சனி, 30 ஜூன், 2018

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெதுவெதுப்பான தண்ணீர்,
உப்பு - தேவைக்கு.
இறால் -  200 கிராம்,
சீஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 2,
பெங்களூர் தக்காளி - 1, 
குடைமிளகாய் - 1/4 கப்,
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை

கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். 

சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புதன், 27 ஜூன், 2018

வாழைப்பூ வடகம்


வாழைப்பூ வடகம்

தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.

பலன்கள்:

மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும்.

அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது.

அசோகா அல்வா


அசோகா அல்வா

தேவையானவை

கோதுமை மாவு- கால் கிலோ
பயத்தம்பருப்பு-100 கிராம்
சர்க்கரை- 500 கிராம்
ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர்- ஒரு சிட்டிகை
நெய்- 100 கிராம்
உடைத்த முந்திரித் துண்டுகள்- 2 டேபிள் ஸ்பூன்

#செய்முறை:

வெறும் வாணலியில் பயத்தம்பருப்பை வறுத்து குக்கரில் குழைய வேகவிடவும்.

அதே வாணலியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்துத் தனியே வைக்கவும்.

பிறகு வாணலியில் பாதியளவு நெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்து, அது மூழ்கும் வரை நீர் ஊற்றி வேக விடவும்.

வெந்ததும் பயத்தம்பருப்பு சேர்த்துக் கலந்து சர்க்கரை சேர்த்து, இடையிடையே நெய்விட்டு சேர்ந்து கலந்து வரும்போது ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து.. ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு தூவி இறக்கவும்

மல்டி ஃப்ரூட் லஸ்ஸி


மல்டி ஃப்ரூட் லஸ்ஸி

தேவையான பொருட்கள்:
திராட்சை – -10 எண்ணிக்கை
சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் – -தலா 1
சாத்துக்குடி ஜூஸ் – -200 மி.லி
சர்க்கரை – -50 கிராம்
அதிகம் புளிக்காத தயிர் – -500 மி.லி
செய்முறை:
திராட்சை, சப்போட்டா தோல் உரித்து விதை நீக்கவும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சர்க்கரை, திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாத்துக்குடி ஜூஸ், தயிர் சேர்த்து கலக்கவும்.
தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி!


ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி!

தேவையானவை:

ஆட்டுக்கால் - 200 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்று டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது -
2 oடேபிள்ஸ்பூன்
தயிர் - 100 மில்லி
முந்திரி - 50 கிராம்
மஞ்சள் தூள் - 5 கிராம்
குங்குமப்பூ - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
புதினா இலை - 50 கிராம்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
பட்டை - 2
ஏலக்காய் - 4
எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, தயிர், உப்பு சேர்த்து கலக்கி, ஆட்டுக்காலைச் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் கரம்மசாலாத் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், ஊறிய ஆட்டுக்காலைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இத்துடன் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து... பின்னர் நெய், ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா, குங்குமப்பூ, முந்திரி தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

அவியலின் கதை


 அவியலின் கதை

நாஞ்சில் நாட்டுக் கூட்டவியலின் பாரம்பரியச் சுவை தனிச்சிறப்புடையது. ஒரு அகப்பை அவியலை அள்ளி உள்ளங்கையில் எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அதிலிருந்து துளி கூட நீர் பிரிந்து சொட்டுவதில்லை.

 திருவிதாங்கூர் சமத்தானத்தில் தளவாயாகப் பணியாற்றிய இராமப்பய்யன் தலைமையில் படை ஒன்று பத்மனாபபுரம் அருகே பசியோடு ஒரு சத்திரத்துக்கு வருகிறது. சத்திரத்தில் சாப்பாடு இருக்கிறது. ஆனால் தொடுகறி தீர்ந்து போயிருந்தது. இராமப்பய்யன் தளவாய், உக்கிராண அறை மற்றும் ஆக்குப் பெரைகளைச் சுற்றிப் பார்த்து, சமையலுக்குக் காய்கறிகள் அரியும் போது தோலோடு சேர்த்து அதிகமான பகுதிகள் வீணாக்கப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறார். பப்படம் வறுத்த எண்ணெய் சீஞ்சட்டியிலிருந்தது. பிரதமனுக்குப் பால் பிழிந்தெடுத்த தேங்காய்ச் சக்கை ஒரு சருவத்தில் இருந்தது. சம்பாரத்துக்குக் கரைத்தது போக மீதி தயிரும் இருந்தது. மீந்திருந்த காய்கள், வெட்டியெறிந்த தோல்பகுதிகளிலிருந்து கிடைத்த காய்கள், தேங்காய்ச் சக்கை, பப்படம் பொரித்த எண்ணெய், தயிர் இவற்றைக் கொண்டு இராமப்பய்யன் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தமே அவியல்.
வனவாசத்தின்போது வல்லவன் (Ballav) என்ற பெயரோடு விராட நாட்டு அரண்மனை மடப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த பீமன், அரசன் விராடனுக்காகக் கண்டுபிடித்துத் தயாரித்த ஒரு சிறப்புத் தொடுகறிதான் அவியல் என்றொரு கதை இருக்கிறது.

ஞாயிறு, 24 ஜூன், 2018

1800 ஆண்டுகள் பழமையான பிரியாணியின் வரலாறும் - அதன்வகைகளும்...


1800 ஆண்டுகள் பழமையான பிரியாணியின் வரலாறும் - அதன்வகைகளும்...

பிரியாணியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை கி.பி 2-ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது. அதாவது அந்தக் காலங்களில் அரிசி, இறைச்சி, நெய், மஞ்சள், கொத்துமல்லி தூள், மிளகு, புன்னை இலை ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட 'ஊன் சோறு' எனும் உணவு வகை இன்றைய பிரியாணியோடு ஒத்துப்போகிறது. இதைத் தவிர்த்து பார்த்தால் பிரியாணியின் தோற்றம் குறித்தும், அது இந்தியா வந்து சேர்ந்த விதம் பற்றியும் நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் பரவலாக நம்பப்படும் கருத்து, பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் 'பிர்யான்' எனும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்ததாக சொல்லப்படுவது.


அதாவது பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்து, பின்னர் பிரியாணி சமைக்கும் முறை இந்தியாவில் உருவானது. அந்த வகையில் இந்தியாவில் பிரியாணிக்காக பிரசித்தமாக அறியப்படும் சில இடங்களை பற்றி இங்கே காண்போம்.

ஹைதராபாத் பிரியாணி :

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பெரும்பாலும் அசைவப் பிரியர்கள் அனைவராலும் ஹைதராபாத் பிரியாணி விரும்பப்படுகிறது. இந்திய சமையல் பாணியின் அங்கமாகக் கருதப்படும் ஹைதராபாத் பிரியாணி முன்பு நிஜாம் அரண்மனை சமையலறையில் மீன், காடை, இறால், மான் மற்றும் முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரியாணி உலகப் பிரபலம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் பிரியாணி உணவகங்களை பார்க்க முடிகிறது.


திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி :

உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டு பிரியாணிதாங்க. இந்த தலப்பாக்கட்டு பிரியாணி உணவகத்துக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் இருப்பதோடு, இது தோன்றிய இடமான திண்டுக்கல்லில் தலப்பாக்கட்டு நாயுடு கடை என்று லேன்ட் மார்க் மூலம் பிரபலமாக அறியப்படுகிறது. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரகசம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!... சொல்லவா வேணும்….


தலச்சேரி பிரியாணி:

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் பிரபலமாக அறியப்படும் தலச்சேரி பிரியாணி மலபார் பிரியாணி, கோழிக்கோடு பிரியாணி, கண்ணூர் பிரியாணி, கேரளா பிரியாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணி தலச்சேரி மட்டுமல்லாமல் கேரளாவின் பிற பகுதிகளான மலப்புரம், காசர்கோட், கோழிக்கோடு ஆகிய மலபார் பகுதிகளிலும் பிரபலம்.

ஆம்பூர் பிரியாணி:

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் பின்பற்றப்படும் செய்முறை ஆம்பூர் பிரியாணி எனப் பெயர் பெற்றுள்ளது. இது தமிழ்நாடு தவிர ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப் பிரதேசங்களிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பிரியாணியில் ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருக்கும்.

லக்னோ ஆவாதி பிரியாணி:

லக்னோவுக்கும், பிரியாணிக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதாவது பிரியாணி வகைகளில் லக்னோ பிரியாணிதான் முதலாவகதாக உருவானது என்று நம்பப்படுகிறது. லக்னோ மற்றும் ஒரு சில உத்தரப் பிரதேச பகுதிகளில் பேசப்படும் அவதி மொழியிலிருந்து ஆவாதி பிரியாணி எனப் இந்த பிரியாணிக்கு பெயர் வந்தது. இது புக்கா பிரியாணி என்று பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணியை தவிர லக்னோ கபாப் இந்தியா முழுவதும் பிரபலம.

வாணியம்பாடி பிரியாணி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் வாணியம்பாடி பிரியாணி முழுக்க முழுக்க முகாலய உணவு முறையை பின்பற்றி செய்யப்படுகிறது. அதாவது வேலூர் பகுதியை முன்பு ஆண்ட ஆற்காடு நவாப் அரசு, படை வீரர்களுக்கு முகாலய பிரியாணியை சமைத்து பரிமாறியது. எனவே அதற்கு பின்பு வேலூரின் நிறைய பகுதிகளில் சமைக்கப்பட்டு வந்த இந்த பிரியாணி, வாணியம்பாடி பகுதியிலும் சமைக்கப்பட்டதுடன், வாணியம்பாடி பிரியாணி என்ற அளவிலேயே பிரபலமாக தொடங்கியது.

கொல்கத்தா பிரியாணி:

லக்னோ பாணி பிரியாணியிலிருந்தே கொல்கத்தா பிரியாணி தோன்றியது. அதாவது 19ம் நூற்றாண்டின் போது லக்னோவை விட்டு வெளியேறிய வஜீத் அலி ஷா எனும் நவாப் தன்னுடனேயே அவருடைய தலைமை சமையல்காரரையும் அழைத்து வந்துவிட்டார். இதன் மூலம் லக்னோ பிரியாணி கொல்கத்தா பகுதிகளுக்கே சிறிது மாற்றம் அடைந்து கொல்கத்தா பிரியாணி என்றானது. இந்த பிரியாணியை மற்ற பிரியாணி வகைகளோடு ஒப்பிட்டால் சற்று காரம் குறைவாகவே இது தயாரிக்கப்படுகிறது.

சங்கரன்கோவில் பிரியாணி:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் செய்யப்படும் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பாம்பே பிரியாணி:

பாம்பே பிரியாணி மும்பையில் உள்ள ஒரு பகுதி இஸ்லாமிய சமூக மக்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை பிரியாணியில் இறைச்சியுடன் உருளைக்கிழங்கும் சேர்த்து சமைக்கப்படுவது வித்தியாசமான சுவையை தருவதோடு, பாம்பே பிரியாணியின் தனிச் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.

பட்கல் பிரியாணி:

கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பட்கல் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி செய்யும் முறை கடலோர கர்நாடகத்தில் புகழ் பெற்றுள்ளது. இது பம்பாய் பிரியாணியை பின்பற்றி தயாரிக்கப்படுகிறது. இந்த பிரியாணியில் பிற பிரியாணி வகைகளுக்கு மாறாக வெங்காயம் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.(mi@55)

பிரியாணி கிராமம் :

இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரியாணியின் பெயரால் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள வடக்கம்பட்டி பிரியாணி கிராமம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி நளபாக சக்கரவர்த்திகளாக திகழ்ந்திடும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு .முனியாண்டி சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.

அப்போது சுவாமிக்கு நூற்றுக் கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு ராட்சத அண்டாக்களில் பிரியாணி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகேயுள்ள வடக்கம்பட்டி,பிரியாணி கிராமம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படுகிறது.

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்...


மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்...

1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.

2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.

3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.

4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.

5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.


6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.

8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.

11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.

12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.

13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.

14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.

15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.


16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.

17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.

18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.

19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.

வெள்ளி, 15 ஜூன், 2018

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

 
தேவையான பொருட்கள்
மட்டன் 1 கிலோ
அரிசி 1 கிலோ
எண்ணை 100 கிராம்
டால்டா 150 கிராம்
பட்டை 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு ஐந்து
ஏலக்காய் முன்று
வெங்காயம் 1/2 கிலோ
தக்காளி 1/2 கிலோ
இஞ்சி 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி ஒரு கட்டு
புதினா 1/2 கட்டுப. மிள்காய் 8
தயிர் 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி 1 பின்ச்
ரெட்கலர் பொடி 1 பின்ச்
எலுமிச்சை பழம் 1நெய் ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாத்திரம் காய்ந்ததும் எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல காய விச வேண்டும். காய்ந்த பின் ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும். அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும். நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
ஓவ்வொரு தடவை கிளறிய பின் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளற வேண்டும்.
அதன் பின் தக்காளி, பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேகவிட வேண்டும். எண்ணையில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போட வேண்டும்.
மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளற வேண்டும். பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.
அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விட வேண்டும். ஊறவைத்த அரிசியை வடித்து உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழிய வேண்டும்.
வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அ) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விட வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரண்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து தூவி விட வேண்டும். அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்.

அருமையான சமையல் டிப்ஸ்

அருமையான சமையல் டிப்ஸ்


பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
*வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி 
செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று 
ருசியாக இருக்கும்.
*சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
*சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
*தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
*பவுடர் மற்றும் ரசம் பவுடர் எப்போதும் புதியதாக மணம் மாறாமல் 
இருக்கவேண்டுமா? சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை 
பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.
*வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா? வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரையுங்கள். சட்னி கசக்காமல் ருசிக்கும்.
*கேரட்டின் தலைபகுதியை சிறிது நறுக்கி விட்டு காற்று புகாத பாலிதின் 
பைகளில் போட்டுவைங்கள். நீண்ட நாட்களுக்கு கேரட் பசுமையாக உலராமல் 
இருக்கும்.
*பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின் 
பைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.
*பசலைக்கீரை மற்றும் பச்சை காய்கறி, கீரைவகைகளைச் சமைக்கும் போது சிறிது
சர்க்கரை சேர்த்து சமையுங்கள். சமைத்த பின்னும் அவற்றின் பச்சை நிறம் 
மாறாமல் இருக்கும்.
*மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டி விழாமலும் இருக்கும்.
*கேக் முட்டை வாடையடிக்கிறதா? கவலையை விடுங்கள். கேக்கிற்கு மாவு 
பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக் 
முட்டை வாடை போயே போச்!
*முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.
*தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் 
குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயjlன்படுத்தவும்.
மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…… ஊச்……… என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.
*வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.
*வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது.
வேப்பம்பூ கடைகளில் கிடைக்கிறது.
*அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து 
சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் 
அதிகம்.
*ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு 
பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் 
அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும்.
*கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.
*மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
*ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட 
துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால்
பூசனம் பிடிக்காமல் இருக்கும்.
*உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து 
கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக 
இருக்கும்.
*கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
*ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
*தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
*பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை 
சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் 
போய்விடும்.

ரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி

ரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி

ரம்ஜான் உணவுகளைப் பற்றிப் பார்க்கும் போது பிரியாணியை விட்டு விட்டால், அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் தீர்க்க முடியாமல் போய்விடும். அதனால் இஸ்லாமியரின் ஸ்டார் ஃபுட்டான மொகல் பிரியாணியை எப்படி செய்வது எனக் கற்றுக் கொள்வோம் வாருங்கள். 
தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ, பாஸ்மதி அரிசி – 2 கப், தயிர் – 1 கப், வெங்காயம் – 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது), மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், சீரகப் பொடி – 1 டீஸ்பூன், மல்லி தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், பட்டை – 1, மிளகு – 6, கிராம்பு – 4, ஏலக்காய் – 4, பிரியாணி இலை – 1, குங்குமப்பூ – 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது), முந்திரி – 10, உலர் திராட்சை – 10, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. 
செய்முறை:
மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும். 
ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் தீயை குறைவாக வைத்து வேக விடவும். மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும். பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து தீயை குறைவாக வைத்து வதக்வும். அரிசியை கழுவி குக்கரில் போட்டு, 2-3 நிமிடம் வறுக்க வேண்டும்.
இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்திருக்கும்.கிரேவி போல வெந்திருக்கும் அதனை, குக்கரில் உள்ள அரிசியுடன் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்கும பூ பாலை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

செவ்வாய், 12 ஜூன், 2018

விதமாக 30 வகை ‘பிரேக்ஃபாஸ்ட் – லஞ்ச்’



”என் பிள்ளை காலையில் கொடுக்கற உணவை முகம் சுளிக்காமல் சாப்பிடணும். ஸ்கூலுக்கு கொடுத்து விடறதையும் அழகா சாப்பிட்டு, சாயங்காலம் திரும்பி வரும்போது டிபன் பாக்ஸை காலி செய்துட்டு வரணும்…”
– திடீர் என்று கடவுள் கண்முன் தோன்றினால், இல்லத்தரசிகள் பலர் இதைத்தான் வரமாக கேட்பார்கள். காரணம், துறுதுறுப்பாகவும், புத்திசாலியாகவும் இருக்கும் இந்தக் காலத்து பிள்ளைகளை சாப்பாடு விஷயத்தில் திருப்திப்படுத்துவது அத்தனை சிரமம்! இங்கே, இல்லத்தரசிகளுக்கு உதவும் விதமாக 30 வகை  ‘பிரேக்ஃபாஸ்ட் – லஞ்ச்’ ரெசிபிகளுடன் களம் இறங்கும் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன்,
”பேன் கேக், நட்ஸ் போளி, வெல்ல அப்பம், வெஜிடபிள் தோசை, சாண்ட்விச்கள், பாஸ்தா என்று விதம்விதமான ரெசிபிகளைக் கொடுத்திருக்கிறேன். இவை நிச்சயமாக உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

நியூட்ரிஷியஸ் பூரி
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, சீவிய குடமிளகாய் – ஒரு கரண்டி, துருவிய பீட்ரூட் – ஒரு சின்ன கப், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை சிறிதளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய், பீட்ரூட் சேர்த்து வதக்கி… மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும். பிசைந்த  மாவை சின்ன சின்னதாக, கொஞ்சம் திக்கான பூரிகளாக இடவும். ஒரு பூரி மேல் கொஞ்சம் காய்கறி கலவையை வைத்து, இன்னொரு பூரியை மேலே வைத்து, நன்றாக ஒட்டி கையால் ஒன்றாக சமப்படுத்தவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பூரிகளை பொரித்து எடுக்கவும்.

முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை:  முள்ளங்கி – ஒன்று, கோதுமை மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கியை கழுவி, தோல் சீவி துருவி வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, தேவையான தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து… துருவிய முள்ளங்கி, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். பிறகு மாவை 3 சப்பாத்தியாக செய்து ஒன்றின் மேல் ஒன்று வைத்து ஒன்றாக சுருட்டி வைக்கவும். அதை 4 பாகமாக பிரித்து, ஒவ்வொன்றையும் மீண்டும் சப்பாத்தி மாதிரி தேய்த்து, தவாவில் போட்டு நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இது லேயர் லேயராக நன்றாக வரும். சுவையும் சூப்பராக இருக்கும்.

வெஜிடபிள் பால்
தேவையானவை: அரிசி – 2 கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப், வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு ஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக செய்து, ஆவியில் வேகவிடவும்.
இது கலர்ஃபுல் ஆகவும், சுவையாகவும் இருக்கும்.

வெல்ல அவல்
தேவையானவை:  கெட்டி அவல் – ஒரு கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு வெல்லத்தை சேர்த்து காயவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, பாகு வரும் வரையில் மீண்டும் கொதிக்கவிடவும். பாகு, தக்காளி பதம் (கையில் வைத்து உருட்டினால், தளதள என்றிருக்கும் பதம்) வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து அவலை சேர்க்கவும். பிறகு, நன்றாக கிளறி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, கடைசியாக நெய் விட்டு இறக்கவும்.

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை
தேவையானவை:  பாசிப்பருப்பு – 2 கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், பொடித்த வேர்க்கடலை – அரை கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, தேங்காய் துருவல் – கால் கப்,  நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைத்து, நீரை வடித்து, ஆவியில் வேகவிடவும். வெந்ததும் எடுத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, தேங்காய் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து, நெய் விட்டு உருண்டையாகப் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

பேன் கேக்
தேவையானவை: கஞ்சி மாவு அல்லது கோதுமை மாவு – ஒரு கப், நறுக்கிய பீட்ரூட் அல்லது கேரட் – அரை கப், பால் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை, தேன் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: பீட்ரூட் அல்லது கேரட்டை தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும். அதனுடன் கஞ்சி மாவு (அ) கோதுமை மாவு, பால், சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (இட்லி மாவு பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்). மாவை தவாவில் கனமான தோசை போல வார்த்து, மூடிவைக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு எடுக்கவும். அதன் மீது தேனைத் தடவி துண்டு போட்டு கொடுக்கவும். இதை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
விருப்பப்பட்டால், முட்டையை அடித்து அதனுடன் மாவைக் கலந்தும் செய்யலாம்.

வெல்ல இட்லி
தேவையானவை: இட்லி மாவு – 2 கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், தேங்காய் துருவல் – முக்கால் கப், பாசிப்பருப்பு – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:  சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கொஞ்சம் கொதிக்கவிடவும் (பாகு வரக்கூடாது). பிறகு மாவில் சேர்க்கவும், பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, மாவுடன் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, இட்லித் தட்டில் மாவை விட்டு, அதன்மீது தேங்காய் துருவலை தூவி வேக வைத்து எடுக்கவும். குழந்தைகளின் மனதைக் கவரும் இட்லி இது.

தேங்காய்  வெஜிடபிள் கொழுக்கட்டை
தேவையானவை: இட்லி அரிசி – 2 கப், நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – அரை கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து  இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். இத்துடன் மாவு, தேங்காய் பல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். வெந்ததும் ஆறவிட்டு, உருண்டை பிடித்து, ஆவியில் வேக வைக்கவும்.

நட்ஸ் போளி
தேவையானவை: மைதா – ஒரு கப், பாதாம் – 10, முந்திரி – 10, அக்ரூட் – சிறிதளவு, பேரீச்சம்பழம் – 6, காய்ந்த திராட்சை – ஒரு சிறிய கப், ஏலக்காய் – 2, பிஸ்தா – சிறிதளவு, சாரைப் பருப்பு – சிறிதளவு, கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,  எண்ணெய் – கால் கப், நெய், உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை: பாதாம், முந்திரி, அக்ரூட், பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை, ஏலக்காய் –  பிஸ்தா, சாரை பருப்பு ஆகியவற்றை சுடுநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். மைதா மாவில் கேசரி பவுடர், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஊறவிடவும். நட்ஸ் கலவையை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, அரைத்த விழுதை நன்றாக வதக்கி உருண்டைகளாக செய்து வைக்கவும். மைதா மாவை இலையில் தட்டி பூரண உருண்டையை வைத்து மூடி, போளிகளாக தட்டி, தவாவில் போட்டு, நெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

வெல்ல அப்பம்
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – முக்கால் கப், துருவிய வெல்லம் – ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 கப், துருவிய தேங்காய் – ஒரு கப்.
செய்முறை: வெல்லத்தை நன்றாக தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கி, வடிகட்டி வைக்கவும். ஆறியதும் கோதுமை மாவு, அரிசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கலந்து வைக்கவும் (விருப்பப்பட்டால், மசித்த வாழைப்பழம் கொஞ்சம் சேர்க்கலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை குழிக் கரண்டியால் எடுத்து ஊற்றவும். அப்பம் நன்றாக ‘புஸ்’ என்று வரும். திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

செட் தோசை
தேவையானவை: பச்சரிசி  – 2 கப், அவல் – முக்கால் கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், கடைந்த தயிர் – 2 கப்,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, அவல், உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை நன்றாக கழுவி, தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, நைஸாக அரைத்து உப்பு சேர்க்கவும். தவாவை சூடாக்கி, மாவை கொஞ்சம் கனமாக தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். தோசைகளை இரண்டு இரண்டாக பரிமாறவும்.
இது பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். குருமா, சட்னி தொட்டு சாப்பிடலாம்.

மசாலா சப்பாத்தி
தேவையானவை: சப்பாத்தி – 4, வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பூண்டுப் பல் – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், துருவிய சீஸ் – அரை கப், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சப்பாத்தியை சின்ன துண்டுகளாக செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். பிறகு பூண்டு, தக்காளி சேர்த்து சுருள வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். பிறகு, அதனுடன் சப்பாத்தியை சேர்த்து நன்றாக கொத்திவிடவும். கடைசியில் சீஸை சேர்த்து, கொத்தமல்லி தூவி ஒரு நிமிடம் மூடி வைத்து, பிறகு இறக்கவும்.

தேங்காய் சேவை
தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப்,  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் அரிசி மாவுக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீரை எடுத்து கடாயில் விட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கி அதில் அரிசி மாவை சேர்த்து, கொழுக்கட்டை மாவு பதத்துக்கு வரும் கிளறவும். மாவை சூடாக ஓமப்பொடி அச்சில் போட்டு, இட்லித் தட்டில் பிழிந்து வேக வைத்து எடுத்தால்… சேவை தயார். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து… தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும். இதனுடன் ஆறிய சேவை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வெண்ணெய் புட்டு
தேவையானவை:  புழுங்கலரிசி – 2 கப், வெல்லம் – ஒன்றே கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், முந்திரி – கால் கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,  நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை எடுத்து கொதிக்க வைத்து, மாவை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மாவு வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும். வெல்லத்தை பாகு வைத்து (மிகவும் கெட்டியாக இல்லாத பதத்தில்) மாவுடன் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, தேங்காய் துருவலை வறுத்து அதனுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரையில் கிளறவும். வெண்ணெய் போல் திரண்டு வரும்போது தட்டில் போட்டு துண்டுகளாக்கவும்.

ஆலு டிக்கி
தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், வேர்கடலை பொடி – கால் கப், எண்ணெய் – கால் கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை தண்ணீர் விடாமல், குக்கரில் வேக வைத்து தோல் உரித்து வைக்கவும். பிறகு, நன்றாக மசித்து அதனுடன் சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து  கொஞ்சம் எடுத்து விரும்பிய வடிவில் தட்டி, வேர்க்கடலை பொடியில் புரட்டவும். தவாவில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வைக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். இதற்கு தக்காளி சாஸ் நல்ல காம்பினேஷன்.

ஜவ்வரிசி வடை
தேவையானவை:  ஜவ்வரிசி – ஒரு கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,  பொட்டுக்கடலை பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை  நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொட்டுக்கடலை பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை அரைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த மாவை வடைகளாக  தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

ஸ்பைஸி பிரெட் ரோல்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 4, உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் – தலா ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 கப், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:  உருளைக்கிழங்கு, கேரட்டை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். பிறகு அதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். பிரெட்டை ஒரு செகண்ட் தண்ணீரில் நனைத்து பிழிந்து காய்கறி கலவையை அதில் வைத்து, நீளவாக்கில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.

ஃப்ரைடு ஊத்தப்பம்
தேவையானவை: பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், துவரம்பருப்பு, அவல் – தலா ஒரு கைப்பிடி அளவு, வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,  வெங்காயம், கேரட் – தலா ஒன்று, நறுக்கிய குடமிளகாய், கொத்தமல்லி – சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், அவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். இதை மூன்று மணிநேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவை தவாவில் கனமான ஊத்தப்பமாக ஊற்றி மூடி வைத்து, வேகவிடவும். வெந்ததும் துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய குடமிளகாய், கேரட், கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இட்லி மிளகாய்ப்பொடி,  பெருங்காயத்தூள். உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, பிறகு தோசைத் துண்டுகளை சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

சப்பாத்தி  நூடுல்ஸ் ரோல்
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், நூடுல்ஸ் – ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப், பால் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும். பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும். தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

இட்லி  பனீர் மசாலா ஃப்ரை
தேவையானவை:  இட்லி – 4, பனீர் – ஒரு கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  – தலா ஒன்று, இட்லி மிளகாய்ப்பொடி – 2 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, நல்லெண்ணெய் – அரை கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:  இட்லியை சதுரமாக ‘கட்’ செய்து வைக்கவும். பனீரையும் அதே போல் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு முதலில் வெங்காயத்தை வதக்கி, பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பனீரை வறுத்து எடுக்கவும். இட்லியையும் ஃப்ரை செய்யவும். பிறகு இரண்டையும் சேர்த்து… உப்பு, வெங்காயம் – தக்காளி கலவை, இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

புதினா  சீஸ் சாண்ட்விச்
தேவையானவை: புதினா – ஒரு கப், கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சீஸ் – 2 ஸ்லைஸ், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வெள்ளரிக்காய் துண்டு- 2, பிரெட் –  4 ஸ்லைஸ், உப்பு – சிறிதளவு.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். உப்பு ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய், சிறிதளவு புதினா விழுதை தடவி, சீஸ் ஒரு ஸ்லைஸ் வைத்து அதற்கு மேல் வெள்ளரிக்காய் துண்டு, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து, டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். இதேபோல மற்ற பிரெட் ஸ்லைஸ்களையும் செய்துகொள்ளவும்

சாக்லேட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் – 2 ஸ்லைஸ், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், சாக்லேட் பார் – ஒன்று.
செய்முறை: இரண்டு ஸ்லைஸ் பிரெட்டிலும் வெண்ணெயை தடவி வைக்கவும். சாக்லேட்டை இரண்டாக செய்து, பிறகு ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.

வெள்ளை அப்பம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா அரை கப், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – அரை கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,  இஞ்சி – சிறிய துண்டு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நைஸாக அரைக்கவும். கொஞ்சம் புளித்ததும் கொத்தமல்லி, பெருங்காயம் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு விட்டு, காய்ந்ததும் குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.

மேக்ரோனி மசாலா
தேவையானவை: மேக்ரோனி (டிபர்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப், வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பச்சைப் பட்டாணி – ஒரு கப், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மேக்ரோனியை ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியதும் நறுக்கிய குடமிளகாய், கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். பிறகு, வேக வைத்த மேக்ரோனி, உப்பு, தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.

வெஜிடபிள் தோசை
தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், நறுக்கிய மஞ்சள் நிற குடமிளகாய், சிவப்பு நிற குடமிளகாய், பச்சை குடமிளகாய் – தலா கால் கப், பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா கால் கப், துருவிய சீஸ் – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை: தவாவில் தோசை மாவை கொஞ்சம் கனமாக ஊற்றவும். பிறகு காய்கறிகளை தோசை மேல் பரவலாக வைத்து, சீஸை மேலாக தூவிவிடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைத்து செய்யவும்). ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே எடுத்து பரிமாறவும்.

பனீர் வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: துருவிய பனீர் – ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒன்று, வெங்காயம் – ஒன்று, துருவிய பீட்ரூட் – கால் கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் – 4, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸில் வெண்ணெயை தடவி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸ் நடுவில் காய்கறி கலவை வைத்து, அதற்கு மேல் பனீரை வைத்து இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, டோஸ்ட் செய்யவும். மீதம் இருக்கும் 2 பிரெட் ஸ்லைஸிலும் இதே போல் செய்துகொள்ளவும்.

வெஜ் பாஸ்தா
தேவையானவை: பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், குடமிளகாய் – அரை கப்,  மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு: மைதா – கால் கப், பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, மைதா மாவை வறுத்துக் கொள்ளவும். பிறகு பாலை விட்டு நன்றாக கிளறி வைக்கவும். இதுதான் வொயிட் சாஸ். பாஸ்தாவை ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைத்து, குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த பாஸ்தா, வெள்ளை சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

குடமிளகாய் ரைஸ்
தேவையானவை:  பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப், சாதம் – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு  – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – ஒன்று, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… கீறிய பச்சை மிளகாய், குடமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு, சாதம்,  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

ஸ்பெகடி
தேவையானவை:  ஸ்பெகடி (குச்சி போல் இருக்கும் – டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – கால் பாக்கெட், பேஸிக் பவுடர் – அரை டீஸ்பூன், நசுக்கிய பூண்டு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பாஸ்தா சாஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 4 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் – அரை கப், ஆலிவ் ஆயில் (அ) சூரியகாந்தி எண்ணெய் – 2 டீஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஸ்பெகடியை உடைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும். கடாயில் எண்ணெய் விட்டு பேஸிக் பவுடர், பூண்டு, மிளகுத்தூள், பாஸ்தா சாஸ் சேர்த்து புரட்டி, வேக வைத்த ஸ்பெகடியை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியில் சீஸ் சேர்த்து இறக்கவும்.

டோக்ளா
தேவையானவை:  கடலை மாவு – ஒரு கப், ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – மூன்றரை டீஸ்பூன், ஈனோ – ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி –  பச்சை மிளகாய் அரைத்த விழுது –  ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, ரவை, சர்க்கரை, ஈனோ, இஞ்சி – பச்சைமிளகாய் விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை அதில் விட்டு குக்கரில் வைக்கவும். 15 நிமிஷம் கழித்து எடுத்து ஆறியதும் ‘கட்’ செய்து… கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: ‘செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
ராகி ரவா கொழுக்கட்டை
தேவையானவை: ஆச்சி கேழ்வரகு மாவு – ஒரு கப், ஆச்சி ரவா இட்லி மிக்ஸ் – ஒன்றரை கப், தயிர் – ஒரு கப், கேரட் துருவல், தேங்காய் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். அதற்குள் ஆச்சி கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து… அத்துடன் உப்பு சேர்த்து, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, சோம்புத்தூள் சேர்க்கவும். அந்தக் கலவையை ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் சேர்த்து, கெட்டியாகக் கலந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவைத்து (பத்து நிமிடத்தில் வெந்துவிடும்) இறக்கவும். சுடச்சுட பரிமாறவும்.
மாவை பால்ஸ்களாகவும் உருட்டி வேக வைக்கலாம். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்
– பூங்குழலி நித்யகுமார், ஈக்காட்டுதாங்கல். நன்றி விகடன்.