அவியலின் கதை
நாஞ்சில் நாட்டுக் கூட்டவியலின் பாரம்பரியச் சுவை தனிச்சிறப்புடையது. ஒரு அகப்பை அவியலை அள்ளி உள்ளங்கையில் எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அதிலிருந்து துளி கூட நீர் பிரிந்து சொட்டுவதில்லை.
திருவிதாங்கூர் சமத்தானத்தில் தளவாயாகப் பணியாற்றிய இராமப்பய்யன் தலைமையில் படை ஒன்று பத்மனாபபுரம் அருகே பசியோடு ஒரு சத்திரத்துக்கு வருகிறது. சத்திரத்தில் சாப்பாடு இருக்கிறது. ஆனால் தொடுகறி தீர்ந்து போயிருந்தது. இராமப்பய்யன் தளவாய், உக்கிராண அறை மற்றும் ஆக்குப் பெரைகளைச் சுற்றிப் பார்த்து, சமையலுக்குக் காய்கறிகள் அரியும் போது தோலோடு சேர்த்து அதிகமான பகுதிகள் வீணாக்கப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறார். பப்படம் வறுத்த எண்ணெய் சீஞ்சட்டியிலிருந்தது. பிரதமனுக்குப் பால் பிழிந்தெடுத்த தேங்காய்ச் சக்கை ஒரு சருவத்தில் இருந்தது. சம்பாரத்துக்குக் கரைத்தது போக மீதி தயிரும் இருந்தது. மீந்திருந்த காய்கள், வெட்டியெறிந்த தோல்பகுதிகளிலிருந்து கிடைத்த காய்கள், தேங்காய்ச் சக்கை, பப்படம் பொரித்த எண்ணெய், தயிர் இவற்றைக் கொண்டு இராமப்பய்யன் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தமே அவியல்.
வனவாசத்தின்போது வல்லவன் (Ballav) என்ற பெயரோடு விராட நாட்டு அரண்மனை மடப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த பீமன், அரசன் விராடனுக்காகக் கண்டுபிடித்துத் தயாரித்த ஒரு சிறப்புத் தொடுகறிதான் அவியல் என்றொரு கதை இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக