வெள்ளி, 25 அக்டோபர், 2019

தீபாவளி லேகியம் செய்வது எப்படி ?


#தீபாவளி_லேகியம்
#செய்வதெப்படி?

1. சுக்கு                - 50 கிராம்
2. சித்தரத்தை  - 50 கிராம்
3. கண்டதிப்பலி  - 25 கிராம்
4. அரிசி திப்பிலி  - 5 கிராம்
5. ஓமம்                 - 100 கிராம்
6. கொத்துமல்லி விதை  - 50 கிராம்
7. மிளகு                              - 50 க்ராம்
8. கிராம்பு                      - 20 கிராம்
9. ஜாதி பத்திரி             - 10 கிராம்
10. விரளி மஞ்சள்         * 10 கிராம்
11. வெல்லம்                 - 250 க்ராம்
12. நெய்                          - 200 க்ராம்
13. தேன்                         - 100 கிராம்


#செய்முறை

சமைந்த பெண்ணை மனையில் அமர்த்த, நவராத்திரிக்கு புட்டு செய்வது போல அல்ல; தீபாவளி லேகியம் செய்வது. கொஞ்சம் சிரமம். தீவிரமானது. பொறுமையும் கை வலுவும் அவசியம்.

ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும். அந்நேரம் கல்யாணமாகி வந்த புதிதில் எதற்கும் குறுக்கில் வந்துநின்ற மாமியாரை மனதில் நிறுத்தவும்.

வறுத்த பொருட்களை சூட்டினை ஆற வைத்துவிட்டு, தெய்வமகளை அல்லது கூட்டுச்சதியைச் சொல்லித்தரும் டப்பிங் சீரியலைப் பார்க்கவும். இரண்டாவது இடைவேளையின் போது எழுந்துவந்து வெல்லத்தை உடைத்து தண்ணீரில் தண்ணீரில் போட்டுவிட்டுப் போகவும். சீரியல் முடிந்தவுடன், ஊறிய வெல்லத்தை கரைத்துவிட்டு மண், குப்பைப் போக சலித்து எடுத்துக் கொள்ளவும்.

முன்னர் வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும்
மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இரும்பு உலக்கைக் கொண்டு இடித்து சலிக்கவும் என்றால், எதுக்குடா தீபாவளி என்றோ, க்ருஷ்ணா ஸ்வீட்ஸிலோ, மாம்பலத்திலோ வாங்கிப்பேன் என்று சொல்வீர்கள்.

சற்று அழுத்தமான வாணலியை அடுப்பில் ஏற்றவும்.
கரைத்த வெல்லத்தை அதில் கொட்டிக் கிளறிக்கொண்டு சற்றே இறுகிய நிலையில் பொடி செய்த மருந்து பொருட்களை அதில் பொறுமையாகக் கொட்டி (கட்டித் தட்டிவிடாமல்) ஒன்று சேர்க்கவும். கொஞ்சம் பேரிச்சம் பழத் துண்டுகளையும் சேர்க்கவும். வெல்லமும் பொடியும் ஒன்று சேர்ந்த நிலையில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் (இதயம், விவிஎஸ், செக்கு எதுவானாலும்) சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்.

நீங்கள் தினம் அடுப்படி காரியங்கள் பார்த்தால் ஒழிய மணிக்கட்டை வலிக்கும். விரல்கள் சட்டுவத்தைப் போட்டுவிட்டுப் போய்விடு என்று சொல்லும். ஆனால், மனோ வைராக்கியத்தோடு அதையெல்லாம் அசட்டை செய்துவிட்டு, தொடர்ந்து எண்ணெய் குறையக் குறைய விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.

கிளறக் கிளற மருந்து உருண்டு திரண்டு வரும். சட்டுவத்தால் எடுத்து விட்டுப் பார்த்தால் சட்டியிலும் சட்டுவத்திலும் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு, ஒரு கரண்டி நெய்யை அதன் தலையில் கொட்டி லேசாக மேலும் கீழுமாக பிரட்டவும். ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் ஒரு சம்படத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த ப்ராசஸ் குறைந்தது ஒருமணி நேரமாகும். மருந்து சாமான்களில் எதையேனும் தீய விட்டுவிட்டாலோ, வறுக்காமல் விட்டுவிட்டாலோ மருந்து மருந்தாக இராது. பொருள் நஷ்டமாகும். உங்களால் முடியாது எனில் ஆத்து சமையல் மாமியை செய்து தரச் சொல்லவும்.

வியாழன், 24 அக்டோபர், 2019

யார் கண்டுபிடித்தது_மூன்று வேலை நேரத்துக்கு சாப்பிடணும் என்று.


யார் கண்டுபிடித்தது_மூன்று வேலை நேரத்துக்கு சாப்பிடணும் என்று.


உலகின் முதல் மனிதன் NON Vegetarian தான் இதை யார் மறுக்கிறீர்கள்???

இன்று நாம் உண்பது போல....

காலை இட்லி/ தோசை
மதியம் மூன்று தட்டு சாதம்
இரவு கொத்து பரோட்டா
என்றா ஆதிமனிதன் சாப்பிட்டான்...???

விடியற்காலை எழுந்து நம்மைப்போன்று டீ/காபி குடித்து விட்டு வேலையைத் தொடங்கும் பழக்கமெல்லாம் அவனிடம் இருக்கவில்லை..

காலை எழுந்ததும் தன் குழுவுடன் சேர்ந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் வேட்டைக்கு செல்வான்.

வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. வேட்டையாடிய விலங்கை எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவதற்குள் சூரியன் மறைந்து விடும்..

சூரியன் அடங்குமுன் உறங்கச் சென்றுவிட்டான்.

ஆகவே ஆதிமனிதன் உண்டது தினமும் ஒரு வேலை உணவு மட்டுமே என்பது தெரிகிறது.

ஆதிமனிதர்களின் உணவுப்பழக்க வழக்கங்களை அப்படியே இன்றளவும் தொடர்ந்து வரும் பழங்குடி இனங்களை ஆராய்ந்து பார்த்தால்,

நம்மை தாக்கும் நீரிழிவுநோய் / உயர்ரத்தஅழுத்தம்/ இதயநோய்கள் பற்றி இன்னும் அறியாமலே வாழ்கின்றனர்.

இன்றும் ஆப்பிரிக்காவில் வாழும் #மசாய் எனும் பழங்குடியின மக்கள் தினமும் முழு கொழுப்பு #பால், #முட்டை , #இறைச்சி போன்ற கொழுப்பு மட்டுமே அதிகமாக உண்டு வாழ்கின்றனர்.

நமக்கு வந்த நோய்களான சுகர்/ ப்ரஷர் / இதயகுழாய்_அடைப்பு / பி.சி.ஓ.டி
யாவும் அவர்களை அண்டவில்லையே ஏன்?????????

இட்லி தோசை சாப்பிடும் நம்மால் வேட்டை மிருகங்களான சிங்கங்களை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ளமுடியுமா??

உணவில் இருக்கிறது அத்தனையும்.

அவனது வாழ்க்கை முறையில் நமக்கு கிடைக்கும் பாடம் ,தினமும் ஒரு வேலை மட்டுமே முழுக்கொழுப்பு உணவுகளே அவன் உண்டான்..

நாம் மூன்று வேலையும் உணவு உண்டே ஆக வேண்டும் என்று ஏதாவது எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத விதி ஏதும் இருக்கிறதா ?? இல்லை....

நமது தேவைக்கு ஏற்ப , பசிக்கு ஏற்ப உணவு உண்டால் போதுமானது. அது நிச்சயம் மூன்று வேலை உணவாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

கார்போஹைட்ரேட்டை பிரதான உணவாக உண்ணும் நமக்கு ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் ஒருமுறை பசி எடுக்கிறது.

அதற்கு நடுவிலும் பலருக்கு பசி எடுக்கிறது . அதை அடக்க இருக்கவே இருக்கிறது நொறுக்குத் தீனிகள்.

ஆனால் கொழுப்புணவை பிரதானமாக உண்ட நம் முன்னோருக்கு தினமும் ஒரு வேலை உணவே போதுமானதாக இருந்திருக்கின்றது.

#உதாரணம் : மாமிசப்பச்சினிகளான சிங்கங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு சிங்கம் தனக்கு உணவாய் மான்/ஆடு/மாடுகளை உண்ணும்.

ஒருமுறை உணவுண்டால் அதற்கு மீண்டும் பசி எடுக்க பல நாள் ஆகிறது.

பசி அடங்கிவிட்டால் மீண்டும் பசி வரும் வரை அது வேட்டைக்குச் செல்லாது.

நமது இயற்கைப்படி ,கொழுப்புணவு வயிற்றுக்கும் உடலுக்கும் நிறைவாக இருக்கிறது.

மாவுச்சத்து வயிற்றுக்கு நிறைவாய் இருப்பதில்லை.
அதனால் மீண்டும் மீண்டும் பசி எடுக்கிறது.
பசியெடுத்தால் மனிதன் தலைகால் புரியாமல் உண்கிறான்.

*எடை கூடுகிறது. நோய்கள் தானாய் வருகிறது..*

செவ்வாய், 22 அக்டோபர், 2019

30 தீபாவளி ஸ்பெஷல் #ஸ்வீட்ஸ் #காரம்


#இதோ #உங்களுக்காக #வகைவகையான 30 தீபாவளி ஸ்பெஷல் #ஸ்வீட்ஸ் #காரம்..


 *🍓லட்டு🍓*

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை:
சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

 *கடலைப்பருப்பு சுய்யம் 💚*

தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ

மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

 *தேங்காய் சுகியன் 🍏*

தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

 *உக்காரை 🌺*

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - 100 கிராம், வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

 *மூங்தால் ஃப்ரை 🌻*

தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

இது ஒரு மாதம் வரை கெடாது.

 *சன்னா தால் ஃப்ரை 🍀*

தேவையானவை: கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

 *டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி*

தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.

செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.

இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

 *மைசூர் பாகு 🌷*

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

 *காராபூந்தி 🌷*

தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

 *இஞ்சி முரப்பா👇*

தேவையானவை: சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.

குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.

 *பாம்பே காஜா👇*

தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

 *மோகன் தால்👇*

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்

செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!

குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

 *கோதுமை அல்வா👇*

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்

செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி, வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

 *தேன்குழல்👇*

தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

 *பாதாம் டிலைட்👇*

தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

 *மகிழம்பூ முறுக்கு👇*

தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

 *சீப்பு ரோல்ஸ்👇*

தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.

 *ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்👇*

தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்), எண் ணெய் - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.

குறிப்பு: நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

 *ஜாங்கிரி👇*

தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.

துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

 *ரவா லாடு*

தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

 *ஓமப்பொடி👇*

தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள்  /  மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

 *டூ இன் ஒன் லட்டு👇*

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

 *டபுள் கலர் மைதா கேக்👇*

தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,

செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.

மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

 *கேஷ்யூ ஃப்ரை👇*

தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

 *#பாதுஷா...*

#தேவையானபொருட்கள்...

மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

#செய்முறை...

உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

 *#பாதாம்மில்க்அல்வா...*

#தேவையானபொருட்கள்...

பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.

#செய்முறை...

பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்

குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

 *#காராசேவ்...*

#தேவையானபொருட்கள்...

கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

#செய்முறை...

கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

 *#பந்தர்லட்டு...*

#தேவையானபொருட்கள்...

கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை

#செய்முறை...

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

 *#டிரைஃப்ரூட்அல்வா...*

#தேவையானபொருட்கள்...

 விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது), நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

#செய்முறை...

பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

 *#அசோகாஅல்வா...*

#தேவையானபொருட்கள்...

பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

#செய்முறை...

சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 *#நவதானியஅப்பம்...*

#தேவையானபொருட்கள்...
நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப்,  பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

#செய்முறை...

நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன்  பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.

 *#வீட்டிலேயே #பஜ்ஜி #மாவு #தயாரிப்பது #எப்படி?*

கடலைப்பருப்பு – 2 கப், பச்சரிசி – கால் கப், காய்ந்த மிளகாய் – 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து
 அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.

எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

30 வகையான தீபாவளி ஸ்பெஷல் அல்வா வகைகள்


30 வகையான தீபாவளி ஸ்பெஷல் அல்வா வகைகள்

*1கேரட் பால் அல்வா*


குழந்தைகள் சத்தான உணவு சாப்பிட போராட்டம் செய்கிறார்களா? அவ்வப்போது கேரட் பால் அல்வா செய்து கொடுத்துப் பாருங்களேன். பால் குடிக்க மறுக்கும் குழந்தைகள்கூட இந்தப் பால் அல்வா விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியே அத்தியா வசிய ஊட்டச்சத்தான வைட்டமின் `ஏ` குழந்தைக்கு கிடைத்த மாதிரி இருக்கும். செய்முறை இதோ…

தேவையானவை

மசித்த கேரட் – ஒரு கப்
பால் – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – 1/2 கப்
முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

* கேரட்டை நன்றாக துருவி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கேரட்டை அளந்து கொள்ளவும். ஒரு கப் மசித்த கேரட்டிற்கு மற்ற பொருட்களின் அளவு போதுமானது. முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.

* கனமான வாணலியை காய வைத்து மசித்த கேரட், பால், சீனி, எல்லாவற்றையும் இட்டு கிளற வேண்டும்.  கலவை கெட்டியானதும் நெய் சிறிது சிறிதாக விடவும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு கொண்டு வரும்போது இறக்கி வைத்து வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

* இந்த கேரட் அல்வா விருந்தின்போது பரிமாற ஏற்றது.

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵


 *🌹2 திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி*

🍱தேவையான பொருட்கள்:

நெய் - 300 கிராம்,

கோதுமை - 200 கிராம்,

சீனி - 600 கிராம்

நெய் - தேவையான அளவு

நெய்யில் வருத்த முந்திரி - தேவையான அளவு

 🍴செய்முறை:

இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள்.

கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு.

கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும்.🌹

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


 *3 ஆப்பில் ஹல்வா.:*

தேவையான பொருட்கள்.:
நல்ல இனிப்புள்ள சிகப்பு ஆப்பிள் – 3
நெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
மில்க் பௌடர் – 4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
முந்திரி - 8

செய்முறை.:
முதலில் ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு மிக்ஸியில் ஆப்பிள் துண்டுகளை போட்டு நீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும்.

அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு முந்திரியை துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு நாண் ஸ்டிக் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.

அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.

மேலே சிறிது நெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.

பிறகு அதனுடன் மில்க் பௌடர், சர்க்கரை நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். பிறகு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.

பிறகு ஹல்வாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு அதன் மேலே முந்திரியை தூவி பரிமாறவும்.

சுவையான ஆப்பில் ஹல்வா ரெடி.


🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈


 *4 கரும்புச்சாறு கேரட் அல்வா.:*

தேவையான பொருட்கள்.:
கேரட் துருவல், கரும்புச்சாறு - தலா ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான நட்ஸ் (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை.:
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி கேரட் துருவலைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.

பிறகு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து இதனுடன் கரும்புச்சாறு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி நன்கு சுருள வேகவிடவும்.

கடைசியில் விருப்பமான நட்ஸ், டூட்டி ஃப்ரூட்டி தூவி இறக்கிப் பரிமாறவும்.

வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் கரும்பு செழித்து வளரும்.


⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱


 *🌹5 பச்சரிசி அல்வா*

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
பச்சரிசி மாவு3 கப்
கடலை பருப்பு 1 கப்
வெல்லம் ஒன்றரை கப்
நெய் தேவைக்கேற்ப
முந்திரி15
ஏலக்காய் பொடி4 சிட்டிகை
செய்முறை :

  அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுக்கவும்.

  ஒரு பாத்திரத்தில் கடலைபருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பருப்பு குழையாமல் ஒரளவு திடமாக இருக்க வேண்டும். வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.

  பருப்பு வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள அரிசிமாவை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்து வரும் வேலையில் கொதிக்க வைத்த வெல்ல தண்ணீரை சேர்த்து கிளறவும்.

  பிறகு முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும். இப்போது பச்சரி அல்வா தயார்.🌹

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴


 *🌹6 கேழ்வரகு அல்வா*

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது சத்தான கேழ்வரகு அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 300 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

நெய் - தேவையான அளவு

ஏலக்காய் பொடி - சிறிதளவு

முந்திரி பருப்பு - 100 கிராம்

செய்முறை :

🍚 கேழ்வரகு மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும். சர்க்கரையை காய்ச்சி வடிக்கட்டிக் கொள்ளவும்.

🍚 அதன் பின்பு திராட்சை, முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். வடிகட்டிய சர்க்கரை பாகில் மாவு கலவையை கலக்கி வேக விடவும். இதில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் அல்வாவை கொட்டவும். பின்பு துண்டுகளாக்கி பரிமாறவும். சுவையான கேழ்வரகு அல்வா தயார்.🌹

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵


 *7 .ராகி பூசணிக்காய் அல்வா.:*

தேவையானபொருட்கள்.
கேழ்வரகு மாவு – ¼ கிலோ,
வேர்க்கடலை - 100 கிராம்,
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை,
முந்திரி – 10,
சர்க்கரை - ¼ கிலோ,
நெய் – ½ கப்,
வெள்ளைப் பூசணி - 100 கிராம்,
பால் - ஒரு கப்.

செய்முறை.;
முதலில் கேழ்வரகு மாவை சுத்தம் செய்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வறுத்த கேழ்வரகை  ஆறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலந்து கொள்ளவும்..

கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய வெள்ளை பூசணித் துண்டுகளைச் சேர்த்து, வேக வைக்கவும்.

இதனுடன், சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும்.

பின்னர் வேர்கடலை ,முந்திரி ,திராட்சை இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான ராகி பூசணிக்காய்  அல்வா ரெடி.

ராகியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் எலும்புகள் பலமடையும்.அலர்ஜி,ஒவ்வாமை,போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு குறையும்.


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


 *🌹8. கேரட் அல்வா சுவையாக செய்ய வேண்டுமா ?*

👉 முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.

👉 இனிப்பு சோமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான சுவை கிடைக்கும்.

👉 ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

👉 ஓட்ஸ் லட்டு பிடிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்தால் அருமையாக இருக்கும்.

👉 அரிசியில் பலகாரங்கள் செய்யும் போது அரிசியை களைந்து, காய வைத்து அரைத்து, பலகாரங்கள் செய்தால், பலகாரங்கள் நல்ல சுவையுடன், உடையாமல் இருக்கும்.

👉 காராபூந்தி தேய்க்கும் பொழுது எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டையாக வரும்.

👉 கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

👉 கேசரி கிளறும்போது முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்து வறுத்துச் சேர்க்கலாம். அல்லது பாதாம் பவுடர் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.

👉 முறுக்கு மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக மாவு எடுத்து பிசைந்து செய்தால் வெள்ளை நிறத்தில் சிவக்காமல் இருக்கும்.

👉குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கட் ரெடி.🌹

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐


 *9. திருவையாறு ஆண்டவர் கடை அசோகா அல்வா*

பாசிபருப்பு நன்றாக வேக வேண்டும் என்பது மிக முக்கியமானது அப்பொழுது தான் அல்வா மிருதுவாக இருக்கும்.

ஆண்டவர் கடை அசோகா அல்வா என்பது நெல்லை இருட்டு கடை அல்வாவின் தங்கை என்று கூறலாம்.

சும்மா ஆரஞ்சு கலர்ல பளபளபன்னு நெய்யில் அல்வாவை முழுவதும் மின்ன இடை இடையே நெய்யில் வறுத்த முந்திரியும்  திராச்சையும் எட்டி பார்க்க ;

கோதுமையும், பாசி பருப்பும் அதை வழுவழுவென்று ஆக்கி இருக்க என்ன அல்வா தண்ணீரில் மிதக்கிறதா அல்லது நெய்யில் நீச்சல் இருகிறதா என்று நினைக்கும் படியாக ஒரு வாய் போட்டாலே சும்மா ஜிவ்வூனு சுவை உடம்பு முழுவதும் சுவை நரம்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் போதை ஏற்ற வேண்டும். அதே போல் நாவில் வைத்த உடன் வழுக்கி கொண்டு வயிற்றை தஞ்சமடைய வேண்டும்.

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு  1/2 கப்
கோதுமை மாவு 1/4 கப்
பசு நெய் 1/4 கப் + 3 மேஜைக்கரண்டி
சர்க்கரை 1 1/2 கப்
ஏலகாய் தூள் 1/4 தேக்கரண்டி
கேசரி பொடி 1 சிட்டிகை
முந்திரி பருப்பு 15

செய்முறை

1. ஒரு வடச்சட்டியில் பாசிபருப்பை நன்றாக மணம் வீசும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பொன்னிறமாக ஆகும் வரை வறுக்ககூடாது

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு உடன் 1 1/2  கப் தண்ணீர் ஊற்றி நன்றாக மசியும் வரை வேக வைக்க வேண்டும்.

3. அதை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.

4. இப்பொழுது வடச்சட்டியில் 1 1/2 மேஜைக்கரண்டி பசு நெய்யை விட்டுகோங்க அது நன்றாக காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பை சேர்த்துகோங்க பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

5. மீதமுள்ள காய்ந்த நெய்யில் கோதுமை மாவை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக மற்றும் மணம் வீசும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

6. கோதுமை மாவின் பச்சை வாசனை போனதும் அதில் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பாசிபருப்பு கலவையை சேர்த்துகோங்க .

7. இச்சமயத்துல அதில் சர்கரையை மெதுவாக சேர்த்துகோங்க மிதமான தீயில் அதை கிளறுகையில் கலவை கொஞ்சம் தண்ணீர் பதத்திற்கு வந்து விடும்.

7. இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக பசு நெய்யை விட்டுகோங்க நன்றாக குழைய குழைய சிறுதீயிலேயே கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

8. அதில் கேசரி பொடியை சேர்த்துகோங்க நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.

9. இப்பொழுது அல்வா கலவை திக்காக மாறும் சமயத்துல அதில் மீதமுள்ள அனைத்து பசுநெய்யையும் சேர்த்துகோங்க , அதனுடன் ஏலகாய் தூள் மற்றும் நெய்யில் பொன்னிறமாக வறுக்கபட்ட முந்திரி பருப்பை சேர்த்துகோங்க நன்றாக கிளற வேண்டும்.

10. உங்கள் கைகளில் அல்வாவை எடுத்தால் அது உங்கள் கைகளில் ஒட்டகூடாது அது மட்டுமல்ல நெய் அல்வா கலவையில் இருந்து பிரிந்து வரும். அதுவே அடுப்பை அணைக்க சரியான பதமாகும்.

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


 *10. நாவில் கரைந்தோடும பாம்பே அல்வா | சோள மாவு அல்வா*

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வாவை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

செலவும் குறைவு😊செய்வதும் எளிது
தேவையானவை:

வெள்ளை சோள மாவு  –  1 கப்
சர்க்கரை                      –      2 கப்
நெய்                              –      1/4 கப்
முந்திரி,பாதாம் நறுக்கியது  –      1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு.           - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி        – 1 சிட்டிகை
கேசரி பவுடர்              –      1 சிட்டிகை

செய்முறை:

1.முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன்   
2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல்  கரைத்து வைக்கவும். 

2.பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

3.பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும் .

4.பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகமல் பார்த்துக் கொள்ளும்.

5.சர்க்கரையானது நன்கு கரைந்து,சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளரவும்.

6.அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.

7.அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில்  முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.

8.ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான சோளமாவு | பாம்பே அல்வா ரெடி!!

🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓



 *11. சுவையான மாம்பழ அல்வா*

கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். எனவே மாம்பழத்தில் அல்வா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழத் துண்டுகள் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 2 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

மாம்பழத் துண்டுகளை நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். மசித்து வைத்த மாம்பழங்களுடன் சர்க்கரையைப் போட்டு கிளறவும்.

பின்ன‌ர் பால் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் இருக்க நெய்யை சேர்த்து கிளறவும்.

அத‌ன்‌பின் கெட்டியான பதத்தில் வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு. ஆறிய பிறகு சிறுத் துண்டுகளாக வெட்டினால், சுவையான மாம்பழ அல்வா ரெடி!


📕📕📕📕📕📕📕📕📕📕


 *12. கோதுமை அல்வா*

தேவையானவை:

கோதுமை - 2 கப், பாதாம் பருப்பு - 100 கிராம், முந்திரி - 100 கிராம் (நெய்யில் சிவக்க வறுத்து ஒன்றிரண்டாக உடைக்கவும்), நெய் - 2 கப், சர்க்கரை - 5 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

கோதுமையை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் காலை கிரைண்டரில் நைஸாக அரைத்து பால் எடுக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு 3 முறை பால் எடுக்கவும்.

பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, தோலெடுத்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். கோதுமைப் பாலில் தெளிந்த நீரை இறுத்துவிடவும்.

அடிகனமான வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கெட்டிக் கம்பிப் பாகாகக் காய்ச்சவும். அரைத்த பாதாம் பருப்பைக் கோதுமைப் பாலுடன் சேர்த்து, வாணலியிலுள்ள சர்க்கரைப் பாகில் ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் குங்குமப்பூ, கேசரி பவுடர் சேர்த்து கரைத்து விட்டு, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து சுருண்டு வரும் சமயம் முந்திரி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


📘📘📘📘📘📘📘📘📘📘


 *13. பாதாம் அல்வா*

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
பாதாம் பருப்பு1 கப்
முந்திரிப் பருப்பு10
சர்க்கரை1 கப்
பால்1டேபிள் ஸ்பூன்
நெய் அரை கப்
ஏலப்பொடி 3 டீஸ்பூன்
குங்குமப் பூ1 சிட்டிகை
கேசரி கலர்2 சிட்டிகை
வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

  பாதாம் பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பாதாமை தோலுரித்துக் கொள்ளவும்.

  பின் இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும். பருப்பும் சர்க்கரையும் சேர்ந்தவுடன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, கரைத்து கலவையில் சேர்க்கவும்.

  கலவை இறுக ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு கலவை நன்றாக இறுகி நெய் வெளியே வரும்போது இறக்கி வெள்ளரி விதை சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான பாதாம் அல்வா தயார்.

📙📙📙📙📙📙📙📙📙📙


 *14. அவல் - ஜவ்வரிசி பால் அல்வா*

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்

ஜவ்வரிசி - 2 கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

மில்க்மெய்டு - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

குங்குமப்பூ - தேவைப்பட்டால் சிறிது.

பால் - ஒரு கப்

முந்திரி, பாதாம் - தலா ஒரு டீஸ்பூன்

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1. ஜவ்வரிசையை முதலில் வறுத்துக் கொள்ளவும்.

2.அதில் கணிசமான அளவை எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

3.பிறகு நெய் விட்டு அவலை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

4.பிறகு வறுத்த ஜவ்வரிசி, பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

5. பிறகு வறுத்த அவலை போடவும். மில்க்மெய்டை இப்போது சேர்க்கவும்.

6.பிறகு அல்வா போல் சற்றே கெட்டியாக வந்தவுடன் ஏலாக்காய்த் தூளைச் சேர்த்து இறக்கவும்.

7.வேண்டுமெனில் முந்திரியை போட்டுக் கொள்ளலாம்.

📗📗📗📗📗📗📗📗📗📗



 *15. பாசிப்பருப்பு அல்வா.:*

தேவையான பொருட்கள்.:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், ஜவ்வரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - ஒரு கப்,
சர்க்கரை - 2 கப்,
சிவப்பு ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு.

செய்முறை.:
பாசிப்பருப்பு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைக்கவும்.

அடி கனமான வாணலியில் மாவுக் கரைசல், சர்க்கரை, ஃபுட் கலர் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்து,  நன்றாகக் கிளறிவிடவும்.

நெய்யை விட்டுக்கொண்டே மேலும் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.

பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

மேலாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைப் பதித்து வைத்தால் பாசிப்பருப்பு அல்வா ரெடி.

இதை துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.


📒📒📒📒📒📒📒📒📒📒


 *16. ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா*

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு    -    200 கிராம்
சர்க்கரை    -    200 கிராம்
நெய்    -    50 கிராம்
முந்திரி    -    10
திராட்சை    -    10
குங்குமப்பூ    -    சிறிதளவு
பால்     -    100 மிலி.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை மேலோட்டமாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். முந்திரி, திராட்சை இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக்கி நெய்விட்டு  வறுத்துக் கொள்ளுங்கள். ஊறிய பாசிப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, பால், குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் வெண்ணெய் பதத்துக்கு அரைத்துக்  கொள்ளுங்கள்.

சர்க்கரையில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். பாகு கம்பி பதத்துக்கு வந்ததும் பாசிப்பருப்பு விழுதைப் போட்டு, சிறிது, சிறிதாக  நெய்விட்டு அடிப்பிடிக்காமல் கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்குங்கள். மணமும் சுவையும்  நிறைந்த ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா ரெடி!

📓📓📓📓📓📓📓📓📓📓


 *17. குக்கர் அல்வா*

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1கப்
சர்க்கரை - 2கப்
நெய் - 100மில்லி
வெஜிடபிள் ஆயில் - 100மில்லி
முந்திரி பருப்பு - 50கிராம்
கேசரி கலர் - 1சிட்டிகை
செய்முறை :
1.கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
2.அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.
3.குக்கரின் உள்ளே இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் மாவு கரைத்த பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து மாவை வேக வைக்க வேண்டும்.
4.இரண்டு விசில் வந்த உடன் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
5. 5நிமிடம் கழித்து குக்கரின் உள்ளே உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற விட வேண்டும்.
ஆறிய மாவை கட்டி இல்லாமல் மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கூழ் போல் கரைத்து கொள்ள வேண்டும்.(மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றினால் கட்டி இல்லாமல் கூழாகிவிடும்)
6.வாணலியை அடுப்பில் வைத்து 200மில்லி தண்ணீர் ஊற்றி அதில் கேசரி கலர்,2கப் சர்க்கரையை சேர்த்து சூடு படுத்த வேண்டும்.
7.பக்கத்து அடுப்பில் ம்ற்றொரு வாணலியில் 200மில்லி வெஜிடபிள் ஆயில் ஊற்றி நன்கு சூடான உடன் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
8.சர்க்கரை , கேசரிகலர் சேர்த்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் 100மில்லி நெய்யை ஊற்றி நெய் கரைந்த உடன் வெந்த மாவை சேர்த்து அடி பிடிக்காமல் கிண்ட வேண்டும்.
9.ஊற்றிய நெய்யை மாவு உறிஞ்சிய பின் பக்கத்து அடுப்பில் உள்ள நன்கு சூடான வெஜிடபிள் ஆயிலை ஒரு கரண்டி கொண்டு எடுத்து கிண்டும் மாவில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிண்ட வேண்டும்.
10.கொதிக்கும் ஆயில் முழுவதும் இதே போல் ஊற்றி கிண்டி கொண்டே இருக்கும் பொழுது மாவும் ஆயிலை உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.
11.சிறிது நேரத்தில் வெந்த மாவு ஆயிலை வெளியே விட ஆரம்பிக்கும் பக்குவத்தில் 50கிராம் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும்.
12.கிண்டிய அல்வாவை ஒரு தட்டில் கொட்டி பரத்தி முந்திரியால் அலங்கரிக்கலாம்.

📔📔📔📔📔📔📔📔📔📔

 *18. வீட் ரவா  பைனாப்பிள் அல்வா.:*

தேவையான பொருட்கள்.:
கோதுமை ரவை – ஒரு கப், பைனாப்பிள் விழுது, சர்க்கரை – தலா ஒன்றரை கப்,
வறுத்த முந்திரி துண்டுகள் – 15, குங்குமப்பூ – 4 அல்லது 5 இதழ்கள்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை.:
கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சூடுபட கிளறவும்.

பிறகு, ரவை மூழ்கும் அளவுக்கு சுடு நீர் விட்டு கிளறவும்.

கெட்டியாகி வந்ததும் சர்க்கரை, பைனாப்பிள் விழுது, சேர்த்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ சேர்க்கவும். இறுகி கெட்டியாக வந்ததும் முந்திரி துண்டுகள் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு.:
கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக ‘தொப்’பென்று விழ வேண்டும். இதுதான் சரியான அல்வா பதம்.

🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕


 *19. ❤️சுவையான கேரட் அல்வா ❤️*

தேவையானப்பொருட்கள்
டெல்லி கேரட்   :  1கிலோ
பால்     : 500மிலி
சர்க்கரை    : 400 கி
நெய்     : 50கி
முந்திரிப்பருப்பு  : 20 கி
செய்முறை :
1. கேரட்டை நன்றாக தோல் சீவி கழுவி மெல்லிசாக துருவவும்.
2. அடி கனமான கடாயில் துருவிய கேரட்டை போட்டு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி மூடி வைத்து மிதமான தீயில் கேரட்டை வேகவிடவும்.
3. கேரட் நன்றாக வெந்து பால்    நன்றாக வற்றியவுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
4. சர்க்கரை நன்றாக கரைந்த உடன் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.
5. கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் போது நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அனைக்கவும்.
6. அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் .
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕


 *20. சுவையான பால் அல்வா*


தேவை

கெட்டியான பால் – 5 கப்
சர்க்கரை – 2 கப்
வெண்ணெய் – 2 டே. ஸ்பூன்


செய்முறை


கெட்டியான பாலை அடிபிடிக்காமல் காய்ச்சித் திரட்டவும். சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒட்டாமல் வரும் போது, வெண்ணெயைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் இட்டு ஆறியதும் வில்லைகளாகப் போடவும்.

🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇


 *21. சுவையான மைதா அல்வா*


தேவை


மைதா மாவு – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
நெய் – 150 கிராம்
பிடித்தமான கலர் எஸென்ஸ்
வறுத்த முந்திரி – சிறிதளவு



செய்முறை


சர்க்கரை கம்பிப் பாகில் கரைத்த மைதா மாவைக் கொட்டி, இதர பொருட்களைச் சேர்த்து கிளறி சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


 *22. சுவையான பிரெட் அல்வா*

தேவை

பிரெட் துண்டுகள் – 5
மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்
வேகவைத்து மசித்த பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரைத் தூள் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம், எஸன்ஸ் – தேவையான அளவு

செய்முறை

பிரெட், பால் மசித்த பருப்பு, உருளைக்கிழங்க, சர்க்கரைத்தூள் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் ஏற்றிப் பதமாகக் கிளறவும். சுருண்டு வந்ததும் நெய், முந்திரி, திராட்சை, எஸன்ஸ் சேர்த்துக் கிளறவும்.
பிரெட் அல்வா என்று சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். ‘பாதாம் அல்வா’ என்றே நினைப்பார்கள்.

🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓


 *23. சுவையான கார்ன் அல்வா*

தேவை

மக்காச் சோள மாவு – 1 கப்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – தேவையான அளவு

செய்முறை

மக்காச் சோள மாவுடன் 11/2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி சர்க்கரை மீதமுள்ள தண்ணீர் சேர்க்கவும்.
பாகு பதத்தில் வந்தவுடன், சோள மாவினை சேர்த்துக் கிளறி விடவும்.
இதனை கிளறிக் கொண்டோ முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளறவும்.
இந்தக் கலவை உருண்டு திரண்டு வரும்போது, இதனை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
முந்திரியால் அதன் மேல் அலங்கரித்து, ஆறியதும் நமக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.

🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭

 *24. ஸ்பெஷல் அவல் அல்வா*

தேவை

கெட்டி அவல் – 1/2 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலம், முந்திரி – தேவையான அளவு

செய்முறை

நெய்யில் வறுத்து பொடித்த அவலை நெய்யுடன் சர்க்கரைப்பாகில் போட்டுக் கிளறி முந்திரி ஏலம் தூவி இறக்கவும். இது தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக அமைந்து விடும்.

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


 *25. பூசணிக்காய் அல்வா*

தேவை

பூசணிக்காய் – 1/2 கிலோ
நெய் – 175 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் – 1 சிறிய டம்ளர் (அ) சர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்
ஏலப்பொடி – 1 ஸ்பூன்
ஒடித்த முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – 11/2 கரண்டி (கோவா போடும் பட்சத்தில்)

செய்முறை

பூசணிக்காயின் தோலைச் சீவி, குடல் பகுதியை அகற்றி விட்டு, அலம்பித் துருவிக் கொள்ளவும்.
பூசணிக்காயைத் துருவும் பொழுது, தண்ணீர்ச்சத்து நிறைய வெளியேறும். ஆனால் அது உபயோகப்படாது.
சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, அதிலேயே துருவிய பூசணியைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கிய பூசணித் துருவலை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும்.
சிலர் துருவலாகவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள்.
அடுப்பில் சிறிதளவு நெய்யை விட்டு விழுதைப் போட்டு, சர்க்கரையைச் சேர்க்கவும்.
நெய்யைச் சுட வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை + விழுதுடன் சேர்க்கவும். கிளறிக் கொண்டு இருக்கவும்.
மேற்கொண்டு, கன்டென்ஸ்ட் மில்க் அல்லது கோவாவாக இருந்தால், தண்ணீரில் கரைத்தாற்போல் செய்து கொண்டு கலவையில் சேர்க்கவும்.
கேசரிப் பவுடர், ஒடித்த முந்திரி, ஏலப்பொடி எல்லாவற்றையும் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல், சுருள வரும் பதத்தில் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறியவுடன் வில்லைகளாகப் போடவும்.
கோவாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்ப்பதற்குப் பதில் பூசணித் தண்ணீரைக் கூட உபயோகப்படுத்தலாம். இதை ‘காசி அல்வா’ என்றும் சொல்வார்கள்.

🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑


 *26. தாஹினி அல்வா*

தேவை

சர்க்கரை – 300 கிராம்
தண்ணீர் – 100 மி.லி.
எள்ளு – 300 கிராம்
எசன்ஸ் – தேவையெனில்
பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை – 1/4 கப் தேவையெனில்

செய்முறை

பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீரில் இட்டு கரைத்து மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும் பாகு பதம் வரும் வரை பதம் வந்ததும் அத்துடன் வறுத்து தோலுரித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றை கொட்டி நன்கு கிளறவும். வாசனை தேவையெனில் எசன்ஸ் 1/2 ஸ்பூன் (வெனிலா) விட்டு கிளறவும். இந்த ஒரு பாத்திரத்தில் எள்ளை போட்டு அதில் இந்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வேகமாகவும் பத்திரமாகவும் கிளற வேண்டும். நன்கு கிளறி அதனை ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பி விட அது அப்படி கட்டியாகவும் ஆறி மொறுமொறுப்பாகவும் வந்து விடும். இதனை தேவையெனில் முதலிலேயே சதுரம் சதுரமாக வெட்டியும் விடலாம். இதுவே தாஹினி அல்வா.

🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉

 *27. முந்திரிப் பருப்பு அல்வா*

தேவையான பொருட்கள் :

தூளாக்கிய
  முந்திரிப் பருப்பு - ஒரு கப்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 2 கப்

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மைதாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்புத் தூளையும், சர்க்கரையை யும் சுத்தமான வாணலியில் போட்டு கிளறவும். சர்க்கரை உருகத் தொடங்கியதும் மைதா மாவை அதோடு சேர்க்கவும். மாவை கிளறிக் கொண்டே சிறிது சிறிதாக நெய்யை அதோடு சேர்க்கவும். கலவை வாணலியின் ஓரத்தில் ஒட்டாத நிலை வரும்வரை இவ்விதம் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒட்டாத நிலை வந்ததும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்தக் கலவையை கொட்டி சமமாகப் பரப்பி, ஓரளவு ஆறியதும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍


 *28. சுவையான பீட்ரூட் அல்வா*

தேவையானப்பொருட்கள்:

பீட்ரூட் – 1
பால் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் – ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு – 10

செய்முறை:
பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும். கை விடாமல் அல்வா கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய், ஜாதிக்காய் தூள்களையும், வறுத்த முந்திரியையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.

🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋


 *29. சுவையான பால்கோவா*


தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை :
பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு அது கெட்டியான பதத்திற்கு இறுகும் வரை கொதிக்க விட வேண்டும். பால் அடி பிடிக்காமல் இருக்க அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு இறுகி க்ரீமியான நிலையை அடையும்போது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கொண்டே இருந்தால் பால்கோவா நிலையை அடையும். பின் அதில் முற்றிலும் நீர் இறுகி கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இறுகிய நிலை அடையும் போது நெய் ஊற்றிக் கிளறி இறுதியாக, ஏலக்காய்ப் பொடி தூவிப் பரிமாறலாம்.
சூப்பரான பால்கோவா தயார்.

🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

 *30. மன்னார்குடி டேட்ஸ் அல்வா*

என்னென்ன தேவை?

பால் பேணி / பதுர் பேணி - 2, பால்கோவா (இனிப்பு கோவா) - 200 கிராம், பால் - அரை லிட்டர், முந்திரி - 100 கிராம், பேரீச்சம் பழம் - 200 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு.

எப்படிச் செய்வது?

முந்திரியை ரவை போல ஒன்றிரண்டாக பொடிக்கவும். பேரீச்சம் பழத்தை  பாதி பொடியாக நறுக்கியும், மீதியை மிக்ஸியில் போட்டு சிறிது பொடித்தும் வைக்கவும். நறுக்கிய மற்றும் துருவிய பதத்தில் இருக்கும் பேரீச்சையை நெய் விட்டு லேசாக வறுத்து வைக்கவும். சிறிது
முந்திரியையும் நெய்யில் வறுத்து வைக்கவும் (அலங்கரிக்க). அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டு சூடானதும், பால்கோவா போட்டு நன்கு கிளறவும். பொடித்து வைத்த பேரீச்சம் பழம் சேர்த்து, முந்திரி பவுடர், எசென்ஸ்  சேர்த்து நன்கு கிளறவும். பால் பேணியைப் பொடித்து, இத்துடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது நெய்  சேர்க்கவும்.  பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், அடுப்பிலிருந்து அகற்றி, மேலே சிறிது பேரீச்சை, முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...

* நெய் வறுப்பதற்கு மட்டும் போதுமானது. அதிகம் தேவைப்படாது.
* கலர் பவுடர் தவிர்க்கலாம், விரும்பினால் சிறிது ஆரஞ்சு கலர் சேர்க்கலாம்.
* பால்கோவா, முந்திரி, பேரீச்சையின் இனிப்புகளே போதும். தனியாக சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.

அல்வா 600!

கிழக்கு ஆப்பிரிக்காவில் Dodol எனும் அரிசி மாவில் செய்யப்பட்ட அல்வா.
இதுபோன்ற நட்ஸ் அண்ட் பட்டர் வகை அல்வாக்கள் பல்ஜீரியா, ரஷ்யா, எகிப்து நாடுகளில் மிகப் பிரபலம்.
நம்ம ஊர் சோன்பப்டி ஸ்டைலில் இருக்கும் Floss Halva  துருக்கியின் பாரம்பரிய உணவு.  எள்ளை வைத்து செய்யப்படும் தஹினி அல்வா... துருக்கி, போலந்து போன்ற நாடுகளில் விருப்ப இனிப்பு.


30 வகை ஸ்வீட், காரம் – தீபாவளி ஸ்பெஷல்


30 வகை ஸ்வீட், காரம் – தீபாவளி ஸ்பெஷல்





ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான்! பல நாட்களுக்கு முன்பிருந்தே ‘கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட் செய்து, பட்சணங்களை தயார் செய்து, உறவு – நட்பு வட்டாரத்தில் விநியோகித்து, பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி முடிக்கும் சமயத்தில்… ‘அடுத்த தீபாவளி சீக்கிரம் வந்துவிடாதா…’ என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். இதோ வந்து விட்டது இனிய தீபாவளி. இந்த இன்பப்பொழுதில் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும் வகையில், 30 வகை தீபாவளி பட்சணங்களை சிறப்பாக செய்யக் கற்றுத்தருகிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.
தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

லட்டு
தேவையானவை: கடலை மாவு – 200 கிராம், சர்க்கரை – 350 கிராம், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை – தலா 20, லவங்கம் – 8, டைமண்ட் கல்கண்டு – 15, பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் – 5, பால் – ஒரு டீஸ்பூன், கேசரி கலர் – சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு – பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

கடலைப்பருப்பு சுய்யம்
தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) – 100 கிராம், பாகு வெல்லம் – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், முந்திரித்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ
மேல்மாவுக்கு: மைதா மாவு – 75 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

தேங்காய் சுகியன்
தேவையானவை: தேங்காய்த் துருவல் – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு – 100 கிராம், உளுத்தமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.  பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

உக்காரை
தேவையானவை:  கடலைப்பருப்பு – 200 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெல்லம் – 250 கிராம், நெய் – 100 கிராம், வறுத்த முந்திரி – 25 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

மூங்தால் ஃப்ரை
தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.
இது ஒரு மாதம் வரை கெடாது.

சன்னா தால் ஃப்ரை
தேவையானவை:  கடலைப் பருப்பு – 200 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் – தேவை யான அளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி,  நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி
தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல்  – டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 200 கிராம், சர்க்கரை – 300 கிராம், பால் பவுடர் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 கிராம்.
செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.
இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

மைசூர்பாகு
தேவையானவை: கடலை மாவு – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், நெய் – 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.
குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

காராபூந்தி
தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

இஞ்சி முரப்பா
தேவையானவை: சுக்குப் பொடி – 50 கிராம், சர்க்கரை – 100 கிராம், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.
குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.

பாம்பே காஜா
தேவையானவை: மைதா மாவு – 150 கிராம், சர்க்கரை – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, கேசரி கலர் – சிறிதளவு.
செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

மோகன் தால்
தேவையானவை: கடலை மாவு – 100 கிராம், சர்க்கரை – 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா – 50 கிராம், நெய் – முக்கால் கப், வறுத்த முந்திரி –  சிறிதளவு, குங்குமப்பூ – சில இதழ்கள்
செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி… கடலை மாவு – கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி,  வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட… மோகன் தால் ரெடி!
குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

கோதுமை அல்வா
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றரை கப், கேசரி கலர் – சிறிதளவு, நெய் – 100 கிராம், எண்ணெய் – 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை – தலா ஒரு டீஸ்பூன், பால் – ஒரு கப்
செய்முறை: நெய் – எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் – எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி,  வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

தேன்குழல்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) – 400 கிராம், முழு உளுந்து – 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – அரை கிலோ.
செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

பாதாம் டிலைட்
தேவையானவை:  மைதா மாவு – 200 கிராம், பாதாம் துருவல் – 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை – 75 கிராம், கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – அரை கிலோ, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

மகிழம்பூ முறுக்கு
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) – 300 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், உப்பு – தேவையான அளவு, எண் ணெய் – கால் கிலோ, பெருங் காயத்தூள் – சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:  பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

சீப்பு ரோல்ஸ்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) – 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – கால் கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்
தேவையானவை: கெட்டி அவல் – 200 கிராம், பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் – தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் – சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்),  எண் ணெய் – 250 கிராம், நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற… ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.
குறிப்பு:  நெய் – சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

ஜாங்கிரி
தேவையானவை: முழு உளுந்து – 200 கிராம், அரிசி – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் – சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், சீவிய முந்திரி – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.
துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

ரவா லாடு
தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை  – கால் கிலோ, பொடித்த சர்க்கரை – கால் கிலோ, நெய் – 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு.
செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

ஓமப்பொடி
தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு, பச்சரிசி மாவு – 100 கிராம், ஓமம் – 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் – அரை கிலோ.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள்  /  மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

டூ இன் ஒன் லட்டு
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு – 100 கிராம், பாசிபருப்பு – 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் – 50 கிராம், பொடித்த சர்க்கரை – 200 கிராம், நெய் – 150 கிராம், வறுத்த முந்திரி – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை: நெய் தவிர  மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

டபுள் கலர் மைதா கேக்
தேவையானவை: மைதா – 150 கிராம், சர்க்கரை – 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி – 100 கிராம், பச்சை ஃபுட் கலர் – சிறிதளவு, வெனிலா எசென்ஸ் – சில துளிகள், பால் பவுடர் – 50 கிராம்,
செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.
மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர்  சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

கேஷ்யூ ஃப்ரை
தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி – 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) – அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி – பச்சை மிளகாய் (சேர்த்து) – ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிது, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ.
செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து,  சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

பாதுஷா
தேவையானவை: மைதா – 200 கிராம், சர்க்கரை – 300 கிராம், உப்பு, சமையல் சோடா – தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் – கால் கிலோ, நெய் – ஒன்றரை டீஸ்பூன், பால் – ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் – சிறிதளவு,  ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்.
செய்முறை:  உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து  இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து,  கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

பாதாம் மில்க் அல்வா
தேவையானவை: பாதாம் பருப்பு – 100 கிராம், பால் – 100 மில்லி, சர்க்கரை – 150 கிராம், பாதாம் எசன்ஸ் – சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் – அரை சிட்டிகை, நெய் – 50 கிராம்.
செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் – பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும்.  அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்
குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

காரா சேவ்
தேவையானவை: கடலை மாவு – 200 கிராம், பச்சரிசி மாவு – 50 கிராம், மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, ஓமம் – சிறிதளவு, எண்ணெய் – கால் கிலோ, சமையல் சோடா – ஒரு சிட்டிகை.
செய்முறை: கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.
இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

பந்தர் லட்டு  
தேவையானவை: கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், நெய் – 100 கிராம், பொடித்த சர்க்கரை – 150 கிராம், எண்ணெய்  – பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

டிரை ஃப்ரூட் அல்வா
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை – 100 கிராம், கர்ஜூர் – 8 (விதை நீக்கியது),  நெய் – 100 கிராம், எண்ணெய் – 50 மில்லி, சர்க்கரை – 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி – 50 கிராம், முந்திரி, திராட்சை – தலா 25 கிராம், வெள்ளரி விதை – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் – எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் – எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

அசோகா
தேவையானவை: பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) – 100 கிராம், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 200 கிராம், நெய் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு, பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:  சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: ‘செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
நவதானிய அப்பம்
தேவையானவை:  நவதானிய மாவு – ஒரு கப், ரவை – ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் – 2 டேபிள்ஸ்பூன், பால் –  ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு.
செய்முறை: நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை  தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.
நன்றி அவள் விகடன்.