புதன், 29 ஜனவரி, 2020

30 வகை அசத்தல் குழம்பு!


30 வகை அசத்தல் குழம்பு!

( No Onion...No Garlic)

”தினமும் காய்கறிகளை போட்டுத்தான் குழம்பு வைக்கணும்னு அவசியம் இல்ல. அது இல்லாமலே, அதேசமயம் அதுல கிடைக்கற அத்தனை சத்துக்களும் கிடைக்கற மாதிரியான குழம்புகளை வைக்கறதுக்கு வழி இருக்கறப்ப… எதுக்காகக் கவலைப்படறீங்க?” என்று தெம்பு கூட்டும் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன், காய்கறிகளே இல்லாமல் 30 வகை ரெசிபிகளை இங்கே பரிமாறுகிறார்.

”இதுல வெங்காயம், பூண்டு இது ரெண்டையும் சேர்க்கவே இல்ல. விருப்பப்பட்டவங்க, அதைச் சேர்த்தும் தயார் செய்துக்கலாம். காய்கறி ஒரு நாள், அது இல்லாம மறுநாள்னு குழம்பு வச்சுக் கொடுங்க. வயிறார புகழ்வாங்க வீட்டுல உள்ளவங்க” என்று உத்தரவாதமும் கொடுக்கிறார்.

அப்புறம் என்ன.. வகை வகையா குழம்பு வச்சு அசத்துங்க தோழிகளே!

✪துவரம்பருப்பு மசியல்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, புளி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி, அதனை தாளிப்பில் சேர்க்கவும். அது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்து மசித்த துவரம்பருப்புக் கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வாசனை வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

✪ வெந்தய மசியல்

தேவையானவை: வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு கலவை – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளி – 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, வறுத்தவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு… கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி, பரிமாறவும்.

✪வத்தக் குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… தோல் உரித்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, வடிகட்டிய புளிக் கரைசல் விட்டுக் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், பொடித்த வெல்லம் போட்டுக் கலந்து, கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.

இந்தக் குழம்பு இரண்டு நாட்கள் வரை கூட நன்றாக இருக்கும்.

 ✪மாந்தோல் குழம்பு

தேவையானவை: மாங்காய்த் தோல் (உப்பு போட்டு ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தது) – கால் கப், புளி – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன். கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் மாங்காய்த் தோலை போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, ஊற வைத்த மாங்காய்த் தோல், பொடித்த வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

✪ பொரிச்ச குழம்பு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

✪வெந்தயக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – சிறு துண்டு, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன். உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து, வடிகட்டி தாளிப்பில் சேர்க்கவும். மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, அதில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

✪மோர்க் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், புளிப்பில்லாத கடைந்த மோர் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சுண்டைக்காய் – 15, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பிறகு, பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி… இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும்.

  ✪மிளகு குழம்பு

தேவையானவை: மிளகு – கால் கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், அரிசி – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் அரிசியை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு… புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்.

  ✪பாசிப்பருப்பு மசியல்

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், நறுக்கிய தக்காளி – கால் கப், பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 2, புளி – 50 கிராம், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி… புளிக் கரைசல், உப்பு சேர்த்து கலக்கவும். அது கொதித்ததும், வேக வைத்து மசித்த பாசிப்பருப்பைப் போட்டு மீண்டும் ஒருமுறை கொதிக்க விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

  ✪சுண்டைக்காய் வற்றல் குழம்பு

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் – கால் கப், தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சுண்டைக்காய் வற்றலை போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த வெல்லம் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

  ✪கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை: கறிவேப்பிலை – ஒரு கப், புளி – 50 கிராம், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு போட்டு வறுத்து ஆற வைக்கவும். வறுத்தவற்றுடன் கறிவேப்பிலை, புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… அரைத்த கறிவேப்பிலை கலவையைப் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் இறக்கி விடவும்.

  ✪மொச்சைக் குழம்பு

தேவையானவை: காய்ந்த மொச்சை – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே மொச்சையை ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த மொச்சையில் பாதியளவு சேர்க்கவும். பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும். மீதியிருக்கும் மொச்சையுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக நன்கு கலந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இதனை சாதத்துடன் சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

  ✪மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் – அரை கப், புளி – 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். மணத்தக்காளி வற்றலை போட்டு, நன்றாகப் பொரிந்ததும்… சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, புளிக் கரைசலை விட்டு, பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.
குழம்பு தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவையோ அல்லது கடலை மாவையோ கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.

  ✪பச்சை மோர்க்குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மோர் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியற்றை சிவக்க வறுக்கவும். ஆறியதும் கொப்பரைத் துருவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மோரில் அரைத்த கலவையைப் போட்டு நன்கு கலக்கவும். கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மோர்க் கலவையில் கொட்டிக் கலக்க.. அடுப்பில் வைக்காமலேயே மோர்க்குழம்பு தயார்!

  ✪கடலைக் குழம்பு

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைக்கவும். குக்கரில் துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெள்ளை கொண்டைக்கடலையை தனியாக வேக வைக்கவும். புளியை ஊற வைத்துக் கரைத்து, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த வெள்ளைக் கொண்டக்கடலை, பெருங்காயத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மசித்த துவரம்பருப்பை போட்டுக் கொதிக்க விட்டு… எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

  ✪தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை: தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – கால் கப், கீறிய பச்சை மிளகாய் – 2, புளி, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு மிளகு, கீறிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பு, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, இரண்டாம் தேங்காய்ப்பாலை விடவும். அது, கொதித்து கெட்டியாக வந்ததும் முதல் தேங்காய்ப்பாலை விட்டு, உடனே இறக்கி விடவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

  ✪அப்பளக் குழம்பு

தேவையானவை: உளுந்து அப்பளத் துண்டுகள் – கால் கப், புளி – 50 கிராம், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பருப்பு வகைகள், பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு வடிகட்டிய புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், அப்பளத் துண்டுகளைப் போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விட்டு, பொடித்த வெல்லம் சேர்த்து இறக்க… அப்பளக் குழம்பு தயார்.

  ✪வேர்க்கடலை காரக் குழம்பு

தேவையானவை: வேர்க்கடலை – கால் கப், தோலுரித்த சின்ன வெங்காயம் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் – கால் கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, வெந்தயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில், வறுக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிவக்க வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து.. சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும், வேக வைத்த வேர்க்கடலை, மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரசைல் சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாகக் கொதித்ததும், அரைத்த கலவையைப் போட்டுக் கலந்து, பொடித்த வெல்லம் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

  ✪பாகற்காய் வற்றல் குழம்பு

தேவையானவை: பாகற்காய் வற்றல் – அரை கப், புளி – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

  ✪சுக்குப்பொடி குழம்பு

தேவையானவை: சுக்குப்பொடி – கால் கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், தேங்காய்ப்பால் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு… கெட்டியானதும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து இறக்கவும்.

  ✪தாமரைத்தண்டு குழம்பு

தேவையானவை: தாமரைத்தண்டு – கால் கப், புளி – 50 கிராம், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, தாமரைத் தண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, கெட்டியாகக் கரைத்து வடிக்கட்டிய புளிக் கரைசல் விட்டுக் கலந்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம் போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்க… தாமரைத் தண்டு குழம்பு ரெடி!

  ✪பக்கோடா குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு. எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பக்கோடாவுக்கு: கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பக்கோடாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து… புளிக் கரைசல், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போட்டு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கவும்.

  ✪காராமணி குழம்பு

தேவையானவை: காராமணி, தேங்காய்ப்பால் – தலா கால் கப், புளி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 5, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுத்து ஆற வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அதனுடன் வேக வைத்து, ஆற வைத்த காராமணி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று அரைத்து, புளிக்கரைசலுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

  ✪பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை – உருண்டைக்கு: துவரம்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு: புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை – உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்துகொள்ளவும்.

குழம்பு: 2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி… அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் போட்டு அடிகனமான காடாயில் விட்டு, அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாகப் போடவும். அவை வெந்து மேலே வந்ததும்… அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொதிக்க விடவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருந்தால், உருண்டைக்குள் உப்பு- காரம்-புளிப்பு சேர்ந்து சுவையாக இருக்கும். குழம்பு கெட்டியானதும் அடுப்பில்இருந்து இறக்கவும்.

  ✪பச்சைப்பயறு குழம்பு

தேவையானவை: பச்சைப்பயறு – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: பச்சைப்பயறை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். ஒரு கப் நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். பச்சை மிளகாய், சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு, ஒன்றிரண்டாக மசித்த பயறைச் சேர்த்துக் கலக்கவும். வாசனை வந்தவுடன், அரைத்த கலவை, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும்.

  ✪பாகற்காய் வற்றல் பொரிச்ச குழம்பு

தேவையானவை: பாகற்காய் வற்றல் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு, எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து… ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்தெடுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

  ✪கத்திரி வற்றல் குழம்பு

தேவையானவை: கத்திரி வற்றல் – கால் கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரில் கத்திரி வற்றலை அரை மணி நேரம் ஊற விடவும். குக்கரில், துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து… புளிக் கரைசல், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு போட்டுக் கலந்து கொள்ளவும். கொதித்தவுடன், கத்தரி வற்றல், சேர்த்து வேக விடவும். வாசனை வந்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும்.

  ✪பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை – உருண்டைக்கு: துவரம்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடைந்த மோர் – ஒரு கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை – உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

குழம்பு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும், தயாராக இருக்கும் உருண்டைகளை அதில் போடவும். அவை வெந்ததும் மேலே வரும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் துவரம்பருப்புக் கலவையை சேர்த்து… அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். மோரில் தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, உருண்டைகள் கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் கொட்டி கலந்து பரிமாறவும்.

சனி, 25 ஜனவரி, 2020

30 வகை எண்ணெய் இல்லாத சமையல்


 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்

”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!

எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்!

அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வடை என்று பொழுதுவிடிந்தால்… பொழுதுபோனால், எண்ணெயோடுதான் வாழ்க்கை! விளைவு… கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர், சர்க்கரை என டாக்டரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்கிற முதல் வார்த்தையே “சாப்பாட்டுல எண்ணெயைக் குறைச்சுடுங்க” என்பதுதான்.

”எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியுமா?” என்று அலறாதீர்கள். இங்கே, பிரபல ‘சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம் உங்களுக்கு பரிமாறிஇருக்கும் 30 வகை சமையலுமே ‘ஆயில் ஃப்ரீ’தான்! கூடவே அவர் சொல்லும் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு …

“இந்த வகை சமையலுக்காக தாளிக்கறப்ப, அடுப்பை மிதமான தீயில வச்சுருக்கணும். அப்பதான் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு மாதிரியான பொருட்கள் கருகாம பொரிஞ்சு வரும்.”

எண்ணெய் செலவுக்கு மட்டுமல்ல… மருத்துவச் செலவுக்கும் குட்பை சொல்வோமா?!

 *1 டயட் சாம்பார்*

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி… 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிய விட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்… டயட் சாம்பார் ரெடி!

 *2 வாழைத்தண்டு கூட்டு*

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வாழைத்தண்டு (மீடியம் சைஸ்) – ஒன்று, வெங்காயம் (நறுக்கிக் கொள்ளவும்) – 1, பச்சை மிளகாய் – 3, காய்ச்சிய பால் – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, அதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, நசுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

 *3 உசிலி*

தேவையானவை: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏதாவது ஒரு வகை காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கலந்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் போட்டு 10-15 நிமிடம் வேக வைத்து, இறக்கவும். ஆறியதும், அந்த உருண்டைகளை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒருமுறை சுற்றி எடுத்தால்… உதிராக வரும். நறுக்கிய காய்கறியுடன் உப்பு சேர்த்து (தேவைப்பட்டால்), குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். உதிர்த்த பருப்புடன் வேக வைத்த காய்கறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். வெறும் கடாயில், கடுகு பொரித்து சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

 *4 கீரை மசியல்*

தேவையானவை: அரைக்கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 5, பச்சை மிளகாய் – 1, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். ஆய்ந்த கீரையுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், திறந்து நன்கு மசித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வேக வைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்த்துக் கலந்தும் பரிமாறலாம்.

இதேபோல் முளைக்கீரை, சிறுகீரையிலும் செய்யலாம்.

 *5 பருப்பு ரசம்*

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், புளிக் கரைசல் – கால் கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: மிளகு, சீரகம் – தலா ஒன்றரை டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 3 பல்.

செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக் கரைசல், பெருங்காயத்தூள், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து… கொதிக்க விடவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு பொடிக்கவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்து சிவக்கப் பொரித்து, துவரம்பருப்புத் தண்ணீர் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது, பொடித்த பொடியையும் சேர்க்கவும். கூடவே, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாற வும்.

 *6 வாழைக்காய் பொடிமாஸ்*

தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி, வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும். ஆற வைத்து, தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். மிதமான தீயில் கடாயை வைத்து கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை சேர்த்து… துருவிய வாழைக்காயை சேர்த்துக் கிளறவும். பொடித்த பொடி, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எண்ணெய் சேர்க்காததால், அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்து சமைக்கவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

 *7 அவல் தோசை*

தேவையானவை: பச்சரிசி – ஒன்றரை கப், புழுங்கல் அரிசி, அவல் – தலா அரை கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். அவலை தனியாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், எல்லாவற்றையும் ஒன்றாக்கி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க விடவும். புளித்ததும், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு விட்டு, ஊத்தப்பம் போல் வார்த்து மூடியால் மூடவும். வெந்ததும், திருப்பிப் போடாமல் அப்படியே எடுக்க… அவல் தோசை ரெடி! இதேபோல் ஒவ்வொரு அவல் தோசையையும் தயார் செய்யவும்.

 *8 இளந்தோசை*

தேவையானவை: இட்லி மாவு – ஒரு கப், தண்ணீர் – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தோசை மாவை விட்டு, மெல்லிய தோசையாக வார்க்கவும். பிறகு, மூடியால் மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். இதேபோல், ஒவ்வொரு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இந்த தோசைகள், வெள்ளை நிறம் மாறாமல் மிக மெல்லியதாக இருக்கும்.

 *9 பொடி இட்லி*

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவில், மினி இட்லிகளை தயார் செய்து கொள்ளவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து, கடுகு போட்டு பொரிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். இட்லி மிளகாய்ப் பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு… தண்ணீர் விட்டுக் குழைத்து, மினி இட்லிகளைப் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பொரித்த கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

 *10 தயிர் சாண்ட்விச்*

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, புளிக்காத தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும். பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸலைஸால் மூடவும். இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும். தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

 *11 மல்டி வெஜிடபிள் குழம்பு*

தேவையானவை: நறுக்கிய பரங்கிக்காய், கத்திரிக்காய், அவரை, காராமணி, மொச்சை, வாழை, முருங்கைக்காய் கலவை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 8 பல், புளி – 50 கிராம், தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், வெந்த யம் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்த தும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறி கலவையைச் சேர்த் துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து… காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

 *12 வெஜ் சூப்*

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும்.

 *13 மசாலா சென்னா*

தேவையானவை: வெள்ளை சென்னா – ஒரு கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சென்னாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சென்னாவுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மூடியைத் திறந்து, தண்ணீரை வடிக்கவும். கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலக்க… மசாலா சென்னா தயார்!

 *14 செட்டிநாட்டு பருப்புத் துவையல்*

தேவையானவை: துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, புளி – கொட்டைப்பாக்களவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசி யாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டு பருப்புத் துவையல் ரெடி!

 *15 பருப்பு சாதம்*

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும், கழுவிய துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு, அரிசி, தோலுரித்து நசுக்கிய பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து குழைய வேக வைத்து இறக்கவும்.

இதற்கு மோர்க்குழம்பு, பொடிமாஸ் சிறந்த சைட் டிஷ்.

 *16 கலவைக்காய் குருமா*

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் கலவை – 2 கப், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – கால் கப், பாதாம் – 10, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பூண்டு× – 2 பல், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று.

செய்முறை: நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்கி இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து… வேக வைத்த காய்கறி கலவையுடன் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒருமுறை கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

 *17 காய்கறி போளி*

தேவையானவை: கேரட் துருவல் – கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், பால் – அரை கப், பட்டை – 2 துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத் திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து… அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து… உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும். அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

 *19 பனீர் டிக்கா*

தேவையானவை: பனீர் – 200 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பனீரை, மீடியம் சைஸ் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதனுடன், கொடுத்துள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலந்து… 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, 4-5 பனீர் கலவை துண்டுகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி எடுக்க… பனீர் டிக்கா ரெடி!

 *20 பாலக் பனீர்*

தேவையானவை: பாலக் கீரை (அ) பசலைக் கீரை, வெந்தயக் கீரை – தலா ஒரு கட்டு, பனீர் – 200 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரைகளை ஆய்ந்து, அலசிக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கலந்து நன்கு மசித்துக் கொள்ளவும். நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்த்து ஒருமுறை லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

 *21 காலிஃப்ளவர் மசாலா*

தேவையானவை: காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து, அதில் நறுக்கிய காலிஃப்ளவரை நன்கு கழுவவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய காலிஃப்ளவர், நறுக்கிய வெங்காயம், தக்காளியை கடாயில் சேர்த்து வேகவிடவும். சில நிமிடங்கள் கழித்து, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கிளறவும். கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

 *22 மினி ரவா இட்லி*

தேவையானவை: ரவை, புளிக்காத தயிர் – தலா ஒரு கப், சேமியா – 1 டேபிள்ஸ்பூன், ஃப்ரூட் சால்ட், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி விழுது – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடுகு சேர்த்து பொரிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, ரவை சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும், ஃப்ரூட் சால்ட் நீங்கலாக மற்றவற்றை எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அந்த ரவைக் கலவையில் தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் விட்டு, சூடாகும் நேரத்தில், ரவை மாவில் ஃப்ரூட் சால்ட் சேர்த்து அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் விட, அது பொங்கி வரும். மாவை மீண்டும் நன்கு கலந்து, மினி இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

 *23 முட்டைகோஸ் ரொட்டி*

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், காய்ச்சிய பால் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன்.

ஸ்டஃப் செய்வதற்கு: முட்டைகோஸ் துருவல் – அரை கப், வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும். முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!

பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் இட்டு சற்று கனமாகத் தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.

 *23 கிரீன் கொழுக்கட்டை*

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு

அரைக்க: நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட் களை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, தேங்காய் பாலில் கரைத்து வடிகட்டவும். அந்தப் பாலை அடுப்பில் வைத்து சூடாக்க… நுரை கட்டி வரும். அப்போது அரிசி மாவைக் கொட்டி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். அதிலிருந்து, கொஞ்சம் மாவு எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி… ஆவியில் வேக வைக்க, கொழுக்கட்டை ரெடி!

 *24 வாழைத்தண்டு கோசம்பரி*

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி – தலா கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், வேக வைத்த சென்னா (அ) ஸ்வீட் கார்ன் – அரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மாதுளம் முத்துக்கள் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வாழைத்தண்டை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும், கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

எளியமையான இந்த ரெசிபி, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

 *25 பேங்கன் கூட்டு*

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், கத்திரிக்காய் – 5, உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 1, தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, சோம்பு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். இவை எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்கு வெந்ததும், புளிக் கரைசல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு, வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

 *26 தால் இட்லி*

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல், கேரட் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று வகை பருப்புகள், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்த மாவுடன், தேங்காய் துருவல், கேரட் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை, இட்லித் தட்டுகளில் விட்டு இட்லிகளாக வேக வைத்து, சூடாகப் பரிமாறவும்.

இதற்கு கார சட்னி சிறந்த காம்பினேஷன்.

 *27 இட்லி சாம்பார்*

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

அரைக்க: உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளியை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெறும் கடாயில் மிதமான தீயில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைக்கவும். அரைத்த விழுதை, பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கலந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து… ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

 *28 மோர்க்குழம்பு*

தேவையானவை: புளிப்பில்லாத தயிர் – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஓமம் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தயிரை நன்கு கடைந்து, கொஞ்சம் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கரைக்கவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயம், ஓமம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, மோர்கலவையை சேர்த்து.. கிளறியவாறே இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

ஏதாவது காய்கள் சேர்ப்பதாக இருந்தால் தனியே வேக வைத்து சேர்க்கவும்.

 *29 மல்டி பருப்பு சாம்பார்*

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், ஏதாவது ஒரு காய் (நறுக்கியது) – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி – 2, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – தேவையான அளவு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும்… துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதி பதத்தில் வெந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்துக் குழைய வேகவிடவும். பிறகு, புளிக் கரைசல் விட்டுக் கலந்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பெருங்காயம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

இந்த சாம்பார்… சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

 *30 பாசிப்பருப்பு டோக்ளா*

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – கால் கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில்… ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பிறகு, மாவை நன்கு கலக்கவும். இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கவும்.

ஆறியதும், துண்டுகளாக நறுக்கி, தேங்காய் சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

இந்த பதிவில் எண்ணெய் இல்லா சமையல் குறிப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள் மிகப்பெரிய சமையல் ரகசியம் மறைந்துள்ளது கண்டறியுங்கள் பார்ப்போம்

புதன், 22 ஜனவரி, 2020

30 வகை ரெடி டு ஈட்


30 வகை ரெடி டு ஈட்

என்னதான் அவசரம் என்றாலும், குடும் பத்தினருக்கு சத்தாகவும் சுவை யாகவும் சமைத்துப் பரிமாற நாம் தயங்குவதே இல்லை. அந்த வகையில் பெண்கள் மட்டுமல்ல…
ஆண்களும், பெரிய குழந்தைகளும்கூட எளிதாகத் தயாரிக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்கியிருக் கிறார் கோவையை சேர்ந்த சமையல்கலை நிபுணர்  ராஜ் தொக்கு, குழம்பு, பொடி, சூப் என வேதிக் கலப்பில்லாத இன்ஸ்டன்ட் உணவுகளைச் சுவைத்து மகிழுங்கள்!

மணத்தக்காளிக் கீரைத் தொக்கு

தேவையானவை:
மணத் தக்காளிக் கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10 பல், புளி – சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 5, வெல்லம் – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கீரை, புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இது சூடான சாதம், சப்பாத்தி, தோசைக்கு நல்ல சைடு டிஷ். வயிற்றுப்புண்ணுக்கும் நிவாரணம் தரும்.

உடனடி வற்றல் குழம்பு

தேவையானவை:
சின்ன வெங்காயம் – 20, புளி – எலுமிச்சை அளவு, பூண்டு – 15 பல், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயப்பொடி – அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வடகம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன் (அனைத்தையும் வெறும் சட்டியில் வறுத்துப் பொடிக்கவும்).

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து வடகம் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம், பூண்டு சேர்த்துச் சுருள வதக்கி, அத்துடன் சாம்பார்ப் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு வறுத்த பொடி, வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதித்து சுருண்டு வந்ததும் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். சூடான சாதத்தில் இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிட, சுவை அள்ளும்.

பிரசவ மருந்துத் தொக்கு

தேவையானவை:
மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தனியா, ஓமம் (இவற்றை வெறுமனே வறுத்து அரைத்து வைக்கவும்) – தலா ஒரு டீஸ்பூன், சிறு எலுமிச்சை அளவு புளியை நெருப்பில் சுட்டு (அ) தணலில் வாட்டி வெந்நீரில் கரைத்து வைக்கவும், பூண்டு – 15 பல், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், பெருங்காயம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து, கொதித்து எண்ணெய் பிரிந்ததும் எடுத்து ஸ்டாக் செய்துகொள்ளலாம். இந்தத் தொக்கு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

சின்ன வெங்காயத் தொக்கு

தேவையானவை:
சின்ன வெங்காயம் உரித்தது – 20, காய்ந்த மிளகாய் – 10, தக்காளி பழுத்தது – 3, கடலைப்பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும். இது இட்லி, தோசை என அனைத்துச் சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற சைடு டிஷ்.

திப்பிலித் தொக்கு

தேவையானவை: கண்டந்திப்பிலி – 5,6 குச்சி, அரிசித் திப்பிலி – 5, 6 குச்சி, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் – அரை கப், வெல்லம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

செய்முறை:
இருவகை திப்பிலிகளை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளி பிழிந்துவிட்டு, உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும், திப்பிலிப் பொடி, மிளகு சீரகத்தூள் சேர்த்து, மறு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து நல்லெண்ணெய் பிரிந்ததும் இறக்கி வைக்கவும். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் வாரம் இருமுறை இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.

மருந்துத் தொக்கு

தேவையானவை:
சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

அரைக்க:
ஃப்ரெஷ் ஆன வெற்றிலை – 2, கற்பூரவல்லி இலை- 2, எலுமிச்சை இலை -2, துளசி – ஒரு கைப்பிடி, சித்தரத்தை இலை (அ) பொடி – ஒரு டீஸ்பூன்(அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்).

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கி, சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து, இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்தும், இட்லிக்குத் தொட்டும் சாப்பிட சுவை அள்ளும். ஒரு வாரம் முதல் 10 நாள் வரை கெடாது. காய்ச்சலுக்கு நல்ல மருந்து.

புளி இஞ்சித் தொக்கு

தேவையானவை:
புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு, இஞ்சி துருவியது – 50 கிராம், வெல்லம் – 100 கிராம், பச்சை மிளகாய் கீறியது – 5, 6, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து இஞ்சித் துருவலை வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, பிறகு பச்சை மிளகாய் சேர்த்துப் பிரட்டி, புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதித்து நல்ல வாசனை வந்ததும் வெல்லம் சேர்த்து, இறுகி கெட்டிப் பதம் வரும்போது இறக்கவும்.

இது கேரள மக்களின் பாரம்பர்யத் தொக்கு. அனைத்து உணவுகளுக்கும் சூப்பர் தொடுகை.

கற்பூரவல்லித் தொக்கு

தேவையானவை:
கற்பூரவல்லி இலை – 20 (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), புளிக்கரைசல் – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் நல்லெண் ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த கற்பூரவல்லி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். வற்றியதும் இறக்கி வைக்கவும். இதை பிரெட், சப்பாத்தி, தோசையில் தடவி ரோல் செய்து கொடுக்க, பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சூடான சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அடிக்கடி சளி், தலைபாரம், சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள், வாரம் இருமுறை இதைச் சாப்பிட்டு வர, நல்ல தீர்வு கிடைக்கும்.

நெல்லிக்காய்த் தொக்கு

தேவையானவை:
முழு நெல்லிக்காய் – 10, கீறிய பச்சை மிளகாய் – 10, புளி – கோலிகுண்டு அளவு, நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுந்து – தாளிக்க, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
நெல்லிக்காயை கொட்டை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, நெல்லிக்காய்த் துண்டுகள், பச்சை மிளகாய், புளி, இஞ்சி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, இறுதியில் உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி இறக்கவும். 15 நாள் வரை இந்தத் தொக்கு கெடாது. விட்டமின் சி நிறைந்த இந்தத் தொக்கை, முடி உதிர்தல், ரத்தச்சோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் தினமும் சாப்பிடலாம்.

தக்காளி இனிப்புப் பச்சடி

தேவையானவை:
பழுத்த தக்காளி – 5, சிவப்பு பேடகி (காஷ்மீரி சில்லி) மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சர்க்கரை (அ) வெல்லம் – கால் கப், புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வெந்தயப்பொடி – கால் டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு, சீரகம், நல்லெண்ணெய்.

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வெல்லம், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப்பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்து, கெட்டிப் பதம் வந்ததும் இறக்கி, ஆறியதும் ஸ்டோர் செய்யலாம். இது அனைத்து டிபன்களுக்கும் ஏற்ற சைடு டிஷ். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். 10 நாட்கள் வரை கெடாது.

புரோட்டின் பொடி

தேவையானவை:
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கொள்ளு – கால் கப், மிளகு சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, பெருங்காயம் – கால் டீஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் அனைத்துப் பருப்பு வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து வைக்கவும். அதே வாணலியில் மற்ற அனைத்துப் பொருட்களையும் வறுத்து எடுக்கவும். இறுதியாக அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, கல் உப்பு சேர்த்து பொடித்து வைக்கவும். புரோட்டின் பொடி ரெடி. இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம். சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும். புரதச்சத்துப் பற்றாக்குறை உள்ளவர்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் நல்ல உணவு இது.

முருங்கை இலைப் பொடி

தேவையானவை:
ஆய்ந்து, நிழலில் உலர்த்திய முருங்கை இலை – ஒரு கப், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், எள் – 2 டீஸ்பூன், பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 8, புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முருங்கை இலைகளை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, எள், பூண்டு, காய்ந்த மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். புளியைச் சுட்டு வைக்கவும். பிறகு அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த முருங்கை இலைப் பொடியை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிடலாம். பாலூட்டும் தாய்மார்கள் இதை ஒரு டீஸ்பூன் மோரில் கரைத்துச் சாப்பிடலாம். இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ளவர்களும் தினமும் காலை சாப்பிடலாம்.

அரைத்து விட்ட சாம்பார்ப் பொடி

தேவையானவை:
தனியா (கொத்தமல்லி விதை) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2 கைப்பிடி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா கால் கப், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 கைப்பிடி, புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு.

செய்முறை:
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் வெறும் சட்டியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். வேகவைத்த பருப்புடன் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்துத் தாளித்துக் கொதிவிட்டு இறக்கினால் மணக்கும் சாம்பார் ரெடி. இட்லி, தோசை, பொங்கல் என அனைத்துக்கும் சூப்பர் ஜோடி. விரும்பினால் கொப்பரையும் சேர்த்துப் பொடிக்கலாம்.

கறிவேப்பிலைப் பொடி

தேவையானவை: கறிவேப்பிலை – 5 கைப்பிடி, கறுப்பு உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு (விரும்பினால்), கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சுத்தம் செய்த கறிவேப்பிலை மற்றும் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும் (விரும்பினால் புளியை நெருப்பில் இட்டு, அதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்). இந்தப் பொடியை தினசரி பொரியலில் தூவி இறக்கலாம். கூந்தல் உதிரும் பிரச்னை உள்ளவர்கள், தலைசுற்றல், பித்தம் உள்ளவர்கள் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அங்காயப் பொடி

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் – கால் கப், சுண்டக்காய் வற்றல் – கால் கப், உலர்ந்த வேப்பம்பூ – ஒரு கைப்பிடி, தனியா – கால் கப், உலர்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உளுந்து அல்லது துவரம் பருப்பு – கால் கப், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக்கி, கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பாரம்பர்ய பொடி மாதக்கணக்கில் கெடாது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் நெய் (அ) நல்லெண்ணெயுடன் பிரட்டிச் சாப்பிடலாம். வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு ஏற்ற மருந்து இது. பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூலம் பிரச்னை உள்ளவர்களுக்கும் கைகண்ட மருந்து.

பொட்டுக்கடலை பூண்டுப் பொடி

தேவையானவை:
பொட்டுக் கடலை – ஒரு கப், பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் பூண்டு (தோலுடன்) மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி, மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். இந்தப் பொடி, வாயு, அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். நீர்த்துப்போன குழம்பை கெட்டியாக்க, இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் கரைத்துச் சேர்க்கலாம். குழம்பு, கூட்டு வகைகளுடன் இதைச் சேர்க்க, நல்ல வாசனையுடனும் கெட்டியாகவும் இருக்கும்.

எள்ளு வற்றல் பொடி

தேவையானவை:
கறுப்பு எள் – அரை கப், உளுத்தம் பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும், வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து, கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, சூடான சாதம் போன்றவற்றுடன் சாப்பிட, சுவை வெகு ஜோர். இந்தப் பொடியை பூப்பெய்திய பெண்களும், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களும் வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

மோர்க்குழம்புப் பொடி

தேவையானவை:
தனியா (கொத்தமல்லி விதை) – கால் கப், கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயப்பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், கொப்பரைத் துருவல் (விரும்பினால்) – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் தனியா, கடலைப்பருப்பு, பச்சரிசி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொப்பறைத் துருவல் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்து, மஞ்சள்தூள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்தப் பொடியை தேவையானபோது கடைந்த மோருடன் கலந்து, தாளித்து, நுரைத்து வரும்போது இறக்கினால் மோர்க்குழம்பு நொடியில் ரெடி.

கொள்ளு வெற்றிலைப் பொடி

தேவையானவை:
கொள்ளு – ஒரு கப், வெற்றிலை – 5, காய்ந்த மிளகாய் – 8, மிளகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு ஆகிய வற்றைத் தனித்தனியாக வறுத்து வைக்கவும். வெற்றிலையை நிழலில் உலர்த்தி, அதையும் வாணலியில் பிரட்டி வைக்கவும். இவை அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் பொடி தயார். எடை குறைக்க விரும்புபவர்கள் இதைக் காலை வேளையில் எடுத்துக்கொள்ளலாம்.

மிக்ஸ்ட் கீரைப் பொடி

தேவையானவை:
பொன்னாங் கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை – தலா ஒரு கட்டு, கறுப்பு உளுந்து – அரை கப், காய்ந்த மிளகாய் – 10, பூண்டு – 5 பல், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கீரை வகைகளை நிழலில் உலர வைத்து வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் கறுப்பு உளுந்து, காய்ந்த மிளகாய், பூண்டை
ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து, அவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் வறுத்த கீரை வகைகள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். விட்டமின் பற்றாக்குறை உள்ளவர்கள், இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்தப் பொடியை தினமும் சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

ரைஸ் சூப்

தேவையானவை:
புழுங்கல் அரிசி – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, ஆரிகானோ (காய்ந்த கற்பூரவல்லி இலை) – ஒரு டீஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆரிகானோ, உப்பு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு தம்ளர் கொதிக்கும் நீரில் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து சேர்த்துக் கரைத்து, ஒரு கொதி வந்ததும் சோளமாவு ஒரு டீஸ்பூன் சேர்த்து, நுரைத்து வந்ததும் இறக்கினால் சத்தான சூப் ரெடி.

தால் சூப்

தேவையானவை:
துவரம் பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், உலர்ந்த துளசி – ஒரு கைப்பிடி, பச்சரிசி – ஒரு டீஸ்பூன், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பச்சரிசியை வெறும் கடாயில் ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து, உலர்ந்த துளசி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில், தயாரித்து வைத்துள்ள பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துச் சேர்த்துக் கலந்துவிட்டு, 2 கொதி வந்ததும் இறக்கினால் தால் சூப் தயார். காலை நேரத்தில் நிமிடங்களில் செய்யலாம் புரதச் சத்து நிறைந்த இந்த சூப்.

கீரை சூப்

தேவையானவை:
முருங்கைக் கீரை – ஒரு கட்டு, பொன்னாங்கண்ணிக் கீரை – அரைக் கட்டு, துளசி, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், ஓமம் – ஒரு டீஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கீரை வகைகளை நிழலில் உலர்த்தி, வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

ஒரு தம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கரைத்துவிட்டு, மறு கொதி வந்ததும், சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்துச் சேர்த்து, நன்றாகக் கொதித்து சேர்ந்து வரும்போது இறக்கினால் கீரை சூப் ரெடி. விட்டமின் பற்றாக்குறையை சரிசெய்யும் சூப் இது.

பெப்பர் அண்ட் ஜீரா சூப்

தேவையானவை:
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்து வைக்கவும். இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, ஒரு கப் அரிசி களைந்த நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து, மறுகொதி வந்ததும் இறக்கினால் பெப்பர் அண்ட் ஜீரா சூப் ரெடி. விரும்பினால் கட் செய்த ரஸ்க் துண்டுகள் தூவிப் பரிமாறலாம்.

மழைக்கால சூப்

தேவையானவை:
சுக்கு – ஒரு துண்டு, மிளகு, சீரகம், திப்பிலி, ஓமம், தனியா (கொத்தமல்லி விதை) – தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் அரிசி களைந்த நீரில் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து இதில் சேர்த்து, மறுகொதி வந்ததும் இறக்கினால் ரெய்னி சூப் ரெடி. மழைக்கால நோய்களில் இருந்து தற்காப்பு பெற, அடிக்கடி இதை குடும்பத்தோடு அருந்தலாம்.

சிறுதானிய சூப்

தேவையானவை:
குதிரைவாலி, பாசிப்பருப்பு, சாமை அரிசி – மொத்தமாக 100 கிராம், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உலர்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் அரிசி களைந்த நீரில் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கினால் மில்லட் சூப் ரெடி.

சிறுதானியங்களை உண்ண விரும்பாதவர்களும் சூப்பாகக் கொடுத்தால் பருகிவிடுவார்கள்.

காய்ச்சல் சூப்

தேவையானவை:
பாசிப்பருப்பு – 50 கிராம், துவரம் பருப்பு – 50 கிராம், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வசம்பு – சிறிய துண்டு, திப்பிலி – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு – சிறிதளவு, பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வசம்பு, திப்பிலி, கறிவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் மிக்ஸியில் பொடித்து, அத்துடன் எலுமிச்சை சாறு, பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், உப்பு கலந்து வைக்கவும். அரிசி கழுவிய நீர் ஒரு கப் எடுத்துக் கொதிக்கவைத்து, நன்றாகக் கொதித்ததும் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் சேர்க்கவும் (தேவையெனில் ஒரு டீஸ்பூன் சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து இதில் சேர்த்துக்கொள்ளலாம்). காய்ச்சலின்போது இந்த சூப் தினம் இருவேளை எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மூலிகை சூப்

தேவையானவை:
மிளகு – 20 கிராம், சீரகம் – 20 கிராம், கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம், ஓமம் – 20 கிராம், துளசி உலர்ந்தது – ஒரு கைப்பிடி, உலர்ந்த கற்பூரவல்லி இலை – ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கறுப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும், ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்ததும் இறக்கினால் மூலிகை சூப் தயார். இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும்.

கார்ன் சூப்

தேவையானவை:
வேகவைத்து வெயிலில் உலர்த்தி ஒன்றிரண்டாகப் பொடித்த மக்காச் சோளம் – அரை கப், மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், ஆரிகானோ (காய்ந்த கற்பூரவல்லி இலை) – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அனைத்துப் பொருட்களை யும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கி அருந்தலாம்.

மசாலா சூப்

தேவையானவை:
பிரிஞ்சி இலை – 2, தனியா (கொத்தமல்லி விதை), சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், லவங்கம் – 6, பட்டை – சிறிய துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், பாசிப்பருப்பு, உளுந்து – இரண்டும் சேர்ந்து அரை கப், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து, இறுதியாக சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மசாலா சூப் ரெடி. இது செரிமானத்தை நன்கு தூண்டும்..

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

தமிழர் உணவுகள்

தமிழர் உணவுகள் ;தமிழராக இருந்தால் உணவு உண்ணுங்கள்....நோயில்லாமல் வாழ்வது எப்படி?
சோறு ;
வரகுச் சோறு
சாமைச் சோறு
தினைச் சோறு
அரிசிச் சோறு
கம்பஞ் சோறு
பிரியாணி அல்லது ஊன் சோறு
புளிச் சோறு
தயிர் சோறு
பழஞ் சோறு
தக்காளி சோறு
எலுமிச்சைச் சோறு
பருப்புச் சோறு
புதினாச் சோறு
பொரியல் சோறு
பொங்கல் (உணவு)
சர்க்கரைப் பொங்கல்
கற்கண்டு பொங்கல்
பிட்டு
அரிசிப் புட்டு
கேழ்வரகுப்புட்டு
கோதுமைப் புட்டு
இடியப்பம்
தோசை
ரவா தோசை
வெங்காயத் தோசை
தக்காளித் தோசை
மசால் தோசை
பொடிகள் தோசை
குண்டு தோசை
இட்லி
அப்பம்
கஞ்சி
உளுந்துக் கஞ்சி
கம்புக் கஞ்சி
களி
கேழ்வரகுக் களி
கோதுமைக் களி
உளுந்தங் களி
வெந்தயக் களி
உப்புமா
அடை
சீடை
உப்புச் சீடை
சீப்பு சீடை
சப்பாத்தி
ரொட்டி
கொத்து ரொட்டி
பூரி (உணவு)
நான்
ஊத்தப்பம், மரக்கறி ஊத்தப்பம்                                                                                                                                         
           கறிகள் ;
குழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட் சாம்பார்)
மீன் குழம்பு
மசியல் (பூசனி, மரவெள்ளி)
வறை
பருப்பு
கீரை
----இறைச்சிகள் ;
பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.

ஆடு
கோழி/காட்டுக் கோழி
கொக்கு
நாரை
மாடு
பன்றி                                                                                                                                                                           
----------கடலுணவுகள்
பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.

மீன் (பல வகை மீன்கள்)
கணவாய்
நண்டு
இறால்                                                                                                                                                                                     
-------------இனிப்பு
இலட்டு
மோதகம்
கொழுக்கட்டை
கேசரி
தேன் முறுக்கு
தேன்குழல்
வாய்ப்பன்
புளிச்சல்
சிப்பி
வட்டிலப்பம்
தோடு (பலகாரம்)
பயத்தம் பணியாரம்
பனங்காய்ப் பணியாரம்
வெள்ளு ரொட்டி
அவல்
காப்பரசி
சீனி அரியாரம்
போண்டா
சிற்றுண்டி
சிற்பி
அச்சுப்பலகாரம்
அதிரசம்
கார்த்திகைப் பொரி
தொதல்
நெய்யப்பம்
பயற்றமுருண்டை
பனாட்டு
எள்ளுப்பாகு
பூந்தி
போளி
சீயம்
சீடை
தட்டை (உணவு)
அல்வா
எள்ளுருண்டை
அர்த்தப் பணியாரம்/நெய்யப்பம்
பொரிவிளாங்காய்
அவல்
உழுத்தம் சுவாலை
முட்டை மா
பொரி விளாங்காய்
ஓட்டப்பம்
எள்ளுப்பாகு                                                                                                                                                                               
   ----------காரம்
வடை
பரித்தித்துறை வடை
கடலை வடை
உளுந்து வடை
கீரை வடை
முறுக்கு
பகோடா
சமோசா
சுண்டல்
ஓமப்பொடி
காராச்சேகு
காரச் சீடை                                                                                                                                                                                     --------------------நீர்ம உணவுகள்
ஆடிக் கூழ்
ரசம்
சொதி
சூப்
தயிர்
மோர்
கூழ்
பாயாசம்
--சாம்பார் 

கருவாடு
அப்பளம்
வடகம்
ஊறுகாய்
பொடி
சட்னி
சம்பல்
வடம், வத்தல் அல்லது வற்றல்
நெய்
பச்சடி
பொரியல்  .

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

பொங்கல் ஸ்பெஷல் : தித்திப்பான சர்க்கரை பொங்கல்...எப்படி செய்யலாம்?



பொங்கல் ஸ்பெஷல் : தித்திப்பான சர்க்கரை பொங்கல்...எப்படி செய்யலாம்?
சர்க்கரை பொங்கல் !!


தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை சுவையாக எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி - 1 கிலோ

பாசிப்பருப்பு - 100 கிராம்

பால் - அரை லிட்டர்

முந்திரி - 15

உலர் திராட்சை - 15

வெல்லம் - 800 கிராம் (பொடித்தது)

நெய் - 200 கிராம்

பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடித்தது)

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

தண்ணீர் - தேவையான அளவு

நாகரீகம் வளர்ந்து வந்து கொண்டே இருப்பதால் இத்தலைமுறையினர் அனைவரும் பழங்கால சமையல்களை பற்றி மறந்து போயிருப்பார்கள்... அவர்களுக்கு அதை ஞாபகப்படுத்தவும், சத்தான உணவுப்பொருட்களை சுவைக்கவும், அவற்றை எப்படி சமைப்பது பற்றியும் தெரிந்துகொள்ளவும் உருவாக்கப்பட்ட செயலிதான் சமையல் செயலி...


இச்செயலியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!
செய்முறை :

🍜 சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.

🍜 பின்னர் ஒரு மண்பானையை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு கிளறவும்.

🍜 அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

🍜 பின்பு, அரிசி மற்றும் பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து, பின்பு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளறவும்.

🍜 வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு கிளறி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்!!!.


புதன், 8 ஜனவரி, 2020

சிறுதானிய லஞ்ச் ஸ்பெஷல்


சிறுதானிய லஞ்ச் ஸ்பெஷல்

🔘பனிவரகு மஷ்ரூம் புலாவ்

🔘 வரகு வெஜ் பனீர் ஊத்தப்பம்

🔘 தினை பனீர் காட்டி ரோல்ஸ்

🔘 சென்னா-முட்டைகோஸ் புலாவ்

🔘 முள்ளங்கி-பட்டாணி பாத்

🔘 ராகி சேவை-வெஜ் சாலட்

🔘 குதிரைவாலி மசாலா இட்லி

🔘 கேப்சிகம் பாத்

🔘 மேத்தி-தேங்காய்ப்பால் புலாவ்

🔘 சிவப்பு அவல் வெஜ் உப்புமா

சிறுதானியத்தில் செய்யக்கூடிய லஞ்ச் ரெசிப்பிக்களை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.

பனிவரகு மஷ்ரூம் புலாவ்

தேவையானவை:

பனிவரகு - 200 கிராம்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தேங்காய்ப்பால் - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பனிவரகை சுத்தம் செய்து, 10 நிமிடம் ஊற வைக்கவும். மஷ்ரூமை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கவும், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பாதியளவு கொத்தமல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் மஷ்ரூம், தேங்காய்ப்பால், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு கொதி வந்ததும், பனிவரகைச் சேர்த்துக் கலக்கி, மீண்டும் ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி வெயிட் போட்டு சிம்மில் 10 நிமிடம் வைத்திருந்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து, மீதமுள்ள புதினா, கொத்தமல்லித்தழை தூவி லேசாக கிளறிப் பரிமாறவும். இதற்கு புதினா அல்லது கொத்தமல்லித் துவையல், சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:

புலாவை குக்கரிலிருந்து எடுத்து ஹாட் பாக்சில் வைத்தால், நீண்ட நேரம் உதிரியாக இருக்கும். ஒரு கப் அரிசி எடுத்தால், இரண்டரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். தக்காளியும், மஷ்ரூமும் தண்ணீர் விடுமென்பதால், இரண்டரை கப் போதும். தேங்காய்ப்பால் சேர்த்துதான் இரண்டரை கப் என்பதை மறக்க வேண்டாம்.

வரகு வெஜ் பனீர் ஊத்தப்பம்

தேவையானவை:

வரகு இட்லி மாவு - 4 கப்
துருவிய கேரட், பனீர்,
முட்டைகோஸ் கலவை - 2 கப்
பொடியாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் காய்கறி மற்றும் பனீர் கலவை, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சித்துருவல், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும் வரகு இட்லி மாவில் உப்பு சேர்த்துக் (மாவில் உப்பு போட்டிருந்தால் உப்பு சேர்க்க வேண்டாம்) கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவெடுத்து ஊத்தப்பமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். கார சட்னியுடன் சாப்பிடவும். காய்கறிக்குப் பதில் கீரையை பச்சையாக சேர்க்கலாம். ஊத்தப்பம் வேகும் சூட்டிலேயே கீரை வெந்துவிடும்.

மதிய உணவுக்கு ஏற்றது. குறிப்பாக, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. டிபன் பாக்ஸில் வைக்கும்போது, ஊத்தப்பம் மேலே லேசாக நல்லெண்ணெய் தடவி வைக்கவும்.

தினை பனீர் காட்டி ரோல்ஸ்

தேவையானவை:

தினை மாவு - அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
பனீர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

தினை மாவு, கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். பிறகு மாவை உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதனுடன் துருவிய பனீர், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். சப்பாத்தியின் மீது சிறிது நெய் தடவி பனீர் மசாலாவை உள்ளே வைத்து சுற்றவும். டிபன் பாக்ஸில் வைத்து, மேலே லேசாக நெய் தடவி வைத்தால், மதியம் சாப்பிட அருமையாக இருக்கும்.

சென்னா-முட்டைகோஸ் புலாவ்

தேவையானவை:

பாசுமதி (அ) சீரக சம்பா அரிசி - 2 கப்
வேக வைத்த கொண்டைக்கடலை - அரை கப்
துருவிய முட்டைகோஸ் - அரை கப்
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 4
புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற விடவும். குக்கரை சூடாக்கி, எண்ணெய், நெய் சேர்க்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், கீறிய பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய முட்டைகோஸ், கொண்டைக்கடலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரிசியை சேர்த்து, கொதி வந்ததும் குக்கரை மூடவும். பிரஷர் குக்கரில் விசில் வந்ததும், தீயை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கிளறவும். தயிர்ப்பச்சடி அல்லது சிப்ஸுடன் பரிமாறவும். புரதச்சத்து நிறைந்த புலாவ்.

முள்ளங்கி-பட்டாணி பாத்

தேவையானவை:

வடித்த சாதம் - 2 கப்
முள்ளங்கி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
வேக வைத்த பச்சைப் பட்டாணி - 100 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை - கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பாதியளவு புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாற கரைய வதக்கி இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். மிக்ஸியில் சோம்பு, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து வெங்காயம் தக்காளிக் கலவையில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு துருவிய முள்ளங்கி, மஞ்சள்தூள், வேக வைத்த பச்சைப்பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
காய்கறி நன்கு வதங்கியதும், வடித்த சாதம், நெய், மீதம் இருக்கும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறினால், முள்ளங்கி-பட்டாணி பாத் தயார். சிப்ஸ் அல்லது கொத்தமல்லித்தழை, புதினா துவையலுடன் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவுக்கு ஏற்றது.

ராகி சேவை-வெஜ் சாலட்

தேவையானவை:

ராகி சேவை - ஒரு பாக்கெட்
நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் - ஒரு கப்
புராக்கோலி - 10 பூக்கள்
வெள்ளரித் துண்டுகள் - கால் கப்
வேக வைத்த முளைக்கட்டிய பயறு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 4 டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

ராகி சேவையை சுடுநீரீல் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை வைத்திருந்து எடுத்து விடவும். நீரை வடித்து விட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியே வைக்கவும். புரோக்கோலி பூக்களைப் பிரித்து உப்பு நீரில் போட்டு எடுக்கவும். காய்கறிகளை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிய பாட்டிலில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு, சீரகத்தூள், எண்ணெய் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ளவும். இனி பெரிய பாத்திரத்தில் காய்கறிகள், பயறு, புதினா மற்றும் எலுமிச்சைச் சாறு, கலவையை ஊற்றிக் குலுக்கவும். 10 நிமிடம் கழித்து சாப்பிடவும். விருப்பப்பட்டால், மிக்ஸ்டு ஹெர்பஸ் சேர்க்கலாம். டயட்டில் இருப்பவர்கள், மதிய உணவுக்கு இப்படி செய்து சாப்பிடலாம்.

குதிரைவாலி மசாலா இட்லி

தேவையானவை:

குதிரைவாலி இட்லி மாவு - 4 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல் (அரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிதளவு

செய்முறை:

சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் விழுது, புதினா, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, பாதி அளவு இட்லி மாவை ஊற்றவும். மேலே உருளைக்கிழங்கு மசாலா வைத்து மேலே மீண்டும் மாவு ஊற்றவும். ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால், குதிரைவாலி மசாலா இட்லி ரெடி. சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கேப்சிகம் பாத்

தேவையானவை:

வேக வைத்த சாதம் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
புளிக்கரைசல் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
குடமிளகாய் - 2
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு,
சீரகம் - தலா அரை டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், வேர்க்கடலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும். கரைசல் நன்கு கொதித்ததும், புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இந்தக் கலவையை வேகவைத்த சாதத்தில் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், சிறிதளவு உப்பு, நெய் சேர்த்துக் கிளறவும். நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய குடமிளகாயில் அருமையான சாதம் தயார்.

மேத்தி-தேங்காய்ப்பால் புலாவ்

தேவையானவை:

சீரகசம்பா அரிசி - 2 கப்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 3
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
பிரிஞ்சி இலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 3
தேங்காய்ப்பால் - 2 கப்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். கீரையை சுத்தம் செய்யவும். குக்கரை சூடாக்கி, எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாற வதக்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய், கீரை சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால் 2 கப், தண்ணீர் இரண்டு கப் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வரும் போது புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து ஊற வைத்த அரிசியையும் சேர்த்துக் கிளறவும். கொதி வந்ததும் குக்கரை மூடி, தீயை சிம்மில் 7 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், குக்கரை திறந்து அரை டீஸ்பூன் நெய் விட்டு கிளறிப் பரிமாறவும்.

சிவப்பு அவல் வெஜ் உப்புமா

தேவையானவை:

சிவப்பு கெட்டி அவல் - 2 கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய், முளைக்கட்டிய பயறு கலவை - 2 கப்
வெங்காயம் - ஒன்று
இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, கடலைப்பருப்பு உளுந்து - தலா கால் டீஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அவலை சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும். காய்கறிகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த காய்கறிகள் முளைக்கட்டிய பயறு, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு ஊற வைத்த அவல் சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும். வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, எலுமிச்சைச் சாறு, தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கிளறவும். சத்தான அவல் உப்புமா ரெடி.