வெள்ளி, 7 செப்டம்பர், 2018

30 வகை குளிர் பானங்கள்...


30 வகை குளிர் பானங்கள்...

கோடையில் வெயில் காரணமாக உஷ்ணம், நாவறட்சி, வியர்வை கசகசப்பு என்று அசௌகரியத்துக்கு ஆளாகும்போது, ஒரு கிளாஸில் குளிர்பானத்தைக் கொண்டுவந்து நீட்டுபவர்கள், எல்லோர் மனதிலும் மிகவும் உயர்ந்து நிற்பார்கள்.

அந்தப் பெருமையை உங்களுக்கு ‘ரிசர்வ்’ செய்துகொடுக்கும் வகையில், வித்தியாசமான 30 வகை குளிர்பானங்கள் இதோ...
 
*"ஒரு கிலோ சர்க்கரையில் ஒரு கிளாஸ் (200 மில்லி) நீர் விட்டு கொதிக்க
வைத்து, வடிகட்டி, சிரப் தயாரித்து வைத்துக்கொண்டால், குளிர்பானம் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் அதை தேவையான அளவுக்கு சேர்த்துக்கொள்ளலாம்’’.

குறிப்பு: இங்கே வழங்கப்படும் ரெசிப்பிக்களின் அளவுகள் ஒரு நபருக்கு பரிமாறுவதற்கேற்ப கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தயாரிக்க வேண்டுமானால், அதற்கேற்ப பொருள்களின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.

  1.கல்கண்டு பானகம்:

    தேவையானவை: டைமண்ட் கல்கண்டு - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை: டைமண்ட் கல்கண்டை நன்கு பொடித்து குளிர்ந்த நீரில் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கவும்.

  2.புதினா - இஞ்சி டிரிங்க்:

     தேவையானவை: ஆய்ந்த புதினா இலை - 15, இளம் இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: புதினா, இஞ்சி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து விழுதாக்கவும். இதை மீதமுள்ள குளிர்ந்த நீரில் கரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    3.ஆப்பிள் மில்க்‌ஷேக்:

     தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), சர்க்கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை: ஆப்பிளை தோல் நீக்கி துருவவும். ஆப்பிள் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அரைத்து உடனடியாக பரிமாறவும்.

   4.ரோஸ் லஸ்ஸி:

   தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு, சர்க்கரை - 6 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கெட்டித்தயிர், ரோஸ் எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

   5.நன்னாரி சர்பத்:

   தேவையானவை: நன்னாரி சிரப் (சர்க்கரை கலந்தது... பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).

செய்முறை: குளிர்ந்த நீருடன் நன்னாரி சிரப், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு விளாவி பரிமாறவும்.

  6.எலுமிச்சை - ஏலக்காய் ஜூஸ்:

   தேவையானவை: குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை - 5 டீஸ்பூன், உப்பு - கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).

செய்முறை: குளிர்ந்த நீருடன் பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும். சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு குளூக்கோஸ் பவுடர்  சேர்த்தும் தயாரிக்கலாம். இது உடனடி சக்தி தரக்கூடிய பானம்.


    7.வெல்லம் - சுக்கு பானகம்:

   தேவையானவை: பொடித்த வெல்லம் - 50 கிராம், சுக்குப்பொடி - 2 சிட்டிகை,  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: வெல்லத்தில் முக்கால் கப் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆறவிடவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் மற்றும் முக்கால் கப் நீர் சேர்த்துக் கலந்து அருந்தவும்.

    8.மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி:

   தேவையானவை: ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை  கலவை - ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் - 50 கிராம், துருவிய சாக்லேட் - 2 டீஸ்பூன்.

செய்முறை: கண்ணாடி கிண்ணத்தில் பழ வகைகளைக் கலந்துகொள்ளவும். மேலே ஐஸ் க்ரீமை ஸ்பூனால் பரவலாக விட்டு, துருவிய சாக்லேட்டைத் தூவி உடனே பரிமாறவும்.

குறிப்பு: ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக மில்க்மெய்ட் சிறிதளவு சேர்த்தும் செய்யலாம்.

   9.பனங்கல்கண்டு - துளசி பானகம்:

   தேவையானவை: பனங்கல்கண்டு - 25 கிராம், நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - 2, துளசி - 20 இலைகள், மிளகு - 4, ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: மிளகை துளசியுடன் சேர்த்து, கால் கப் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக்கி வடிகட்டவும். பனங் கல்கண்டை பொடித்து முக்கால் கப் நீருடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வடிகட்டிய துளசி ரசம், ஐஸ்கட்டிகள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான இந்த பானம், வெயில் கால ஜலதோஷத்துக்கு சரியான மருந்தும்கூட!

   10.பிஸ்தா டிரிங்க்:

   தேவையானவை: பிஸ்தா - 3 டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், பிஸ்தா எசென்ஸ் - சில துளிகள், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: பிஸ்தாவை சிறிதளவு பாலில் அரை மணி நேரம் ஊறவிட்டு, மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, பிஸ்தா எசென்ஸ், மீதமுள்ள பால் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

   11.குகும்பர் லஸ்ஸி:

   தேவையானவை: தோல், விதை நீக்கி துருவிய வெள்ளரிக்காய் - அரை கப், கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு சிட்டிகை, ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

    12.பைனாப்பிள் ஜூஸ்:

   தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய பைனாப்பிள் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், நீர் - 100 மில்லி (அரை கிளாஸ்), ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாவற்றையும் (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) கலந்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

     13.டொமேட்டோ பட்டர் மில்க்:

   தேவையானவை: குளிர்ந்த மோர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை, டெமேட்டா கெச்சப் - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3, பிளாக் சால்ட் - ஒரு சிட்டிகை.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும்  கலந்து நன்கு விளாவி பரிமாறவும்.

கெச்சப் விரும்பாதவர்கள்... அதற்குப் பதிலாக ஒரு தக்காளி, ஒரு சிறிய பச்சை மிளகாயை வேகவிட்டு அரைத்து வடிகட்டி உபயோகிக்கவும்.

      14.கேசரி மில்க்:

    தேவையானவை: காய்ச்சி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்) கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - கால் சிட்டிகை, சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து பரிமாறவும்.

சர்க்கரைக்குப் பதிலாக  தேவையான அளவு தேன் அல்லது வெல்லப்பாகு சேர்த்தும் இதை செய்யலாம்.

    15.மாம்பழ லஸ்ஸி:

    தேவையானவை: தோல் நீக்கி, நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - அரை கப், குளிர்ந்த தயிர் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், மாம்பழ எசென்ஸ் - 2 துளி.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து நுரை பொங்க பரிமாறவும்.

குறிப்பு: மாம்பழ கலர் குறைவாக இருப்பின் மஞ்சள் ஃபுட் கலர் சிறிது சேர்க்கலாம்.

      16.கிரேப் ஜூஸ்:

        தேவையானவை: திராட்சைப்பழம் - 100 கிராம், திராட்சை எசென்ஸ் - 2 துளிகள், சர்க்கரை - 5 டீஸ்பூன் (பழம் புளிப்பாக இருப்பின் இன்னும் ஒரு டீஸ்பூன் அதிகமாக சேர்க்க லாம்), நீர் - முக்கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: திராட்சைப் பழத்துடன் சர்க்கரையை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டவும். இந்த சாற்றுடன் மீதமுள்ள நீர், திராட்சை எசென்ஸ் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகளைப் சேர்த்து பரிமாறவும்.

      17.கேஷ்யூ மில்க்:

     தேவையானவை: முழுமுந்திரி - 10, ஏலக் காய்த்தூள் - கால் டீஸ்பூன், காய்ச்சி, ஆறவைத்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: முந்திரியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற விடவும். முதலில் முந்திரி, சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கி, பின்னர் ஏலக்காய்த்தூள், பால் சேர்த்து மைய அரைத்து எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

     18.மேங்கோ மில்க்‌ஷேக்:

      தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - கால் கப், காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், மாங்கோ எசென்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள  பொருட்கள் அனைத்தையும் கலந்து, மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

        19.நுங்கு கூலர்:

      தேவையானவை: தோல் உரித்து நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப், இளநீர் - அரை கப், பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.

செய்முறை: மில்க்மெய்ட் தவிர பிற பொருட்களைக் கலந்து ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, மேலே மில்க்மெய்ட் ஊற்றி, கண்ணாடி கிளாஸ் (அ) கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.

      20.இளநீர் - மில்க்மெய்ட் பானம்:

தேவையானவை: இளம் வழுக்கையுடன் கூடிய இளநீர் - ஒன்று, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.

செய்முறை: இளநீர்  வழுக்கை, சர்க்கரை, மில்க்மெய்ட் இவற்றை சேர்த்து மையாக அரைத்து, அதனுடன் இளநீர் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் குளிரவைத்து பரிமாறவும்.

       21.ஏலக்காய் மில்க்:

      தேவையானவை: காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், ஏலக்காய் எசென்ஸ் - 3 துளிகள், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) நன்கு கலந்து மிக்ஸியில் நுரை பொங்க பொங்க அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குறிப்பு: ஏலக்காய் எசென் ஸுக்குப் பதிலாக இரண்டு ஏலக் காயை பொடித்தும் சேர்க்கலாம்.

       22.மாதுளம்பழ கூலர்:

       தேவையானவை: நன்கு சிவந்த மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், பால், நீர் - தலா கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கலந்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக), மிக்ஸியில் நன்கு அடித்து, வடிகட்டி, ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பரிமாறவும்.
இது மிகவும் சத்துமிக்க பானம்.

      23.பாதாம் கூல் டிரிங்க்:

       தேவையானவை:வெந்நீரில் ஊறவிட்டு,  தோல் நீக்கி அரைத்த பாதாம் விழுது - 3 டீஸ்பூன் (10 பாதாம் பருப்பு போதுமானது), காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி  (ஒரு கிளாஸ்),  சர்க்கரை - 5 டீஸ்பூன், பாதாம் எசென்ஸ் - 2 சொட்டு, மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை, குங்குமப்பூ - 3 இதழ்கள்.

செய்முறை: பாதாம் விழுது, பால், சர்க்கரை, பாதாம் எசென்ஸ், மஞ்சள் ஃபுட் கலர் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, குங்குமப்பூவை மிதக்கவிட்டு பரிமாறவும்.

       24.கிர்ணிப்பழ ஜூஸ்:

     தேவையானவை: கிர்ணிப் பழத் துண்டுகள் (தோல், விதை நீக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: சர்க்கரை, கிர்ணிப்பழத் துண்டுகளை மிக்ஸி யில் சேர்த்து, நன்கு அடித்து எடுத்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து, ‘ஜில்’ என்று பரிமாறவும்.

       25.ஃபலூடா:

     தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், தர்பூஸ்) எல்லாம் சேர்ந்து - அரை கப், வேகவைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், ஏதேனும் ஃபுட் கலர் சேர்த்து வேகவிட்ட ஜவ்வரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடை, டிபார்ட்மென்ட் கடையில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன் (ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்), ஐஸ்க்ரீம் - 50 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.

செய்முறை: உயரமான கண்ணாடி டம்ளரில் சிறிது பழக்கலவையை போடவும். பின்னர் சப்ஜா விதையை சேர்க்கவும். பிறகு சேமியா, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை, பின்னர் ஜவ்வரிசி, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை என்று நிரப்பி... இறுதியில் ஐஸ்க்ரீம் முழுவதையும் போட்டு, மேலே டூட்டி ஃப்ரூட்டியை தூவிப் பரிமாறவும்.

      26.மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்:

      தேவையானவை: நறுக்கிய வாழைப்பழம், பலாப்பழம், பப்பாளி, மாம்பழம் (சேர்த்து) ஒன்றரை கப், ஏதாவது ஒரு ஃப்ரூட் எசென்ஸ் - சில துளிகள், தேன் - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா (பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பழக் கலவையை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று மட்டும் சுற்றி எடுக்கவும். இதனுடன் ஃப்ரூட் எசென்ஸ் மற்றும் வறுத்த முந்திரி - பாதாம் - பிஸ்தாவை சேர்த்துக் கிளறவும். அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து... மேலே தேன், ப்ரெஷ் க்ரீமை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

      27.புதினா மோர்:

தேவையானவை: மோர் - முக்கால் கப், புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை:  மோர், உப்பு, புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுதை சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து, எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.


        28.கேரட் ஜூஸ்:

       தேவையானவை: கேரட் (நடுத்தர சைஸ்) - ஒன்று (தோல் நீக்கி துருவவும்), சர்க்கரை - 4 டீஸ்பூன், ஃபுல் ஃக்ரீம் பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - ஒன்று.

செய்முறை: பாலை காய்ச்சி ஆறவைக்கவும். துருவிய கேரட், சர்க்கரை இவற்றை மிக்ஸியில் விழுதாக்கி... பால் சேர்த்து, அதில் ஐஸ்கட்டியை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குறிப்பு: கேரட் வாசனையை விரும்பாதவர்கள், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து அருந்தலாம்.

          29.சப்போட்டா மில்க்‌ஷேக்:

தேவையானவை: பழுத்த சப்போட்டா - 2 (தோல், கொட்டை நீக்கவும்), பேரீச்சம்பழம் - 2 (பொடியாக நறுக்கவும்), காய்ச்சி ஆறவைத்து, குளிர்வித்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை: சப்போட்டா, சர்க்கரை, பால் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, பேரீச்சை துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

        30.பலாப்பழ சம்மர் ஸ்பெஷல்:

         தேவையானவை: பலாப்பழத் துண்டுகள் (மிகவும் சிறியதாக நறுக்கியது) - அரை கப், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப், தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறவும்.

சனி, 1 செப்டம்பர், 2018

கோகுலாஷ்டமி -பட்சணங்கள் 02-09-2018


கோகுலாஷ்டமி -பட்சணங்கள் 02-09-2018

1)தட்டை 2) முறுக்கு 3) வெல்லச் சீடை 4) உப்புச் சீடை.-கட்டுரையாளர்-கீதா சாம்பசிவம்

செய்முறை விளக்கம்

தட்டை செய்முறை.
பொதுவாகத் தட்டையாக இருப்பதால் தட்டை என்றழைக்கப்படும் இதைத் தஞ்சை ஜில்லாவில் தட்டைச் சீடை என்றும், சேலம் பக்கம் தட்டு வடை என்றும் சொல்லப் படுவதுண்டு. செய்முறைகளும் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறினாலும் பொதுவாகத் தேவைப்படுவது அரிசி மாவு.

இரண்டு கப் அரிசி மாவு, (அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊற வைத்துப் பின் வெளியில்மெஷினில் கொடுத்தோ அல்லது, வீட்டிலேயே மிக்சியிலேயோ அரைத்துச் சலித்து வைத்துக்கொள்ளவும்.

உளுந்து மாவு: உளுந்தை வெறும் சட்டியில் சிவப்பாக வறுத்து அரைத்துக் கொள்ளவேண்டும். இரண்டு கப் அரிசி மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு போதும். உளுந்து மாவு அதிகம் போனால் தட்டை கரகரப்பு இருக்காது.

பொட்டுக்கடலை மாவு: இது போட்டால் தான் தட்டை கரகரப்பு இருக்கும். சிலர் போடாமலும் செய்கின்றனர். பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன். பொட்டுக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

உப்பு: தேவையான அளவு

தேங்காய்: பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்.

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்து நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

மிளகாய்ப் பொடி அல்லது மிளகாய் வற்றலை நீரில் ஊற வைத்து அரைத்துக் கொண்டது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப.

பெருங்காயப் பொடி : ஒரு டீஸ்பூன்

நீர் மாவு பிசையத் தேவையான அளவு.

வெண்ணெய் அல்லது நெய், ஒரு டேபிள் ஸ்பூன். இத்தோடு எள் , வேர்க்கடலைப்பருப்பு எல்லாம் சேர்ப்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்து.

பொரிக்க எண்ணெய் கால் கிலோ வானும் தேவைப்படும்.

வெண்ணெயோ நெய்யோ சேர்க்காதவர்கள் பிடிக்காதவர்கள், சமையல் எண்ணெயையே கொஞ்சம் காய வைத்து மாவில் விட்டுக்கலாம்.

அரிசி மாவு, உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவை ஒன்றாய்ச் சேர்த்து உப்புக் கலந்து, காரப்பொடி அல்லது மிளகாய் விழுது, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். எண்ணெய் சேர்ப்பவர்கள் வாணலியில் எண்ணெய் புகை வரும் வரை காய வைத்து மாவில் கொட்டிக் கலக்கவும். இப்போது தேவையான அளவுக்கு நீரைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும். பிசைந்த மாவைச் சிறு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

சற்று நேரம் வைத்திருந்து விட்டுப் பின் அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்து புகை வரும்போது அடுப்பைத் தணித்துவிட்டு, பிசைந்து வைத்த மாவில் உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பதை, ஒரு துணி அல்லது பேப்பரில் தட்டையாக வட்டமாகத் தட்ட வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்குக் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக்கொள்ளவும். தட்டின தட்டையை ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காயந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். ஒரே சமயத்தில் நாலைந்து தட்டைகளைப் போட்டுப் பொரிக்கலாம். முன் கூட்டியே தட்டி வைத்துக்கொள்ளலாம்.

பின்னர் கரகரப்பு மாறாதிருக்கும்படி காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் ஆனாலும் கெடாது.

முறுக்கு

முறுக்கு: கை முறுக்கையே அநேகமாய் முறுக்கு என்று சொல்வோம். சிலர் அச்சில் பிழியும் தேன்குழலைச் சொன்னாலும் பொதுவாய் முறுக்கு என்றால் கையால் சுற்றுவதே! இதற்குத் தேவையான பொருட்கள்.

அரிசி மாவு: 2 கப், வறுத்த உளுத்தமாவு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணை, கலக்க நீர் தேவையான அளவு. பொரித்து எடுக்கச் சமையல் எண்ணெய்.
முறுக்குச் சுற்றும் வட்டமான தட்டு, அல்லது நீரில் நனைத்துப் பிழிந்த வெள்ளைத் துணி அல்லது தினசரி செய்தித் தாள்(இதில் அச்சுக்களின் ஈயம் கலக்குமோனு சந்தேகம் எனக்கு இருப்பதால் துணி அல்லது வட்டத்தட்டையே பயன்படுத்துவேன்.)

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசிமாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயப்பொடியைச் சேர்க்கவும். உப்புத் தூளாக இருந்தால் பரவாயில்லை. கல் உப்புத் தான் பயன்படுத்துபவர்கள் தேவையான உப்பை நீரில் கலக்கி அடுப்பில் வைத்துக் கொஞ்சம் சூடு செய்துவிட்டு அந்த உப்புக் கரைசலை ஊற்றிக்கொள்ளலாம். பொதுவாகப் பழங்காலத்தில் உப்புக் கரைசலை ஊற்றியே செய்யப் பட்டது. இன்றைய நாட்களில் தூள் உப்புக் கிடைப்பதால் அப்படியே பயன்படுத்தப் படுகிறது.

மாவு மேற்சொன்ன பொருட்களோடு நன்கு கலந்ததும், சீரகத்தையும், வெண்ணெயையும் சேர்க்கவும். நீர் சேர்க்காமல் சற்று நேரம் வெண்ணெய் நன்கு கலக்கும்வரை மாவைப் பிசையவும். மாவில் வெண்ணெய் நன்கு கலந்ததும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெயைச் சுட வைக்கவும். எண்ணெய் நன்கு சூடு ஏறி அதில் இருந்து ஆவி வரும்போது நினைவாக அடுப்பைச் சிறிதாக எரியவிடவேண்டும். எண்ணெய் சூடு ஏறுவதற்குள்ளாக முறுக்குத் தட்டிலோ, துணியிலோ கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு, பின்னர் கை கொண்ட மட்டும் மாவை எடுத்து முறுக்கிச் சுற்றிக்கொண்டே வரவேண்டும். இரண்டு சுற்று, நாலு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்றுத்தான் பொதுவாகச் சுற்றுவார்கள் என்றாலும் இரண்டு சுற்றே போதுமானது. ஐந்து, ஏழு எல்லாம் கல்யாணங்கள் போன்ற பெரிய அளவில் செய்யப் படும் விசேஷங்களில் பயன்படும். சுற்றிய முறுக்கைப் பின்னல் கலையாமல் ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காய்ந்த எண்ணெயில் போடவும். ஒரு சமயத்தில் நாலைந்து முறுக்குகள் வரை போடலாம். ஐந்து, ஏழு சுற்று முறுக்கென்றால் ஒரே முறுக்குத் தான் போடமுடியும். முறுக்கு நன்றாகச் சிவக்கும் வரை பொரிக்கவும். நன்கு சிவந்து எண்ணெயில் மேலே மிதந்து வரும். பொரியும்போது வரும் சப்தமும் அடங்கிவிடும். அப்போது முறுக்குகளை வெளியே எடுக்கவும். ஒரு தகர டப்பாவில் அல்லது நமுத்துப் போகாவண்ணம் வேறு ஏதானும் டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாது. கையால் உடைத்தால் முறுக்குச் சுற்றுக்களின் உள்ளே குழல் போல் ஓட்டை தெரியும். அப்படி இருந்தால் முறுக்கு நல்ல பதத்தில் வந்திருக்கிறது என்று பொருள்.

அடுத்து உப்புச் சீடை:

இதற்கும் தேவையான பொருட்கள்

2கப் அரிசிமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த உளுத்த மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது, விருப்பமிருந்தால் எள் ஒரு டீ ஸ்பூன் சேர்க்கலாம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நீர் தேவையான அளவு. பொரிக்க சமையல் எண்ணெய்.

அரிசி மாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயத் தூள், எள், தேங்காய்க் கீறியது, ஊறிய கடலைப்பருப்பை ஒன்றாய்ச் சேர்க்கவும். சற்று நேரம் எல்லாம் ஒன்றாய்க்கலக்கும்வரை கலந்துவிட்டுப் பின் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், கொஞ்சமாய் நீரை விட்டுப் பிசையவும். இது உருட்டினால் உருண்டையகாவும், உதிர்த்தால் உதிராகவும் வரவேண்டும். அப்படிப் பிசைந்தால் போதுமானது. ரொம்ப நீரைச் சேர்த்துச் சப்பாத்தி மாவு போலெல்லாம் பிசையவேண்டாம். இப்போது அடுப்பில் எண்ணெயைச் சூடாக்கவும். அதற்குள் ஒரு பேப்பரில் அல்லது துணியில் பிசைந்த மாவைக் கையால் உருட்டிப் போடவும். உருண்டை ரொம்பவும் உருண்டையாக அழகாயெல்லாம் வரவேண்டாம். சும்மாப் பிடிச்சுப் போட்டால் போதுமானது. பொதுவாக உப்புச் சீடையை எண்ணெயில் போட்டால் வெடிக்கும்.

சமையலறையே ரணகளமாகக் காட்சி அளிக்கும். அதற்குக் காரணம் சேர்க்கும் உப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்க் கீறல் போன்றவற்றைச் சரியாகக்கவனிக்காமல் சேர்ப்பதே. உப்பை நீரில் கரைத்தே உப்புச் சீடைக்குச் சேர்க்கவேண்டும். அடுத்துக் கடலைப்பருப்பில் ஒரு தோல் கூட இருக்கவேண்டாம், கல் இருந்தாலும் வெடிக்கும். அதையும் கவனித்துச் சேர்க்கவேண்டும். தேங்காய்க் கீறலில் தேங்காயின் ஓடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதையும் மீறிச் சீடை வெடித்தால் உருண்டையைச் சரியாகப்பிடிக்காமல் ரொம்பவே கையால் வழவழவென்று செய்ததால் இருக்கும். ஆகவே மேலே கொஞ்சம் கரடு, முரடாக இருந்தால் தப்பில்லை.

உருட்டிய சீடைகளை எண்ணெயில் போட்டுவிட்டு (நினைவாக அடுப்பில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கவும்) ஒரு மூடியால் அதை மூடிவிடவேண்டும். நூற்றுக்கு நூறு சதம் வெடிக்காது. பின்பு தட்டை எடுத்துவிட்டுச் சீடைகளைத் திருப்பிப் போடவும். நன்கு வெந்து சத்தம் அடங்கி மேலே மிதந்து வந்ததும், எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். சீடைகள் நன்கு வெந்திருந்தால் கலகலவென்ற சப்தம் வரும்,

வெல்லச் சீடை:

அரிசி மாவு இரண்டு கப், வறுத்த உளுத்த மாவு, ஒரு டேபிள் ஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் நாலைந்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும். நல்ல பாகு வெல்லம் தூளாக்கியது இரண்டு கப், வெல்லம் பாகு வைக்க நீர் அரை கிண்ணம். தொட்டுக்கொள்ள நெய், பொரிக்க சமையல் எண்ணெய்/நெய்

கடாய் அல்லது வெங்கல உருளியில் அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாகு கொதிக்கும் போது வேறொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக்கொண்டு காய்ந்த பாகில் ஒரு துளி விட்டுப்பார்த்தால் அது நீரில் கரையாமல் கையால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அந்தப் பதம் வந்ததும், தேங்காய்க் கீறல்களைச் சேர்த்துவிட்டு, பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி மாவில் விட்டுக் கலக்கவும். மாவு பாகில் நன்கு கலந்து விட்டது என்று நமக்கே புரியும், அந்த நேரம் வரைக்கும் பாகைச் சேர்க்கலாம். பாகு போதும் என்ற அளவு கலந்ததும், மாவில் வறுத்த உளுத்த மாவையும் எள்ளையும் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கரண்டியால் நன்கு கலக்கவும். சற்று நேரம் ஆறவிடவும். பின்பு மாவை எடுத்துக் கையால் உருட்டிப் பார்க்கவும். உருண்டைகளாய் வரும்.

எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைத்து, உருட்டிய உருண்டைகளை ஒன்றிரண்டாய்ப் போட்டுச் சிறு தீயில் பொரிக்கவும். மேலே சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும். ஆறிய பின்பு சாப்பிட்டுப் பார்த்தால் உள்ளே மிருதுவாகவும், மேலே மொறுமொறுப்போடும் இருக்கும். பல நாட்கள் கெடாது. இரண்டு மாதம் கூட இருக்கும். பாகும் நன்றாக அமைந்து நெய்யிலும் பொரித்தால் மாதங்கள் ஆக, ஆக சுவை கூடும்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் வெடிக்காமல் சீடை செய்ய ஒரு எளிய முறை!


கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் வெடிக்காமல் சீடை செய்ய ஒரு எளிய முறை!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது சீடை. எவ்வளவு திண்பண்டங்கள் இருந்தாலும் கண்கள் சீடையையே தேடும். அப்படிப்பட்ட சீடையை வெடிக்காமல் எப்படி செய்வது?

சீடை செய்முறை :

அரிசி மாவு – 6 பங்கு (6 : 1)

உளுந்து மாவு – 1 பங்கு (வறுத்து பொடித்தது)

எள்ளு – 1 டி ஸ்பூன்

உப்பு  – ருசிகேற்ப

வெண்ணை – 50 grams.

கடலை பருப்பு – 2 டி ஸ்பூன் (ஊறவைத்தது)

எண்ணை – பொரிப்பதற்கு (சுமார் 1/2 Kg to 3/4 Kg.)

பெருங்காயம் – 1 டி ஸ்பூன்

செய்முறை :

– அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

– அதனுடன் உளுந்து மாவு, கடலை பருப்பு, உப்பு, எள்ளு, வெண்ணை, பெருங்காயம், போட்டு நன்றாக கலக்கவும்.

– பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். மிகவும் தளர பிசைய வேண்டாம்.

– ஒரு துணியிலோ, அல்லது நியூஸ் பேப்பரிலோ சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.

– உருண்டைகள் உலர்ந்தவுடன், அடுப்பில் எண்ணையை காய வைத்து எண்ணை கொள்ளும் அளவிற்கு சீடையை போட்டு நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.

– வெந்த சீடை மிதந்து மேல வரும்.


வெடிக்காமல் சீடை பொரிப்பது எப்படி:

அரிசி மாவு வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது அவசியம். கடையில் கிடைக்கும் அரிசி மாவில் கண்ணுக்கு தெரியாத சிறிய கல் இருந்தாலும், சீடை வெடித்து எண்ணை மேலே தெரிக்கும்.

உளுந்து ஒரே சீராக வறுத்து மாவாக அரைத்துக் கொள்வது அவசியம்.

எண்ணை அதிக சூடாக இல்லாமல் இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் அனைத்து சீடைகளும் வெடிக்கும், அல்லது உள்ளே வேகாமல் வெளியே கருகி இருக்கும்.

சீடையை உருட்டும்போது அதிகம் அழுத்தாமல், கையில் எண்ணை அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டவும். அப்படி உருட்டினால் விரிசல் விடாது. இதனால் பொரிக்கும்போது வெடிக்கவும் வெடிக்காது.

இவை அனைத்தையும் மீறி உங்களுக்கு பயமாக இருந்தால், உருட்டிய மாவு எண்ணை உள்ளே போட்டவும், இட்டி மூடியை பாதி மூடி வைத்து பொரிக்கவும்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

30 வகை தால் கிரேவி சப்ஜி....


30 வகை தால் கிரேவி சப்ஜி....

சப்பாத்தி என்றால் குருமா, பூரி என்றால் உருளைக்கிழங்கு மசாலா என்றே அறிந்திருப்பவர் களுக்கு, பெரிய ஹோட்டலுக்கு செல்லும்போது, மெனு கார்டில் இருக்கும் டிஷ்களின் பெயர்களைப் பார்த்து, 'இத்தனை அயிட்டங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது?’, 'இத்தனையும் எப்படி செய்வார்கள்?’ என்ற மலைப்பும் ஆச்சர்யமும் ஏற்படும். ஆனால், ''இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. உங்கள் வீட்டிலும் இவற்றை செய்து பரிமாறலாம்.

''கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தால் போதும்... இந்த டிஷ்களை எல்லாம் சிறப்பாக செய்து பரிமாறி...அசத்தலாம்👍

பட்டாணி க்ரீன் மசாலா

தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, பச்சை மிளகாய் - 3, முந்திரிப் பருப்பு - 5, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு - 2 பல், பால் - அரை கப், கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பால் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து, சூடாகப் பரி மாறவும்.

நவரத்ன குருமா

தேவையானவை:  மிக்ஸ்ட் காய்கறிகள் (நறுக்கிய காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைப் பட்டாணி) - ஒன்றரை கப், முந்திரிப் பருப்பு - 15, உலர் திராட்சை - 7, தக்காளி,  வெங்காயம் - தலா 2, குடமிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், பனீர் க்யூப்ஸ் - 7, தனியாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - 2 சிட்டிகை, அன்னாசிப்பழத் துண்டுகள் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை (அன்னாசி பழத் தையும் சேர்க்கலாம்) சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண் ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு  மற்றும் பாதியளவு முந்திரியை வதக்கி, தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். மீதம் உள்ள முந்திரியையும், உலர் திராட்சையையும் எண்ணெயில் வறுத்து, நறுக்கிய குடமிளகாய் மற்றும் பனீர் சேர்த்து சிறிது நேரம் வதக்க வும். இதனுடன் வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, கஸ¨ரி மேத்தி, குங்குமப்பூ சேர்த்து, 2 நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். நவரத்ன குருமா ரெடி!

பேபி கார்ன் மசாலா

தேவையானவை:  பேபி கார்ன் - 15, வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, தக்காளி - 2 (பெரியது), முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - கால்  டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு சிட்டிகை, பால் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் பாதி குடமிளகாயை எண்ணெயில் வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கஸ¨ரி மேத்தி, தக்காளி சாஸ், கரம்மசாலாத்தூள், உப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து  அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பால் சேர்த்து, வெந்த பேபி கார்னை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிடவும். மீதம் உள்ள பாதி குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.

பனீர் கோலாபுரி

தேவையானவை:  பனீர் க்யூப்ஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கொப்பரைத் துண்டுகள் - 4 டீஸ்பூன், மிளகு - 5, சோம்பு - அரை டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, கிராம்பு - 2, முந்திரிப் பருப்பு - 4, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் (தேவைபட்டால்) - சிறிதளவு, தனியா - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் வெள்ளை எள், கொப்பரை, சோம்பு, மிளகு, தனியா, ஏலக்காய், கிராம்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த மசாலா மற்றும் அரைத்த தக்காளியை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு  சேர்த்து, பனீர் துண்டுகளையும் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால்) கரம்மசாலாத்தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சோலே மசாலா

தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப், டீ பேக் (tமீணீ தீணீரீ) - ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், உலர்ந்த மாதுளை விதைப் பொடி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, டீ பேக் மற்றும் ஏலக்காய் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். டீ பேக் மற்றும் ஏலக்காயை தூக்கி போட்டுவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளியை அரைத்து சேர்த்து, உலர்ந்த மாதுளை பொடியை சேர்க்கவும். பிறகு, வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

பப்பட் சப்ஜி

தேவையானவை:  மிளகு அப்பளம் - 2, தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு,  கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும்.  தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்    சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக் கவும். கொத்தமல்லி தூவி பரிமாற வும்.

வெள்ளரிக்காய் மசாலா

தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 5, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வதக்கி, விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கி, நறுக்கிய வெள்ளரிக்காயைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

முட்டைகோஸ் கோஃப்தா கிரேவி

தேவையானவை:  முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 2 கப், பனீர் துருவல் - ஒரு கப், கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் (கோஃப்தாவுக்கு), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்கா யம் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (கிரேவிக்கு), தக்காளி கெச்சப் - ஒரு டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு - 3 பல், பால் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 

செய்முறை: முட்டைகோஸை நறுக்கி, உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்திருந்து, நன்கு பிழிந்து தண்ணீரை எடுக்கவும். பனீர், மிளகாய்த்தூள், கடலை மாவு மற்றும் அரை டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, முட்டைகோஸ்உடன் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுதான் கோஃப்தா.

கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி கெச்சப், மிளகாய்த்தூள், கஸ¨ரி மேத்தி  சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில் தக்காளி விழுது, அரைத்து வைத்த வெங்காயம் - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பால் சேர்க்கவும். அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். இதுதான் கிரேவி. பொரித்த கோஃப்தா நன்கு ஆறியதும், கிரேவியில் சேர்த்து பரிமாறவும்.

சன்னா பாலக்

தேவையானவை:  வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு, வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை, சர்க்கரை, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொண்டைக் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, அரைத்த கீரை விழுதை சேர்க்கவும். இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்). இதனை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

காலிஃப்ளவர் மகானி

தேவையானவை:  காலிஃப்ளவர் - ஒரு சிறிய பூ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை வெந்நீரில் 2 நிமிடம் போட்டு தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு, வெந்த காலிஃப்ளவரை சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

முள்ளங்கி மசாலா

தேவையானவை:  முள்ளங்கி - 2 (சிறியது), வெங்காயம் - ஒன்று,  தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு, பட்டை - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பட்டை தாளித்து, நறுக்கிய வெங்கா யத்தை சேர்த்து வதக்கவும். நறுக்கிய முள்ளங்கியையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கொஞ்சம் தண் ணீர் விட்டு வேகவைக்கவும். தேங் காய்த் துருவல், இஞ்சி, கொத்த மல்லி, பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாயை அரைத்து, இந்த விழுதை முள்ளங்கியுடன் சேர்த்து வதக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்). பிறகு, உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதித்த வுடன் அடுப்பை அணைக்கவும். முள்ளங்கி மசாலா தயார்!

ஷாஹி பொட்டேட்டோ குருமா

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய் - ஒன்று,  பட்டை - ஒரு சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கல்பாசி (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கல்பாசி, காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து குக்கரில் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி... தயிர் சேர்க்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

கேரட் - காளான் சப்ஜி

தேவையானவை: நறுக்கிய கேரட், குடமிளகாய், காளான், பேபி கார்ன் மற்றும் பச்சைப் பட்டாணி, (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தனியா - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தக்காளி ப்யூரி (ஜிஷீணீனீணீtஷீ ஜீuக்ஷீமீமீ - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், ஃப்ரெஷ்  க்ரீம் - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை அரை வேக்காடு பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தனியா, மிளகாய் மற்றும் ஏலக்காயை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து   வதக்கி... தக்காளி ப்யூரியை சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்த பொடி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் விட்டு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, ஒரு கொதி விட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

தக்காளி ப்யூரிக்குப் பதில், ஒரு பெரிய தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.

மசூர் - கேரட் தால்

தேவையானவை:  மசூர் தால் - கால் கப், கேரட், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2 பல், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: மசூர் தாலுடன் நறுக்கிய வெங்காயம், கேரட் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு குக்கரில் வைத்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி, பிறகு நன்கு மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் (அ) நெய் சேர்த்து கடுகு, கறிவேப்பில்லை, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வெந்த பருப்பை சேர்த்து, கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

பேபி கார்ன் - மேத்தி கிரேவி

தேவையானவை: பேபி கார்ன் - 10, வெந்தயக்கீரை - கால் கப், முந்திரிப் பருப்பு - 5, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சர்க்கரை அல்லது தேன் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெந்தயகீரை சேர்த்து வதக்கவும். இதில் வெந்த பேபி கார்ன், சர்க்கரை (அ) தேன் சேர்க்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

புதினா - பனீர் கிரேவி

தேவையானவை:  பனீர் - அரை கப், புதினா இலை - ஒரு கைப்பிடியளவு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனீரை சிறிதளவு எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு வதக்கி, பின்னர் பனீர் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி

 தேவையானவை:  உருளைக்கிழங்கு - 2, தக்காளி - 2, சீரகம் - கால் டீஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

சோயா சங்க்ஸ் வின்டலோ

தேவையானவை: சோயா சங்க்ஸ் - அரை கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி ப்யூரி (Toamato puree-  டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன், தனியா - கால் டீஸ்பூன், மிளகு - 5, காய்ந்த மிள காய் -  ஒன்று, பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - சிறிதளவு, பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிறி தளவு.

செய்முறை:  தண்ணீரில் பால்,  சோயா சேர்த்து 2 நிமிடம்  கொதிக்க விடவும். பிறகு, தண்ணீரைப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பூண்டு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்கா யத்தை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கி, உப்பு மற்றும் தக்காளி ப்யூரி சேர்க்கவும். இத  னுடன் சோயா சங்க்ஸ் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கரம்மசாலா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக் கவும்.

குறிப்பு: தக்காளி ப்யூரிக்குப் பதில் ஒரு தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.

தால் பஞ்சரத்தன்

தேவையானவை:  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் மசூர் தால் - தலா 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எல்லா பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வைத்து, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி... தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, வெந்த பருப்பை சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து... இதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, கொதி வந்தவுடன் கஸ¨ரி மேத்தி சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். தால் பஞ்சரத்தன் ரெடி!

பஞ்சாபி தால் ஃப்ரை

தேவையானவை:  பாசிப்பருப்பு - அரை கப், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், கொத்தமல்லி  - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் வதக்கி... சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். இதனுடன் பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.....

வியாழன், 26 ஜூலை, 2018

டயட் உணவுகளின் அவல் உணவு வகைகள்


 டயட் உணவுகளின் அவல் உணவு வகைகள்

*அவல் உணவுகள்*
இத சாப்பிடுங்கள் வியாதியை தெறிக்க விடுங்கள்....


1. *அவல் - கல்கண்டு பொங்கல்*


தேவையானவை: அவல் - 2 கப், கல்கண்டு - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை: அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். கல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்கவும். மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

2. *அவல் கேசரி*

தேவையானவை: அவல் - 2 கப், நாட்டு சர்க்கரை - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில்  அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் 'கமகம' அவல் கேசரி ரெடி!

3. *அவல் லட்டு*


தேவையானவை: அவல் - 3 கப், நாட்டு சர்க்கரை - ஒரு கப், முந்திரி, திராட்சை - ஒரு கைப்பிடி, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - முக்கால் கப்.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் அவலை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த அவலுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

4. *அவல் மோர்க்கூழ்*


தேவையானவை: அவல் - 2 கப், லேசாக புளித்த ஒரிஜினல் கெட்டி மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடிக்கவும். அவலுடன் மோர் மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, (மாவு தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும்) உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகும்வரை அடிக்கடி கிளறவும். கூழ் ஒட்டாமல் வந்ததும் சிறிது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

5. *அவல் பாயசம்*


தேவையானவை: அவல் - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், தேங்காய்ப் பால் - அரை கப், முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அவல், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அவலை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். ஆறியதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும். சுவை மிகுந்த இந்தப் பாயசத்தை நிமிடங்களில் செய்து விடலாம். அபாரமாக இருக்கும்.


6. *அவல் புட்டு*


தேவையானவை: அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அவலை நெய் விட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், வெல்லப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை சுற்றி எடுக்கவும்.

இது புட்டு போன்று பொலபொலவென்று இருக்கும். விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி சேர்த்தும் பரிமாறலாம்.

7. *அவல் - தேங்காய்ப்பால் பாயசம்*


தேவையானவை: அவல் - ஒரு கப், தேங்காய் - ஒன்று, வெல்லம் - முக்கால் கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அவல், முந்திரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தேங்காயைத் துருவி இரண்டு விதமாக பால் எடுக்கவும். அவலை, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலில் சேர்த்து வேக விடவும்.

அவல் வெந்ததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

8. *அவல் உப்புமா*


தேவையானவை: அவல் - 2 கப், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - அரை மூடி, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு, அதில் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். பரிமாறும்போது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

9. *அவல் பொரி உருண்டை*


தேவையானவை: அவல் பொரி - 3 கப், வெல்லத்தூள் - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கைப்பிடி.

செய்முறை: முந்திரி, அவல் பொரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக் கடலை, அவல் பொரியைக் கலக்கவும். அவல் பொரி கலவையை பாகில் கொட்டிக் கிளறி, உருண்டை பிடிக்கவும். மாலை நேரத்துக்கேற்ற மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் இது!

10. *அவல் - வெஜ் உப்புமா*


தேவையானவை: அவல் - 2 கப், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1, பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். மணத்தில் மட்டுமல்ல.. சுவையிலும் அசத்தும் இந்த உப்புமா!


11. *அவல் - வெஜ் பிரியாணி*


தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட் - தலா 1, காலிஃப்ளவர் - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு, கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, எண்ணெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை: தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, காய்களை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். அவலை தண்ணீரில் கழுவி, நீரை வடித்து விடவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கசகசா தாளித்து பட்டை, இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், கீறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.

காய்கள் வெந்ததும் அவலை உதிர்த்து சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். விரும்பினால் பிரெட் துண்டுகளை எண்ணெயில் பொரித்தும் இதனுடன் சேர்க்கலாம்.

12. *அவல் பொங்கல்*

தேவையானவை: அவல், பயத்தம்பருப்பு - தலா ஒரு கப், மிளகு - ஒன்றரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நெய் - அரை கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பை வேக விடவும். பருப்பு வெந்ததும் அவலை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கடாயில் நெய்யை ஊற்றி மிளகு, சீரகம் தாளித்து, முந்திரி இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, அதை அவல் பொங்கலில் கொட்டிக் கிளறவும். இதைச் செய்வது சுலபம்.. ருசியும் அபாரம்!

13. *கறிவேப்பிலை பொடி அவல்*


தேவையானவை: அவல் - 2 கப், கறிவேப்பிலை - 2 கைப்பிடி, உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - 2 கைப்பிடி, மிளகு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்பு வகைகள், மிளகு மற்றும் மிளகாயை எண்ணெயில் வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்தால் கறிவேப்பிலை பொடி தயார்!

அவலை கழுவி, நீரை வடித்து ஒரு நிமிடம் ஊற விடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதனுடன் ருசிக்கேற்ப கறிவேப்பிலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

14. *மோர் அவல்*

தேவையானவை: அவல் - 2 கப், கெட்டியான ஒரிஜினல் மோர் - முக்கால் கப், பெருங் காயத்தூள் - 2 சிட்டிகை, பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலைப்-பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை கழுவி, தண்ணீரை வடித்து, கெட்டி மோரில் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். ஐந்து நிமிடம் ஊறினால் போதும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, அதில் பச்சைமிளகாயை போடவும். ஊற வைத்து உதிர்த்த அவல், பெருங்காயத்தூள் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

15. *புதினா பொடி அவல்*

தேவையானவை: அவல் - 2 கப், புதினா - ஒரு கட்டு, (இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்யவும்), உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினாவை நிழலில் உலர்த்தி, கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். அவலை தவிர மற்ற எல்லாவற்றையும் புதினா வுடன் சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

அவலை கழுவி, தண்ணீரை வடித்து விட்டு ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அவலை ஒரு நிமிடம் வதக்கி, புதினா பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

16. *புளி அவல்*

தேவையானவை: அவல் - 2 கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசலில் ஊற விடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளை தாளித்து, ஊற வைத்த அவலை உதிர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

17. *தேங்காய்ப்பொடி அவல்*


தேவையானவை: அவல் - 2 கப், தேங்காய் - ஒரு மூடி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். தேங்காயை துருவி, கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

பிறகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். அவலை நன்றாக கழுவி, தன்ணீரை வடித்து, 2 நிமிடம் ஊற விடவும். பிறகு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஊறிய அவலை உதிர்த்து போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சுவைக்கேற்ப பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

18. *அவல் அடை*

தேவையானவை: அவல் - 2 கப், ஒரிஜினல் மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 6, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். கெட்டி மோரில் உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஊறிய அவலை சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல் காய்ந்ததும் மாவை அடையாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

18. *அவல் போண்டா*


தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 6, இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை உருளை - அவல் கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு மசித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

கடலைமாவுடன் அரை டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருண்டைகளை கடலைமாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

19. *அவல் ஃப்ரூட் சாலட்*

தேவையானவை: அவல் - 2 கப், ஆப்பிள் - பாதியளவு, ஆரஞ்சு - 10 சுளைகள், பச்சை திராட்சை - ஒரு கைப்பிடி, பப்பாளி - ஒரு துண்டு, வாழைப்பழம் - ஒன்று, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பழங்களில் கொட்டை, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து பழக்கலவையுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு கலந்தால் அவல் ஃப்ரூட் சாலட் தயார்!

உடனடி புத்துணர்வு தரும் இந்த சாலட்டை விரைவாக செய்து அசத்தலாம்.

20. *அவல் கார புட்டு*


தேவையானவை: அவல் - 2 கப், தேங்காய் துருவல் - 2 கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, தேங்காயை பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் கீறிய பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து உதிர்த்த அவலையும் சேர்க்கவும். கடுகை தாளித்துக் கொட்டி, நன்றாக கிளறவும்.

21. *அவல் மிக்சர்*


தேவையானவை: அவல் - 3 கப், வேர்க்கடலை, பொட்டுக் கடலை - தலா அரை கப், முந்திரி, திராட்சை - தலா ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மாலையில் கொறிக்க உகந்த வித்தியாசமான மிக்சர் இது.

22. *அவல் - பயறு சாலட்*


தேவையானவை: அவல் - 2 கப், தோல் நீக்கிய பாசிப்பருப்பு, தோல் நீக்காத பச்சை பயறு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 4, எலுமிச்சை - அரை மூடி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயறு வகைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்து விடவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஊறவைத்த பயறு வகைகளுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

23. *அவல் - உருளை கொழுக்கட்டை*

தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 3, கறிவேப்பிலை, கொத்த மல்லி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவை யான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். பிறகு அவலை உதிர்த்து உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

மாவை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து குக்கரில் (வெயிட் போடாமல்) ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

24. *அவல் உசிலி*

தேவையானவை: அவல் - 2 கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக வடைமாவு பதத்தில் அரைக்கவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் அரைத்த பருப்பு விழுது, பொடி யாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். உதிர் உதிரான அவல் உசிலி தயார்!

25. *அவல் வடகம்*


தேவையானவை: அவல் - 3 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 10, கறிவேப்பிலை, கொத்தமல்லி - 2 கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஊறிய பருப்புடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும். ஊறிய அவலை உளுந்துமாவுடன் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். அதை சிறு வடகமாக உருட்டி, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.

இது, வெங்காய போண்டா போல் வாசனையோடும் ருசியோடும் இருக்கும்!

26. *அவல் வடை*


தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, இஞ்சி - ஒரு விரல் அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும்.

ஊறிய அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இதனுடன் கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசைந்து, சிறு உருண்டை களாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டை களை வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

27. *அவல் - வெஜ் சாலட்*

தேவையானவை: அவல் - 2 கப், கேரட், தக்காளி, வெங்காயம் - தலா 1, சிறிய வெள்ளரிக்காய் - 1, பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழம் - அரை மூடி, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி.

செய்முறை: அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, பொடியாக நறுக்கவும்.

பிறகு அவற்றுடன் உப்பு, எலுமிச்சம்பழ சாறு, உதிர்த்த அவலை சேர்த்துக் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

28. *அவல் இட்லி*

தேவையானவை: அவல் - 2 கப், ஒரிஜினல் கெட்டி தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி கேரட் துருவல் - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடத்துக்கு பிறகு அவலை உதிர்த்து தயிருடன் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீறிய பச்சைமிளகாயைப் போட்டு, கேரட் துருவல், உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி குக்கரில் வெயிட் போடாமல் வேக விட்டு எடுக்கவும்.

இந்த இட்லி பூ போல மிருதுவாகவும் பார்க்க கலர்ஃபுல்லாகவும் இருக்கும்.


திங்கள், 23 ஜூலை, 2018

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா...

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா...

பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - அரை கப்
பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு  
செய்முறை :

மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும். 

இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும். 

தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).
 

இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்). 


பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும். 


இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும். 

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  
 


சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

ஞாயிறு, 22 ஜூலை, 2018

கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை

கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை

காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை செய்யலாம். இதை செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

கோதுமை ரவை - 200 கிராம், 
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி - ஒரு கப், 
நெய் - 2 டீஸ்பூன், 
புதினா - கால் கட்டு, 
பச்சை மிளகாய் - 2, 
உப்பு - சிறிதளவு.
செய்முறை :  

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, நறுக்கிய காய்கறிகள், புதினா, நெய், ப.மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் இந்த கொழுக்கட்டைகளை வேத்து நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். 
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.

சண்டே ஸ்பெஷல்...வஞ்சிரம் மீன் கிரேவி!

சண்டே ஸ்பெஷல்...வஞ்சிரம் மீன் கிரேவி!

தேவையான பொருட்கள் : 
வஞ்சிரம் மீன் - 500 கிராம், 
சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
நாட்டுத் தக்காளி - 200 கிராம், 
பெரிய வெங்காயம்100 கிராம், 
பூண்டு - 1, 
புளி எலுமிச்சை அளவு, 
காய்ந்த மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
நல்லெண்ணெய் - 100 மி.லி, 
வெந்தயம் - 1 டீஸ்பூன், 
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், 
கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு, 
தனியா தூள் - 1 டீஸ்பூன், 
தேங்காய் - பாதி
செய்முறை : 
தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
புளியை கரைத்து கொள்ளவும்.
வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். 
தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும். 
அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும். 
அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.
பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

சனி, 30 ஜூன், 2018

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெதுவெதுப்பான தண்ணீர்,
உப்பு - தேவைக்கு.
இறால் -  200 கிராம்,
சீஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 2,
பெங்களூர் தக்காளி - 1, 
குடைமிளகாய் - 1/4 கப்,
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை

கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். 

சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.