ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பூண்டு மருத்துவ பலன்கள்


 பூண்டு மருத்துவ பலன்கள்

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் நன்மைகள்!
சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, பூண்டு ஒரு பிரமாதமான உணவுப்பொருள். பலர் அதனை உணவில் சேர்த்துச் சமைக்கிறார்கள், சிலர் அப்படியே  பச்சையாகச் சாப்பிட்டுவிடுகிறார்கள்.

பூண்டைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம்.

அதேபோல், பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின் II ஹார்மோனைத் தடுக்கின்றன.

பூண்டை எப்படிச் சாப்பிடுவது?

ஆறு பூண்டுகளை வறுத்துச் சாப்பிடுங்கள். இதன்மூலம் நம் உடலில் என்னவெல்லாம் நன்மைகள் என்று பாருங்கள்:

* சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும்
* அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும்
* அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும்
* ஆறு முதல் ஏழு மணி நேரம் தாண்டியவுடன், பூண்டு இரத்த நாளங்களில் நுழையும், பேக்டீரியாக்களை எதிர்த்து உடாலுக்கு ஆரோக்கியம் தரும்
* அடுத்த ஒரு மணி நேரத்தில், பூண்டின் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்ளும், இது சிறந்த பாதுகாப்பாகச் செயல்படும்
* அதன்பிறகுதான், பூண்டின் நிஜமான பெரிய பலன்கள் தெரியத்தொடங்கும், இதயம் சார்ந்த பல பிரச்னைகளைப் பூண்டு குணப்படுத்தி உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச்சக்தியைத் தரும், எலும்புகளை வலுவாக்கி, சோர்வைப் போக்கும்

சுருக்கமாகச் சொன்னால், நாள்முழுக்கச் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வதற்கு, தினமும் ஆறே ஆறு வறுத்த பூண்டுகள் போதும்.

சனி, 20 ஜனவரி, 2018

கேபேஜ் பனீர் ரோல்ஸ்



கேபேஜ்  பனீர் ரோல்ஸ்

தேவையானவை:

துருவிய கேபேஜ் (கோஸ்) – ஒரு கப், உருளைக்கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசிக்கவும்), பனீர் (துருவியது) – அரை கப், கொத்தமல்லி இலை – சிறிதளவு, இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பிரெட் தூள் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.

கலவையில் சிறிதளவு எடுத்து நீளவாட்டில் உருட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு



சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மீன் – 10 துண்டுகள்

தக்காளி – 5 சிறியது

சின்ன வெங்காயம் – 15-20 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 10-15 பற்கள்

கறிவேப்பிலை – சிறிது

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி-1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

தாளிக்க:

நல்லெண்ணெய்  – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  பின் அதில் நல்லெண்ணெய்  ஊற்றி சோம்பு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில்  தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து, அதில் மிளகாய் தூள்,சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி,புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.

மீனானது நன்கு வெந்ததும்,  கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு  ரெடி!!!

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)



இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)
                                                                   

தேவையான பொருட்கள்:

இறால் – 250 கிராம் (சுத்தமாக கழுவியது)

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – 25 கிராம்

பூண்டு – 25 கிராம்

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – சிறிது

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

                     முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.

                     பின் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஓரளவு அரைத்து, அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

                     பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

                     பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, வேண்டுமானால் தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.

                    குறிப்பாக, இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது.

                     இறால் பெப்பர் ப்ரை ரெடி!!!

 இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ஸ்பைசி செட்டிநாடு நண்டு மசாலா (spicy chettinad crab gravy)



ஸ்பைசி செட்டிநாடு நண்டு மசாலா (spicy chettinad crab gravy)
                                                                             
தேவையான பொருட்கள்

நண்டு – 6

சீரகம் – அரைத் தேக்கரண்டி

சோம்பு – ஒரு தேக்கரண்டி

பூண்டு – 8 பல்

இஞ்சி – ஒரு துண்டு

வெங்காயம் – 2

நாட்டுத் தக்காளி – 3

மிளகு – ஒரு தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 4

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் வற்றல் முதலியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி  அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்க வேண்டும்.

பிறகு அதில் நண்டை போட்டு நன்றாக கொதி வந்தவுடன்  உப்பு போட்டு மூடி தீயை குறைத்து வைத்து சுருள சுருள கிண்டி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்க வேண்டும்.

ஃபிங்கர் சிக்கன் (finger chicken)



ஃபிங்கர் சிக்கன் (finger chicken)

தேவையான பொருட்கள்:

சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) – 1/2 கிலோ

முட்டை – 1

தயிர்  – 1 கப்

இஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மைதா – 1 கப்

பிரட் தூள் – 1 கப்

உப்பு – 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

பேக்கிங் பௌடர் – 1 டீஸ்பூன்

கேசரி கலர் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் தயிர் , இஞ்சிபூண்டு விழுது,மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

பின் சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

பிறகு ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின் ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர்  கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

பிறகு வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

இப்போது சுவையான  ஃபிங்கர் சிக்கன்  ரெடி!!! இந்த  ஃபிங்கர் சிக்கன் -ஐ சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா (spicy chettinad chicken kuruma)


ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா (spicy chettinad chicken kuruma)
                                                                                   
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 2
துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 8
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
புதினா – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் – 3 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.

ஸ்பெஷல் மட்டன் கிரேவி ( spl mutton gravy)



ஸ்பெஷல் மட்டன் கிரேவி ( spl mutton gravy)
                                                                           
தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)
தக்காளி – 2 (அரைத்தது)
வெங்காயம் – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பட்டை மற்றும் கிராம்பு பொடி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தீயை குறைவில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து தீயை குறைவில் வைத்து, மட்டனைப் போட்டு, 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

மொகல் பிரியாணி (MOGHAL BRIYANI)



மொகல் பிரியாணி (MOGHAL BRIYANI)
                                         
தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ (சிறிதாக வெட்டியது)
பாசுமதி அரிசி – 2 கப்
தயிர் – 1 கப்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1
மிளகு – 6
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – 1
குங்குமப்பூ – 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள மட்டனை போட்டு 2 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 2-3 நிமிடம் வறுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்திருக்கும். மேலும் அதைப் பார்த்தால், கிரேவி போன்று காணப்படும். இவ்வாறு கிரேவி போன்று இருப்பதை எடுத்து, குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

எக் கட்லெட் (egg cutlet)



எக் கட்லெட் (egg cutlet)
                                                   
தேவையான பொருட்கள்:

முட்டை – 5
மிளகாய்தூள் – 1 கரண்டி
மசாலாதூள் – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – அரைக்கிலோ
வெங்காயம் – 1
தேங்காய்பால் – அரை கப்
மிளகுதூள் – 1 தேக்கரண்டி
மைதா – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 250 கிராம்

செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும்.

ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.

அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

மூளை பொரியல் (brain fry)



மூளை பொரியல் (brain fry)
                                                                   
தேவையான பொருள்கள்:

ஆட்டு மூளை – 2
மிளகாய்தூள் – 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணைய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.

* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.

மட்டன் சாப்ஸ் (mutton chops)


மட்டன் சாப்ஸ் (mutton chops)
                                                                   
தேவையான பொருட்கள்:

கறி – 500 கிராம்
பச்சைமிளகாய் – இரண்டு
தனியாதூள்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கறியை நன்றாகக் கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியாதூள் சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும். இவை அனைத்தையும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்றவிட வேண்டும்.

ஒரு நான் ஸ்டிக் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து அதில் கறியைப் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.

சிக்கன் டிக்கா (chicken tikka)



சிக்கன் டிக்கா (chicken tikka)
                                                                     
தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – அரைக் கிலோ (எலும்பில்லாதது)
மிளகு – 15
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 4
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – 6 பல்
குடை மிளகாய் – ஒன்று
தயிர் – ஒரு கப்
ப்ரஷ் க்ரீம் – 3 மேசைக்கரண்டி
கார்ன்ஸ்டார்ச் – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்)
கரம் மசாலாத்தூள் – அரைத் தேக்கரண்டி
ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
வெண்ணெய் – சிறிது
உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து கொண்டு, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில்லாமல் சற்று உலரவிடவும். மிளகினை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினை காம்பு நீக்கின பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து பிறகு மையாக அரைத்துக் கொள்ளவும். 

குடைமிளகாயை கழுவி, விதைகளை நீக்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தயிரினை ஒரு மெல்லியத் துணியில் கட்டித் தொங்கவிட்டு, நீர் எல்லாவற்றையும் வடித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, தயிர், ப்ரஷ் க்ரீம், கார்ன்ஸ்டார்ச், முட்டையின் வெள்ளைக்கரு, நறுக்கின குடைமிளகாய் துண்டுகள், மிளகுத் தூள், ஏலப்பொடி, தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து, ஒன்றாய் கலக்கவும். 

பிறகு அதில் கோழித் துண்டங்களைப் போட்டு நன்கு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்கு ஊறவிடவும். ஒரு சொருகு கம்பியில் கோழித்துண்டங்கள், குடைமிளகாய் துண்டங்கள் என மாற்றி மாற்றி சொருகி, தந்தூரி அடுப்பில் வைத்து கருகாமல் வேகவிட்டு எடுக்கவும்.

சுறா புட்டு (SURA PUTTU)


சுறா புட்டு (SURA PUTTU)
                                 
தேவையான பொருட்கள் :

சுறா மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 1/2 கிலோ
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டு – 25 பல்
இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு
உளுந்து
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

சுறா மீனை சுடு தண்ணீரில் போட்டு மஞ்சள் மற்றும் உப்பு போட்டு வேக வைக்கவும்.
                                               
 நன்றாக வெந்த பின் தோலை உரித்து விட்டு மீனா நன்றாக உதிர்த்து விட்டுக் கொள்ளவும்.
                                               
 பின் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி பின் உதிர்த்து வைத்த மீனையும் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும்.

மிகவும் சுவையான சுறா புட்டு ரெடி.

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி) (ALOO MATAR GRAVY)



ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி) (ALOO MATAR GRAVY)

தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 2 தேக்கரண்டி

2. சீரகம் – அரை தேக்கரண்டி

3. வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது)

4. பூண்டு – 1 தேக்கரண்டி (நறுக்கியது)

5. இஞ்சி – 1 தேக்கரண்டி (நறுக்கியது)

6. பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி

7. தக்காளி – 1 கப் (நறுக்கியது)

8. தண்ணீர் – தேவையான அளவு

9. பச்சை பட்டாணி – 1 கப் (வேகவைத்தது)

10. உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கியது – 1½ கப் (வேகவைத்தது)

11. உப்பு – தேவையான அளவு

12.மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி

13. கரம் மசாலா – ½ தேக்கரண்டி

14. மஞ்சள் – ஒரு சிட்டிகை

15. கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி (நறுக்கியது)

செயல்முறை:

1. ஒரு நான்ஸ்டிக் பானை எடுத்து அதில் எண்ணெயைச் சேர்த்து சூடு படுத்துங்கள்.

2. எண்ணெய் சூடானவுடன் அதில் சீரகம் சேர்க்க வேண்டும். சீரகம் வெடிக்கத் தொடங்கியவுடன் அதில் நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

3. வெங்காயத்தின் நிறம் தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும்

4. இப்போது, பூண்டு, இஞ்சி, தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டை சேர்க்கவும். உங்களுடைய தக்காளி வேக சிறிது நேரம் பிடிக்குமெனில், கலவையுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடுங்கள்.

5. இப்போது, கலவையை நன்கு கலக்கி, தக்காளியை நன்கு மசித்து விடுங்கள். கலவை நன்கு சமைத்த பிறகு அதில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.

6. இப்போது கலவையில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

7. இப்போது, கலவையுடன் ஒரு கப் தண்ணீற் சேர்த்து கறியை நன்கு கொதிக்க விடவும்.

8. உருளைக்கிழங்குகளை லேசாக மசித்து விடவும். இவ்வாறு செய்தால் கறி தடிமனாக மாறிவிடும்.

9. இப்போது, உங்களுடைய ஆலுமட்டர் சப்ஜி பறிமாறத் தயாராக உள்ளது. அடுப்பை அணைத்த பின்னர் ஆலுமட்டர் கறியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடவும்.

10. துண்டாக்கப்பட்ட கொத்தமல்லியை ஆலுமட்டர் கறியின் மீது தூவி அதை அழகுபடுத்தவும்.

கடாய் பன்னீர் (kadaai paneer)



கடாய் பன்னீர் (kadaai paneer)

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)

செய்முறை:

முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாய்/வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பன்னீர் ரெடி!!!

பன்னீர் பட்டர் மசாலா



பன்னீர் பட்டர் மசாலா


தேவையான பொருட்கள்:

பன்னீர் – 2 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)

வெங்காயம் – 2 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 4

குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

பச்சை பட்டாணி – 1 கப்

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

பட்டை – 1 இன்ச்

பட்டர் – 3 டேபிள் ஸ்பூன்

பால் – 1 கப்

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டர் போட்டு காய்ந்ததும், பட்டையைப் போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் அனைத்து மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

பிறகு அந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் குடைமிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

காய்கறிகள் வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, பால் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவினால், பன்னீர் பட்டர் மசாலா ரெடி!

சீசுவான் சில்லி பேபி கார்ன் (SCHEZWAN CHILLI BABY CORN)



சீசுவான் சில்லி பேபி கார்ன் (SCHEZWAN CHILLI BABY CORN)

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 1/4 கப்

குடைமிளகாய் – 1/4 கப்

பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

சோள மாவு – 1 டேபிள்

ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

சீசுவான் சாஸ் செய்வதற்கு…

வரமிளகாய் – 30

பூண்டு – 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

வினிகர் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சீசுவான் சாஸ் செய்யும் முறை:

முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்யும் முறை:

முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின், அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்ன்துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பேபி கார்ன் ரெடி!!!

செட்டிநாடு காளான் பிரியாணி (chettinad mushroom briyani)


செட்டிநாடு காளான் பிரியாணி (chettinad mushroom briyani)


தேவையான பொருட்கள்:

காளான் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)

புதினா – 1/4 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் – 1/2 கப்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லி தூள் – 2 டீஸ்பூன்

சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 3

இலவங்கம் – 2

கிராம்பு – 5

செய்முறை:

முதலில் காளானை கழுவ வேண்டும். பின் அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை போட்டு, தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து, வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியானது நன்கு வதக்கியதும், காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயம், குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி!!!

சமையலறை - வீட்டுக் குறிப்புகள்



சமையலறை - வீட்டுக் குறிப்புகள்

1. கம்பளி உடைகளின் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும்.

2. கறுத்து மங்கலாகிப் போன அலுமினியப் பாத்திரங்களை எலுமிச்சை சாற்றினால் துடைத்தால், பளீர் என்று ஆகும்.

3. மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோதுமைக் கஞ்சி குடித்து வந்தால்,வயிற்று வலி வராது.

4. ஓமத்தை அரைத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கடுமையான தலைவலி நீங்கும்.

5. வெந்தயக் கீரையை சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு குறையும்.

6. காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று,தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்.

7. வாரம் ஒரு முறை பாகற்காயை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் மடிந்து விடும்.

8. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ,அடிக்கடி இளம் முருங்கக் கீரையை உண்டு வந்தால்,பால் அதிகம் சுரக்கும்.

9. சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை,வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம்.

10. ஆம்லேட் மேல் உப்பு,மிளகுத் தூளுடன் சீரகப் பொடியையும் தூவினால்,சுவையாக இருக்கும்.

11. பாயசம் நீர்த்துப் போனால்,அதில் வாழைப் பழத்தை பிசைந்து போட்டு,சிறிது தேனும் கலந்து விட்டால் சுவையான பாயசம் தயார்.

12. நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்,இளமையாக இருக்கலாம்.

13. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை, அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

14. வாழைப் பூவை நறுக்கிய பின் வினிகர் கரைத்த நீரில் கை கழுவினால்,கறை நீங்கி விடும்.

15. அசைவ உணவு சாப்பிட்ட பின் சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

அருமையான வீட்டு டிப்ஸ்



அருமையான வீட்டு டிப்ஸ்

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது.

ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

ஸ்பெஷல் பொங்கல் குழம்பு...


ஸ்பெஷல் பொங்கல் குழம்பு...

பொங்கல் பண்டிகைக்கு ஏழு வகையான காய்கறிகளை (ஒற்றைப்படையில்) வைத்து குழம்பு செய்வது வழக்கம். இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரிக்காய், உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
மைசூர் பருப்பு - 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 6 தேவையான அளவு
நெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க

பெருங்காயம் - 1 துண்டு
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
மிளகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்

தாளிக்க

கடுகு - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
நிலக்கடலை - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


செய்முறை :

துவரம் பருப்பு, மைசூர் பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சேர்த்து சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள்.

புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.

பூசணி, பரங்கி, கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து கொள்ளவும்.

புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.

நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து குழம்பில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக்குழம்பு தயார்.

இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.

திங்கள், 1 ஜனவரி, 2018

தில்லையில் செய்யபடும் திருவாதிரை களி


தில்லையில் செய்யபடும் திருவாதிரை களி

இந்த திருவாதிரை தரிசனம் என்பது மிக பிரசித்தம் பெற்ற இடம் சிதம்பரம் நடராஜர் கோ‌யில் தான்.

சிதம்பரத்தைதான் தில்லை என்று அன்புடன் கூறுவர்.

இதை தில்லை கோயிலின் பிரசாதம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு கொண்டு இருந்த வம்சாவளியில் வந்த திரு. சண்முக ஐயர் அவர்களிடம் பெற்றது தான் இந்த தில்லையில் ஆரூத்திரா தரிசனத்திற்கு கிடைக்கும் பிரசாத செயல்முறை ஆகும்.

இதற்கு பசும்பால் மற்றும் உறைந்து போன பசுநெய்யை பயன்படுத்தினால் தான் அசல் சுவை கிடைக்கும்.

நாட்டு சர்க்கரை கிடைக்கவில்லை எனில் மண்டை வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.

ஜனவரி 1 மற்றும் 2 , 2018  ஆம் தேதி இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஆரூத்திரா தரிசனத்திற்கு உங்கள் இல்லங்களில் இந்த பிரசாதம் படைக்கபடவேண்டும்.

இந்த பிரசாதத்தை உங்கள் வீடுகளில் படைத்து திருவாசகத்தை மனம் உருக பாடினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை.

தேவையான பொருட்கள்
புது பவானி பச்சரிசி 1 கப்
பாசிபருப்பு 2 மேஜைக்கரண்டி
பசும்பால் 4 கப் + 2 கப்
தண்ணீர் 1/2 கப்
மருந்து சேர்க்கபடாத நாட்டுசர்க்கரை 1/2 கப்
ஆவின் பால்கோவா 100 கிராம் + 3 மேஜைக்கரண்டி பசும்பால்
டைமண்ட் கற்கண்டு 2 மேஜைக்கரண்டி
பசுநெய் 1/4 கப் + 2 மேஜைக்கரண்டி
ஏலக்காய் 1
முந்திரி பருப்பு 14

செய்முறை
1. இப்பொழுது ஒரு அகன்ற கெனமான பாத்திரத்துல 4 கப் பசும்பாலை எடுத்து அடுப்புல சிறுதீயிலேயே வைத்து 2 கப்பாக சுண்ட வைக்க வேண்டும்.

2. அதற்கு அடுத்தபடியாக 2 கப் பாலை மற்றுமொரு கெனமான அகன்ற பாத்திரத்துல எடுத்து கொண்டு அடுப்புல சிறுதீயிலேயே வைத்து 1 கப்பாக சுண்ட வைக்க வேண்டும்.

3. அதற்கு பிறகு அரிசியை மிக்ஸியில் சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றிகொள்ள வேண்டும் அதாவது அரிசியை ஒன்றுக்கு இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும்.

4. இப்பொழுது பிரஷர் குக்கரில் 1 மேஜைக்கரண்டி பசு நெய்யை ஊற்றி அதில் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அதை எடுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

5. இப்பொழுது அந்த காய்ந்த நெய்யில் அதில் பாசிபருப்பு மற்றும் அரிசி குருனையை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக சிறுதீயிலேயே வதக்கவும்.

6. பிறகு அதில் சுண்ட வைத்துள்ள 2 கப் பசும்பாலை பிரஷர் குக்கரில் ஊற்றவும். அதில் தண்ணீரையும் ஊற்றவும். நன்றாக கொதிக்க விட்டுகோங்க பின்னர் பிரஷர் குக்கரின் மூடியை மூடி குறைந்தபட்சம் மூன்று விசில் விட்டுகோங்க.

7. பிறகு வடச்சட்டியில் 1 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை சிறையிலேயே வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

8. பிரஷர் குக்கரில் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக பருப்பு மத்தை கொண்டு நன்றாக மசித்து  கொள்ள வேண்டும்.

9. இப்பொழுது மசித்து வைத்துள்ள சுண்ட பாலை ஒரு கப் ஊற்றி நன்றாக பருப்பு மத்தை கொண்டு மசித்து கொள்ளவும்.

10. இப்பொழுது அடுப்பை மறுபடியும் பற்றவைத்து சிறுதீயிலேயே வைத்து விடவும் , அதில் 2 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதில் பொடியாக உள்ள நாட்டு சர்க்கரையை சேர்த்துகோங்க நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

11. நாட்டுசர்க்கரை நன்றாக கரைந்து வேகவைத்துள்ள பால் , பருப்பு மற்றும் சாதத்துடன் குலைய குலைய நன்றாக கலந்து கரையுமாறு கிளறவும்.

12. இப்பொழுது மற்றுமொரு இரண்டு மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதனுடன் பொடி செய்யப்பட்ட டைமண்டு கற்கண்டு சேர்த்துகோங்க அடுப்பு சிறுதுயிலேயே வைத்துகோங்க நன்றாக 3-4 நிமிடங்கள் கிளற வேண்டும். கவனம் தேவை அடிபிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

13. இப்பொழுது  சூடான 3 மேஜைக்கரண்டி பசும்பாலில் ஆவின் பால்கோவை கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

14. கரைத்து வைத்துள்ள பசும்பால் கலந்த பால்கோவாவை பிரஷர் குக்கரில் ஊற்றவும் சில நொடிகள் நன்றாக கிளறவும். பிறகு அதனுடன் மேலும் 2 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி மறுபடியும் நன்றாக கிளறவும்.

15. கடைசியாக 4 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பை போட்டு நன்றாக கிளற வேண்டும்.