneer


பனீர் ப்ரெட் ரோஸ்ட் / Toasted Bread paneer

தேவையானவை:
ப்ரெட் ஸ்லைஸ் - 10
பனீர் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 4
தக்காளி - 2
கொத்துமல்லித் தழை - தேவையான அளவு
எண்ணெய் - 250 மி.லி.
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1.பனீர், வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லித் தழை இவை அனைத்தையும் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டைகளை உடைத்து ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

3.முட்டை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

4.வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பனீர் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு வதக்கவும்.

5.அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மசாலாத் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.

6.தண்ணீர் வற்றியதும் அந்த கலவையை ஒரு ப்ரெட் ஸ்லைஸ் மீது வைத்து அதன் மேல் மற்றொரு ஸ்லைஸ் வைத்து மூடி தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

7.சுவையான பனீர் ப்ரெட் ரோஸ்ட் தயார். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பனீர் டிக்கா


பனீர் டிக்கா

ஊறவைக்கத் தேவையானவை:

 எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்

 புளித்த தயிர் -  2 டேபிள்ஸ்பூன்

 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு பவுலில் ஊற வைக்க தேவையானவற்றில் சொல்லியிருக்கும் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கி 5 நிமிடம் ஊற வைத்து விடவும்.

பனீர் டிக்கா செய்ய தேவையானவை:

 பனீர் - 200 கிராம்

 எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை:

பனீரை ஒரு இஞ்ச் அளவுக்கு க்யூப்களாக நறுக்கி வைக்கவும். இனி ஊறவைத்த கலவையில் பனீர் துண்டுகளை சேர்த்து முக்கியெடுக்கவும்.

அடுப்பில் நான் - ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும்  3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பனீர் துண்டுகளைச் சேர்த்து  பொன்னிறத்தில் வேகவைத்து எடுக்கவும். ஈஸியான ஹோட்டல் ருசியுடனான பனீர் டிக்கா ரெடி.எடுக்கவும். அவ்வளவு தான் பனீர் டிக்கா ரெடி...!

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!


தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.


நாள்பட்ட சளியை குணமாக்கும் தூதுவளைக் குழம்பு


நாள்பட்ட சளியை குணமாக்கும் தூதுவளைக் குழம்பு

ஆஸ்துமா, நாள்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டவருக்கு நலம் தரும் ஆரோக்கிய உணவு இந்த தூதுவளைக் குழம்பு. இதன் செய்முறை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சரிசி - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
பெருங்காயம் - சிறிதளவு,
புளி - சிறு நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை,
கடுகு - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்.

தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து,

 பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.


சனி, 25 நவம்பர், 2017


அவசரத்துக்கு கை கொடுக்கும்… 30 வகை பொடிகள்!


”ருசியை அள்ளித் தரும் பொடி வகைகளைத் தந்திருப்பதுடன்… வெந்தயப்பொடி, மூலிகைப் பொடி, கொள்ளுப்பொடி, வேப்பம்பூபொடி, நெல்லிக்காய்ப்பொடி என ‘வரும் முன் காக்கும்’ வரப்பிரசாதமாக விளங்கும் பொடிகளையும் இங்கே கொடுத்துள்ளேன். இவற்றை செய்து வைத்து, பல நாட்கள் பயன்படுத்தி, பலன்களை அள்ளுங்கள்

பருப்புப்பொடி

தேவையானவை: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.

பூண்டுப்பொடி

தேவையானவை: பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

தேங்காய்ப்பொடி

தேவையானவை: முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து… தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.



இட்லி மிளகாய்ப்பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்… இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

மிளகு  சீரகப்பொடி

தேவையானவை: மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.

குறிப்பு: ‘சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

கூட்டுப்பொடி

தேவையானவை: கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்… சுவை அதிகரிக்கும்.

ரசப்பொடி

தேவையானவை: தனியா – 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10.

செய்முறை: வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்… மணம், ருசி ஆளை அசத்தும்.

எள்ளுப்பொடி

தேவையானவை: எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.

குறிப்பு: புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.

கறிவேப்பிலை பொடி

தேவையானவை: கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.

ஆவக்காய் ஊறுகாய் பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய், கடுகு – தலா 200 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

அங்காயப் பொடி

தேவையானவை: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் – 6, கடுகு, மிளகு, சீரகம் – தலா 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.

நாரத்தை இலை பொடி

தேவையானவை: நாரத்தை இலை – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

திடீர் புளியோதரைப்பொடி

தேவையானவை: புளி – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வேர்க்கடலை – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மஞ்சள் – ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்… உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.

வெந்தயப்பொடி

தேவையானவை: வெந்தயம் – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்… உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.

வேப்பம்பூபொடி

தேவையானவை: வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து… பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.

சாம்பார்பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 250 கிராம், தனியா – 500 கிராம், துவரம்பருப்பு – 200 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா 50 கிராம், மஞ்சள் – 2.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .

குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப் பதுடன், நீண்ட நாள் கெடாது.

நெல்லிக்காய் பொடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.

நெல்லிக்காய்… வைட்டமின் ‘சி’, இரும்புச்சத்து மிக்கது.

கொத்தமல்லிப் பொடி

தேவையானவை: பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.

குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.

மூலிகைப்பொடி

தேவையானவை: வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி – தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.

சுண்டைக்காய்பொடி

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

ஓமப்பொடி

தேவையானவை: ஓமம் – 100 கிராம், மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.

கொள்ளுப்பொடி

தேவையானவை: கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

சட்னி பவுடர்

தேவையானவை: கொப்பரைத் தேங்காய் துருவல் – 2 கப், காய்ந்த மிளகாய் – 4, பொட்டுக்கடலை – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்… உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

கீரைப்பொடி

தேவையானவை: கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

குறிப்பு: உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.

பாயச பவுடர்

தேவையானவை: பிஸ்தா பருப்பு – 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு – தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை, பால் – தேவையான அளவு.

செய்முறை: பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்… திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.

தீபாவளி மருந்துப்பொடி

தேவையானவை: கண்டதிப்பிலி – 50 கிராம், சுக்கு – ஒரு துண்டு, ஓமம் – 50 கிராம், சீரகம் – 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி – 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 25 கிராம், வால் மிளகு – 50 கிராம், மிளகு – 25 கிராம், சித்தரத்தை – ஒரு துண்டு.

செய்முறை: கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.

குறிப்பு: பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.

ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் – நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து… இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.

அடைப்பொடி

தேவையானவை: இட்லி அரிசி – 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து… வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.

தனியாப்பொடி

தேவையானவை: தனியா – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

பஜ்ஜி பவுடர்

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, சோள மாவு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து… விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.

வடை பவுடர்

தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு – 250 கிராம், மிளகு – 20, காய்ந்த மிளகாய் – மூன்று, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

காராமணி-கேரட் சுண்டல்


காராமணி-கேரட் சுண்டல்

தேவையானவை:

 காராமணி - 200 கிராம்
 கேரட் - 2 (துருவிக் கொள்ளவும்)
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பச்சைமிளகாய் - 2
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 எண்ணெய் - 4 டீஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்

செய்முறை:

காராமணியை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வேக வைத்துக் கொள்ளவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் நீளமாக நறுக்கவும். பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இத்துடன் பாதியளவு கேரட்துருவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இத்துடன் வேக வைத்த காராமணி சேர்த்து கலந்து, 5 நிமிடம் தீயைக் குறைத்து வைக்கவும். இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி, மீதியுள்ள கேரட்துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ஆட்டுக்கால் பெப்பர் பாயா (aattukal pepper paya)


ஆட்டுக்கால் பெப்பர் பாயா (aattukal pepper paya)

தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கால் - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* குக்கரில் வெங்காயம் போட்டு வதக்கிய பின்னர், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் ஆட்டுக்காலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 விசில் போட்டு இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி 10 நிமிடன் கொதிக்கவிட்டு இறக்கவும்.

* பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

* இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!

உருளைக்கிழங்கு சமோசா


உருளைக்கிழங்கு சமோசா
தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மாசாலாவைத் தயார் செய்து வைத்து கொள்ளவும்.

* மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

* வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் மாவை கரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். அதனை தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும். அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மாசாலா சிறிது வைத்து ஓரங்களை மேலே குறிப்பிட்ட பேஸ்ட் தடவி ஒட்டி விடவும்.

* இதே போல் மீதமுள்ள மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும். ஒரு அடிகனமான காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

புதன், 15 நவம்பர், 2017

ஐஸ்கிரீம் கேக் என்னென்ன தேவை?



ஐஸ்கிரீம் கேக்  என்னென்ன தேவை?

ஸ்பாஞ்ச் கேக் – 6 (முட்டை போட்டோ, முட்டையில்லாமலோ செய்து வைத்துக்கொள்ளவும்),
ஐஸ்கிரீம் – தேவையான அளவு,
பட்டர் பேப்பர்.

எப்படிச் செய்வது?

பொதுவாக நீண்ட சதுர வடிவத்தில் கேக் செய்தால் சுருட்ட சௌகரியமாக இருக்கும். தயாரித்த கேக்கை நடுவில் ஸ்லைஸ் செய்து கீழும் மேலும் பட்டர் பேப்பரை வைத்துச் சுருட்டவும். சூடாயிருக்கும்போதே சுருட்டவும். அப்போதுதான் கேக் உடையாது. காலண்டர் சுருட்டுவது போல் வேகமாக சுருட்ட வேண்டும். முழுவதும் ஆறியபின் மேலே போட்டுள்ள பட்டர் பேப்பரை எடுத்துவிடவும். ஐஸ்கிரீமை கேக் மேலே போட்டுப் பரத்தவும்.

ஐஸ்கிரீம் உருகக் கூடாது. கெட்டியாக இருக்க வேண்டும். ஐஸ்கிரீம் பரத்தியபின், சுருட்டிய கேக்கை, ஃப்ரிட்ஜினுள் ஃப்ரீஸரில் வைத்து, சில மணி நேரம் கழித்து, ஸ்லைஸ் செய்து பரிமாறவும். சாசரில் ஒவ்வொரு ஸ்லைஸாக உடையாமல் மெதுவாக வைத்துப்பரிமாறவும்

மதுரை மண்சட்டி மீன் குழம்பு..


 மதுரை மண்சட்டி மீன் குழம்பு..


இதற்கு செக்குல ஆட்டிய நல்லெண்ணெய் , சின்ன வெங்காயம், அம்மியில் நசுக்கிய நாட்டு பூண்டு , கெட்டியான

 தேங்காய் பால் (முற்றின தேங்காய் ) பயன்படுத்தவும், காஷ்மீர் மிளகாய் தூள் இதை எல்லாம் பயன்படுதினால் தான் குழம்பின் அசல் சுவை கிடைக்கும்.

இதற்கு கடல் கொடுவா, கடல் நெத்திலி,  ஆற்று மூக்கு மீன், கடல் அயிலை மீன்கள், டேம் கெழுத்தி, டேம் ஜிலேபி மீன்களையும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் #

மத்தி மீன் 500 கிராம்
சின்ன வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு பற்கள் 12 ( அம்மியில் நசுக்கியது )
கடுகு 3/4 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க #

புளி 1 எலுமிச்சை அளவு
தேங்காய் பால் 2 கப்
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு தேவையான அளவு


செய்முறை #


1. மீனை சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மஞ்சள்தூள் மற்றும் உப்புத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.

2. புளியை சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை எடுக்கவும்.

3. மண்சட்டியை அடுப்புல வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து நன்கு வெடித்ததும், அதில் சீரகம் சேர்த்து

 நன்கு பொரிந்ததும். அதில் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

4. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

 அதில் அம்மியில் நசுக்கிய வைத்துள்ள பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அது நன்றாக கூழ் போல் ஆனதும்.

6. சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேங்காய் பால் மற்றும் புளித் தண்ணீர் மிளகாய் தூள், கொத்தமல்லி

 தூள், மஞ்சள்தூள், மிளகு தூள், மற்றும் தேவையான அளவு கல் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

7. இப்பொழுது இந்த கரைத்த கரைசலை தேவை பட்டால் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை மண்சட்டியில் ஊற்ற வேண்டும். இந்த கலவை நன்றாக கொதித்து

 பச்சை வாசனை போனதும் அதில் மீன் துண்டங்களை போட்டு கிளறாமல் சிறு தீயில் 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.

8. இந்த சமையலை நாம் முதல் நாள் இரவே சமைத்து மூடி வைத்து விட வேண்டும். பிறகு காலையில் ஒரு கிளறு கிளறி மறுபடியும் ஒரு 5 நிமிடம் சிறு தீயில்

 கொதிக்க வைக்கவும். பிறகென்ன சுடு சாதத்துடன் பரிமாறவும்.


சனி, 11 நவம்பர், 2017

சமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்


சமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

1. அதிகப்படியான வாசனை கொண்ட பொருட்கள் சமையலறையில் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனென்றால், ‘கியாஸ் லீக்’ ஆகும் பட்சத்தில் அதை உடனடியாக உணர்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2. சமையல் வேலைகளின்போது கியாஸை திறந்து விட்ட பிறகு, வரக்கூடிய செல்போன் அழைப்புகளை தவிர்ப்பது பாதுகாப்பானது. அந்த அழைப்பு காரணமாக கவனம் திசை திரும்புவதால் பிரச்சினைகள் வரலாம்.

3. பொதுவாக, சமையலறைகளுக்கான மின்சார ஸ்விட்ச் அமைப்புகள் வெளிப்புறமாக அமைக்கப்படுவதால் பல பிரச்சினைகளை தவிர்க்கப்படும் என்று பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

4. சமையல் வேலைகள் முடியும் வரையில் ‘எக்ஸ்ஹாஸ்ட் பேன்கள்’ தொடர்ந்து இயங்கும்படி கவனித்துக்கொள்ளவேண்டும்.

5. எளிதாக நெருப்பினால் பாதிக்கப்படாத ‘மாடுலர் டைப் கிச்சன்’ அமைப்புகளாக சமையலறையில் அமைப்பது அத்தியாவசியமானது.

6. கியாஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், பாத்திரங்களை மாற்றுவது தவறானது. குறிப்பாக, அந்த நிலையில் எண்ணெய் அடங்கிய வாணலிகள் வைக்கப்படுவது, அல்லது எடுக்கப்படுவது கூடாது. அடுப்பு அணைக்கப்பட்ட பிறகுதான் மேற்கண்டவற்றை செய்வது பாதுகாப்பானது.

புதன், 8 நவம்பர், 2017

ரவா இட்லி



ரவா இட்லி :

செய்முறை:

முதலில் ரவையை வெரும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும் பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,  நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள்,பெருங்காயதூள் போட்டு வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்த ரவை, தயிர், உப்பு, சோடா உப்பு, (கேரட் துருவல் தனியாக வைத்துக்கொள்ளவும்) கொத்தமல்லி, சேர்த்து பிறகு தாளித்த வைத்த பொருட்கள் அனைத்தையும் சிரிது தண்ணீர விட்டு் இட்லி மாவு பதத்தில் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

இட்லிபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்த உடன் இட்லி தட்டில் இந்த கலவையை ஊற்றி, அதன் மேல் துருவி வைத்துள்ள கேரட் தூவவும். பத்து நிமிடம் கழித்து எடுத்து கொத்தமல்லி கடலைகொட்டை mix தேங்காய் சட்னி, தக்காளி சட்னி உடன் சூடாக பரிமாறலாம்.

செய்து பாருங்கள்
அருமையாக இருக்கும்

(ரவை 1கப், தயிர் முக்கால் கப்,
வேண்டும் என்றால் முந்திரி கூட சேர்க்க)

தினமும் நம் இல்லத்தில ஆரோக்கியமாக செய்து உங்களுக்காக பகிர்கிறேன்.

செமயா சாப்பிடுங்க, சூப்பரா இருங்க
நன்றி

சுரைக்காய் தயிர் பச்சடி (surakai thayir pachadi)


சுரைக்காய் தயிர் பச்சடி (surakai thayir pachadi)

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1 சிறியது
தயிர் - 1 கப்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு

தாளிக்க :

கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய்

பொடிக்க :

இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 5 பற்கள்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு

செய்முறை :

* சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லது துருவிக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பொடிக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.

* அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

* அடித்த தயிரில் பொடித்த பொருட்களை போட்டு நன்றாக கலக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கலக்கவும்.

* சத்தான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி.

* இந்த பச்சடியை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்*