செவ்வாய், 31 மார்ச், 2020

30 வகை வகையான 300 சமையல்கள்


30 வகை வகையான 300 சமையல்கள்
#Recipes


30 பொடி வகைகள்

 அடுக்களையில் அதிக நேரம் செலவழிக்க முடியாதபோது, ‘சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறு கின்றன. மேலும்… சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை சூப்பராக அமைவதில், பொடிகளின் பங்கு ரொம்பவே உண்டு. இந்த இணைப்பிதழில் 30 பொடி வகைகளை  வாரி வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.

”ருசியை அள்ளித் தரும் பொடி வகைகளைத் தந்திருப்பதுடன்… வெந்தயப்பொடி, மூலிகைப் பொடி, கொள்ளுப்பொடி, வேப்பம்பூபொடி, நெல்லிக்காய்ப்பொடி என ‘வரும் முன் காக்கும்’ வரப்பிரசாதமாக விளங்கும் பொடிகளையும் இங்கே கொடுத்துள்ளேன். இவற்றை செய்து வைத்து, பல நாட்கள் பயன்படுத்தி, பலன்களை அள்ளுங்கள்” என பரிவுமிக்க தோழியாய் கூறுகிறார் பத்மா.

பருப்புப்பொடி

தேவையானவை: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.

பூண்டுப்பொடி

தேவையானவை: பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

தேங்காய்ப்பொடி

தேவையானவை: முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து… தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இட்லி மிளகாய்ப்பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்… இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

மிளகு  சீரகப்பொடி

தேவையானவை: மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.

குறிப்பு: ‘சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

கூட்டுப்பொடி

தேவையானவை: கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்… சுவை அதிகரிக்கும்.

ரசப்பொடி

தேவையானவை: தனியா – 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10.

செய்முறை: வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்… மணம், ருசி ஆளை அசத்தும்.

எள்ளுப்பொடி

தேவையானவை: எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.

குறிப்பு: புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.

கறிவேப்பிலை பொடி

தேவையானவை: கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்

ஆவக்காய் ஊறுகாய் பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய், கடுகு – தலா 200 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

அங்காயப் பொடி

தேவையானவை: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் – 6, கடுகு, மிளகு, சீரகம் – தலா 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.

நாரத்தை இலை பொடி

தேவையானவை: நாரத்தை இலை – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

திடீர் புளியோதரைப்பொடி

தேவையானவை: புளி – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வேர்க்கடலை – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மஞ்சள் – ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்… உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.

வெந்தயப்பொடி

தேவையானவை: வெந்தயம் – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்… உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.

வேப்பம்பூபொடி

தேவையானவை: வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து… பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.

சாம்பார்பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 250 கிராம், தனியா – 500 கிராம், துவரம்பருப்பு – 200 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா 50 கிராம், மஞ்சள் – 2.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .

குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப் பதுடன், நீண்ட நாள் கெடாது.

நெல்லிக்காய் பொடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.

நெல்லிக்காய்… வைட்டமின் ‘சி’, இரும்புச்சத்து மிக்கது.

கொத்தமல்லிப் பொடி

தேவையானவை: பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.

குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.

மூலிகைப்பொடி

தேவையானவை: வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி – தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.

சுண்டைக்காய்பொடி

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

ஓமப்பொடி

தேவையானவை: ஓமம் – 100 கிராம், மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.

கொள்ளுப்பொடி

தேவையானவை: கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

சட்னி பவுடர்

தேவையானவை: கொப்பரைத் தேங்காய் துருவல் – 2 கப், காய்ந்த மிளகாய் – 4, பொட்டுக்கடலை – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்… உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

கீரைப்பொடி

தேவையானவை: கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

குறிப்பு: உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.

பாயச பவுடர்

தேவையானவை: பிஸ்தா பருப்பு – 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு – தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை, பால் – தேவையான அளவு.

செய்முறை: பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்… திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.

தீபாவளி மருந்துப்பொடி

தேவையானவை: கண்டதிப்பிலி – 50 கிராம், சுக்கு – ஒரு துண்டு, ஓமம் – 50 கிராம், சீரகம் – 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி – 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 25 கிராம், வால் மிளகு – 50 கிராம், மிளகு – 25 கிராம், சித்தரத்தை – ஒரு துண்டு.

செய்முறை: கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.

குறிப்பு: பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.

ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் – நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து… இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.

அடைப்பொடி

தேவையானவை: இட்லி அரிசி – 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து… வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.

தனியாப்பொடி

தேவையானவை: தனியா – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

பஜ்ஜி பவுடர்

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, சோள மாவு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து… விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.

வடை பவுடர்

தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு – 250 கிராம், மிளகு – 20, காய்ந்த மிளகாய் – மூன்று, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.



30 வகை முறுக்கு!

 ✸அவல் முறுக்கு

தேவையானவை:
அவல் – 2 கப், கோதுமை மாவு (அ) மைதா மாவு – கால் கப், கெட்டியான மோர் – 2 கப்,
உப்பு, எள், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அவலை நன்றாகக் கழுவி மோருடன் கலந்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் எடுத்து
உப்பு சேர்த்து முறுக்கு பிழியும் அளவுக்கு கெட்டியாக அரைத்து, கோதுமை மாவு, எள்ளை சேர்க்கவும். அதை
முறுக்கு அச்சில் போட்டு, ஒரு துணியில் பிழியவும். இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிப் போடவும். ஈரம்
சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

 ✸வெண்ணெய் முறுக்கு

தேவையானவை:
 கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு – தலா ஒன்றேகால் கப், சோடா உப்பு – 2 சிட்டிகை,
வெண்ணெய் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
 கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு மூன் றையும் சுத்தம் செய்து உப்பு, வெண்ணெய், சோடா
உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

✸ கோயில் முறுக்கு

தேவையானவை:
 இடித்த பச்சரிசி மாவு – 4 கப், வெண்ணெய் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –
தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள்
எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
அந்த மாவில் சிறிது எடுத்து, 3 அங்குல நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனைகளையும் இணைக்கவும். இதே
போல் எல்லா மாவையும் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மாவை உருட்டி வெகு நேரம் வைத்திருந்தால் காய்ந்து உடைந்து விடும். அதனால், சிறிது ஈரப்பசை
இருக்கும்போதே பொரித்தெடுக்க- வேண்டும்

 ✸மைதா முறுக்கு

தேவையானவை:
மைதா மாவு – 2 கப், உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவை வெள்ளைத் துணியில் சுற்றி, ஆவியில் வைத்து எடுத்து உளுந்து பொடி,
வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை பெரிய கண் உள்ள முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த
எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
கோதுமை மாவு முறுக்கு

தேவையானவை:
 கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், சீரகம் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 கோதுமை மாவையும் அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, சீரகம், வெண்ணெய்,
பெருங்காயத்-தூள், தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை, முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக வெந்தவுடன்
வடித்-தெடுக்கவும்.

✸ மரவள்ளிங்கிழங்கு முறுக்கு

தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு மாவு – ஒரு கப், அரிசி மாவு, கடலை மாவு – தலா கால் கப்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –
தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு எள், மிளகாய்த்தூளை சேர்க்கவும். உப்பு,
பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மாவு கலவையில் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து
கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு குழாயில் போட்டு பிழிந்து, பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும். எள்ளுக்குப் பதில் ஓமம் சேர்த்தும் செய்யலாம்.
மரவள்ளிக்கிழங்கு மாவு கிடைக்கவில்லை என்றால் மரவள்ளிக்-கிழங்கை வேக வைத்து தோலுரித்து, முறுக்கு
மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளலாம்.

 ✸இனிப்பு முறுக்கு

தேவையானவை:
உளுந்து – ஒரு கப், மாவு அரிசி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, வெல்லம் – ஒரு கப்

செய்முறை:
உளுந்து, அரிசி இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து
கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து ஆற விடவும்.
வெல்லத்தைப் பொடித்து, சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அதை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி,
அடுப்பில் வைத்து பாகு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். அதை பொரித்து வைத்துள்ள முறுக்குகளின் மேல்
ஊற்றிக் கிளறவும்.
இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

 ✸ரவா தேன் குழல்

தேவையானவை:
ரவை – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகு,
சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ரவை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறி
இறக்கவும். பிறகு கோதுமை மாவு, மிளகு, சீரகத்தை பொடி செய்து சேர்த்துப் பிசையவும். வாசனைக்காக சிறிது
தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.
பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெய் காய்ந்ததும் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

✸ முள் முறுக்கு

தேவையானவை: அரிசி – 3 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், பயத்தம்பருப்பு – கால் கப், எள் (தேய்த்து
காய்ந்தது), சீரகம், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம்
சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.
முறுக்கு அச்சில் முள் முறுக்கு அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

 ✸பயத்தம்பருப்பு முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி – 4 கப், பயத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, எள்,
சீரகம், பெருங்காயம் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பயத்தம்பருப்பை மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எள், சீரகம், வெண்ணெய்,
பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில்
பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

✸ மெட்டி முறுக்கு

தேவையானவை:
 அரிசி மாவு – 2 கப், மைதா மாவு – அரை கப், காய்ந்த மிளகாய், சீரகம், எண்ணெய் –
தேவையான அளவு, சன்ன ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – பெரிய எலுமிச்சம்பழம் அளவு, தேங்காய்
துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவலுடன் 2 மிளகாயை வைத்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு
பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சன்ன ரவை, சீரகம், வெண்ணெய், உப்பு போடவும். அதில் அரைத்த
விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நீளமாக உருட்டி, பின் மெட்டியைப் போல இரண்டு சுற்று சுற்றி காய்ந்த
எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

 ✸புரொட்டீன் முறுக்கு

தேவையானவை:
 பயத்தம் பருப்பு – ஒரு கப், பச்சை பட்டாணி – அரை கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு –
கால் கப், பச்சரிசி மாவு – 4 கப், எள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து ஆற விடவும். பச்சை
பட்டாணியை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பருப்பு, பட்டாணி விழுது, அரிசி மாவு, உளுந்து
மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து வேக விட்டு
எடுக்கவும். காய்ந்த பட்டாணியாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அரைக்க வேண்டும்.

 ✸புழுங்கலரிசி முறுக்கு

தேவையானவை:
புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன்
 வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, மிளகு – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். அதில்
பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்
வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து, டம்ளரை சுற்றி
கையினால் முறுக்கு சுற்ற வேண்டும். சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சீரகம், மிளகுத்தூளுக்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

 ✸பச்சரிசி கார முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி மாவு – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர்,
எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு போட்டு, மெதுவாக
கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசி மாவை கொட்டி, அடுப்பிலேயே வைத்துக் கிளறி, பின்னர் அடுப்பை
அணைத்து விடவும்.
இந்த மாவை தட்டில் போட்டு பிசைந்து, சூடு ஆறியதும் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப்
பிசையவும்.இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து சுட்டெடுக்கவும்.

 ✸ஸ்பெஷல் தூள் முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், சீரகம் – சிறிதளவு,
காய்ச்சிய எண்ணெய் – அரை கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, சீரகம் போட்டு
காய்ச்சிய எண்ணெயை ஊற்றி கலக்கவும்.
கலவையை உதிரியாக பிசைந்து, அடிக்கடி தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். பிறகு அந்த மாவை
முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும். இது தூள் முறுக்காக வரும்.

 ✸தயிர் முறுக்கு

தேவையானவை:
அரிசி – 3 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு போட்டு அரைத்த பச்சைமிளகாய் விழுது –
கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் – அரை கப், எள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான
அளவு.

செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன்
பச்சைமிளகாய் விழுது, நெய், எள், புளித்த தயிரை சேர்த்துப் பிசையவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து, தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெயில் பிழியவும்.
பொன்னிறமானதும் எடுக்கவும்.

 ✸பச்சைப்பயறு முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு – 2 கப், முளைவிட்ட பச்சைப் பயறு – அரை கப், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான
அளவு, ஓமம் – சிறிதளவு.

செய்முறை:
முளைவிட்ட பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக்
கொள்ளவும். இந்த விழுதுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்.
முறுக்கு குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு, பிசைந்த மாவை அதில் போட்டு சின்ன முறுக்குகளாகப் பிழியவும். வெந்ததும் எடுக்கவும்

 ✸சோயா தேன்குழல்

தேவையானவை: சோயா மாவு – 4 கப், அரிசி மாவு – ஒரு கப், வறுத்துப் பொடித்த உளுந்து மாவு – ஒரு
டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
நெய்யை சூடாக்கிக் கொள்ளவும். சோயா மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, சீரகம், நெய்
எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். மாவில்
சிறிதளவு சூடான எண்ணெயை ஊற்றிப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். பொன்னிறமாக
வெந்ததும் எடுக்கவும்.

 ✸சோயா முள் முறுக்கு

தேவையானவை:
 பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், நெய்
- ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு போட்டு நன்றாக
கலந்து கொள்ளவும். அதில் நெய்யை போட்டுப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.
முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போட்டு, அதில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து பொரித்து
எடுக்கவும்.

 ✸சோயா ரிப்பன் முறுக்கு

தேவையானவை:
 சோயா மாவு – ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை கப், எள், நெய் – தலா ஒரு
டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
எல்லா மாவுகளையும் சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, நெய்யை சூடாக்கி ஊற்றவும். அதில் எள்,
உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் போட்டு அதில் மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழியவும். நன்றாக
வெந்ததும் எடுக்கவும்.

 ✸திடீர் முறுக்கு

தேவையானவை:
 உளுத்தம்பருப்பு – அரை கப், அரிசி மாவு – இரண்டரை கப் (அரிசி, உளுந்து 5:1 என்ற
விகிதத்தில் இருக்க வேண்டும்), சீரகம் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் – அரை
டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை கழுவி, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். மூன்று
முறை விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக வெண்ணெய்போல் அரைக்கவும்
அரிசி மாவில் வெண்ணெய், உப்பு, காய்ச்சிய எண்ணெய், சீரகம் சேர்த்து நன்றாக பிசறவும். பிறகு அதில்
அரைத்த உளுந்து மாவை சேர்க்கவும். தேவையானால் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு
பதத்துக்குப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழியவும். இது, வெள்ளையாக
இருக்கும். சீரகத்துக்கு பதிலாக எள் சேர்த்தும் செய்யலா

 ✸உருளைக்கிழங்கு தேன்குழல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, வறுத்த உளுந்து மாவு – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் கெட்டியாக
அரைக்கவும். அதோடு உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.
சிவந்தவுடன் எடுக்கவும்.

 ✸வாழைக்காய் தேன்குழல்

தேவையானவை: வாழைக்காய் – 2, வறுத்த உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் உளுந்துமாவு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு பதத்துக்கு பிசைந்து
கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.
சிவந்ததும் எடுக்கவும்.

 ✸கருப்பட்டி முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி மாவு – 5 கப், வறுத்த உளுந்து மாவு – ஒன்றரை கப், எள் – 2 டேபிள்ஸ்பூன், நெய் –
2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, எள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு
கலந்து கொள்ளவும். கருப்பட்டியை தூள் செய்து தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
அதில் மாவு கலவையை கொட்டிக் கிளறவும். ஆறிய பிறகு நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், மாவை முறுக்குக் குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

 ✸பச்சரிசி ஜீரா முறுக்கு

தேவையானவை: பச்சரிசி – இரண்டரை கப், சர்க்கரை – 5 கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், எள்- ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து கழுவி, நீரை வடித்து இடித்து சலித்துக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை வறுத்து ஆறிய பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக்
கலந்து, உப்பு, எள், வெண்ணெய், தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குக் குழாயில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழிந்து
வெந்தவுடன் எடுக்கவும்.
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து, 2 கம்பி பாகு பதத்தில் முற்றிய பாகு காய்ச்சவும்.
முறுக்கை ஓடித்து ஜீராவில் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். இளஞ்சூடாக இருக்கும்போதே உருண்டையாகப்
பிடிக்கலாம். அல்லது உதிர்த்து விட்டு உதிராகவும் வைக்கலாம்.

 ✸ வளைய முறுக்கு

தேவையானவை:
 பாசிப்பருப்பு – அரை கப், மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரிசி மாவை கடாயில் போட்டு சிறிது சிவக்க
வறுக்கவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், வெந்த பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். இந்தக் கலவை கெட்டியாக
வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதில் மைதா மாவை சேர்த்துப் பிசைந்து சிறு வளையங்களாக செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும், வளையங்களை அதில் போட்டு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.

 ✸தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு – 2 கப், உளுத்தம்பருப்பு மாவு – 2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – ஒரு கப், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து மாவாக பொடிக்கவும். இதனுடன் அரிசி மாவு,
தேங்காய்ப்பால், உப்பு, பொடித்த மிளகு, சீரகம், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
முறுக்கு அச்சில் மாவைப் போட்டு ஈரத்துணி மீது அல்லது பாலித்தீன் ஷீட்டில் சிறு சிறு முறுக்குகளாகப்
பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்.

 ✸மனோகரம்

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
 பச்சரிசி – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய
தேங்காய் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை:
 அரிசி, பருப்பை நைஸாக அரைத்து, உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். கடாயில்

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

வெல்லத்தை உருட்டும் பதத்தில் காய்ச்சவும். நொறுக்கி வைத்துள்ள தேன்குழலில் ஏலக்காய்த்தூள்,

தேங்காய்ப்பால் சேர்த்து, பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். பாகு நன்றாக கலந்தவுடன்

உருண்டையாகப் பிடிக்கலாம். இளம் சூடாக இருக்கும் போது தனித்தனியாக உதிர்த்தும் வைத்துக் கொள்ளலாம்.

 ✸நெய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
வெண்ணெய் – நெல்லிக்காய் அளவு, நெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 பச்சரிசியை ஊற வைத்து இடித்து, சலித்து, காய வைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் கடலை

மாவு, உப்பு வெண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அதில் தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு
பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் வாசனைக்கு சிறிது நெய்யும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், முள்

முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

 ✸கை முறுக்கு

தேவையானவை: பிசுக்குள்ள பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், எள்
- ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீ-ரில் அரை மணி

நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். பிறகு

அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து சலித்துக்
 கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில்

மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒவ்வொரு முறுக்காக மெதுவாக எடுத்து நிதானமாக போடவும்.

முதலில் சடசடவென சத்தம் வரும். ஒரு பக்கம் வெந்ததும், முறுக்குகளைத் திருப்பிப் போட வேண்டும். வெந்த

முறுக்கு எண்ணெயில் மிதக்கும். சடசட சத்தம் அடங்கியதும், எண்ணெயை வடிய விட்டு முறுக்கை எடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் மொறு மொறுப்பாகவும், மணமாகவும் இருக்கும்.



*என்ன செஞ்சாலும் சூப்பரா கமகமென்னு ரசம் வரலையா? இதோ செம்ம டேஸ்டியான ரசத்தின் ரகசியம்!!

ரசம்!! நெய், கொத்துமல்லி, தக்காளி எல்லாம் கலந்த வாசம் நம்மை சுண்டி இழுக்க
வேண்டும். சில சமயம், ஆஹா அற்புதம் என இன்னும் கையில் ஏந்தி ஏந்து குடிக்கும்
சுவையே அலாதி.

அதுவும் வாழை இலையில் ரசம் ஊற்றி சாப்பிடுவதற்கு நம் நாட்டில்
பலரும் அடிமை. இளங்குருத்து வாழை இலையில் ரசம் சாதம் சாப்பிடும் போது ,
இலையின் பச்சை வாசமும் கலந்து ஒரு சுவை தருமே பாருங்கள்.. யாரெல்லாம்
இதற்கு அடிமை..?


அப்படி சுவையான ரசத்திற்கு அடிமையாக வேண்டுமா? இதோ இந்த ரெசிப்பிக்களை
ட்ரை பண்ணிப் பாருங்க.நீங்கள் பயன்படுத்தும் பொருட்களின் விகிதம் முக்கியம். முதலில் ரசப்பொடி எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

ரசப்பொடிக்கு தேவையானவை :
காய்ந்த மிளகாய்- 1கப்
தனியா – 1கப்
சீரகம்- கால் கப்
மிளகு-கால் கப்
வெந்தயம்-2 ஸ்பூன்
மஞ்சள் பொடி- கால் ஸ்பூன்
துவரம் பருப்பு – கால் கப்
கடலைப் பருப்பு- கால் கப்
பெருங்காயம்- 3 ஸ்பூன்
கருவேப்பிலை- ஒரு கைப்பிடி.

தயாரிக்கும் முறை:
மேலே சொன்னவற்றை தனித்தனியாக வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடி
செய்து கொள்ளுங்கள். அதனை இறுக்கமான டப்பாவில் வைத்து பயன்படுத்துங்கள்.

மைசூர் ரசம் :
மேற்கூறிய எல்லா பொருட்களுடன் கொப்பரைத் தேங்காவையும் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

உடுப்பி ரசம் :
மேற்கூறிய பொருட்களை தேங்காய் எண்ண்யில் வறுத்து பொடி செய்து காற்று புகாத
கன்டெய்னரில் வைத்துக் கொள்ளுங்கள்.

ரசம் தயாரிக்கும் முறை ;
கால் கப் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். 4 நடுத்தரமான தக்காளியை நறுக்கி, வெதுவெதுப்பான சுடுநீரில் ஊற வைத்து மசித்துக் கொள்ளுங்கள். இதில் மஞ்சள் பொடியை கால் ஸ்பூன் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும்.
நன்றாக பச்சை வாசம் போனதும், தயாரித்து வைத்திருந்த ரசப்பொடியை 2 ஸ்பூன்
சேருங்கள். அல்லது ஆட்களுக்கு தகுந்தாற்போல், அதிகமாகவும் போட்டுக் கொள்ளலாம். அதனை கொதிக்க விடுங்கள்.
நன்றாக கொதித்து பொங்கி வரும் நேரம் வேக வைத்த துவரம் பருப்பை மசித்து, நீரூற்றி கரைத்து பொங்கி வரும் ரசத்தில் ஊற்றவும். பின்னர் கொத்துமல்லி, கருவேப்பிலையை நறுக்கி போடுங்கள். மீண்டும் ரசம் பொங்கும் போது அணைத்து விடுங்கள்.

தாளிக்க :
நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி மூடி விடுங்கள்.கம கம ரசத்தில் வீடே மணக்கும்.

குறிப்பு :
புளி ரசம் : புளிக்கரைசலிலும் இந்த ரசம் பண்ணலாம். அப்போது தக்காளியின் அளவை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை ரசம் : எலுமிச்சை ரசம் வேண்டுமென்றால் தாளித்த பின் கால் கப்
எலுமிச்சை சாறு ஊற்றி விடுங்கள்.

பூண்டு ரசம்- இதற்கு ரசப்பொடி போடும் போது பூண்டையும் இரு பற்கள் தட்டிப் போட வேண்டும்.



 *30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்


*வேலை, படிப்புக்காக வெளியே சென்று களைப்பாக மாலையில் திரும்புபவர்கள், 'அப்பாடா’ என்று நாற்காலியில் சாயும்போது... கரகரமொறுமொறு ஸ்நாக்ஸ் தட்டை நீட்டுபவர்களை தங்கள் பாசத்துக்கு உரியவர்களாக கொண்டாடு வார்கள். அதுவும் சுவை சூப்பராக இருந்தால் கேட்கவே வேண்டாம்! இந்த இனிய உணர்வு உங்கள் இல்லத்தில் பரவிட உதவும் வகையில்... கட்லெட், டிக்கி, பஜ்ஜி, சமோசா போன்ற    வற்றை விதம்விதமாகவும், புதுவிதமாகவும் தயாரித்து, '30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்’களை குவித்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.*

''இந்த ரெசிப்பிகள், சாப்பிடுபவர்களை 'ஒன் மோர் ப்ளீஸ்’ என கேட்க வைக்கும்'' என்று உற்சாகப்படுத்தும் ஆதிரை, ''அதேசமயம், இவற்றில் பெரும்பாலானவை எண்ணெய்ப் பதார்த்தங்கள் என்பதால், அளவோடு செய்து பரிமாறுங்கள்'' என்று அறிவுறுத்துகிறார்.

மினி சமோசா

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து,  நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.


நட்ஸ் பால்ஸ்

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், வறுத்த எள் - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், ரஸ்க் - 6, பொடித்த வெல்லம் - 150 கிராம், பேரீச்சை - 6, முந்திரி - 8, உலர்திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நெய் - சிறிதளவு.
செய்முறை: பேரீச்சையை பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலந்து, உருண்டை களாகப் பிடித்து பரிமாறவும்.

சீஸ் ஆலு பன்ச்

தேவையானவை: துருவிய சீஸ் - கால் கப், உருளைக்கிழங்கு - 4, பிரெட் துண்டுகள் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி - ஒரு சிறுகட்டு (சுத்தம் செய்யவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைக் கவும். இதை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

சோள மாவு, பால், மைதா, மிளகுத்தூள், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, இரண்டாக நறுக்கவும். நறுக்கிய பிரெட் துண்டுகளின் மேல் உருளை மசாலாவைத் தடவி, அதன் மேலே சோள மாவு கலவையை பரப்பி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... சுடச்சுட பரிமாறவும்.

டொமேட்டோ ரிப்பன்

தேவையானவை:  மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 கப், தக்காளி - 3, பச்சை மிளகாய் - 4, பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயை மிக்ஸியில் மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மைதா மாவில் நீர் தெளித்து பிசிறி ஆவியில் வேக வைத்து சலிக்கவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அரைத்து வடிகட்டிய தக்காளி - பச்சைமிளகாய் சாறு மற்றும் தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். மாவை ரிப்பன் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

ஸ்பெகாட்டி பனீர் பால்ஸ்

தேவையானவை: குச்சி நூடுல்ஸ் (ஸ்பெகாட்டி - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம்,  பனீர் - 200 கிராம், சீஸ் - 4 சிறிய துண்டுகள், பால் - 2 கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், மைதா - அரை கப், பச்சை மிளகாய், பூண்டு பல் - தலா 4 , ரஸ்க் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கவும். சீஸை நன்கு துருவவும். 6 கப் நீரை நன்கு கொதிக்கவிட்டு, ஸ்பெகாட்டியை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு, ஸ்பெகாட்டியைக் குளிர்ந்த நீரில் போட்டு அலசவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நசுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் சோள மாவை பாலில் கரைத்து  சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவை கெட்டியாகிக் கொதித்த உடனேயே உப்பு, ஸ்பெ காட்டி, பனீர், சீஸ், மைதா சேர்த்துக் கலந்து இறக்கி, சிறுசிறு உருண்டை களாக உருட்டவும். உருண்டைகளை ரஸ்க் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கார்ன் ஃப்ரிட்டர்ஸ்

தேவையானவை:  பேபி கார்ன் - 10 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்),  சோள மாவு, மைதா மாவு - தலா கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோள மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, தேவையான நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்  கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய  பேபி கார்னை கரைத்த மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சேப்பங்கிழங்கு டிக்கி

தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, வேர்க்கடலை - 50 கிராம், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, ஆம்சூர் பொடி - ஒரு சிட்டிகை, முந்திரி - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசிக்கவும். வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக  மிக்ஸியில் பொடிக்கவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கவும். மசித்த சேப்பங்கிழங்குடன் பொடித்த வேர்க்கடலை, பொடித்த முந்திரி, உப்பு, கடலை மாவு, மிளகாய்தூள், ஆம்சூர் பொடி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசையவும். இதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். இதற்கு, தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன்.

நியூட்ரிஷியஸ் பேல்

தேவையானவை:  வறுத்த வேர்க்கடலை - அரை கப், முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், பொரி - ஒன்றரை கப், ஆப்பிள் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப், துருவிய மாங்காய் - கால் கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, கார்ன் ஃப்ளேக்ஸ் - அரை கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
இனிப்பு  சட்னிக்கு: மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், விதை நீக்கிய பேரீச்சை - 6, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு (புளி, திராட்சை, பேரீச்சையை ஊறவைத்து நைஸான விழுதாக அரைக்கவும். இதனுடன் வெல்லம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சற்றே கெட்டியாகும் வரை (சுமார் 2 நிமிடம்) கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி).

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலை, முளைகட்டிய பயறு, தக்காளி, மாதுளை, பொரி, மாங்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள் துண்டுகள், கார்ன் ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு குலுக்கிக் கலக்கவும். பரிமாறும் முன் இந்தக் கலவையை  தட்டில் போட்டு தேவையான இனிப்பு சட்னி விட்டுக் கலந்து, கரம் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பீஸ் கபாப்

தேவையானவை: பச்சைப் பட்டாணி, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கட்டு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பட்டாணி, கடலைப்பருப்பை தனித்தனியே வேகவைத்து நீரை வடித்துவிட்டு, இரண்டையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். புதினா, கொத்தமல்லி, இஞ்சியை சுத்தம் செய்து... பூண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைக்கவும். இதனுடன் பட்டாணி - கடலைப்பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இந்தக் கலவையை நீள நீளமாக சிலிண்டர் வடிவில் செய்து, ரஸ்க் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பொட்டுக்கடலை மாவு

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெருஞ்சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். மிளகு, பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மல்லித்தழை சேர்த்து கலந்து வைக்கவும். பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த வேர்க்கடலை, பொடித்த மிளகு - பெருஞ்சீரகம், வதக்கி வைத்திருக்கும் கலவை, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஸ்வீட் பொட்டேட்டோ பட்ஜ்

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப்,  வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேகவிட்டு தோல் நீக்கி, நன்றாக மசிக்கவும். மைதா மாவில் நீர் தெளித்து பிசிறி, ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்க வும். உதிர்த்த மைதா மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவுடன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளை எள், உப்பு மற்றும் மசித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சிறிதளவு நீர்விட்டுப் பிசைந்து சீடை போல சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் ஷீட்டில் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருட்டி வைத்தவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

வாயில் போட்டால் கரையும்... இந்த ஸ்வீட் பொட்டேட்டோ பட்ஜ்.

மூங்தால் கிரிஸ்பி

தேவையானவை: பச்சரிசி - அரை கிலோ, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா கால் கிலோ, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து மாவாக அரைக்கவும். பொட்டுக்கடலை, அரிசியையும் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுகளை நன்கு சலித்து, அவற்றுடன் வெள்ளை எள், உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

பனீர் மேத்தி டிக்கி

தேவையானவை: பனீர் - அரை கிலோ (நன்கு உதிர்க்கவும்), உருளைக்கிழங்கு - 3 வெந்தயக் கீரை - ஒரு சிறிய கட்டு, மைதா - 6 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ரஸ்க் தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டி யில்லாமல் மசிக்கவும். வெந்தயக் கீரை, கொத்தமல்லியை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். உதிர்த்த பனீர், மசித்த உருளைக்கிழங்கு, 3 டேபிள்ஸ்பூன் மைதா, நறுக்கிய கொத்தமல்லி, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள 3 டேபிள்ஸ்பூன் மைதாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் நனைத்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுடச்சுட பரிமாறவும்.

பேபி கார்ன் பெப்பர்

தேவையானவை: பேபி கார்ன் - 6 (வட்டமாக மெல்லியதாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் - ஒன்று, வெங்காயத்தாள் - 4, ஆலிவ் ஆயில் - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

கோபி கிராக்கெட்ஸ்

தேவையானவை: காலிஃப்ளவர்- ஒன்று, உருளைக்கிழங்கு - 2, துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, 2 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் மையாக அரைக்கவும். உருளைக்கிழங்கை  வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும்.

நறுக்கிய காலிஃப்ளவர், மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, 2 டேபிள்ஸ்பூன் மைதா, துருவிய சீஸ், தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவமாக்கவும். இதுதான் கோபி கிராக்கெட்ஸ்.

மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவை சற்று நீர்க்கக் கரைத்து, அதில் கோபி கிராகெட்ஸை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். விருப்பமான சாஸுடன் பரிமாறவும்.

சுனந்தாலு

தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய முந்திரி - 10.
செய்முறை: பொடியாக நறுக்கிய முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறவைத்து, மெஷினில் கொடுத்து அல்லது மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு நெய்யை உருக்கி, அது சூடாக இருக்கும்போதே கலந்து வைத்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.

கிரிஸ்பி பட்டர் முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 50 கிராம், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து, தேவையான நீர் சேர்த்து பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.

வாயில் போட்ட உடனே கரையும் இந்த பட்டர் கிரிஸ்பி முறுக்கு.

வெஜ் ஸ்பிரிங் ரோல்

தேவையானவை: மைதா மாவு, நவதானிய மாவு (மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - தலா அரை கப், முளைகட்டிய நவதானியம் (பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை, கோஸ், பாலக்கீரை (சேர்த்து) - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.  உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். மைதா மாவு, நவதானிய மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கீரைகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, மசித்த உருளை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு இறக்கி, ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். இதன்மேல் நவதானிய உருண்டையை வைத்து சற்று இறுக்கமாகச் சுருட்டவும். பின்னர் அதன் ஓரத்தை தண்ணீரால் ஒட்டி விடவும். இதுதான் ஸ்பிரிங் ரோல். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஸ்பிரிங் ரோலைப் போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

கிரெய்ன்ஸ் ஸ்டஃப்டு பன்

தேவையானவை: வட்டமான பன் - 4, முளைகட்டிய நவதானியம் ( பெரிய மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,  கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், சீரகம், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - கால் கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். புளியை கெட்டியாகக் கரைக்கவும். பச்சை வேர்க்கடலை, வறுத்த எள், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, வேர்க்கடலை விழுது, புளிக்கரைசல், உப்பு, தனியாத்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, கொப்பரைத் துருவல் தூவி இறக்கவும். பன்னை பாதியாக வெட்டி வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து, தயாரித்து வைத்த கலவையை நடுவில் வைத்து பரிமாறினால்... சாப்பிடுபவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள்... 'ஆஹா... ஓஹோ... பேஷ் பேஷ்’தான்!

குறிப்பு: பன் துண்டுகளின் நடுவில் மிகவும் மெல்லியதாக, வட்டமாக 'கட்’ செய்த தக்காளி, குடமிளகாயையும் வைக்கலாம்.

ஸ்பெஷல் மிக்ஸர்

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், வேர்க்கடலை, அவல் - தலா 100 கிராம், பல்லு பல்லாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு - 10, முந்திரி (பாதியாக உடைக்கவும்) - 10 சர்க்கரை பொடி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வேர்க்கடலை, அவல், நறுக்கிய கொப்பரைத் தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரி ஆகியவற்றை எண்ணெயில் தனித்தனியே பொரித்து எடுக்கவும். கடலை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண் ணெயில் பிழிந்து மொறுமொறு வென எடுக்கவும். இதனுடன் எண்ணெயில் பொரித்த பொருட்கள், உலர்திராட்சை சேர்த்துக் கலந்து, சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.

சீஸ் சேமியா டிலைட்

தேவையானவை: சேமியா - ஒரு கப், சீஸ் - 2 சிறிய துண்டு கள், மைதா - கால் கப், வெங் காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, வெங்காயத்தாள் - அரை கட்டு, பனீர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சேமியாவை வறுத்து, தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து உதிர்க்கவும். சீஸை துருவவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பனீரை துருவிக்கொள்ளவும். இவற்றுடன் மைதா, உப்பு சேர்த்து ஒன்றாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதனை தக்காளி சாஸுடன் சுடச்சுட பரிமாறினால்... சுவை 'ஜோர் ஜோர்’தான்!

சீஸ் ரஸ்க் டிக்கி

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சிறிய சீஸ் துண்டுகள் - 3 (துருவவும்), துருவிய பனீர் - சிறிதளவு, ரஸ்க் தூள் - தேவையான அளவு, பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் வெண்ணெயை விட்டு, சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவை சேர்த்து வதக்கி, பாலை ஊற்றி, அடுப்பை சிறுதீயில் வைத்துக் கிளறவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கி... உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், துருவிய பனீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவோடு சிறிது நீர் சேர்த்து கரைக்கவும். உருளை - சீஸ் கலவையை விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

டிரம்ஸ்டிக் கட்லெட்

தேவையானவை: முருங்கைக்காய் - 3, உருளைக்கிழங்கு - 3, இஞ்சி - பச்சை மிளகாய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டுகள் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடிக்கவும். முருங்கைக்காயை நறுக்கி, வேகவைத்து, சதையை மட்டும் வழித்தெடுக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, பிரெட் தூள், கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இதை சின்ன சின்ன கட்லெட்டுகளாகத் செய்து, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும்.

ஸ்பெஷல் தயிர் வடை

தேவையானவை: முழு வெள்ளை உளுந்து - ஒரு கப், கெட்டித் தயிர் - 2 கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, பாதாம், முந்திரி - தலா 8, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும். தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து... பால், சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அதை பால் - தயிர் கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.

மைதா ரவுண்ட்

தேவையானவை:  மைதா மாவு - அரை கிலோ, பொட்டுக்கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெள்ளை எள், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - கால் கப், உடைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை:  மைதாவை நீர் தெளித்துப் பிசிறி, ஆவி யில் வேகவிட்டு எடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை எள், வேர்க்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் தேங்காய்ப் பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லிய தான சின்னச் சின்ன வட்டங்க ளாக தட்டி, சூடான எண்ணெ யில் பொரித்தெடுக்கவும்.

முள்ளங்கி புர்ஜி

தேவையானவை:  வெள்ளை முள்ளங்கி - 4, பொட்டுக்கடலை மாவு - அரை கப், பிரெட் தூள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு - ஒன்று, பூண்டு - 2 பல், பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோல் உரித்த சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பட்டை, கிராம்பு, பூண்டு, பெருஞ் சீரகம் ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை தோல் சீவி,    துருவி, நீரைப் பிழிந்துவிடவும். அதனுடன் பிரெட் தூள், அரைத்த விழுது, தேவையான உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கவும். இந்த உருண்டைகளை பொட்டுக்கடலை மாவில் போட்டு நன்கு புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதை, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

ஸ்பிரவுட் டிக்கி

தேவையானவை: முளைகட்டிய பயறு கலவை (பெரிய மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், ரஸ்க் தூள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப்,  எண்ணெய். உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறு வகைகளுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகெரப்பாக அரைக்கவும். அதில் ரஸ்க்தூள் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவுடன் சிறிது உப்பு மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்து பஜ்ஜி மாவு படத்தில் கரைக்கவும். உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பீட்ரூட் கேஷ்யூ கட்லெட்

தேவையானவை: பீட்ரூட் - கால் கிலோ,  உருளைக்கிழங்கு - 3, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, முந்திரி - 10, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் - 6 (பொடித்துக்கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், துரு விய பீட்ரூட், தேவையான உப்பு, பொடித்த முந்திரி சேர்த்து வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும். கடலை மாவுடன் கொஞ்சம் நீர், சிறிதளவு உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். செய்து வைத்த கட்லெட்டுகளை கடலை மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மஷ்ரூம்   ஆலு ரெனடி

தேவையானவை: காளான் - 100 கிராம் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு மசித்துக் கொள்ளவும்), கேரட் - ஒன்று (துருவவும்), பிரெட் ஸ்லைஸ் - 8, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  நறுக்கிய காளான், துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை சிறிதளவு உப்பு கலந்த நீரில் நனைத்து, உடனே  பிழிந்து  நடுவே மஷ்ரூம் உருண்டை   களை  வைத்து, அப்படியே  மூடி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பனீர் பஜ்ஜி

தேவையானவை: பனீர் - கால் கிலோ (விரல்நீளத் துண்டுகளாக, சற்று மெல்லியதாக நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மைதா மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய், பனீர் துண்டுகள்  நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொஞ்சம்  நீர் ஊற்றிக் கரைக்கவும். இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

☕ பயணம் 🍜உணவு🍿ஆரோக்கியம்:



30 வகை பிரியாணி.

படாஃபட் புலாவ்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (சேர்த்து) – ஒரு கப், பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் – ஒன்று, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப), நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

அடி  கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பூண்டு – பச்சை மிளகாய் விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உதிராக வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி… நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் பிரியாணி.

 தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், முந்திரி, பாதாம் – தலா 8, அன்னாசிப்பழம், ஆப்பிள் – தலா ஒரு துண்டு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 3, நெய், உப்பு – தேவையான அளவு, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக்கொள்ளவும்.

செய்முறை: பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அன்னாசிப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு பாதாம், முந்திரி சேர்த்து வறுக்கவும். இதனுடன் வடித்த சாதம், பழத்துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி, பாலில் கரைத்த குங்குமப்பூ, தேவையான உப்பு சேர்த்து மேலும் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

கோஸ் – பச்சைப் பட்டாணி பிரியாணி.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், கோஸ் – 100 கிராம், பச்சைப் பட்டாணி – 50 கிராம், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, தேங்காய்ப்பால் – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோஸ், வெங்காயம், தக்களியை பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு, கோஸ், பச்சைப் பட்டாணி, தக்காளி, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும் இதனுடன் தேங்காய்ப்பால்,  இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும். கேரட் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

கசகசா பாத்.

 தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி – 6, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, சீரகம் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: கசகசா, முந்திரியை ஊறவைத்து நைஸாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, அரைத்த கசகசா விழுது, உப்பு, ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு, அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். வெஜிடபிள் குருமாவோடு பரிமாறவும்.

பசலைக்கீரை புலாவ்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பசலைக்கீரை – ஒரு கட்டு, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துகேற்ப), இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பசலைக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து லேசாக வேகவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு, அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

கேப்ஸிகம் – மின்ட் ரைஸ்.

 தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், குடமிளகாய் – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,  இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். குடமிளகாயை சதுர சதுரமாக கட் செய்யவும். பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி… இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். இதனுடன் நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

மஷ்ரூம் பிரியாணி.

 தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப்,  மஷ்ரூம் – 10 அல்லது 12, பெரிய வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி அளவு, சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மஷ்ரூமை சுத்தம் செய்து, மெல்லிய, நீளத் துண்டுகளாக கட் செய்யவும். வெங்காயத்தை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கவும். பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு மஷ்ரூம் துண்டுகளைச் சேர்த்து,  நன்கு வதக்கி… சோயா

சாஸ், சில்லி சாஸ், தேவையான உப்பு, மிளகுத்தூள் பாதியளவு வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு, இதனுடன் உதிராக வடித்த சாதம், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மீதமுள்ள வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.

பச்சை மொச்சை பிரியாணி.

 தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 4, பச்சை மொச்சை – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 8 பல், கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மொச்சையை நன்கு ஊறவைத்து, தோல் நீக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை விழுதாக அரைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழை, பட்டை ஆகியவற்றை நைஸான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, மொச்சை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறி, 3 கப் நீர் ஊற்றி, கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு, அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கேரட் ராய்த்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

க்ரீன் ஆப்பிள் புலாவ்.

 தேவையானவை: சற்றே புளிப்பான க்ரீன் ஆப்பிள் – 2, சீரக சம்பா அரிசி – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: க்ரீன் ஆப்பிளை துருவிக்கொள்ள வும். சீரக சம்பா அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை  பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பெருஞ்சீரகம் தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, துருவிய ஆப்பிள், உப்பு சேர்த்து வதக்கி, உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

தயிரில் காராபூந்தி சேர்த்த ராய்த்தா இதற்கு சரியான இணை.

கொத்தமல்லி புலாவ்.

 தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – அரை கப், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (சுத்தம் செய்துகொள்ளவும்), பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி – சிறு துண்டு

, பூண்டு – 4 பல், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், அரைத்த கொத்தமல்லி விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, பரிமாறவும்.

பச்சைப் பயறு – ஸ்பிரிங் ஆனியன் புலாவ்.

 தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பச்சைப் பயறு – அரை கப், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, வெங்காயத்தாள் – ஒரு கட்டு, பச்சை மிளகாய் – 4, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: பச்சைப் பயறை 6 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, முளைகட்டவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி, 2 கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து, நன்கு கிளறி, குக்கரை  மூடவும். ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு அடுப்பை சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, ஆனியன் ராய்த்தாவோடு பரிமாறவும்.


நெய் பிரியாணி.

 தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 4, தேங்காய்ப்பால் – அரை கப், புதினா,

கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பிரிஞ்சி இலை – ஒன்று, உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு, நெய்யில் வறுத்த முந்திரி – 10.

செய்முறை:  பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிகவும் பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பொடித்த பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்துக் கிளறவும். இதனுடன் தேங்காய்பால், இரண்டரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு, அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

மல்டி காய்கறி பிரியாணி.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம் – 2, தக்காளி – 4, கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று, பீன்ஸ் – 8, காலிஃப்ளவர் – சிறிதளவு, புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்ப்பால், தயிர் – தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப), பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 8 பல், ஏலக்காய், லவங்கம் – தலா ஒன்று, முந்திரி – 12, சின்ன வெங்காயம் – 4 (தோல் உரிக்கவும்), பிரிஞ்சி இலை – ஒன்று எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலையை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா விழுது, தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் சேர்த்துக் கிளறவும். இதனுடன் தயிர், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி… தேங்காய்ப்பால், 3 கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியைப் போட்டு, ஆவி வந்ததும் குக்கரை மூடி, வெயிட்’ போட்டு, அடுப்பை சிம்’மில்

 வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். உருளைக்கிழங்கு குருமாவுடன் பரிமாறவும்.

கோபி பிரியாணி.

 தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், காலிஃப்ளவர் (மீடியம் சைஸ்) – ஒன்று, பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 4, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 8 பல், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,  தனி மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து, துண்டுகளாக்கவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவல், லவங்கம், ஏலக்காய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, தனி மிளகாய்த்தூள், அரைத்த மசாலா விழுது, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட்’ போட்டு, அடுப்பை சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

ஆலு – மட்டர் பிரியாணி.

 தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பெரிய உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 2, பச்சைப் பட்டாணி – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, புதினா – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறு துண்டு, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, நெய்யில் வறுத்த முந்திரி, எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சின்னச் சின்ன சதுரங்களாக நறுக்கவும். புதினா, பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்துகொள்ளவும்.

அடிகனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, உருளைக்கிழங்கு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் (உருளைக்கிழங்கு வெந்ததா என்று நசுக்கிப் பார்க்கவும்). இதனுடன் வேகவைத்த பச்சை பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி, உதிராக வடித்த சாதம் சேர்த்து மேலும் கிளறி பரிமாறவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

கொண்டைக்கடலை புலாவ்.

 தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், வெள்ளை கொண்டைக்கடலை – கால் கப், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பட்டை – சிறு துண்டு, நெய்யில் வறுத்த முந்திரி – 8, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைக்கவும். தனியா, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பரிமாறவும்.

பிரிஞ்சால் பிரியாணி.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 2, சின்ன கத்திரிக்காய் – 6, பூண்டு – 8 பல், தனி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். சின்ன கத்திரிக்காயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து… பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய், பூண்டு, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு நீர் தெளித்து மூடி போடவும். கத்திரிக்காய் வெந்ததும் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.



*30 வகை திடீர் சமையல்

வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது... கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய '30 வகை திடீர் சமையல்’ ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

''உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க... நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க'' என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

மீல்மேக்கர் டிக்கிஸ்

தேவையானவை: மீல்மேக்கர் - 20, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த  டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

கீரை  தால் கிரிஸ்பி

தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், முருங்கைக்கீரை - ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி... பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.

மூங்தால்  பனீர் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - முக்கால் கப், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... பூண்டு - பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.



கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு - பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

 ஓட்ஸ் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், வெங்காயம் - 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.

ஸ்வீட் சோயா

தேவையானவை: சோயா உருண்டைகள் - 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு - 100 கிராம், மைதா - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.



செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி... ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பூ  வெங்காய அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு - 4 பல்,  காய்ந்த மிளகாய் - 6, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ -  ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி... இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, ஸ்வீட் கார்ன் - 2, பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு.



செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.

மேத்தி சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - 2  சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய்
 நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.

காரசார வேர்க்கடலை பொடி

தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட... சுவை அள்ளும்!

ஆந்திரா பருப்பு பொடி

தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு.



செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

மசாலா இட்லி

தேவையானவை: இட்லி - 10, வெங்காயம், தக்காளி - தலா 2, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி... சுடச்சுட பரிமாறவும்.

மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி

தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

ஹனி சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், தேன் - ஒரு கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

கிரீன்  ரெட் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் - 10, புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

கேழ்வரகு  முருங்கைக்கீரை அடை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) - அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.

 நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்

தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,

டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி... கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.

முந்திரி பொடி

தேவையானவை: முந்திரி - 20, பாதாம் - 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.

பட்டாணி ஊத்தப்பம்

தேவையானவை: தோசை மாவு - 4 கப், துருவிய கேரட், வேக வைத்த  பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன்,  கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - சிறிதளவு.



செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து... மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.

மூங்தால் பெசரட்

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி... பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஸ்பைஸி ரவா கிச்சடி

தேவையானவை: வறுத்த ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.



செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப்
 தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

ஆலு  பாலக் கட்லெட்

தேவையானவை: பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் - 4, பச்சை மிளகாய் - இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா மாவு - அரை கப், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த  பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

ஓட்ஸ்  காலிஃப்ளவர் உப்புமா

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

சோயா  ஆனியன் பெசரெட்

தேவையானவை: சோயா உருண்டைகள் - 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு - ஒன்றரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும்  சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

பூண்டு துவையல்

தேவையானவை: உரித்த பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

பிரெட் வெஜ் புலாவ்

தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 6, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6,  பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் - ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக 'கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு 'கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.

 வெஜ் சாண்ட்விச்

தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 10, புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் - தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா - கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

 பட்டாணி சீஸ் பன்

தேவையானவை: பன் - 4, சீஸ் துருவல் - அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.


செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை  ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து... மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.


*30 வகை வர்ணஜால சமையல்

 *ரவை பூரி பாயசம்*

தேவை:
ரவை - ஒரு கப்  சர்க்கரை - முக்கால் கப்  காய்ச்சிய பால் - 3 கப்  பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு, சமையல் சோடா – தலா ஒரு சிட்டிகை  எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
ரவையுடன் உப்பு, சமையல் சோடா, நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் சிறிய துண்டுகளாக உடைக்கவும். பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அத்துடன் பூரி துண்டுகளைப் போட்டு ஒரு கொதிவிடவும். பிறகு சர்க்கரை, பாதாம் மிக்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். கலவை கெட்டியாகிவிட்டால் பரிமாறும்போது சிறிதளவு பால் சேர்க்கலாம்.

 *பதிர் பேணி*

தேவை:
மைதா மாவு, சர்க்கரை - தலா 250 கிராம்  அரிசி மாவு, நெய் - தலா 200 கிராம்  ஏலக்காய் - 5  பட்டை - சிறிய துண்டு  உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:
சர்க்கரையுடன் ஏலக்காய், பட்டை சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். அரிசி மாவுடன் நெய் சேர்த்துக் கலக்கவும். இதுவே பதிர். மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவை ஆறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். ஒரு சப்பாத்தியின் மீது சிறிதளவு பதிரைத் தடவவும். அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்துச் சிறிதளவு பதிர் தடவவும். அதன்மீது மீண்டும் ஒரு சப்பாத்தியை வைத்து பதிர் தடவவும். அடுக்காக வைத்த மூன்று சப்பாத்திகளையும் சேர்த்து, பாய் போல இறுக்கமாகச் சுருட்டவும். இதேபோல் மீதமுள்ள சப்பாத்திகளையும் தயாரிக்கவும். பிறகு, அதை ஒன்றரை இன்ச் அளவுள்ள துண்டுகளாக வெட்டிப் பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துத் தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சூடாக இருக்கும்போதே பூரிகளின் மீது பொடித்து வைத்த சர்க்கரைத்தூளைத் தூவிப் பரிமாறவும்.

 *பால் - பனீர் கொழுக்கட்டை*

தேவை:   
புழுங்கலரிசி - ஒரு கப்  சர்க்கரை - முக்கால் கப்  காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப்  தேங்காய்த் துருவல் - அரை கப்  பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்  ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்  நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு பனீர் துருவலைச் சேர்த்து வதக்கவும். அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். முறுக்கு குழலில் உளுந்து முறுக்கு அச்சைப்போட்டு மாவை நிரப்பிப் பிழியவும். நன்கு வெந்து மேலே வந்ததும் எடுக்கவும். தேங்காய்த் துருவலுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பால், மீதமுள்ள நெய், பொரித்த கொழுக்கட்டைகளைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே பனீர் துருவலைச் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
தண்ணீரில் வேகவைத்த முறுக்கைச் சேர்த்துச் செய்தாலும், `பால் கொழுக்கட்டை’ என்பதுதான் இதன் பெயர்.

 *வொயிட் தோசை*

தேவை:
பச்சரிசி - ஒரு கப்  தேங்காய்த் துருவல் - அரை கப்  சர்க்கரை - ஒரு டீஸ்பூன்  நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்துத் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரவா தோசை பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிதளவு நெய்விட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும். இரண்டு நிமிடங்களில் வெந்துவிடும்; திருப்பிப் போடத் தேவையில்லை.

இதற்குத் தக்காளிச் சட்னி நல்ல காம்பினேஷன்.

 *முள்ளங்கி - பனீர் பொரியல்*

தேவை:
முள்ளங்கித் துருவல் - ஒரு கப்  துருவிய பனீர், தேங்காய்த் துருவல் தலா - 2 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, முள்ளங்கித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும். முள்ளங்கி வெந்ததும், பனீர் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 *சௌசௌ - வெள்ளைக் கடலை தயிர்க் கறி*

தேவை:
நறுக்கிய சௌசௌ துண்டுகள் - ஒரு கப்  ஊறவைத்து, வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப்  தயிர் - கால் கப்  பச்சை மிளகாய் - ஒன்று  பச்சரிசி, துவரம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சௌசௌவுடன் உப்பு சேர்த்து வேகவைக்கவும். அரிசியுடன் துவரம்பருப்பு சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். கொண்டைக்கடலையுடன் வேகவைத்த சௌசௌ, அரைத்த விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். சௌசௌ ஆறியதும் தயிர், தாளித்த கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.

 *கோதுமை அல்வா*

தேவை:
கோதுமை, நெய் - தலா 250 கிராம்  சர்க்கரை - 750 கிராம்  முந்திரி - 20  ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்  ஜாதிக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  சிவப்பு ஃபுட் கலர் - அரை டீஸ்பூன்.

செய்முறை:
கோதுமையை 24 மணி நேரம் ஊறவைத்து அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும். அதை அரை மணி நேரம் தெளியவைக்கவும். மேலே மிதக்கும் நீரைக் கொட்டிவிடவும். அடிகனமான பாத்திரம் அல்லது இரும்பு வாணலியில் சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இளம் பதத்தில் பாகு காய்ச்சவும். அதனுடன் கோதுமைப் பால், ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து இடையிடையே நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது முந்திரி சேர்த்து இறக்கவும்.

விறகு அடுப்பில் செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.

 *பூண்டு - மிளகாய்ப் பொடி*

தேவை:
காய்ந்த மிளகாய் - 15  தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன்  பூண்டு - 10 பல்  நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு -  தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய், தனியா சேர்த்து வறுத்து எடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். பிறகு பூண்டு சேர்த்து விட்டு விட்டு அரைத்தெடுக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

 *கோதுமை கேசரி*

தேவை:
கோதுமை மாவு, கோதுமை ரவை - தலா ஒரு கப்  சர்க்கரை - 2 கப்  காய்ச்சாத பால் - 3 கப்  நெய் - அரை கப்  முந்திரி, திராட்சை - தலா 1  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  சிவப்பு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு கோதுமை மாவு, கோதுமை ரவையைத் தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவிடவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் காய்ச்சி, கோதுமை மாவைச் சேர்த்துக் கலக்கவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீருடன் உப்பு, ஃபுட் கலர், கோதுமை ரவை சேர்த்து, மூடி வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, பால் - கோதுமை கலவை, சர்க்கரை சேர்த்து இடையிடையே நெய்விட்டுக் கிளறி, கிளறும்போதே நடுவில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். கோதுமை கேசரி தயார்.

 *மிளகாய்ப் பொடி நூடுல்ஸ்*

தேவை:
வேகவைத்த நூடுல்ஸ் - ஒரு கப்  காய்ந்த மிளகாய் - 10  உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்  தனியா (மல்லி), பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நல்லெண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, பெருங்காயத்தூள் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும். அத்துடன் அரைத்த பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு நூடுல்ஸைச் சேர்த்துக் கிளறவும். மேலே நெய்விட்டுக் கலந்து இறக்கவும்.

 *தக்காளி சீஸ் புலாவ்*

தேவை:
தரமான பச்சரிசி - 2 கப்  தக்காளி - 300 கிராம்  வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 4 (நீளவாக்கில் நறுக்கவும்)  பூண்டு - 15 பல்  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  ஏலக்காய், கிராம்பு பட்டை துண்டு - தலா 4  பிரியாணி இலை - ஒன்று  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 3 டீஸ்பூன்  சீஸ் துருவல் - 100 கிராம்  புதினா - சிறிதளவு  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பூண்டு, இஞ்சியை நசுக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டுத் தோல் நீக்கி அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தக்காளிச் சாறு, இரண்டு கப் தண்ணீர், உப்பு, அரிசி சேர்த்துக் கிளறி, மூடி போட்டு வேகவிடவும். நடுவில் இருமுறை கிளறி, வெந்ததும் கரம் மசாலாத்தூள், புதினா, சீஸ் துருவல் சேர்த்து, நெய்விட்டுக் கிளறி இறக்கவும்.

 *பாம்பே ஜிலேபி*

தேவை:
மைதா மாவு - கால் கிலோ  சர்க்கரை - முக்கால் கப்  கெட்டித்தயிர் - 2 டேபிள்ஸ்பூன்  ரோஸ் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்  சிவப்பு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்  உப்பு - ஒரு சிட்டிகை  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மைதா மாவு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து வடை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். அதனுடன் எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். கெட்டியான துணியில் அல்லது பாலித்தீன் கவரின் நுனியில் சிறு துளை போடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைத் துணி (அ) பாலித்தீன் கவரில் ஊற்றி ஜிலேபி போல பிழிந்து இரு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். இதைப் பாகில் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும்.

 *வேர்க்கடலை ஊறுகாய்*

தேவை:
பச்சை வேர்க்கடலை - கால் கிலோ  காய்ந்த மிளகாய் -  50 கிராம்  புளி - 50 கிராம்  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்  வெந்தயம் - அரை டீஸ்பூன்  நல்லெண்ணெய் - 100 மில்லி  கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். மிளகாயுடன் புளி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் 50 மில்லி எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடலையைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை குறைவான தீயில் வதக்கி, பெருங்காயம் - வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கலந்து இறக்கவும். மீதமுள்ள எண்ணெயை மிதமாகச் சூடு செய்து மூழ்கும் அளவுக்குச் சேர்க்கவும். ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் சேகரிக்கவும்.

 *குலாப் ஜாமூன்*

தேவை:
பால் - 2 லிட்டர்  சர்க்கரை - ஒரு கிலோ  மைதா மாவு - 200 கிராம்  ஏலக்காய்த்தூள் (அ) ரோஸ் எசென்ஸ் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - தேவையான அளவு  சமையல் சோடா - 2 சிட்டிகை.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும். அத்துடன் மைதா மாவு, சமையல் சோடா சேர்த்து மிருதுவாகப் பிசைந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி இளம்பாகு பதம் வந்ததும் இறக்கவும். பாகில் பொரித்த ஜாமூன்கள், எசென்ஸ் அல்லது ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு ஊறவிட்டுப் பரிமாறவும்.

 *சேனைக்கிழங்கு கோலா*

தேவை:
சேனைக்கிழங்குத் துருவல் - அரை கிலோ  தோலுரித்த சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 5 பல் (நசுக்கவும்)  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்  சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  பொட்டுக்கடலை, கடலைப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்  பொடியாக நறுக்கிய புதினா, கறிவேப்பிலை தலா - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் சேனைக்கிழங்குத் துருவலைச் சேர்த்து வதக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுப் பொட்டுக்கடலை, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்தெடுக்கவும். சேனைத் துருவலுடன், வறுத்த பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய்த் துருவல், கசகசா, சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், புதினா, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, சேனைக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கிப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். (எண்ணெய் குறைவாகக் காய்ந்தால் கோலா உடைந்துவிடும். அதிகம் காய்ந்தால் உள்ளே வேகாது).

 *எள் சாக்லேட் பால்ஸ்*

தேவை:
கறுப்பு எள் - 200 கிராம்  வேர்க்கடலை - 100 கிராம்  பொடியாக நறுக்கிய பேரீச்சை, திராட்சை - தலா 50 கிராம்  செமி ஸ்வீட்டன்ட் சாக்லேட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  பொடித்த வெல்லம் (அ) கருப்பட்டி - 200 கிராம்  உருக்கிய நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  ஏலக்காய் - 4.

செய்முறை:
வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும். அதனுடன் வேர்க்கடலை, பேரீச்சை, திராட்சை, சாக்லேட் துருவல், வெல்லம், நெய், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றவும். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

 *எள் - கொண்டைக்கடலை சாதம்*

தேவை:
உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்  கறுப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன்  வேகவைத்த கறுப்புக் கொண்டைக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  புளி - சிறிதளவு  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் எள், புளி, காய்ந்த மிளகாயைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே கறிவேப்பிலை, எள் பொடி, கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறவும். வாழைக்காய், உருளைக்கிழங்கு சிப்ஸ் உடன் பரிமாறலாம்.

 *கொள்ளுச் சுண்டல்*

தேவை:
கொள்ளு - ஒரு கப்  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  காய்ந்த மிளகாய் - ஒன்று  சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கவும்)  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் கொள்ளுப் பயறைச் சேர்த்து வறுத்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் கொள்ளுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி மூன்று அல்லது நான்கு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கொள்ளு, கரம் மசாலாத்தூள், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 *முழு உளுந்துத் துவையல்*

தேவை:
தோலுடன் கூடிய உளுந்து - 3 டேபிள்ஸ்பூன்  கடலைப்பருப்பு, தனியா (மல்லி), தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  பூண்டு - 3 பல்  கறிவேப்பிலை - சிறிதளவு  புளி - சிறிதளவு  காய்ந்த மிளகாய் - 6  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனுடன் புளி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்தெடுக்கவும்.

 *ராகி ரோல்*

தேவை:
ராகி மாவு (கேழ்வரகு மாவு) – ஒரு கப்  அரிசி மாவு – அரை கப்  பொட்டுக்கடலை - 200 கிராம்  பொடித்த வெல்லம் - 400 கிராம்  தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்  ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  பட்டைத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் பொட்டுக்கடலையைச் சேர்த்து வறுத்து ஆறவைத்துப் பொடிக்கவும். அதே வாணலியில் தேங்காய்த் துருவலுடன் வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். அதனுடன் பொட்டுக்கடலைப் பொடி, ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலக்கவும். ராகி மாவுடன் அரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி நடுவே பொட்டுக்கடலைக் கலவையை வைத்துப் பாய் போல சுருட்டி, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய்விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 *கொத்தமல்லி ஜூஸ்*

தேவை:
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்  உப்பு - ஒரு சிட்டிகை  தேன் - தேவையான அளவு.

செய்முறை:
கொத்தமல்லித்தழையுடன் இஞ்சி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து வடிகட்டவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துக் கலந்து பருகவும்.

 *கறிவேப்பிலை ஊத்தப்பம்*

தேவை:
தோசை மாவு - ஒரு கப்  கறிவேப்பிலை, வேகவைத்த பச்சைப் பட்டாணி - தலா அரை கப்  பச்சை மிளகாய் - 2  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு  பூண்டு - 4 பல்  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கறிவேப்பிலையுடன் பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். மாவுடன் அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைச் சற்று கனமான ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி ஏற்றது.

 *முடக்கத்தான் தோசை*

தேவை:
புழுங்கலரிசி - ஒரு கப்  துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  ஆய்ந்த முடக்கத்தான் கீரை - ஒன்றரை கப்  சீரகம் - அரை டீஸ்பூன்  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியுடன் துவரம்பருப்பைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் கீரை, சீரகம், உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள பூண்டுத் துவையல் சரியான ஜோடி.

 *முருங்கைக்கீரைச் சாறு*

தேவை:
ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப்  சின்ன வெங்காயம் - 8 (இரண்டாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய்த் துருவலுடன் சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கீரை வெந்ததும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சூடான சாதத்துடன் சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.

 *பூண்டுக் கீரை*

தேவை:
முளைக்கீரை - ஒரு கட்டு (ஆய்ந்து கழுவவும்; நறுக்க வேண்டாம்)  பச்சை மிளகாய் - ஒன்று  பூண்டு - 4 பல்  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  சர்க்கரை – கால் டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சர்க்கரையைப் பாத்திரத்தில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். ஆறியதும் அதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, விட்டு விட்டு அரைத்தெடுக்கவும். இதைச் சூடாக்கி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். மிக்ஸிக்குப் பதிலாகக் கீரையை மண் சட்டியில் சேர்த்து மத்தால் கடையலாம்.

 *கிரீன் ரைஸ்*

தேவை:
உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்  புதினா, கொத்தமல்லிதழை - தலா அரை கப்  வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்)  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் -  6 (பொடியாக நறுக்கவும்)
 தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது, சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  நெய் - 2 டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, சோம்புத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு அரைத்த புதினா விழுது, தக்காளி, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவந்ததும் சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே நெய்விட்டுக் கலந்து பரிமாறவும்.

 *பாதாம் அல்வா*

தேவை:
பாதாம்பருப்பு, நெய் - தலா 100 கிராம்  சர்க்கரை - 200 கிராம்  காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி.

செய்முறை:
பாதாம்பருப்பை ஊறவைத்துத் தோல் நீக்கவும். அதனுடன் பால் சேர்த்து அரைத்தெடுக்கவும். வாணலியில் சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துச் சூடாக்கி இளம் பாகு பதம் வரை காய்ச்சவும். அதனுடன் அரைத்த பாதாம் விழுது சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டுகளாக்கவும்.

 *கடலைப்பருப்பு புட்டிங்*

தேவை:
கடலைப்பருப்பு - ஒரு கப்  முந்திரி - 10  தேங்காய்த் துருவல் - கால் கப்  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  பட்டைத்தூள் - அரை டீஸ்பூன்  சர்க்கரை - 2 கப்  காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு
 உப்பு – ஒரு சிட்டிகை  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கடலைப்பருப்புடன் முந்திரி சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், பால் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள், உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்குக் கலக்கவும். இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்விட்டு, இட்லித் தட்டை திருப்பி வைத்து, அதன் மேல் நெய் தடவிய தட்டை வைத்து அதில் மாவைப் பரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும் (20 - 25 நிமிடங்களில் வெந்துவிடும்). ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

 *ஓமப்பொடி*

தேவை:
கடலை மாவு - அரை கிலோ  அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்  ஓமம் - 10 கிராம்  வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஓமத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். கடலை மாவுடன் அரிசி மாவு, வடிகட்டிய ஓம நீர், உப்பு, வெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழிந்து, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:
ஓமப்பொடி சீக்கிரம் வெந்துவிடும். எண்ணெய் அதிகம் காயக் கூடாது.

 *நாரத்தங்காய் சாதம்*

தேவை:
புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு  நாரத்தங்காய் - 3  காய்ந்த மிளகாய் - 3  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவி நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்  கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும். அகலமான தட்டில் சாதத்துடன் 2 டீஸ்பூன் நல்லெண்ணெயைச் சேர்த்து ஆறவிடவும். அதில் நாரத்தங்காயை (பழம் சேர்த்தால் மேலும் நன்றாக இருக்கும்) பிழிந்து சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து மூடி கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றியதும் சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். உருளைக்கிழங்கு ரோஸ்ட் அல்லது கேரட் கிரேவியுடன் பரிமாறவும்.

● 30 #வகை #போண்டா / #வடை●

 ●வெஜிடபிள் போண்டா

தேவையானவை:
(மேல் மாவுக்கு) கடலை மாவு - 1 கப், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு - 1, கேரட் - 1, பீன்ஸ் - 4, பட்டாணி - ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

●தவலை வடை

தேவையானவை:
பச்சரிசி - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது.

●மைசூர் போண்டா

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:
உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.

 ●மசால் வடை

தேவையானவை:
கடலைப்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - அரை கப், புதினா - சிறிது, மல்லித்தழை - சிறிது, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையானது. அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 1, சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் - தலா 2.

செய்முறை:
பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.

 ●மெது போண்டா

தேவையானவை:
கடலை மாவு - 1 கப், டால்டா - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது, முந்திரிப்பருப்பு - 6, ஆப்ப சோடா - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.

 ●கீரை வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், கடலைப்பருப்பு - கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை - 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.

●மங்களூர் போண்டா

தேவையானவை:
மைதா மாவு - 1 கப், சற்று புளித்த தயிர் - அரை கப், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

●பொட்டுக்கடலை வடை

தேவையானவை:
பொட்டுக்கடலை - 1 கப், பச்சரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

●தாளிச்ச போண்டா

தேவையானவை:
புழுங்கலரிசி - 1 கப், பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப், பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு நைஸாக அரையுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் அரித்தெடுங்கள்.

●கல்கண்டு வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - கால் கப், கல்கண்டு - ஒன்றேகால் கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக ஆட்டுப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.

●கார்ன் போண்டா

தேவையானவை:
சோளம் - 2, மைதா - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - ருசியான, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:
சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கண்ணிமைப்பதற்குள் பறந்துவிடும் இந்த கார்ன் போண்டா.

●புதினா- - மல்லி வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - முக்கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், புதினா - அரை கட்டு, மல்லித்தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்.

●பாசிப்பருப்பு போண்டா

தேவையானவை:
பாசிப்பருப்பு - 1 கப், துருவிய சுரைக்காய் - அரை கப், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.

●ஜீரா வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைஸாக அரையுங்கள். மாவு மெத்தென்று இருக்க வேண்டும். உப்பு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டி எடுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்து கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுங்கள். இதே போல எல்லா மாவையும் செய்து, பரிமாறுங்கள். குழந்தைகளைக் கவரும் வடை இது.

●கேசரி போண்டா

தேவையானவை:
(கேசரிக்கு) ரவை - அரை கப், சர்க்கரை - 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி - 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சிகப்பு கலர் - சிறிது. (மேல் மாவுக்கு) மைதா - ஒன்றரை கப், பால் - அரை கப், ஆப்ப சோடா - 1 சிட்டிகை, உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் கேசரி செய்துகொள்ளவேண்டும். அதற்கு, ஒரு டீஸ்பூன் நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் ஒன்றரை கப் தண்ணீரைச் சேருங்கள். அத்துடன் சிகப்பு கலரை சேருங்கள். நன்கு கொதிக்கும்போது ரவையை சேர்த்து நன்கு கிளறுங்கள். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா, தேவையான அளவு பால், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கேசரி உருண்டைகளை இதில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த கேசரி போண்டா.

●புளிப்பு கார வடை

தேவையானவை:
கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8, புளி - சிறிய உருண்டை, பெருங்காயம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.

●மெதுவடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், வடித்த சாதம் - 1 கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.

●உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை:
கடலை மாவு - 1 கப், ஆப்ப சோடா - 1 சிட்டிகை, ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

●ஸ்பெஷல் வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சுத்தமாக தண்ணீரில்லாமல் வடியுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து மெல்லிய வடைகளாக தட்டி, எண்ணெயில் கொள்ளுமளவு போடுங்கள். நடுத்தர தீயில் நன்கு மொறு மொறுப்பாகவும் உள்ளே மெத்தென்றும் வேக வைத்து எடுங்கள்.

 ●கலவை பருப்பு வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சரிசி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை:
பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

●வெங்காய வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) - அரை கப், கறிவேப்பிலை - சிறிது, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறு வடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.

 ●ஜவ்வரிசி போண்டா

தேவையானவை:
ஜவ்வரிசி - 1 கப், நன்கு புளித்த தயிர் - 1 கப், கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், பொரித்த கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.

●கார போண்டா

தேவையானவை:
பச்சரிசி - அரை கப், புழுங்கலரிசி - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பருப்பை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

●தயிர்வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - அரை கப், புளிக்காத புது தயிர் - 1 கப், பால் - கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, மல்லித்தழை - சிறிது, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி - (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய் - தேவையான அளவு, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு - 4, பச்சை மிளகாய் - 2, சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள். உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்). அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

●கோஸ்வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப், பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

●ரச வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு. ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் - 2 கப், புளித் தண்ணீர் - அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) - அரை கப், பழுத்த தக்காளி - 1, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, பெருங்காயம் - அரை டீஸ்பூன். பொடிக்க: மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).

 ●இனிப்பு போண்டா

தேவையானவை:
ரவை - முக்கால் கப், பச்சரிசி மாவு - கால் கப், பொடித்த வெல்லம் - 1 கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).

 ●சாம்பார் வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா - 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள். சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

 ●பருப்பு போண்டா

தேவையானவை:
கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - சிறிது, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு, பூண்டு - 5 பல். அரைக்க: சோம்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:
பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து எடுங்கள். எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.

இட்லி மாவு போண்டா

தேவையானவை:
இட்லி மாவு - 2 கப், சின்ன வெங்காயம் - 1 கப், பச்சை மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைபருப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:
எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்து வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.



*30 வகை மொறுமொறு தோசை

பனீர் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய பனீர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பனீரை துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் கொத்துமல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சைமிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும். சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்கவைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.

பாலக் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பாலக் எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து வைக்கவும். 5 மணி நேரமாவது புளிக்கவேண்டும். புளித்து பொங்கியதும் தோசைகளாக வார்க்கவும். கீரையில் வழவழப்பு இருப்பதால் உளுந்தை குறைத்துப் போடவேண்டும். வித்தியாசமான மாலை டிபன், இந்த தோசை.

முருங்கைக்கீரை அடை

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி - கால் கப், புழுங்கலரிசி - கால் கப், துளிரான முருங்கைக்கீரை - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: பருப்பு வகை, அரிசி, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்பு, அரிசி, மிளகாய் இவற்றுடன் பெருங்காயம், உப்பு, தேங்காய்துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் வதக்கி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து, ஒன்றாகக் கலந்து அடைகளாக சுட்டெடுக்கவும்.

குறிப்பு: அடைகளை சுடும்பொழுது அதன் நடுவில் சிறு ஓட்டை போட்டு அதிலும் சற்று எண்ணெய் விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். இவ்வாறு செய்வதால் அடையின் உட்புறத்திலும் நன்றாக வேகும். பின்னர் திருப்பிப் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும். முருங்கைக்கீரையை வதக்கிப் போடுவதால் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.

நவதானிய தோசை

தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கொள்ளு - கால் கப், சோயா - கால் கப், வெள்ளை சோளம் - கால் கப், எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு.

 செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

கேழ்வரகு வெல்ல தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், வெல்லத்தூள் - அரை கப், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், துருவிய முந்திரி - ஒரு டீஸ்பூன், நெய் - சுட்டெடுக்க தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: தண்ணீரை விருப்பம்போல சிறிது கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.

கல்தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - 3 கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் அரைத்த மாவை தோசைகளாக சற்று தடிமனாக வார்க்கவும். இதுதான் கல்தோசை! இதில் புளிப்பிருக்காது. இதற்கு தொட்டுக்கொள்ள பச்சைமல்லி துவையல் மிகவும் சுவையாக இருக்கும்.

பச்சைமல்லி துவையல்: நன்கு கழுவி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 கப், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, புளி - கொட்டைப்பாக்களவு, உப்பு - தேவையான அளவு.. எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். இந்த பச்சை மல்லி துவையலுக்கும் கல்தோசைக்கும் செம காம்பினேஷன்!

கோல் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும், உளுத்தம்பருப்பையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறியவற்றை மிகவும் நைஸாக இல்லாமல் சற்று முந்தைய பதத்தில் அரைக்கவும். ஒரு இரவு புளிக்கவைத்து, மறுநாள் அதில் மிளகு-சீரகத்தூள், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்க்கவும். கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, தடிமனான தோசைகளாக சுட்டெடுக்கவும். தோசைக்கல்லில் எண்ணெயை லேசாக தடவி வார்த்தாலே போதும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். இந்த தோசை சற்று தடியாக மெத்தென்று, சாப்பிட ருசியாக இருக்கும்.

மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், நறுக்கிய பழத்துண்டுகள் (ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, மாதுளை, பப்பாளி) - ஒரு கப், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து பழத்துண்டுகளையும் உப்பையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். (உப்பு சேர்ப்பதால் சுவை கூடும்). அரைத்த மாவை மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும். இதில் காரம் வேண்டும் என விரும்புபவர்கள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கலாம். இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு என எல்லா சுவைகளும் இணைந்து, அமர்க்களமாக இருக்கும் இந்த தோசை.

முத்து தோசை

தேவையானவை: பச்சரிசி - அரை கப், ஜவ்வரிசி - ஒரு கப், புளித்த தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கொத்துமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசையை புளித்த தயிரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அந்த மாவுடன் ஜவ்வரிசி கலவையை தயிரோடு சேர்த்து, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியையும் சேர்த்து தோசைகளாக ஊற்றவும். சற்று நிதானமாக வார்த்தெடுக்க வேண்டும். வயதானவர்கள் கூட சாப்பிடலாம். முத்து முத்தாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த தோசை, உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

கலர்ஃபுல் தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிகவும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - ஒரு கப், பொடியாக துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக துருவிய முள்ளங்கி (அல்லது) பெரிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக துருவிய பீட்ரூட் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை இரண்டு மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மாவை நான்கு பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு காயை சேர்க்கவும். சற்று தடிமனான சிறு தோசைகளாக தனித்தனியாக சுட்டெடுத்து, நான்கு கலர் தோசைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எள்ளு மிளகாய்ப் பொடி நன்றாக இருக்கும். எள்ளு மிளகாய்ப் பொடி: ஒரு கப் எள்ளை வெறும் வாணலியில் பொரியும் வரை வறுத்து எடுக்கவும். கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கால் கப் உளுத்தம்பருப்பு, கால் கப் கடலைப்பருப்பு, 6 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான உப்பு, வறுத்த எள்ளு சேர்த்துப் பொடிக்கவும்.

அவல் தோசை

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், புளித்த மோர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்குக் கரைத்து, நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும்.

பச்சை மொச்சை தோசை

தேவையானவை: பச்சை மொச்சை பருப்பு - 2 கப், பச்சரிசி - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி, பச்சை மொச்சை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து தோசைகளாக வார்க்கவும். சக்தியும் சுவையும் நிரம்பிய தோசை இது.

தேங்காய் தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய தேங்காய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும். இந்த தோசையை சுடச்சுட சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுமையான சுவையே. விருப்பப்பட்டவர்கள் சிறிது சர்க்கரையை மாவில் சேர்த்து வார்க்கலாம்.

வெண்டைக்காய் தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழகொழப்பாக இருக்கும். ஆனால் தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்கவரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.

கம்பு தோசை

தேவையானவை: கம்பு - 2 கப், புழுங்கலரிசி - அரை கப், பச்சரிசி - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கம்பை தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி இரண்டையும் சேர்த்து ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த கம்பு, அரிசி, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் கொத்துமல்லியை கலந்து தோசைகளாக வார்க்கவும்.

பூசணி தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், வெள்ளைப் பூசணியின் சதைப் பகுதி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பூசணிக்காயின் உட்புறம் உள்ள பகுதியில் விதைகளை எடுத்து விட்டு, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு அரிசி, பருப்பு, பூசணித் துண்டுகள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து 5 மணி நேரம் புளிக்கவைக்கவும். பிறகு தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு வேகவைக்கவும். இந்த தோசை வெயில் காலத்துக்கு மிகவும் சிறந்தது. உளுந்து விலை அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில், இதுபோன்ற தோசைகளை செய்து அசத்தலாம். இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை துவையல் சூப்பர் ஜோடி. பச்சை துவையல்: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - கொட்டைப் பாக்களவு, காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பெருங்காயம், புளி, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும்.

 மசால் தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப், பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு.

செய்முறை: அரிசி வகை, பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நைஸாக அரைத்து, உப்பு போட்டுக் கரைத்து, 10 மணி நேரம் புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம். தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும். பிறகு உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து மடித்து கொடுக்கலாம். இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை. நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும். ஹோட்டல் தோசை போன்று அருமையாக இருக்கும்.

 ரவா தோசை

தேவையானவை: வறுத்த ரவை - 2 கப், அரிசிமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை - எல்லாம் சிறிதளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, புளித்த மோர் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: புளித்த மோருடன் சிறிது தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து அதில் வறுத்த ரவை, அரிசிமாவு, மைதாமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு, மிளகு, சீரகம் இவற்றைத் தாளித்து மாவில் கொட்டி, பெருங்காயத்தூள் சேர்த்து மிகவும் மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு: மாவை ரொம்ப ஊற விடாமல் தோசை வார்க்க வேண்டும். மாவு ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது. விருப்பப்பட்டவர்கள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மாவில் சேர்த்து ‘ஆனியன் ரவா தோசை’ வார்க்கலாம்.

தவல் தோசை

தேவையானவை: அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - அரை கப், உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப்.

செய்முறை: அரிசியை சிறு ரவை போன்று உடைத்து வைத்துக்கொள்ளவும். அதில் புளித்த தயிர் ஊற்றி ஊறவைக்கவும். மூன்று பருப்புகளையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறவைத்த பருப்புடன், தேங்காய், உப்பு, சீரகம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்து ரவை கலவையில் சேர்க்கவும். மாவு சற்று கெட்டியாகத்தான் இருக்கவேண்டும். பெருங்காயத்தையும் சேர்க்கவும். நெய், சிறிது எண்ணெய் இரண்டையும் காயவைத்து கறிவேப்பிலை யைப் போட்டு மாவில் கொட்டவும். பிறகு, அடிகனமான வாணலியில் மாவை ‘பன்’ போன்று ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மேலே மூடி விடவும். சற்று கனமாக இருப்பதால் மூடினால்தான் மாவு உள்ளே வேகும். அடுப்பை நிதானமாக எரிய விடவேண்டும். பின்னர் மாவு மேற்புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு சில நிமிடங்களில் எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள கறிவேப்பிலை சட்னி வாட்டமாக இருக்கும்.

கறிவேப்பிலை சட்னி: வதக்கிய கறிவேப்பிலை - ஒரு கப், வறுத்த உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், புளி - கொட்டைப் பாக்களவு, உப்பு - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5. எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

சேமியா தோசை

தேவையானவை: சேமியா - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித்த தயிர் - கால் கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நைஸாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். சேமியாவை தயிரில் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஊறவைத்த சேமியா, அரைத்த அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங் காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் திட்டமான பக்குவத்தில் கரைத்து தோசைகளாக வார்க்கவும். அளவாக எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த தோசைக்கு அதிக எண்ணெய் விடக் கூடாது.

பிரண்டை தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பிரண்டை (பிஞ்சாக இருக்கவேண்டும்) - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மீண்டும் அரைக்கவும். மாவு பொங்கப் பொங்க அரைபட்டதும் வழித்து, உப்புப் போட்டுக் கரைத்து, ஒரு இரவு முழுக்க புளிக்க வைக்கவும். பிரண்டைக்கு லேசான அரிக்கும் தன்மை இருப்பதால், மாவு புளித்தால்தான் தோசை நன்றாக இருக்கும். இந்த தோசை வாயுத்தொல்லைக்கு மிகவும் நல்லது.

மைசூர்பருப்பு தோசை

தேவையானவை: மைசூர்பருப்பு - 2 கப் (கேசரி கலரில் இருக்கும்), பச்சரிசி - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். முதலில் அரிசியைப் போட்டு அரைத்து, சிறிது நேரங்கழித்து பருப்பைப் போடவும். இரண்டும் சேர்ந்து நைஸாக அரைபட்டதும் எடுத்து, உப்பு போட்டுக் கரைத்து மாவை 5 மணி நேரம் புளிக்கவைக்கவும். காரம் விரும்புபவர்கள் 4 காய்ந்த மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு இந்த தோசை மிகவும் நல்லது.

பொடி தோசை

தேவையானவை: பச்சரிசி - 3 கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. பொடி செய்ய தேவையான பொருட்கள்: தனியா, கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரைடீஸ்பூன், எள்ளு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, துருவிய கொப்பரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை (பொடி): முதலில் எள்ளை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மற்ற பொருள்களையும் சிவக்க வறுத்து கடைசியாக கொப்பரையை போட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும் (பருப்பு சூட்டிலேயே கொப்பரை வறுபட்டுவிடும்). ஆறியவுடன், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தோசை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து மூன்றையும் சேர்த்தே 3 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக அரைத்தெடுக்கவும். உப்பு போட்டுக் கரைத்து ஒரு நாள் இரவு புளிக்க வைக்கவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை வார்த்து உடனேயே மேலே பொடியை பரவலாக தூவி, கரண்டியில் எண்ணெய் தொட்டு மேலே லேசாக தடவிவிட வேண்டும். அடுப்பை மீடியமாக எரிய விட வேண்டும். இந்த தோசையை திருப்பிப் போடக் கூடாது. அப்படியே எடுத்துப் பரிமாறவேண்டும்.

வெந்தய தோசை

தேவையானவை: வெந்தயம் - ஒரு கப், பச்சரிசி - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெந்தயம், அரிசி, மிளகாய்.. மூன்றையும் 5 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக அரைக்கவும். உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மாவு 5 மணி நேரம் புளிக்கட்டும். இது சிறிது கசப்பாகத்தான் இருக்கும். (ஆனால் புளித்தால் கசப்பு அவ்வளவாகத் தெரியாது). வெயில் காலத்துக்கு ஏற்ற தோசை. சூடாக வார்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

கோதுமை ரவை தோசை

தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உப்பு, எண் ணெய் - தேவை யான அளவு.

செய்முறை: கோதுமை ரவை, அரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். ஊற வைத்த தண்ணீரை வீணாக்காமல் அப்படியே அரைக்கவும் (திட்டமான தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்). நார்ச்சத்து மிக்க இந்த தோசை, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அரைத்து ஒரு மணி நேரத்திலேயே இந்த தோசையை வார்த்து சாப்பிடலாம்.

மிக்ஸ்டு வெஜிடபிள் தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், காய்கறிகள் (கேரட், பெரிய வெங்காயம், குடமிளகாய், பட்டாணி, பீன்ஸ் போன்றவை) நறுக்கியது - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லா வற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி, பிறகு அரிசியையும் தண்ணீர் வடித்துச் சேர்த்து நைஸாக அரைக்கவும். வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம் (கவனிக்க.. தண்ணீர் அதிகமாகிவிடக் கூடாது. மாவு கெட்டியாக இருந்தால்தான் தோசை அழகாக வார்க்க வரும்). கல்லில் தோசையை வார்த்து, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போடவும். குழந்தைகளுக்கு எல்லா காய்கறிகளையும் கொடுத்த திருப்தி இருக்கும்.

தவலை அடை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - 4 டீஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பு, சீரகம் மூன்றையும் மிஷினில் கொடுத்து சிறு ரவையாக உடைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து 2 கப் தண்ணீர் ஊற்றி தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் ரவை கலவையை கொட்டி கிளறி இறக்கவும். ரவை அரை வேக்காடு இருந்தால் போதும். பின்னர் சிறு அடைகளாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு, தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சுட்டெடுக்கவும். அட்டகாசமான மாலைச் சிற்றுண்டி இது.

கடலைமாவு தோசை

தேவையானவை: கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - அரை கப், எலுமிச்சம்பழம் - 1, பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவு, அரிசிமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சை சாறையும் விட்டு, தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக்கொண்டு மெல்லிய தோசைகளாக வார்க்கவும். எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

கொச்சிமேனி கீரை தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கொச்சிமேனிக் கீரை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசி, பருப்பு, நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். 3 மணி நேரம் புளிக்க வைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இந்தக் கீரை புளிப்புச் சுவை உடையது. வைட்டமின் சத்து நிறைந்தது.

குறிப்பு: இந்தக் கீரை கிடைக்காத இடங்களில், புளிச்ச கீரை அல்லது முடக்கத்தான் கீரையை உபயோகிக்கலாம். சுவையாக இருக்கும்.

நெய் ரோஸ்ட்

தேவையானவை: பச்சரிசி - 3 கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 6 மணி நேரம் புளித்த பிறகு தோசை ஊற்றலாம். அடுப்பை மீடியமாக எரியவிட்டு, தோசைக்கல்லில் நல்ல சூடு ஏறியதும், நடுவில் மாவை ஊற்றி கை நடுக்காமல் தட்டை கரண்டியால் வட்டமாக பரப்பிக்கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும். சுற்றிலும் சிறிது நெய்விட வேண்டும். திருப்பிப் போட வேண்டும். பிறகு மொறு மொறுப்பாக எடுக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள எந்த சட்னி ஆனாலும் சூப்பர்.


 30 வகை சூப்பர் டிபன்!

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகள்..
 பூரி லட்டு, தேங்காய் பூரண பூரி போன்றவை பண்டிகைகளுக்கேகூட செய்யக் கூடியவை. கல்தட்டை, வண்டிச்சக்கரம் போன்றவை, நம் பாட்டி காலத்துப் பாரம்பரிய சிற்றுண்டிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபன் செய்யுங்கள்! ரசித்து, ருசித்து, பரிமாறி மாலை நேரத்தைக் கொண்டாடுங்கள்!

 ************************************

பூரி லட்டு

தேவையானவை:
பூரி - 20, சர்க்கரை - ஒரு கப் (பொடித்தது), முந்திரிப்பருப்பு - சிறிதளவு.

செய்முறை:
பூரியை ‘மொரமொர’வெனப் பொரித்து சிறுதுண்டுகளாக்கி, மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும். இதில் சர்க்கரை தூளையும், வறுத்த முந்திரி துண்டுகளையும் சேர்த்து லட்டு மாதிரி பிடிக்க வேண்டும். குறிப்பு: ரவையை மெஷினில் கொடுத்து, மாவு போல் அரைத்து வைத்துக் கொண்டு, அந்த மாவில் பூரி செய்தும், பூரி லட்டு செய்யலாம். பண்டிகைகளுக்குச் செய்வதற்கேற்ற, அருமையான லட்டு இது.

************************************

 சேமியா அடை

தேவையானவை:
வறுத்த சேமியா - ஒரு கப், கெட்டி தயிர் - ஒரு கப், அரிசிமாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய், மல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:
சேமியாவை தயிரில் (தண்ணீர் விடாமல்) 20 நிமிடம் ஊறவிடவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதக்கி ஊறும் சேமியாவில் சேர்த்துக் கொள்ளவும். இதில் மிளகாய்தூள், உப்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, மெதுவாக பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான்.. சுவையான சேமியா அடை ரெடி. சேமியா பிடிக்காத பிள்ளைகளைக்கூட, விரும்பிச் சாப்பிட வைக்கும் இந்த அடை. .

************************************

அவல் கிச்சடி

தேவையானவை:
கெட்டி அவல் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு. வறுத்து

பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 4.

செய்முறை:
அவலை தேங்காய்ப் பாலில் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நிலக்கடலையை வறுத்துப் பொடிக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து.. பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.

************************************

கோஸ் பீடா பஜ்ஜி

தேவையானவை:
முட்டைகோஸ் இலைகள் - ஒரு கப், கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால் கப், மிளகாய்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சமையல் சோடா (தேவையானால்) - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை:
கோஸ் இலையை நன்றாக சுத்தம் செய்து, நடு நரம்பை எடுத்துவிட்டு, நான்காக (பீடா மடிப்பது போல்) மடித்து, ஒரு கிராம்பை நடுவில் குத்தி விடவும். கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், சமையல் சோடா சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். மடித்த முட்டைகோஸ் பீடாக்களை இதில் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சட்டென்று செய்யக்கூடிய, இன்ஸ்டன்ட் டிபன் இது.

************************************

இட்லி 65

தேவையானவை:
இட்லி - 5, கடலைமாவு - சிறிதளவு, மிளகாய்தூள் - சிறிதளவு, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, உப்பு - சுவைக்கேற்ப, சீரகம் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, இஞ்சி- பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் சாறாக அடிக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும். இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பிறகு, வேறொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, வெங்காயத் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால், அதுதான் சுவையான ‘இட்லி 65’. இதன் நிறமும் மணமும் பார்ப்பவரை உண்ணத் தூண்டும். ‘எங்கே பிடிச்சீங்க இந்த ரெசிபியை?’ என்பார்கள் சாப்பிட்ட தோழிகள். அத்தனை ருசியான டிபன்!

************************************

ஜவ்வரிசி புலாவ்

தேவையானவை:
ஜவ்வரிசி - ஒரு கப், தக்காளி - 1, தேங்காய் துருவல் _ அரை கப், சீரகம் - சிறிதளவு, பெரிய வெங்காயம் - 1, பீன்ஸ்-கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்றாக, கெட்டியாக அரைக்கவும். அதை வடிகட்டி, அந்த சாறில் ஜவ்வரிசியை 20 நிமிடம் ஊற விடவும். (சாறு கெட்டியாக, ஜவ்வரிசி மூழ்கும் அளவு இருந்தால் போதும்). ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி, தேவையான உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதங்கியதும், ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி, நறுக்கிய மல்லித்தழையைத் தூவி இறக்கவும். இதை சூடாக சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும்.

************************************

வண்டி சக்கரம்

தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம், மிளகு _ தலா சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - அரை டீஸ்பூன். நெய் - தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை:
பச்சரிசி, மிளகு, சீரகம், துவரம்பருப்பு.. இவை அனைத்தையும் மெஷினில் கொடுத்து சன்ன ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, தண்ணீர் விட்டு (ஒரு கப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர்) கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் தேவையான உப்பு, அரிசி-பருப்பு ரவை, தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு கிளறு கிளறி, கெட்டியானவுடன் இறக்கவும். ஆறியதும் சிறு அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் சிவப்பாக வரும்வரை நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதற்கு கொத்தமல்லி தொக்கு, தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

************************************

அவல் தோசை

தேவையானவை:
கெட்டி அவல் - ஒரு கப், அரிசிமாவு - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் _ தேவையான அளவு.

செய்முறை:
அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி தொட்டு சுடச்சுட சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்.

************************************

மசாலா கொழுக்கட்டை

தேவையானவை: அரிசிமாவு - ஒரு கப், தண்ணீர் - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நன்கு பழுத்த தக்காளி - 3, மிளகாய்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, கரம் மசாலாதூள் - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, சோம்பு அல்லது சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தாளிப்பதற்கு, மல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை:
அடுப்பில் தண்ணீர் கொதித்தவுடன் இறக்கி அரிசிமாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொதிக்கும் நீரில் தூவி, உப்பு சிறிதளவு போட்டு கிளறவும். சிறிது ஆறியவுடன் கையினால் நன்றாக, கட்டியில்லாமல் தேய்த்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அடித்து சாறெடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் சோம்பு (அ) சீரகம் தாளித்து, பிறகு, வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி சாறை சேர்த்து, கொதிக்க விடவும். பிறகு, கரம் மசாலாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதித்ததும், வேகவைத்துள்ள உருண்டைகளையும் போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும். மணக்க மணக்க மசாலா கொழுக்கட்டை ரெடி. கிரேவியுடன் இருக்கும் இந்தக் கொழுக்கட்டையை ஒரு பிடி பிடிக்க, குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ரெடியாக இருப்பார்கள்.

************************************

உருளைக்கிழங்கு அப்பளம்

தேவையானவை:
பெரிய உருளைக்கிழங்கு - அரை கிலோ, மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, உருளை கலவையை சிறு சிறு அப்பளங்களாக தட்டி, வெயிலில் நன்றாக உலர்த்தி எடுக்க வேண்டும். பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும்போது, பொரித்துக் கொடுத்தால் குஷியாக சாப்பிடுவார்கள். பயணங்களுக்கும் பொரித்து எடுத்துசெல்ல ஏற்ற அயிட்டம்.

************************************

தூள்வடகம் உப்புமா

தேவையானவை:
அரிசி வடகம் (முறுக்கு வடகம்) - 10, மோர் _ ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை:
வடகத்தை சிறு துண்டுகளாக ஒடித்துக்கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி.. பிறகு, 20 நிமிடம் மோரில் ஊறவிடவும் (வடகத்தூள் மூழ்கும் வரை மோர் விட்டால் போதும்). பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை போட்டு வறுத்து, ஊறின வடகத்தை போட்டு வதக்கி, கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கவும். அவசரத்துக்கு செய்ய அருமையான உப்புமா. குறிப்பு: வடகத்திலேயே உப்பு இருப்பதால், தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கலாம்.

************************************

கல் தட்டை

தேவையானவை: அரிசிமாவு - ஒரு கப், கோதுமைமாவு - கால் கப், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், நிலக்கடலை (தோல் நீக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: எல்லாவற்றையும் நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகாய்தூள் சேர்க்கலாம். பிறகு, ஒரு துணியிலோ அல்லது பிளாஸ்டிக் பேப்பரிலோ எண்ணெய் தடவி, மெல்லிய தட்டைகளாக தட்டவும். இதை தோசைக்கல்லில் நான்கு, ஐந்தாகப் போட்டு, இருபுறமும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிவக்கவிட்டு எடுக்கவும். ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். வழக்கமாக தட்டையை எண்ணெயில்தான் பொரித்தெடுப்போம். தோசைக்கல்லில் வேகவைப்பதால், இதன் சுவை புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். பாட்டி காலத்துப் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்தத் தட்டை.

************************************
கார்ன் சுண்டல்

தேவையானவை: சோளமணிகள் - ஒரு கப், பச்சை மிளகாய் _ 2, இஞ்சி - ஒரு துண்டு, மாங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப, கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
சோளத்தை உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய் கீறிப் போட்டு வதக்கி, வெந்த சோளமணிகளை போட்டு வதக்கவும். இதில் சிறிதளவு இஞ்சி, மாங்காய் துருவல், தேங்காய் துருவல் போட்டு கிளறி, மல்லித்தழை தூவிப் பரிமாறவும். சுவையான டிபன் என்பதோடு, ஆரோக்கியத்துக்கும் துணை செய்யும் டிபன் இது.

 ************************************

மரவள்ளி பால்கறி

தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - 1, தேங்காய்ப்பால் (கெட்டியான, முதல் பால்) - ஒரு கப், இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். முதல் தேங்காய்ப்பாலை தனியாக வைக்கவும். இரண்டாம் பாலில் மரவள்ளிக்கிழங்கை வேக விடவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய் கீறிப் போட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும், பாலில் வேகவைத்த மரவள்ளியை இதில் போட்டு கிளறவும். கடைசியாக, முதல் தேங்காய்ப்பாலை சேர்த்துக் கலந்து (கொதிக்க விடாமல்), மல்லித்தழை தூவி இறக்கவும். இதை சாதம், சப்பாத்தி போன்றவற்றுக்கு சைட்-டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம். காலை உணவாகவும் சாப்பிடலாம். சத்து மிகுந்தது. சர்க்கரைவள்ளிக்கிழங்கிலும் இதை செய்யலாம். ************************************கோதுமைமாவு குழிப்பணியாரம்

தேவையானவை: கோதுமைமாவு - ஒரு கப், உருளைக்கிழங்கு - 1 அல்லது 2, பெரிய வெங்காயம் - 1 அல்லது 2, பட்டாணி - கால் கப், மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். கோதுமைமாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டை களை, கோதுமைமாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும். மாலை நேரத்துக்கு சூடாக சாப்பிட ஏற்ற டிபன் அயிட்டம் இது (இதை எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்).

************************************ புழுங்கலரிசி மிக்ஸர்

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், நிலக்கடலை - கால் கப், ஓமப்பொடி (அல்லது) காராபூந்தி - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை:
புழுங்கல் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கடாயில் போட்டு, பொரியும் வரை வறுத்து எடுக்க வேண்டும். நிலக்கடலையை தனியே வறுத்து எடுக்க வேண்டும் (இவை இரண்டுக்குமே எண்ணெய் தேவையில்லை). பிறகு, ஓமப்பொடியோ அல்லது காராபூந்தியோ சேர்த்து, கறிவேப்பிலையை வறுத்துச் சேர்த்து, கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மழைகாலத்துக்கு ஏற்ற ஒரு திடீர் ஸ்நாக். விரைவாக தயாரிக்கலாம். ‘கரகர’வென ருசியாக இருக்கும்.

************************************ வாழைப்பழ பணியாரம்

தேவையானவை: மைதாமாவு - அரை கப், வாழைப்பழம்- 2, தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - இனிப்புக்கேற்ப, ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதாமாவை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாழைப்பழ உருண்டைகளை, மாவு கரைசலில் தோய்த்து, மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பணியாரக் கல்லிலும் வேகவைக்கலாம்.

***********************************

பிண்டி குர்குரே

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, கடலைமாவு - அரை கப், மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் அல்லது அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, மிளகாய்தூள் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காயை காம்பு நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும். அத்துடன் கடலைமாவு, கார்ன்ஃப்ளார் (அல்லது அரிசி மாவு), மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக பிசறி, 10 நிமிடம் வைக்கவும். பிறகு, எண்ணெயைக் காயவைத்து, வெண்டைக்காய்களைப் போட்டு, கரகரவென்று பொரித்து எடுக்க வேண்டும். சில நிமிடங்களில் தயாரிக்கக் கூடிய, வித்தியாசமான சுவை தரும் டிபன், இந்த குர்குரே.

************************************

பப்பட் சமோசா

தேவையானவை:
அப்பளம் (மசாலா பப்பட்) - 10, பெரிய வெங்காயம் - 1, உருளைக்கிழங்கு - 2, எண்ணெய் - பொரிப்பதற்கு, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு அப்பளத்தை எடுத்து நீரில் நனைத்து ஒரு நிமிடம் கழித்து எடுத்து, பிழிந்து, விரும்பிய வடிவில் மடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்து, வெங்காயம், கரம் மசாலாதூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மடித்த அப்பளத்தின் நடுவில் இதை வைத்து, நீர் தொட்டு ஓரங்களை மூடி, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். ஐந்தே நிமிடத்தில் அட்டகாசமான சமோசா ரெடி. குறிப்பு: மதியத்துக்கு செய்த காய்கறிகளையும் நன்றாக மசித்து, இதே போல அப்பளத்தில் வைத்து பொரித்து எடுக்கலாம்.

************************************

கார்ன் பிரெட் டோஸ்ட்

தேவையானவை: மக்காச்சோள மணிகள் (வேகவைத்தது) - ஒரு கப், பிரெட் - ஒரு பாக்கெட், பச்சை மிளகாய் - 3 (விருப்பப்பட்டால்), சர்க்கரை - 2 டீஸ்பூன், அரிசிமாவு (அல்லது) கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யைக் காயவைத்து, அதில் அரிசிமாவு அல்லது கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். அடுப்பில் இருந்து மாவை இறக்கி, அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து, கட்டி இல்லாதவாறு நன்றாக கலக்கவும். மறுபடியும் அடுப்பில் வைத்து, இந்தக் கலவையை பேஸ்ட் ஆகும் வரை கிளறவும். பிறகு, வேக வைத்துள்ள சோளமுத்துக்கள், சர்க்கரை, (தேவையானால்) பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். பிரெட்டை டோஸ்ட் செய்து, இந்தக் கலவையை பிரெட்டின் மேல் பரப்பிக் கொடுக்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடு வார்கள். இரண்டு பிரெட்டுக்கும் நடுவே கார்ன் கலவையை வைத்து, டோஸ்ட் செய்தும் கொடுக்கலாம். பிரெட்டில் ஜாம் மட்டுமே தடவிச் சாப்பிட்டு அலுத்துப்போன குழந்தைகளுக்கு இது மாறுதலான சுவையைத் தரும். சத்துள்ள டிபனும் கூட.

 ************************************

சேவை பக்கோடா

தேவையானவை:
அரிசி சேவை (அல்லது) இடியாப்பம் - ஒரு கப், கடலைமாவு - அரை கப், மிளகாய்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் திட்டமாக நீரை கொதிக்க வைத்து, அரிசி சேவையை அதில் போட்டு மூடிவைத்து, அடுப்பை அணைத்து விடவும். நன்றாக நீரை வடித்த பிறகு, சேவையில் கடலைமாவு, வெங்காயம், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை போட்டு நன்றாகக் கலந்து, சிறிய உருண்டைகளாக கிள்ளிப் போட்டு எண்ணெயில் பொரித்தெடுத்தால்.. மாலைக்கும் மழைக்கும் ஏற்ற, ‘மொறுமொறு’ நொறுக்குத்தீனி தயார்.

************************************

ஓட்ஸ் உப்புமா

தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், நிலக் கடலை - ஒரு டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண் ணெய் - தேவையான அளவு, மல்லித்தழை, கறிவேப்பிலை, கடுகு - தலா சிறி தளவு.

செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சைமிளகாய், நிலக்கடலை சேர்த்து வறுக்கவும். ஓட்ஸையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து.. பிறகு, நன்றாகக் கொதித்த தண்ணீர் ஒரு கப் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறவும்.’

************************************

பிரெட் ஸ்வீட் கச்சோரி

தேவையானவை:
பிரெட் - 5 ஸ்லைஸ்கள், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - சிறிதளவு.

செய்முறை:
சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் எடுத்து, அடுப்பில் ஒரு கடாயில் போட்டு இறுகும்வரை கிளறவும். பிறகு, பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, உடனே நன்றாக பிழிந்து, கைகளால் பிசைந்து, கிண்ணம்போல் செய்யவும். அதன் நடுவில் தேங்காய், சர்க்கரை கலவையை வைத்து மூடி, வடை போல் உள்ளங்கையில் வைத்து தட்டி, தோசை கல்லில் போட்டு, இருபுறமும் நெய்விட்டு சிவந்தவுடன் எடுக்கவும். திடீர் விருந்தாளிகளுக்கு செய்வதற்கு ஏற்ற, திடீர் டிபன் இது. குறிப்பு: கச்சோரியை எண்ணெயில் போட்டுப் பொரித்தும் எடுக்கலாம். தேங்காய் - சர்க்கரையுடன் பொடித்த முந்திரி,பாதாம்பருப்பு சேர்த்து பூரணம் செய்தும் கச்சோரி செய்யலாம்.

************************************

தேங்காய் பூரண பூரி

தேவையானவை: கோதுமை மாவு (அ) மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ரவை - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை:
தேங்காய், ரவை, சர்க்கரை மூன்றையும் பிசறி 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவை நீர் சேர்த்து நன்றாக பிசையவும். (ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்). சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு சிறிய உருண்டையை எடுத்து, குழி போல செய்து அதில் தேங்காய், ரவை, சர்க்கரை கலவையை வைத்து மூடி விடவும். இதை சிறிய மெல்லிய பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம் அல்லது தேங்காய் கொப்பரை துருவலில் கலர் சேர்த்து பூரி மேல் தூவி பரிமாறலாம்.

************************************

கடலை கட்லெட்

தேவையானவை: நிலக்கடலை - அரை கப், உருளைக்கிழங்கு - 1 (பெரியது), பிரெட் - 2 (அ) 3 ஸ்லைஸ்கள், ரஸ்க் (அ) பிஸ்கட் தூள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4 துண்டு, இஞ்சி - ஒரு துண்டு, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கிவிட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் ஒரு நிமிடம் நனைத்து.. பிறகு, தண்ணீரை ஒட்ட பிழியவும். மிக்ஸியில் இஞ்சி, மல்லித்தழை, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு, நீர் விடாமல் கரகரவென்று அரைத்துக் கொள்ளவும். நிலக்கடலையை வறுத்துப் பொடிக்கவும். பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து, விருப்பமான வடிவத்தில் சிறிய அளவில் செய்து, ரஸ்க் அல்லது பிஸ்கட் தூளில் பிரட்டி எண்ணெயில் நிதானமாக பொரித்து எடுக்கவும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.

 ************************************

காக்ரா ரோல்ஸ்

தேவையானவை: மைதா - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன், எள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
மைதாமாவில் சிறிது நீர் விட்டு பிசைந்து கொள்ளவேண்டும். தேவைப்- பட்டால் எண்ணெய் சிறிது சேர்த்துப் பிசையலாம். 2 அல்லது 3 மணிநேரம் ஊறவேண்டும். பிறகு, கடலைமாவு, சிறிதளவு உப்பு, தேங்காய் துருவல், மிளகாய்தூள், எள் சேர்த்து பிசையவும். பிசைந்து வைத்திருக்கும் மைதாவை நீள்செவ்வகமாக இட்டு, இதில் தேங்காய் கலவையை பரப்பி, பாய் போல் சுருட்டி, பத்து நிமிடம் வைத்திருக்கவும். பிறகு, இந்த உருளையை அரை இன்ச் கனத்துக்கு கத்தியால் வெட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

************************************

ரைஸ் கட்லெட்

தேவையானவை:
சாதம் - 1 கப், நிலக்கடலை (வறுத்துப் பொடித்தது) - அரை கப், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை:
நிலக்கடலை பொடி தவிர மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, இதை சிறிய சதுரங்களாக தட்டி, நிலக்கடலை பொடியில் புரட்டி எடுத்து, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். ************************************

சர்க்கரைவள்ளி கிழங்கு வடை

தேவையானவை: சர்க்கரைவள்ளி கிழங்கு - 2, நிலக்கடலை மாவு (வறுத்துப் பொடித்தது) - அரை கப், அரிசிமாவு - சிறிதளவு, மிளகாய்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை: சர்க்கரைவள்ளியை மண் போகக் கழுவி, சுத்தம்செய்து தோல் சீவி, துருவிக் கொள்ளவும். ஒரு கப் துருவலுக்கு கால் கப் நிலக்கடலை பொடி சேர்த்து, சிறிதளவு அரிசிமாவு, உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையானால் தண்ணீர் தெளித்து பிசையவும். பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைபோல் தட்டி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கிலும் இதே முறையில் செய்யலாம்.

************************************

பிஸ்கட் கஸாட்டா

தேவையானவை:
பிரெட் - 4 முதல் 5 ஸ்லைஸ்கள், பிஸ்கட் - 5 முதல் 6 (மாரி பிஸ்கட்), சர்க்கரை (பொடித்தது) - கால் கப், பழத்துண்டுகள் - ஒரு கப், பால் - சிறிதளவு.

செய்முறை:
மிக்ஸியில் பிரெட்களை ஒரு சுற்றுச் சுற்றி தூளாக்கிக் கொள்ளவும். இதேபோல் மாரி பிஸ்கட்களையும் பொடித்துக் கொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு, சர்க்கரை தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை தெளித்து, கரண்டியால் நன்றாக அழுத்தவும். இதை ஃபிரிட்ஜில், சிறு சிறு கிண்ணங்களில் 2 முதல் 3 மணி நேரம் வைத்தால், நன்றாக ‘செட்’டாகி விடும். பரிமாறும்போது, இந்த பிஸ்கட் + பிரெட் கலவை மேல் பழத்துண்டு களை வைத்து பரிமாறவேண்டும். ‘ஜில்’லென்று சூப்பர் ருசி தரும் இந்த கஸாட்டா. குறிப்பு: தேவையானால் சிறிதளவு ஐஸ்கிரீம், டூட்டி-ஃப்ரூட்டி, செர்ரி சேர்த்து பரிமாறலாம். அல்லது கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பழங்கள் கலந்தும் பரிமாறலாம். டிரைஃப்ரூட்ஸ், நட்ஸ் கலப்பது இன்னொரு சாய்ஸ்.

************************************
வாழைப்பழ ஜாம் ரோல்ஸ்

தேவையானவை:
பிஸ்கட் தூள் - ஒரு கப், ஏதாவது ஒரு ஜாம் - 3 டீஸ்பூன், வாழைப்பழம் - 4 (ரொம்பவும் பழுத்திருக்கக் கூடாது).

செய்முறை: வாழைப்பழத்தை நீளவாக்கில் நறுக்கவும். ஜாமில் சிறிது தண்ணீர் சேர்த்து, ஸ்பூனால் கிளறினால் இளகி வரும். வெட்டிய வாழைப்பழ துண்டுகளை, இந்த ஜாமில் தோய்த்து, பிஸ்கட் தூளில் பிரட்டி பரிமாறவும். இரண்டே நிமிடங்களில் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி. சத்தானதும் கூட. குறிப்பு: பிஸ்கட் தூளில், முந்திரி, பாதாம் தூள்களையும்  சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றி அவள் விகடன்.

தொகுப்பு.
  த.புவனாமகேந்திரன்.
   மதி கல்வியகம்.