வியாழன், 26 ஜூலை, 2018

டயட் உணவுகளின் அவல் உணவு வகைகள்


 டயட் உணவுகளின் அவல் உணவு வகைகள்

*அவல் உணவுகள்*
இத சாப்பிடுங்கள் வியாதியை தெறிக்க விடுங்கள்....


1. *அவல் - கல்கண்டு பொங்கல்*


தேவையானவை: அவல் - 2 கப், கல்கண்டு - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை: அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். கல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்கவும். மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

2. *அவல் கேசரி*

தேவையானவை: அவல் - 2 கப், நாட்டு சர்க்கரை - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில்  அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் 'கமகம' அவல் கேசரி ரெடி!

3. *அவல் லட்டு*


தேவையானவை: அவல் - 3 கப், நாட்டு சர்க்கரை - ஒரு கப், முந்திரி, திராட்சை - ஒரு கைப்பிடி, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - முக்கால் கப்.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் அவலை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த அவலுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

4. *அவல் மோர்க்கூழ்*


தேவையானவை: அவல் - 2 கப், லேசாக புளித்த ஒரிஜினல் கெட்டி மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடிக்கவும். அவலுடன் மோர் மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, (மாவு தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும்) உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகும்வரை அடிக்கடி கிளறவும். கூழ் ஒட்டாமல் வந்ததும் சிறிது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

5. *அவல் பாயசம்*


தேவையானவை: அவல் - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், தேங்காய்ப் பால் - அரை கப், முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அவல், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அவலை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். ஆறியதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும். சுவை மிகுந்த இந்தப் பாயசத்தை நிமிடங்களில் செய்து விடலாம். அபாரமாக இருக்கும்.


6. *அவல் புட்டு*


தேவையானவை: அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அவலை நெய் விட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், வெல்லப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை சுற்றி எடுக்கவும்.

இது புட்டு போன்று பொலபொலவென்று இருக்கும். விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி சேர்த்தும் பரிமாறலாம்.

7. *அவல் - தேங்காய்ப்பால் பாயசம்*


தேவையானவை: அவல் - ஒரு கப், தேங்காய் - ஒன்று, வெல்லம் - முக்கால் கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அவல், முந்திரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தேங்காயைத் துருவி இரண்டு விதமாக பால் எடுக்கவும். அவலை, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலில் சேர்த்து வேக விடவும்.

அவல் வெந்ததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

8. *அவல் உப்புமா*


தேவையானவை: அவல் - 2 கப், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - அரை மூடி, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு, அதில் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். பரிமாறும்போது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

9. *அவல் பொரி உருண்டை*


தேவையானவை: அவல் பொரி - 3 கப், வெல்லத்தூள் - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கைப்பிடி.

செய்முறை: முந்திரி, அவல் பொரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக் கடலை, அவல் பொரியைக் கலக்கவும். அவல் பொரி கலவையை பாகில் கொட்டிக் கிளறி, உருண்டை பிடிக்கவும். மாலை நேரத்துக்கேற்ற மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் இது!

10. *அவல் - வெஜ் உப்புமா*


தேவையானவை: அவல் - 2 கப், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1, பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். மணத்தில் மட்டுமல்ல.. சுவையிலும் அசத்தும் இந்த உப்புமா!


11. *அவல் - வெஜ் பிரியாணி*


தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட் - தலா 1, காலிஃப்ளவர் - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு, கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, எண்ணெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை: தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, காய்களை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். அவலை தண்ணீரில் கழுவி, நீரை வடித்து விடவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கசகசா தாளித்து பட்டை, இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், கீறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.

காய்கள் வெந்ததும் அவலை உதிர்த்து சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். விரும்பினால் பிரெட் துண்டுகளை எண்ணெயில் பொரித்தும் இதனுடன் சேர்க்கலாம்.

12. *அவல் பொங்கல்*

தேவையானவை: அவல், பயத்தம்பருப்பு - தலா ஒரு கப், மிளகு - ஒன்றரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நெய் - அரை கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பை வேக விடவும். பருப்பு வெந்ததும் அவலை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கடாயில் நெய்யை ஊற்றி மிளகு, சீரகம் தாளித்து, முந்திரி இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, அதை அவல் பொங்கலில் கொட்டிக் கிளறவும். இதைச் செய்வது சுலபம்.. ருசியும் அபாரம்!

13. *கறிவேப்பிலை பொடி அவல்*


தேவையானவை: அவல் - 2 கப், கறிவேப்பிலை - 2 கைப்பிடி, உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - 2 கைப்பிடி, மிளகு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்பு வகைகள், மிளகு மற்றும் மிளகாயை எண்ணெயில் வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்தால் கறிவேப்பிலை பொடி தயார்!

அவலை கழுவி, நீரை வடித்து ஒரு நிமிடம் ஊற விடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதனுடன் ருசிக்கேற்ப கறிவேப்பிலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

14. *மோர் அவல்*

தேவையானவை: அவல் - 2 கப், கெட்டியான ஒரிஜினல் மோர் - முக்கால் கப், பெருங் காயத்தூள் - 2 சிட்டிகை, பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலைப்-பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை கழுவி, தண்ணீரை வடித்து, கெட்டி மோரில் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். ஐந்து நிமிடம் ஊறினால் போதும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, அதில் பச்சைமிளகாயை போடவும். ஊற வைத்து உதிர்த்த அவல், பெருங்காயத்தூள் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

15. *புதினா பொடி அவல்*

தேவையானவை: அவல் - 2 கப், புதினா - ஒரு கட்டு, (இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்யவும்), உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினாவை நிழலில் உலர்த்தி, கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். அவலை தவிர மற்ற எல்லாவற்றையும் புதினா வுடன் சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

அவலை கழுவி, தண்ணீரை வடித்து விட்டு ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அவலை ஒரு நிமிடம் வதக்கி, புதினா பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

16. *புளி அவல்*

தேவையானவை: அவல் - 2 கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசலில் ஊற விடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளை தாளித்து, ஊற வைத்த அவலை உதிர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

17. *தேங்காய்ப்பொடி அவல்*


தேவையானவை: அவல் - 2 கப், தேங்காய் - ஒரு மூடி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். தேங்காயை துருவி, கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

பிறகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். அவலை நன்றாக கழுவி, தன்ணீரை வடித்து, 2 நிமிடம் ஊற விடவும். பிறகு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஊறிய அவலை உதிர்த்து போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சுவைக்கேற்ப பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

18. *அவல் அடை*

தேவையானவை: அவல் - 2 கப், ஒரிஜினல் மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 6, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். கெட்டி மோரில் உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஊறிய அவலை சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல் காய்ந்ததும் மாவை அடையாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

18. *அவல் போண்டா*


தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 6, இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை உருளை - அவல் கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு மசித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

கடலைமாவுடன் அரை டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருண்டைகளை கடலைமாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

19. *அவல் ஃப்ரூட் சாலட்*

தேவையானவை: அவல் - 2 கப், ஆப்பிள் - பாதியளவு, ஆரஞ்சு - 10 சுளைகள், பச்சை திராட்சை - ஒரு கைப்பிடி, பப்பாளி - ஒரு துண்டு, வாழைப்பழம் - ஒன்று, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பழங்களில் கொட்டை, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து பழக்கலவையுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு கலந்தால் அவல் ஃப்ரூட் சாலட் தயார்!

உடனடி புத்துணர்வு தரும் இந்த சாலட்டை விரைவாக செய்து அசத்தலாம்.

20. *அவல் கார புட்டு*


தேவையானவை: அவல் - 2 கப், தேங்காய் துருவல் - 2 கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, தேங்காயை பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் கீறிய பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து உதிர்த்த அவலையும் சேர்க்கவும். கடுகை தாளித்துக் கொட்டி, நன்றாக கிளறவும்.

21. *அவல் மிக்சர்*


தேவையானவை: அவல் - 3 கப், வேர்க்கடலை, பொட்டுக் கடலை - தலா அரை கப், முந்திரி, திராட்சை - தலா ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மாலையில் கொறிக்க உகந்த வித்தியாசமான மிக்சர் இது.

22. *அவல் - பயறு சாலட்*


தேவையானவை: அவல் - 2 கப், தோல் நீக்கிய பாசிப்பருப்பு, தோல் நீக்காத பச்சை பயறு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 4, எலுமிச்சை - அரை மூடி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயறு வகைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்து விடவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஊறவைத்த பயறு வகைகளுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

23. *அவல் - உருளை கொழுக்கட்டை*

தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 3, கறிவேப்பிலை, கொத்த மல்லி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவை யான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். பிறகு அவலை உதிர்த்து உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

மாவை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து குக்கரில் (வெயிட் போடாமல்) ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

24. *அவல் உசிலி*

தேவையானவை: அவல் - 2 கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக வடைமாவு பதத்தில் அரைக்கவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் அரைத்த பருப்பு விழுது, பொடி யாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். உதிர் உதிரான அவல் உசிலி தயார்!

25. *அவல் வடகம்*


தேவையானவை: அவல் - 3 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 10, கறிவேப்பிலை, கொத்தமல்லி - 2 கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஊறிய பருப்புடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும். ஊறிய அவலை உளுந்துமாவுடன் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். அதை சிறு வடகமாக உருட்டி, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.

இது, வெங்காய போண்டா போல் வாசனையோடும் ருசியோடும் இருக்கும்!

26. *அவல் வடை*


தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, இஞ்சி - ஒரு விரல் அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும்.

ஊறிய அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இதனுடன் கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசைந்து, சிறு உருண்டை களாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டை களை வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

27. *அவல் - வெஜ் சாலட்*

தேவையானவை: அவல் - 2 கப், கேரட், தக்காளி, வெங்காயம் - தலா 1, சிறிய வெள்ளரிக்காய் - 1, பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழம் - அரை மூடி, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி.

செய்முறை: அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, பொடியாக நறுக்கவும்.

பிறகு அவற்றுடன் உப்பு, எலுமிச்சம்பழ சாறு, உதிர்த்த அவலை சேர்த்துக் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

28. *அவல் இட்லி*

தேவையானவை: அவல் - 2 கப், ஒரிஜினல் கெட்டி தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி கேரட் துருவல் - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடத்துக்கு பிறகு அவலை உதிர்த்து தயிருடன் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீறிய பச்சைமிளகாயைப் போட்டு, கேரட் துருவல், உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி குக்கரில் வெயிட் போடாமல் வேக விட்டு எடுக்கவும்.

இந்த இட்லி பூ போல மிருதுவாகவும் பார்க்க கலர்ஃபுல்லாகவும் இருக்கும்.


திங்கள், 23 ஜூலை, 2018

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா...

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா...

பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - அரை கப்
பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு  
செய்முறை :

மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும். 

இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும். 

தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).
 

இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்). 


பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும். 


இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும். 

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  
 


சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

ஞாயிறு, 22 ஜூலை, 2018

கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை

கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை

காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை செய்யலாம். இதை செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

கோதுமை ரவை - 200 கிராம், 
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி - ஒரு கப், 
நெய் - 2 டீஸ்பூன், 
புதினா - கால் கட்டு, 
பச்சை மிளகாய் - 2, 
உப்பு - சிறிதளவு.
செய்முறை :  

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, நறுக்கிய காய்கறிகள், புதினா, நெய், ப.மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் இந்த கொழுக்கட்டைகளை வேத்து நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். 
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.

சண்டே ஸ்பெஷல்...வஞ்சிரம் மீன் கிரேவி!

சண்டே ஸ்பெஷல்...வஞ்சிரம் மீன் கிரேவி!

தேவையான பொருட்கள் : 
வஞ்சிரம் மீன் - 500 கிராம், 
சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
நாட்டுத் தக்காளி - 200 கிராம், 
பெரிய வெங்காயம்100 கிராம், 
பூண்டு - 1, 
புளி எலுமிச்சை அளவு, 
காய்ந்த மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
நல்லெண்ணெய் - 100 மி.லி, 
வெந்தயம் - 1 டீஸ்பூன், 
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், 
கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு, 
தனியா தூள் - 1 டீஸ்பூன், 
தேங்காய் - பாதி
செய்முறை : 
தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
புளியை கரைத்து கொள்ளவும்.
வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். 
தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும். 
அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும். 
அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.
பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

சனி, 30 ஜூன், 2018

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெதுவெதுப்பான தண்ணீர்,
உப்பு - தேவைக்கு.
இறால் -  200 கிராம்,
சீஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 2,
பெங்களூர் தக்காளி - 1, 
குடைமிளகாய் - 1/4 கப்,
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை

கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். 

சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புதன், 27 ஜூன், 2018

வாழைப்பூ வடகம்


வாழைப்பூ வடகம்

தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.

பலன்கள்:

மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும்.

அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது.

அசோகா அல்வா


அசோகா அல்வா

தேவையானவை

கோதுமை மாவு- கால் கிலோ
பயத்தம்பருப்பு-100 கிராம்
சர்க்கரை- 500 கிராம்
ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர்- ஒரு சிட்டிகை
நெய்- 100 கிராம்
உடைத்த முந்திரித் துண்டுகள்- 2 டேபிள் ஸ்பூன்

#செய்முறை:

வெறும் வாணலியில் பயத்தம்பருப்பை வறுத்து குக்கரில் குழைய வேகவிடவும்.

அதே வாணலியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்துத் தனியே வைக்கவும்.

பிறகு வாணலியில் பாதியளவு நெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்து, அது மூழ்கும் வரை நீர் ஊற்றி வேக விடவும்.

வெந்ததும் பயத்தம்பருப்பு சேர்த்துக் கலந்து சர்க்கரை சேர்த்து, இடையிடையே நெய்விட்டு சேர்ந்து கலந்து வரும்போது ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து.. ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு தூவி இறக்கவும்

மல்டி ஃப்ரூட் லஸ்ஸி


மல்டி ஃப்ரூட் லஸ்ஸி

தேவையான பொருட்கள்:
திராட்சை – -10 எண்ணிக்கை
சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் – -தலா 1
சாத்துக்குடி ஜூஸ் – -200 மி.லி
சர்க்கரை – -50 கிராம்
அதிகம் புளிக்காத தயிர் – -500 மி.லி
செய்முறை:
திராட்சை, சப்போட்டா தோல் உரித்து விதை நீக்கவும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சர்க்கரை, திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாத்துக்குடி ஜூஸ், தயிர் சேர்த்து கலக்கவும்.
தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி!


ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி!

தேவையானவை:

ஆட்டுக்கால் - 200 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்று டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது -
2 oடேபிள்ஸ்பூன்
தயிர் - 100 மில்லி
முந்திரி - 50 கிராம்
மஞ்சள் தூள் - 5 கிராம்
குங்குமப்பூ - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
புதினா இலை - 50 கிராம்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
பட்டை - 2
ஏலக்காய் - 4
எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, தயிர், உப்பு சேர்த்து கலக்கி, ஆட்டுக்காலைச் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் கரம்மசாலாத் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், ஊறிய ஆட்டுக்காலைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இத்துடன் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து... பின்னர் நெய், ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா, குங்குமப்பூ, முந்திரி தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

அவியலின் கதை


 அவியலின் கதை

நாஞ்சில் நாட்டுக் கூட்டவியலின் பாரம்பரியச் சுவை தனிச்சிறப்புடையது. ஒரு அகப்பை அவியலை அள்ளி உள்ளங்கையில் எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அதிலிருந்து துளி கூட நீர் பிரிந்து சொட்டுவதில்லை.

 திருவிதாங்கூர் சமத்தானத்தில் தளவாயாகப் பணியாற்றிய இராமப்பய்யன் தலைமையில் படை ஒன்று பத்மனாபபுரம் அருகே பசியோடு ஒரு சத்திரத்துக்கு வருகிறது. சத்திரத்தில் சாப்பாடு இருக்கிறது. ஆனால் தொடுகறி தீர்ந்து போயிருந்தது. இராமப்பய்யன் தளவாய், உக்கிராண அறை மற்றும் ஆக்குப் பெரைகளைச் சுற்றிப் பார்த்து, சமையலுக்குக் காய்கறிகள் அரியும் போது தோலோடு சேர்த்து அதிகமான பகுதிகள் வீணாக்கப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறார். பப்படம் வறுத்த எண்ணெய் சீஞ்சட்டியிலிருந்தது. பிரதமனுக்குப் பால் பிழிந்தெடுத்த தேங்காய்ச் சக்கை ஒரு சருவத்தில் இருந்தது. சம்பாரத்துக்குக் கரைத்தது போக மீதி தயிரும் இருந்தது. மீந்திருந்த காய்கள், வெட்டியெறிந்த தோல்பகுதிகளிலிருந்து கிடைத்த காய்கள், தேங்காய்ச் சக்கை, பப்படம் பொரித்த எண்ணெய், தயிர் இவற்றைக் கொண்டு இராமப்பய்யன் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தமே அவியல்.
வனவாசத்தின்போது வல்லவன் (Ballav) என்ற பெயரோடு விராட நாட்டு அரண்மனை மடப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த பீமன், அரசன் விராடனுக்காகக் கண்டுபிடித்துத் தயாரித்த ஒரு சிறப்புத் தொடுகறிதான் அவியல் என்றொரு கதை இருக்கிறது.

ஞாயிறு, 24 ஜூன், 2018

1800 ஆண்டுகள் பழமையான பிரியாணியின் வரலாறும் - அதன்வகைகளும்...


1800 ஆண்டுகள் பழமையான பிரியாணியின் வரலாறும் - அதன்வகைகளும்...

பிரியாணியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை கி.பி 2-ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது. அதாவது அந்தக் காலங்களில் அரிசி, இறைச்சி, நெய், மஞ்சள், கொத்துமல்லி தூள், மிளகு, புன்னை இலை ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட 'ஊன் சோறு' எனும் உணவு வகை இன்றைய பிரியாணியோடு ஒத்துப்போகிறது. இதைத் தவிர்த்து பார்த்தால் பிரியாணியின் தோற்றம் குறித்தும், அது இந்தியா வந்து சேர்ந்த விதம் பற்றியும் நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் பரவலாக நம்பப்படும் கருத்து, பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் 'பிர்யான்' எனும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்ததாக சொல்லப்படுவது.


அதாவது பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்து, பின்னர் பிரியாணி சமைக்கும் முறை இந்தியாவில் உருவானது. அந்த வகையில் இந்தியாவில் பிரியாணிக்காக பிரசித்தமாக அறியப்படும் சில இடங்களை பற்றி இங்கே காண்போம்.

ஹைதராபாத் பிரியாணி :

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பெரும்பாலும் அசைவப் பிரியர்கள் அனைவராலும் ஹைதராபாத் பிரியாணி விரும்பப்படுகிறது. இந்திய சமையல் பாணியின் அங்கமாகக் கருதப்படும் ஹைதராபாத் பிரியாணி முன்பு நிஜாம் அரண்மனை சமையலறையில் மீன், காடை, இறால், மான் மற்றும் முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரியாணி உலகப் பிரபலம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் பிரியாணி உணவகங்களை பார்க்க முடிகிறது.


திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி :

உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டு பிரியாணிதாங்க. இந்த தலப்பாக்கட்டு பிரியாணி உணவகத்துக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் இருப்பதோடு, இது தோன்றிய இடமான திண்டுக்கல்லில் தலப்பாக்கட்டு நாயுடு கடை என்று லேன்ட் மார்க் மூலம் பிரபலமாக அறியப்படுகிறது. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரகசம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!... சொல்லவா வேணும்….


தலச்சேரி பிரியாணி:

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் பிரபலமாக அறியப்படும் தலச்சேரி பிரியாணி மலபார் பிரியாணி, கோழிக்கோடு பிரியாணி, கண்ணூர் பிரியாணி, கேரளா பிரியாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணி தலச்சேரி மட்டுமல்லாமல் கேரளாவின் பிற பகுதிகளான மலப்புரம், காசர்கோட், கோழிக்கோடு ஆகிய மலபார் பகுதிகளிலும் பிரபலம்.

ஆம்பூர் பிரியாணி:

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் பின்பற்றப்படும் செய்முறை ஆம்பூர் பிரியாணி எனப் பெயர் பெற்றுள்ளது. இது தமிழ்நாடு தவிர ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப் பிரதேசங்களிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பிரியாணியில் ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருக்கும்.

லக்னோ ஆவாதி பிரியாணி:

லக்னோவுக்கும், பிரியாணிக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதாவது பிரியாணி வகைகளில் லக்னோ பிரியாணிதான் முதலாவகதாக உருவானது என்று நம்பப்படுகிறது. லக்னோ மற்றும் ஒரு சில உத்தரப் பிரதேச பகுதிகளில் பேசப்படும் அவதி மொழியிலிருந்து ஆவாதி பிரியாணி எனப் இந்த பிரியாணிக்கு பெயர் வந்தது. இது புக்கா பிரியாணி என்று பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணியை தவிர லக்னோ கபாப் இந்தியா முழுவதும் பிரபலம.

வாணியம்பாடி பிரியாணி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் வாணியம்பாடி பிரியாணி முழுக்க முழுக்க முகாலய உணவு முறையை பின்பற்றி செய்யப்படுகிறது. அதாவது வேலூர் பகுதியை முன்பு ஆண்ட ஆற்காடு நவாப் அரசு, படை வீரர்களுக்கு முகாலய பிரியாணியை சமைத்து பரிமாறியது. எனவே அதற்கு பின்பு வேலூரின் நிறைய பகுதிகளில் சமைக்கப்பட்டு வந்த இந்த பிரியாணி, வாணியம்பாடி பகுதியிலும் சமைக்கப்பட்டதுடன், வாணியம்பாடி பிரியாணி என்ற அளவிலேயே பிரபலமாக தொடங்கியது.

கொல்கத்தா பிரியாணி:

லக்னோ பாணி பிரியாணியிலிருந்தே கொல்கத்தா பிரியாணி தோன்றியது. அதாவது 19ம் நூற்றாண்டின் போது லக்னோவை விட்டு வெளியேறிய வஜீத் அலி ஷா எனும் நவாப் தன்னுடனேயே அவருடைய தலைமை சமையல்காரரையும் அழைத்து வந்துவிட்டார். இதன் மூலம் லக்னோ பிரியாணி கொல்கத்தா பகுதிகளுக்கே சிறிது மாற்றம் அடைந்து கொல்கத்தா பிரியாணி என்றானது. இந்த பிரியாணியை மற்ற பிரியாணி வகைகளோடு ஒப்பிட்டால் சற்று காரம் குறைவாகவே இது தயாரிக்கப்படுகிறது.

சங்கரன்கோவில் பிரியாணி:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் செய்யப்படும் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பாம்பே பிரியாணி:

பாம்பே பிரியாணி மும்பையில் உள்ள ஒரு பகுதி இஸ்லாமிய சமூக மக்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை பிரியாணியில் இறைச்சியுடன் உருளைக்கிழங்கும் சேர்த்து சமைக்கப்படுவது வித்தியாசமான சுவையை தருவதோடு, பாம்பே பிரியாணியின் தனிச் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.

பட்கல் பிரியாணி:

கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பட்கல் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி செய்யும் முறை கடலோர கர்நாடகத்தில் புகழ் பெற்றுள்ளது. இது பம்பாய் பிரியாணியை பின்பற்றி தயாரிக்கப்படுகிறது. இந்த பிரியாணியில் பிற பிரியாணி வகைகளுக்கு மாறாக வெங்காயம் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.(mi@55)

பிரியாணி கிராமம் :

இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரியாணியின் பெயரால் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள வடக்கம்பட்டி பிரியாணி கிராமம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி நளபாக சக்கரவர்த்திகளாக திகழ்ந்திடும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு .முனியாண்டி சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.

அப்போது சுவாமிக்கு நூற்றுக் கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு ராட்சத அண்டாக்களில் பிரியாணி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகேயுள்ள வடக்கம்பட்டி,பிரியாணி கிராமம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படுகிறது.

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்...


மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்...

1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.

2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.

3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.

4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.

5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.


6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.

8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.

11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.

12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.

13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.

14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.

15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.


16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.

17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.

18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.

19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.

வெள்ளி, 15 ஜூன், 2018

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

 
தேவையான பொருட்கள்
மட்டன் 1 கிலோ
அரிசி 1 கிலோ
எண்ணை 100 கிராம்
டால்டா 150 கிராம்
பட்டை 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு ஐந்து
ஏலக்காய் முன்று
வெங்காயம் 1/2 கிலோ
தக்காளி 1/2 கிலோ
இஞ்சி 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி ஒரு கட்டு
புதினா 1/2 கட்டுப. மிள்காய் 8
தயிர் 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி 1 பின்ச்
ரெட்கலர் பொடி 1 பின்ச்
எலுமிச்சை பழம் 1நெய் ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாத்திரம் காய்ந்ததும் எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல காய விச வேண்டும். காய்ந்த பின் ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும். அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும். நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
ஓவ்வொரு தடவை கிளறிய பின் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளற வேண்டும்.
அதன் பின் தக்காளி, பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேகவிட வேண்டும். எண்ணையில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போட வேண்டும்.
மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளற வேண்டும். பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.
அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விட வேண்டும். ஊறவைத்த அரிசியை வடித்து உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழிய வேண்டும்.
வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அ) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விட வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரண்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து தூவி விட வேண்டும். அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்.

அருமையான சமையல் டிப்ஸ்

அருமையான சமையல் டிப்ஸ்


பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
*வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி 
செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று 
ருசியாக இருக்கும்.
*சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
*சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
*தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
*பவுடர் மற்றும் ரசம் பவுடர் எப்போதும் புதியதாக மணம் மாறாமல் 
இருக்கவேண்டுமா? சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை 
பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.
*வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா? வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரையுங்கள். சட்னி கசக்காமல் ருசிக்கும்.
*கேரட்டின் தலைபகுதியை சிறிது நறுக்கி விட்டு காற்று புகாத பாலிதின் 
பைகளில் போட்டுவைங்கள். நீண்ட நாட்களுக்கு கேரட் பசுமையாக உலராமல் 
இருக்கும்.
*பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின் 
பைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.
*பசலைக்கீரை மற்றும் பச்சை காய்கறி, கீரைவகைகளைச் சமைக்கும் போது சிறிது
சர்க்கரை சேர்த்து சமையுங்கள். சமைத்த பின்னும் அவற்றின் பச்சை நிறம் 
மாறாமல் இருக்கும்.
*மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டி விழாமலும் இருக்கும்.
*கேக் முட்டை வாடையடிக்கிறதா? கவலையை விடுங்கள். கேக்கிற்கு மாவு 
பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக் 
முட்டை வாடை போயே போச்!
*முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.
*தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் 
குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயjlன்படுத்தவும்.
மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…… ஊச்……… என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.
*வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.
*வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது.
வேப்பம்பூ கடைகளில் கிடைக்கிறது.
*அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து 
சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் 
அதிகம்.
*ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு 
பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் 
அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும்.
*கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.
*மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
*ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட 
துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால்
பூசனம் பிடிக்காமல் இருக்கும்.
*உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து 
கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக 
இருக்கும்.
*கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
*ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
*தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
*பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை 
சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் 
போய்விடும்.

ரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி

ரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி

ரம்ஜான் உணவுகளைப் பற்றிப் பார்க்கும் போது பிரியாணியை விட்டு விட்டால், அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் தீர்க்க முடியாமல் போய்விடும். அதனால் இஸ்லாமியரின் ஸ்டார் ஃபுட்டான மொகல் பிரியாணியை எப்படி செய்வது எனக் கற்றுக் கொள்வோம் வாருங்கள். 
தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ, பாஸ்மதி அரிசி – 2 கப், தயிர் – 1 கப், வெங்காயம் – 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது), மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், சீரகப் பொடி – 1 டீஸ்பூன், மல்லி தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், பட்டை – 1, மிளகு – 6, கிராம்பு – 4, ஏலக்காய் – 4, பிரியாணி இலை – 1, குங்குமப்பூ – 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது), முந்திரி – 10, உலர் திராட்சை – 10, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. 
செய்முறை:
மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும். 
ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் தீயை குறைவாக வைத்து வேக விடவும். மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும். பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து தீயை குறைவாக வைத்து வதக்வும். அரிசியை கழுவி குக்கரில் போட்டு, 2-3 நிமிடம் வறுக்க வேண்டும்.
இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்திருக்கும்.கிரேவி போல வெந்திருக்கும் அதனை, குக்கரில் உள்ள அரிசியுடன் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்கும பூ பாலை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.