செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

30 வகை விதம்விதமான சைட் டிஷ்களை


30 வகை விதம்விதமான சைட் டிஷ்களை .

''சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண் என்று எல்லாவற்றுடனும் சாப்பிடுவதற்கு விதம்விதமான சைட் டிஷ்களை .


🌼  *காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை*

தேவையானவை: பேபிகார்ன் - கால் கிலோ, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டீஸ்பூன்,  பெரிய வெங்காயம், பெரிய தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப, தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், செட்டிநாடு பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் 'கட்’ செய்யவும். ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண் டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.


ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு இதில் மீதம் இருக்கும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி... இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

இது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.

 🌼 *கோவைக்காய் வறுவல்*

தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி... மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி    5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.

இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட... சுவை சூப்பராக இருக்கும்.

 🌼 *வெஜ் குருமா*

தேவையானவை: கேரட் - 2, உருளைக்கிழங்கு, நூக்கல் -   தலா ஒன்று, பீன்ஸ் - 10 பச்சைப் பட்டாணி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 5 பல், ஏலக்காய் - 3, பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று, லவங்கம் - 5, தேங்காய் - அரை மூடி, முந்திரி - 10, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை -  தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.  ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன்  சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.

 🌼 *பீட்ரூட் பொரியல்*

தேவையானவை: பெரிய சைஸ் பீட்ரூட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2  சர்க்கரை - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து குக்கரில்  கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம்,  கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேக வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும்.

இந்தப் பொரியல்... சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.

 🌼 *வாழைக்காய் சிப்ஸ்*

தேவையானவை: வாழைக்காய் - 2 (தோல் சீவி வைக்கவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக... அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ் வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை வறுத்துப் போட்டு பரிமாறவும்.

இது வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.

 *🌼 குடமிளகாய் சட்னி*

தேவையானவை: குடமிளகாய் பெரியது - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  புளி - எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை  சேர்த்து... எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.

இதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.

 🌼 *முட்டைகோஸ் சட்னி*

தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 10, உளுத்தம்பருப்பு  - - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன் சேர்த்துக் கலக்கவும்.

இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.

🌼 வடகறி

தேவையானவை: கடலைப்பருப்பு - 150 கிராம், பெரிய வெங்காயம் - 2 , பெரிய தக்காளி - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5, லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக  வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.

 *🌼 வாழைப்பூ கோலா உருண்டை*

தேவையானவை: வாழைப்பூ - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, இஞ்சி -    பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொட்டுகடலை மாவு - 250 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம், முந்திரி - 10, புளித்த மோர் - ஒரு கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்துப் பிசையவும். இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

இது, காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 *🌼 ஆலு புக்காரா*

தேவையானவை: பேபி உருளைக்கிழங்கு - ஒரு பாக்கெட், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 150 கிராம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு விழுது - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கிரீம் (விருப்பப்பட்டால்) - தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், வறுத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். குழம்பு பதம் வந்தவுடன், விருப்பப்பட்டால் வெண்ணெயும், கிரீமும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.

 🌼 *மூலிகை சட்னி*

தேவையானவை: வல்லாரைக் கீரை - (ஆய்ந்தது), புதினா இலை - தலா ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 10,  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.

சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.

 🌼 *பகரா பேங்கன்*

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் - 100 கிராம், தனியா - 3 டீஸ்பூன், எள்,  சீரகம் -  தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, வேர்க்கடலை - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 5 பல், எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி...  தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி... உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக் காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.

இது... சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

 *🌼 ஸ்வீட் கார்ன்  பனீர் கோஃப்தா*

தேவையானவை: ஸ்வீட் கார்ன் - 100 கிராம், பனீர் - 50 கிராம், உருளைக்கிழங்கு - 2,  முந்திரிப் பருப்பு - 10, முந்திரி விழுது - சிறிதளவு, தக்காளி விழுது - 100 கிராம், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, வெங்காயம் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா -  2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து... அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

இதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

 🌼 *வாழைக்காய் சட்னி*

தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 8, பெரிய வெங்காயம் - ஒன்று, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - ஒரு பல், தக்காளி - 2, புளி - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

இதை... இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

 *🌼உருளைக்கிழங்கு மசாலா*

தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, தேங்காய் துருவல்  - ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், முந்திரி - 10, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு -  தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து... கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

 *🌼 கடாய் பனீர்*

தேவையானவை: பனீர் - கால் கிலோ, குடமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

மசாலா பொடி
 தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: மசாலா பொடி தயாரிக்க  கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2 குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து... பொடியாக நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி,  இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி... எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

இது... சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

 *🌼 பப்பாளி சாலட்*

தேவையானவை: பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு,  தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பப்பாளியை 'கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.

 *🌼 சேப்பங்கிழங்கு சாப்ஸ்*

தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, கசகசா - 3 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி - பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட... சுவை அசத்தலோ அசத்தல்!

 🌼 *தயிர் வெண்டைக்காய்*

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, தக்காளி - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,


செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக் கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.

இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

 *🌼 பீர்க்கங்காய் கொத்சு*

தேவையானவை: பீர்க்கங்காய் - அரை கிலோ, புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி.... சாதத்துடன் பரிமாறவும்.

🌼 *உருளைக்கிழங்கு ஸ்டூ*

தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 3, தேங்காய் - அரை மூடி, இஞ்சி - சிறிதளவு, மிளகுத்தூள்  - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, தோல் சீவி நறுக்கவும். தேங்காயை துருவி கொஞ்ச மாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் இரண்டாவது பால் கிடைக் கும். இந்த தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி போட்டு வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கீறிய பச்சை மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து  கொதிக்கவிடவும். இறக்கு வதற்கு முன் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதி வரும் போது இறக்கிவிடவும்.

இதனை இட்லி, இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.

 🌼 *மாங்காய் பச்சடி*

தேவையானவை: மாங்காய் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சர்க்கரை - 50 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

 🌼 *பூண்டு சட்னி*

தேவையானவை: பூண்டுப் பல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து  வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில்  சேர்க்கவும்.

இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.

அவியல்

தேவையானவை: முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, சேனைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் - 5, சீரகம் - இரண்டு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்), தயிர் - ஒரு கப்,  பூண்டு - 3 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.

இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

🌼  *மஷ்ரூம் ரெட் கறி*

தேவையானவை: மஷ்ரூம் - 100 கிராம், பேபிகார்ன் அல்லது பனீர் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தேங்காய்ப் பால் - 2 கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி - பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.

இதை... சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

 *🌼 பருப்பு தண்ணி மசாலா*

தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2,  சோம்பு, சீரகம் -  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கறி பவுடர் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து.... பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த முழு பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.

இதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

🌼  *பட்டர்பீன்ஸ் பொரியல்*

தேவையானவை: பட்டர் பீன்ஸ் - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, முந்திரி - 5, கசகசா, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான  தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது  இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இது... சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.

🌼 *கீரை கூட்டு*

தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - 2, வறுத்த பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை  டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் - சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு - கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.

இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

🌼 *காளான் வதக்கல்*

தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்),  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: காளானை கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

 🌼 *கொத்தமல்லி துவையல்*

தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் -  இரண்டு டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் சிறிது எண்ணெயை காய வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

30 வகை எண்ணெய் இல்லாத சமையல்...


30 வகை எண்ணெய் இல்லாத சமையல...

”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!

எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்!

அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வடை என்று பொழுதுவிடிந்தால்… பொழுதுபோனால், எண்ணெயோடுதான் வாழ்க்கை! விளைவு… கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர், சர்க்கரை என டாக்டரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்கிற முதல் வார்த்தையே “சாப்பாட்டுல எண்ணெயைக் குறைச்சுடுங்க” என்பதுதான்.

”எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியுமா?” என்று அலறாதீர்கள். இங்கே, பிரபல ‘சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம் உங்களுக்கு பரிமாறிஇருக்கும் 30 வகை சமையலுமே ‘ஆயில் ஃப்ரீ’தான்! கூடவே அவர் சொல்லும் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு …

“இந்த வகை சமையலுக்காக தாளிக்கறப்ப, அடுப்பை மிதமான தீயில வச்சுருக்கணும். அப்பதான் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு மாதிரியான பொருட்கள் கருகாம பொரிஞ்சு வரும்.”

எண்ணெய் செலவுக்கு மட்டுமல்ல… மருத்துவச் செலவுக்கும் குட்பை சொல்வோமா?!

 *டயட் சாம்பார்*

 *தேவையானவை:*
 துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி… 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிய விட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்… டயட் சாம்பார் ரெடி!

 *வாழைத்தண்டு கூட்டு*

 *தேவையானவை:* பாசிப்பருப்பு – அரை கப், வாழைத்தண்டு (மீடியம் சைஸ்) – ஒன்று, வெங்காயம் (நறுக்கிக் கொள்ளவும்) – 1, பச்சை மிளகாய் – 3, காய்ச்சிய பால் – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, அதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, நசுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

 *உசிலி*

 *தேவையானவை:* கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏதாவது ஒரு வகை காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கலந்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் போட்டு 10-15 நிமிடம் வேக வைத்து, இறக்கவும். ஆறியதும், அந்த உருண்டைகளை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒருமுறை சுற்றி எடுத்தால்… உதிராக வரும். நறுக்கிய காய்கறியுடன் உப்பு சேர்த்து (தேவைப்பட்டால்), குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். உதிர்த்த பருப்புடன் வேக வைத்த காய்கறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். வெறும் கடாயில், கடுகு பொரித்து சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

 *கீரை மசியல்*

 *தேவையானவை:* அரைக்கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 5, பச்சை மிளகாய் – 1, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : கீரையை ஆய்ந்து, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். ஆய்ந்த கீரையுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், திறந்து நன்கு மசித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வேக வைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்த்துக் கலந்தும் பரிமாறலாம்.

இதேபோல் முளைக்கீரை, சிறுகீரையிலும் செய்யலாம்.

 *பருப்பு ரசம்*

 *தேவையானவை:* துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், புளிக் கரைசல் – கால் கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *பொடிக்க:* மிளகு, சீரகம் – தலா ஒன்றரை டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 3 பல்.

 *செய்முறை:* பாத்திரத்தில் துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக் கரைசல், பெருங்காயத்தூள், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து… கொதிக்க விடவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு பொடிக்கவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்து சிவக்கப் பொரித்து, துவரம்பருப்புத் தண்ணீர் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது, பொடித்த பொடியையும் சேர்க்கவும். கூடவே, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாற வும்.

 *வாழைக்காய் பொடிமாஸ்*

 *தேவையானவை* : வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *பொடிக்க* : உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன்.

 *செய்முறை:* வாழைக்காயை இரண்டாக நறுக்கி, வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும். ஆற வைத்து, தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். மிதமான தீயில் கடாயை வைத்து கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை சேர்த்து… துருவிய வாழைக்காயை சேர்த்துக் கிளறவும். பொடித்த பொடி, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எண்ணெய் சேர்க்காததால், அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்து சமைக்கவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

 *அவல் தோசை*

 *தேவையானவை* : பச்சரிசி – ஒன்றரை கப், புழுங்கல் அரிசி, அவல் – தலா அரை கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : பச்சரி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். அவலை தனியாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், எல்லாவற்றையும் ஒன்றாக்கி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க விடவும். புளித்ததும், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு விட்டு, ஊத்தப்பம் போல் வார்த்து மூடியால் மூடவும். வெந்ததும், திருப்பிப் போடாமல் அப்படியே எடுக்க… அவல் தோசை ரெடி! இதேபோல் ஒவ்வொரு அவல் தோசையையும் தயார் செய்யவும்.

 *இளந்தோசை*

 *தேவையானவை* : இட்லி மாவு – ஒரு கப், தண்ணீர் – சிறிதளவு.

 *செய்முறை* : இட்லி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தோசை மாவை விட்டு, மெல்லிய தோசையாக வார்க்கவும். பிறகு, மூடியால் மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். இதேபோல், ஒவ்வொரு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இந்த தோசைகள், வெள்ளை நிறம் மாறாமல் மிக மெல்லியதாக இருக்கும்.

 *பொடி இட்லி*

 *தேவையானவை* : இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு.

 *செய்முறை:* இட்லி மாவில், மினி இட்லிகளை தயார் செய்து கொள்ளவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து, கடுகு போட்டு பொரிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். இட்லி மிளகாய்ப் பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு… தண்ணீர் விட்டுக் குழைத்து, மினி இட்லிகளைப் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பொரித்த கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

 *தயிர் சாண்ட்விச்*

 *தேவையானவை:* பிரெட் ஸ்லைஸ் – 10, புளிக்காத தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும். பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸலைஸால் மூடவும். இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும். தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

 *மல்டி வெஜிடபிள் குழம்பு*

 *தேவையானவை:* நறுக்கிய பரங்கிக்காய், கத்திரிக்காய், அவரை, காராமணி, மொச்சை, வாழை, முருங்கைக்காய் கலவை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 8 பல், புளி – 50 கிராம், தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், வெந்த யம் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்த தும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறி கலவையைச் சேர்த் துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து… காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

 *வெஜ் சூப்*

 *தேவையானவை* : பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும்.

 *மசாலா சென்னா*

 *தேவையானவை:* வெள்ளை சென்னா – ஒரு கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : சென்னாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சென்னாவுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மூடியைத் திறந்து, தண்ணீரை வடிக்கவும். கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலக்க… மசாலா சென்னா தயார்!

 *செட்டிநாட்டு பருப்புத் துவையல்*

 *தேவையானவை:* துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, புளி – கொட்டைப்பாக்களவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசி யாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டு பருப்புத் துவையல் ரெடி!

 *பருப்பு சாதம்*

 *தேவையானவை* : பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும், கழுவிய துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு, அரிசி, தோலுரித்து நசுக்கிய பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து குழைய வேக வைத்து இறக்கவும்.

இதற்கு மோர்க்குழம்பு, பொடிமாஸ் சிறந்த சைட் டிஷ்.

 *கலவைக்காய் குருமா*

 *தேவையானவை:* பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் கலவை – 2 கப், உப்பு – தேவையான அளவு.

 *அரைக்க:* தேங்காய் துருவல் – கால் கப், பாதாம் – 10, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 2 பல், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று.

 *செய்முறை* : நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்கி இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து… வேக வைத்த காய்கறி கலவையுடன் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒருமுறை கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

 *காய்கறி போளி*

 *தேவையானவை:* கேரட் துருவல் – கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், பால் – அரை கப், பட்டை – 2 துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : ஒரு பாத் திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து… அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து… உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும். அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

 *பனீர் டிக்கா*

 *தேவையானவை* : பனீர் – 200 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : பனீரை, மீடியம் சைஸ் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதனுடன், கொடுத்துள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலந்து… 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, 4-5 பனீர் கலவை துண்டுகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி எடுக்க… பனீர் டிக்கா ரெடி!

 *பாலக் பனீர்*

 *தேவையானவை* : பாலக் கீரை (அ) பசலைக் கீரை, வெந்தயக் கீரை – தலா ஒரு கட்டு, பனீர் – 200 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : கீரைகளை ஆய்ந்து, அலசிக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கலந்து நன்கு மசித்துக் கொள்ளவும். நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்த்து ஒருமுறை லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

 *காலிஃப்ளவர் மசாலா*

 *தேவையானவை* : காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து, அதில் நறுக்கிய காலிஃப்ளவரை நன்கு கழுவவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய காலிஃப்ளவர், நறுக்கிய வெங்காயம், தக்காளியை கடாயில் சேர்த்து வேகவிடவும். சில நிமிடங்கள் கழித்து, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கிளறவும். கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

 *மினி ரவா இட்லி*

 *தேவையானவை:* ரவை, புளிக்காத தயிர் – தலா ஒரு கப், சேமியா – 1 டேபிள்ஸ்பூன், ஃப்ரூட் சால்ட், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி விழுது – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:* வெறும் கடாயில் கடுகு சேர்த்து பொரிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, ரவை சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும், ஃப்ரூட் சால்ட் நீங்கலாக மற்றவற்றை எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அந்த ரவைக் கலவையில் தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் விட்டு, சூடாகும் நேரத்தில், ரவை மாவில் ஃப்ரூட் சால்ட் சேர்த்து அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் விட, அது பொங்கி வரும். மாவை மீண்டும் நன்கு கலந்து, மினி இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

 *முட்டைகோஸ் ரொட்டி*

 *தேவையானவை* : கோதுமை மாவு – 2 கப், காய்ச்சிய பால் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன்.

ஸ்டஃப் செய்வதற்கு: முட்டைகோஸ் துருவல் – அரை கப், வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

 *செய்முறை* : கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும். முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!

பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் இட்டு சற்று கனமாகத் தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.

 *கிரீன் கொழுக்கட்டை*

 *தேவையானவை:* அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு

 *அரைக்க* : நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1.

 *செய்முறை* : அரைக்கக் கொடுத்துள்ள பொருட் களை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, தேங்காய் பாலில் கரைத்து வடிகட்டவும். அந்தப் பாலை அடுப்பில் வைத்து சூடாக்க… நுரை கட்டி வரும். அப்போது அரிசி மாவைக் கொட்டி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். அதிலிருந்து, கொஞ்சம் மாவு எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி… ஆவியில் வேக வைக்க, கொழுக்கட்டை ரெடி!

 *வாழைத்தண்டு கோசம்பரி*

 *தேவையானவை* : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி – தலா கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், வேக வைத்த சென்னா (அ) ஸ்வீட் கார்ன் – அரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மாதுளம் முத்துக்கள் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : நறுக்கிய வாழைத்தண்டை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும், கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

எளியமையான இந்த ரெசிபி, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

 *பேங்கன் கூட்டு*

 *தேவையானவை:* பாசிப்பருப்பு – அரை கப், கத்திரிக்காய் – 5, உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 1, தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, சோம்பு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : பாத்திரத்தில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். இவை எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்கு வெந்ததும், புளிக் கரைசல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு, வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

 *தால் இட்லி*

 *தேவையானவை:* துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல், கேரட் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : மூன்று வகை பருப்புகள், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்த மாவுடன், தேங்காய் துருவல், கேரட் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை, இட்லித் தட்டுகளில் விட்டு இட்லிகளாக வேக வைத்து, சூடாகப் பரிமாறவும்.

இதற்கு கார சட்னி சிறந்த காம்பினேஷன்.

 *இட்லி சாம்பார்*

 *தேவையானவை* : பாசிப்பருப்பு – அரை கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *அரைக்க:* உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

 *செய்முறை* : பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளியை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெறும் கடாயில் மிதமான தீயில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைக்கவும். அரைத்த விழுதை, பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கலந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து… ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

 *மோர்க்குழம்பு*

 *தேவையானவை:* புளிப்பில்லாத தயிர் – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஓமம் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : தயிரை நன்கு கடைந்து, கொஞ்சம் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கரைக்கவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயம், ஓமம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, மோர்கலவையை சேர்த்து.. கிளறியவாறே இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

ஏதாவது காய்கள் சேர்ப்பதாக இருந்தால் தனியே வேக வைத்து சேர்க்கவும்.

 *மல்டி பருப்பு சாம்பார்*

 *தேவையானவை:* துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், ஏதாவது ஒரு காய் (நறுக்கியது) – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி – 2, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – தேவையான அளவு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *வறுத்துப் பொடிக்க:* தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்.

 *செய்முறை* : பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும்… துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதி பதத்தில் வெந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்துக் குழைய வேகவிடவும். பிறகு, புளிக் கரைசல் விட்டுக் கலந்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பெருங்காயம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

இந்த சாம்பார்… சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

 *பாசிப்பருப்பு டோக்ளா*

 *தேவையானவை:* பாசிப்பருப்பு – ஒரு கப், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – கால் கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை* : பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில்… ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பிறகு, மாவை நன்கு கலக்கவும். இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கவும்.

ஆறியதும், துண்டுகளாக நறுக்கி, தேங்காய் சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

 *நன்றி:- சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்*

இந்த பதிவில் எண்ணெய் இல்லா சமையல் குறிப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள் மிகப்பெரிய சமையல் ரகசியம் மறைந்துள்ளது கண்டறியுங்கள் பார்ப்போம்

சாப்பிடும் முறைகள்

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

30 வகை எடை குறைப்பு உணவுகள்


30 வகை எடை குறைப்பு உணவுகள்

இன்றைய சூழ்நிலையில் இயந்திரங்களின் பெருக்கத்தால் உடல்_உழைப்பு குறைந்துவருகிறது.

இதன் விளைவாக `ஒபிசிட்டி’ எனும் உடல் பருமன் அனைத்து வயதினரையும் தாக்குகிறது. உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க... சத்துமிக்க, அதேசமயம் குறைந்த கலோரிகள்கொண்ட உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கருத்தில்கொண்டு, ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி எடை குறைப்பு உணவு வகைகளை இங்கே வழங்குகிறார்.

★சிறுதானிய பிரெட் சாண்ட்விச்

தேவையானவை:

சிறுதானிய பிரெட் ஸ்லைஸ்கள் - தேவையான அளவு, வெங்காயம் - ஒன்று (துருவவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) -  ஒரு கைப்பிடியளவு,  பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,  மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன், இந்துப்பு - கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

முளைகட்டிய பயறுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயம், இந்துப்பு, மிளகு - சீரகத்தூள், ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும். அதன்மீது அரைத்த விழுதைத் தடவவும். பிறகு, சிறிதளவு பயறு கலவையைப் பரப்பி மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். இதை பிரெட் டோஸ்டரிலும் செய்யலாம்.

பயன்:

காலை உணவாக உண்ணும்போது அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

★புதினா - கொத்தமல்லி மணப்பாகு

*தேவையானவை:

புதினா, கொத்தமல்லித்தழை -  தலா ஒரு கட்டு (ஆய்ந்து எடுக்கவும்), துருவிய வெல்லம் - ஒரு கப், தோல் சீவிய இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழியவும்), இந்துப்பு - கால் டீஸ்பூன்.

*செய்முறை:

புதினா, கொத்தமல்லித்தழையுடன் இஞ்சி சேர்த்து தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து வடிகட்டவும். வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்த பின் வடிகட்டிய சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அதனுடன் இந்துப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சேகரிக்கவும். இதை வாரம் ஒரு முறை தயார் செய்து பயன்படுத்தலாம்.

பயன்:
தினமும் காலை வெறும் வயிற்றில்  2 டேபிள்ஸ்பூன் மணப்பாகுடன் முக்கால் டம்ளர் வெந்நீர் சேர்த்துக் கலந்து குடித்துவர... ஊளை சதை குறையும்.

★*டயட் ஸ்பெஷல் தால் வித் ரொட்டி

*தேவையானவை:

சிறுதானிய ரெடி மிக்ஸ் (சாமை, வரகு, குதிரைவாலி கலந்த மாவு), கோதுமை மாவு - தலா ஒரு கப், இந்துப்பு - தேவையான அளவு.

தால் செய்ய:

கொள்ளு - ஒரு கப், தோலுரித்த சின்ன வெங்காயம் - 10, தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழியவும்), புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

*தாளிக்க:

கடுகு, சீரகம், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: கொள்ளுப் பயறை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் ஊறவைத்த கொள்ளுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சாம்பார் பொடி, 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். மாவு வகைகளுடன் இந்துப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து ரொட்டிகளைப் போட்டு, எண்ணெய்விடாமல் இருபுறமும் சுட்டு எடுக்கவும். ரொட்டிகளுடன் தால் சேர்த்துப் பரிமாறவும்.

**பயன்:
இடுப்புப் பகுதி சதை குறையும். தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.

**பூண்டு கஞ்சி

தேவையானவை:

பூண்டு - 10-15 பல் (தோலுரிக்கவும்), வறுத்து, உடைத்த புழுங்கல் அரிசி - ஒரு கப், சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன் (உடைக்கவும்), வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, இந்துப்பு - தேவையான அளவு, மோர் - ஒரு கப், தண்ணீர் - 4 கப்.

செய்முறை:

உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 4 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து அருந்தலாம்.

பயன்:

மதிய உணவாகச் சாப்பிடலாம். கொழுப்பைக் குறைக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

**தானிய பிரட்டல்

தேவையானவை:

முளைகட்டிய தானியக் கலவை (பச்சைப் பயறு, கொள்ளு, காராமணி)  - ஒரு கப், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் அல்லது வெள்ளரி - ஒரு கப், தோல் சீவிய துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பல், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் தானியங்களுடன் முட்டைகோஸ் அல்லது வெள்ளரி துண்டுகள், பூண்டு, இஞ்சித் துருவல், சாம்பார் பொடி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 முதல் 5 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கலவையுடன் சேர்க்கவும்.

பயன்:
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும்.

**எடை குறைப்பு சாலட்

தேவையானவை:

ஆவியில் வேகவைத்த பூசணி, கேரட், பறங்கிக்காய், வெள்ளரிக் கலவை - ஒரு கப், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,  இந்துப்பு – சிறிதளவு.

செய்முறை:

வேகவைத்த  காய்கறிகளுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், இந்துப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

பயன்:
தினமும் இதை ஒரு கப் அளவு காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். எடையைக் குறைக்க மிகவும் உதவும்.

**கொள்ளு கஷாயம்

தேவையானவை:

கொள்ளு - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெறும் வாணலியில் கொள்ளு, சீரகத்தைத் தனித்தனியாக  வறுத்து எடுக்கவும்.  ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் இந்துப்பு சேர்க்கவும்).

பயன்:
வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி, சதை குறையும். காலை, மாலை என இருவேளையும் குடிக்கலாம் (மாதவிடாய் நேரங்களில் பருக வேண்டாம்).

**வெந்தய - மல்லி பானம்

தேவையானவை:

வெந்தயம், சுக்கு, மல்லி (தனியா) - தலா 100 கிராம், கொம்பு மஞ்சள் (விரலி மஞ்சள்) - 50 கிராம், சீரகம் - 100 கிராம், பட்டை -  50 கிராம், எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழியவும்).

செய்முறை:

வெறும் வாணலியில் வெந்தயம், சுக்கு, மல்லி (தனியா), மஞ்சள், சீரகம், பட்டை ஆகியவற்றைத் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். 200 மில்லி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்து 100 மில்லியாகக் குறையும் வரை கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, காலை வேளையில் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும்).

பயன்:
உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு குடிக்கலாம். நாம் சாப்பிடும் உணவில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கவும். கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

**வெண்பூசணி கேரட் சாலட்

தேவையானவை:

வெண்பூசணித் துருவல் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், கேரட் துருவல் - கால் கப், இந்துப்பு – கால் டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்).

செய்முறை:

பூசணித் துருவலுடன், கேரட் துருவல், மிளகுத்தூள், இந்துப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பயன்:
தேவையற்ற கொழுப்பு கரையும். உடலில், ரத்தத்தில் உள்ள நச்சுகள் சிறுநீரகம் மூலம் வெளியேறு வதால் இந்த சாலட் சாப்பிட்டால் உடல் லேசானதுபோல உணரலாம்.

**ஆளி விதை பொடி ஜூஸ்

தேவையானவை:

வறுத்துப் பொடித்த ஆளிவிதை - ஒரு டீஸ்பூன், கடைந்த மோர் - அரை கப், தோலுடன் அரைத்த வெள்ளரிக்காய் சாறு - அரை கப், சீரகத்தூள், இந்துப்பு - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:

மோருடன் வெள்ளரிச்சாறு, ஆளிவிதைப் பொடி, சீரகத்தூள், இந்துப்பு சேர்த்துக் கலந்து பருகலாம்.

பயன்:
உடலைச் சோர்வடையாமல் பாதுகாக்கும். தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதுடன், உடலின் எடையைக் சீராக ஒரே அளவில் குறைக்க உதவும்.

**வாழைத்தண்டு மோர் பச்சடி

தேவையானவை:

பொடியாக நறுக்கிய இளம்வாழைத்தண்டு - ஒரு கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - தலா ஒன்று, சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்), கடைந்த தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, மூடி போட்டு வேகவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மோர் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பயன்:
கொழுப்பைக் கரைக்கும். சிறுநீரகச் செயல்பாட்டுக்கும் நல்லது.

**திரிபலா பானம்

தேவையானவை:

திரிபலா பொடி (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்), தேன் - தலா  ஒரு டீஸ்பூன்,  முட்டைகோஸ் சாறு  - ஒரு கப்.

செய்முறை:

முட்டைகோஸ் சாற்றுடன் திரிபலா பொடி, தேன் சேர்த்துக் கலந்து பருகவும். தினமும் இந்தப் பானத்தை காலை வேளையில் அல்லது  11 மணி அளவில் குடித்து வரலாம்.

பயன்:
இதை அருந்தி வந்தால், உடல் எடை சரசரவென குறைவது நன்றாகத் தெரியும். ஒரு கப் முட்டைகோஸில் வெறும் 14 கலோரிகள்தான் உள்ளன.  திரிபலா ஒரு காயகல்பமாகும்.  இது உள்ளுறுப்பு இயக்கத்தைச் சீர்செய்யவும் உதவும்.

**முழு பயறு வெள்ளரி சாலட்

தேவையானவை:

முளைக்கட்டிய கொள்ளு (அ) காராமணி, பச்சைப் பயறு - தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் - கால் கப், கேரட் துருவல், வெங்காயத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், ஆரிகானோ – சிறிதளவு, புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து உடனே பரிமாறவும்.

பயன்:
உடலின் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கவும், முக வசீகரத்துக்கும் உதவும். நச்சுகள் உடலிலிருந்து வெளியேறவும் உதவும்.

**பைனாப்பிள் டயட் சூப்

தேவையானவை:

அன்னாசிப்பழத் துண்டுகள் - ஒரு கப், ஓமம், சீரகம் - தலா 10 கிராம்.

செய்முறை:

முதல் நாள் இரவே அன்னாசிப்பழத் துண்டுகளுடன் ஓமம், சீரகம் சேர்த்து மூடி வைக்கவும். மறுநாள் அரைத்து வடிகட்டி பருகவும்.

பயன்:
தொப்பைக் குறையும்.  நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். ரத்தச் சுத்திகரிப்புக்கு உதவும்.

**புரோக்கோலி சூப்

தேவையானவை:

நறுக்கிய புரோக்கோலித் துண்டுகள் - ஒரு கப், பூண்டு -  8-10 பல், தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி கழுவிய நீர் - 4 கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு, வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், ஆரிகானோ அல்லது காய்ந்த துளசி இலை - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்), பட்டை - கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன், சிறுதானிய மாவு - ஒரு டீஸ்பூன், இந்துப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் புரோக்கோலியுடன் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயத்தாள், வெங்காயம், 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், இந்துப்பு சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் இதை அரைத்து மீதமுள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஆரிகானோ, பட்டை - கிராம்புத்தூள்,  சிறுதானிய மாவு சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பருகவும். டயட்டில் இருப்பவர்கள் காலை உணவுக்குப் பதிலாக இந்த சூப் பருகலாம். விருப்பப்பட்டால், இதனுடன் பிரவுன் பிரெட் சாண்ட்விச் சேர்த்துக்கொள்ளலாம்.

பயன்:
எடையைக் குறைக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.

**டயட் தேநீர்

தேவையானவை:

பட்டை - 100 கிராம், மல்லி (தனியா) - 50 கிராம், சுக்கு - 30 கிராம், கிராம்பு - 20 கிராம், எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்), தேன் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - 100 மில்லி.

செய்முறை:

வெறும் வாணலியில் பட்டை, தனியா, சுக்கு, கிராம்பு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். தண்ணீரைச் சூடாக்கி, ஒரு டீஸ்பூன் அரைத்த பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு,  தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

பயன்:
கொழுப்பைக் கரைக்கும். உடல் எடை குறைய உதவும். இந்தத் தேநீர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அருந்தவும்.

**சுரைக்காய் சாரம்

தேவையானவை:

சுரைக்காய்த் துண்டுகள் - ஒரு கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, புதினா, கறிவேப்பிலை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் சுரைக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, இந்துப்பு சேர்த்து, அரை கப் தண்ணீர்விட்டு மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து அரைத்த விழுதுடன் கலக்கவும். இதைச் சிறுதானியச் சாதத்துடன் சாப்பிடலாம்.

பயன்:
சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து, கனிமச்சத்து, உயிர் சத்துகள் அனைத்தும் உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கும்.

**முள்ளங்கி பராத்தா

தேவையானவை:

முள்ளங்கித் துருவல் – ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முள்ளங்கித் துருவலுடன் சீரகம், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கோதுமை மாவு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பராத்தாக்களாக திரட்டவும். தோசைக்கல்லை காயவைத்து பராத்தாக்களைப் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகச் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். சைட் டிஷ் தேவையில்லை. விரும்பினால் தயிர்ப் பச்சடி சேர்த்துப் பரிமாறலாம்.

பயன்:
முள்ளங்கி எடை குறைப்புக் கேற்ற சிறந்த உணவாகும். ஒரு வேளைக்கு இரண்டு பராத்தாக்கள் மட்டுமே சாப்பிடவும்.

**முருங்கைக்கீரை தண்ணீர் சாறு

தேவையானவை:

முருங்கைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 12 (தோலுரித்து நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பூண்டு – 5 பல், அரிசி கழுவிய தண்ணீர் - 2 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் முருங்கைக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, சீரகம், மிளகு, பூண்டு, உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு மசிக்கவும். இதை வடிகட்டாமல் அப்படியே எடுத்துக்கொள்ளலாம். காலை அல்லது மதிய உணவாகப் பருகலாம்.

பயன்:
தினசரி அல்லது வாரத்தில் 3 முதல் 4 நாள்கள் பருகினால் தொப்பைக் குறையும். இது, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். தைராய்டு ஹார்மோன்களைச் சமன் செய்யும். எடைக்குறைப்பின்போது ஏற்படும் சோர்வைத் தடுக்கும்.

**கேரட் டயட் ஜூஸ்

தேவையானவை:

கேரட் - 2 (துண்டுகளாக்கவும்), எலுமிச்சைப்பழம் - அரை மூடி அல்லது ஆரஞ்சுப்பழம் - ஒன்று (சாறு பிழியவும்), புதினா - ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை:

கேரட் துண்டுகளுடன் புதினா, தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்துக் கலந்து பருகலாம். இனிப்பு சேர்க்கத் தேவையில்லை.

பயன்:
ரத்தச் சுத்திகரிப்புக்கு உடவும்.  வயிற்றுப் பகுதியில் உள்ள சதை குறையும். கொழுப்பைக் கரைக்கும். முடிந்தவரை ஜூஸ் வகைகளை வடிகட்டாமல் அப்படியே பருகினால், நார்ச்சத்து மிகுந்து விரைவான பலனளிக்கும்.

**வெங்காயத்தாள் இஞ்சி துவையல்

தேவையானவை:

நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப், தோல் சீவிய இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, தோலுரித்த சின்ன வெங்காயம் - 5-8, பச்சை மிளகாய் - 2, புளி - கோலி குண்டு அளவு,  கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தாள், இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்த துவையலுடன் கலக்கவும். இதை பிரவுன் பிரெட்டுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சிறுதானியச் சாதத்துடன் சாப்பிடலாம்.

பயன்:
இது, டயட் கன்ட்ரோலுக்குச் சிறந்த உணவாக அமையும்.

**மாதுளை டயட் ஜூஸ்

தேவையானவை:

மாதுளை முத்துகள் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், தேன் - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்), தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

மாதுளம்பழத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், தேன் சேர்த்துப் பருகலாம்.

பயன்:
டயட்டில் இருப்பவர்கள் காலை 11 மணியளவில் அல்லது மாலை 4 மணி அளவில் பருகலாம். இது, பித்தத்தைக் குறைக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும். மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்யும்.

**தர்பூசணி டயட் ஜூஸ் அண்ட் சாலட்

தேவையானவை:

தர்பூசணி சிவப்புப் பகுதி -  ஒரு பெரிய துண்டு, தர்பூசணியின் வெள்ளைப் பகுதி ஒரு துண்டு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், இந்துப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

சிவப்புத் துண்டுடன் சீரகத்தூள், இந்துப்பு, பட்டைத்தூள், மிளகுத்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டாமல் பருகலாம் (விரும்பினால் நாட்டுச் சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்).
தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அதன் மீது சீரகத்தூள், இந்துப்பு, பட்டைத்தூள், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம். காலை உணவாக இந்த சாலட் மற்றும் ஜூஸ் சாப்பிட்டு வரலாம்.

பயன்:

உடல் எடை நன்றாகக் குறையும். சோர்வை நீக்கி  புத்துணர்ச்சி தரும். `கெட்ட கொழுப்பு’ நீக்கும். காயங்கள், புண்கள் விரைவில் ஆறும். உடல் சூடு தணியும். எளிதில் செரிமானமாகும். தர்பூசணி நீர் சத்து அதிகம் உள்ள பழமாகும்.

**வெயிட் லாஸ் பவுடர்

தேவையானவை:

தனியா (மல்லி), சோம்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - 10 துண்டுகள், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கொள்ளு, ஆளிவிதை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கல் உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் தனியா, சோம்பு, சீரகம், வெந்தயம், பட்டை, கொள்ளு, ஆளிவிதை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதனுடன்  உப்பு சேர்த்து பவுடராக அரைக்கவும். ஒரு கப் தண்ணீருடன் அரைத்த பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு 2 மாதங்கள் தினமும் குடித்து வர... எடை குறைப்பில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

பயன்:
முறையாக டயட் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில், இந்த வெயிட் லாஸ் பவுடர் உறுதுணைபுரியும்.

**சிறுதானிய கஞ்சி

தேவையானவை:

சிவப்பரிசி, குதிரைவாலி அரிசி (சேர்த்து) - ஒரு கப், கொள்ளு - அரை கப், பூண்டு - 7 பல், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்), உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சிவப்பரிசி, குதிரைவாலி, கொள்ளு, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, வறுத்துப் பொடிக்கவும். 250 மில்லி தண்ணீரில் அரைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும் எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து மிதமான சூட்டில் அருந்தவும்.

பயன்:
அதிகப்படியான கொழுப்பை எரித்துக் கரைத்துவிடும். மூட்டுவலி, கால்வலி குறையும். எலும்பு வலுபெறும். காய்ச்சல் நேரத்திலும் கபம் இருக்கும்போதும் இதைச் சாப்பிடலாம்.

**பசலைக்கீரை சூப்

தேவையானவை:

பசலைக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி -  ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் அல்லது அரிசி களைந்த தண்ணீர் - 2 கப், பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் கீரையுடன் பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி,  வெங்காயம், தக்காளி , தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து  எடுத்துப் பருகவும்.

பயன்:
இந்த சூப்பில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.  பருமனான உடல் உள்ளவர்கள் இளைக்க துணைபுரியும்.

**கிரேப்ஸ் ஹெர்பல் ஜூஸ்

தேவையானவை:

விதையுள்ள நாட்டு திராட்சை - ஒரு கப், சீரகத்தூள், மிளகுத்தூள், ஓமம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டாமல் பருகவும்

பயன்:
குடற்புண், கல்லீரல் கோளாறுகளைச் சரிசெய்யும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு அதிகரிக்கும் எடையைக் குறைக்கும்.

**எடை குறைப்பு சூப்

தேவையானவை:

கொள்ளு - ஒரு டீஸ்பூன், பார்லி - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், வெண்பூசணித் துண்டுகள் - கால் கப், வெள்ளரிக்காய்த் துண்டுகள் - கால் கப், ஏதேனும் ஒருவகை கீரை - ஒரு கைப்பிடி அளவு, சுரைக்காய்த் துண்டுகள் - கால் கப், எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்), அரிசி கழுவிய தண்ணீர் - 2 கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் கொள்ளு, பார்லியை எண்ணெய்விடாமல் வறுக்கவும். பிறகு, அதனுடன் வெண்பூசணி, வெள்ளரிக்காய், சுரைக்காய், கீரை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 5 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும்.

பயன்:
எடை குறைப்புக்கு இந்த சூப் முழு பலனளிக்கும். இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி சதையைக் குறைக்கும்.

**அவல் - காய்கறி  கிச்சடி

தேவையானவை:

அவல் - ஒரு கப், வெங்காயம் -  ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி கலவை - ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழியவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், காய்கறி கலவை, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.  பிறகு அவல், உப்பு  சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு 5 நிமிடங்கள்  வேகவைக்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை, புதினா, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். டயட்டில் இருப்பவர்கள் காலை அல்லது மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

பயன்:
இது `பேலன்ஸ்டு டயட்’டாக அமைவதுடன், தேவையான புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும்.

**பார்லி - காய்கறி சூப்

தேவையானவை:

பார்லி - அரை கப், பொடியாக நறுக்கிய (கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், பூசணி) காய்கறிக் கலவை - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு, புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு , மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்,  உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்).

செய்முறை:

பார்லியை வெறும் வாணலியில் வறுத்து உடைக்கவும். குக்கரில் பார்லியுடன் காய்கறிக் கலவை, வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிளகு - சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும்.

பயன்:
ஊளை சதை குறையும்.

30 வகை சிக்கன சமையல் !


30 வகை சிக்கன சமையல் !

காய்கறிகளின் விலை, திடீர் திடீர் என்று நினைத்துப் பார்க்க முடியாத உச்சத்தைத் தொட்டு விடும்போது… ‘எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?’ என்று மண்டையிடியே வந்துவிடும்தானே! அதற்கு மருந்துபோடும் வகையில், 30 வகை ‘சிக்கன ரெசிபி’களை வழங்கி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ‘பட்ஜெட் சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ நங்கநல்லூர் பத்மா.

”வாழைத்தண்டு, கீரை, பூசணிக்காய், பப்பாளி, வேப்பம்பூ போன்ற விலை அதிகம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி, சுவையில் சூப்பராக இருக்கும் அயிட்டங்களை தந்துள்ளேன். குறைவான செலவில் இவற்றை செய்து பரிமாறி, நிறைவான பராட்டுக்களை அள்ளுங்கள்” என்று வாழ்த்தும் பத்மாவின் ரெசிபிகளை, அலங்கரித்து பரிமாறுகிறார் செஃப் ரஜினி.

கீரைக்கூட்டு

தேவையானவை: அரைக்கீரை – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, பாசிப்பருப்பு – 100 கிராம், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, தண்ணீர் வடிய விட்டு பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிடவும். நறுக்கிய கீரையுடன் தேவையான உப்பு கலந்து நன்றாக வேக வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வெந்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு தாளித்து இறக்கவும்.

குறிப்பு: அரைக்கீரை கண்ணுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்லது.

வெஜிடபிள் கோஸ்மல்லி

தேவையானவை: பாசிப்பருப்பு – 100 கிராம், துருவிய கோஸ், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – தலா ஒரு கப், தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சம் பழம் – ஒரு மூடி, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்கு வடித்துவிடவும். துருவிய கேரட், கோஸ், நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இதே முறையில் முளைகட்டிய பயறு வகைகளையும் தயாரித்துச் சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகளை சேர்த்து (வெங்காயம், தக்காளி, பச்சை சோளம்) பச்சையாக சாப்பிடுவதால், அனைத்துச் சத்துகளும் அப்படியே உடலுக்கு கிடைக்கும்.

கத்திரிக்காய் ரசவாங்கி

தேவையானவை: கத்திரிக்காய் – 250 கிராம், தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் – ஒரு கப்,  வெல்லம் – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி… உப்பு சேர்த்து, புளியை கரைத்து விட்டுக் கொதிக்க விடவும். தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்திருக்கும் கத்திரிக்காயுடன் சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

குறிப்பு: இதைச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

கேழ்வரகு இனிப்பு தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு – 250 கிராம், அரிசி மாவு – ஒரு கப், வெல்லம் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 50 மில்லி.

செய்முறை: வெல்லத்தை தூளாக்கி சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதில் இரண்டு வகை மாவையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து தோசைகளாக வார்த்து, இருபுறமும் சிறிது நெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பூ பொரியல்

தேவையானவை: வாழைப்பூ – ஒன்று (சிறியது), தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளித் தண்ணீர் – சிறிய கப், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மோர் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் நரம்பு போல் உள்ள காம்பை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கி, சிறிது மோர் கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து நன்கு பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, மிளகாய் வற்றல் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை, பிழிந்து வைத்திருக்கும் வாழைப்பூ, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: வாழைப்பூவில் உள்ள துவர்ப்புச்சத்து சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு நல்லது. இதை துவையல், உசிலி, கூட்டு என்று பல விதமாகத் தயாரிக்கலாம்.

வாழைத்தண்டு புளிப்பச்சடி

தேவையானவை: வாழைத்தண்டு – ஒரு பெரிய துண்டு, புளி – எலுமிச்சம் பழ அளவு, பொடித்த வெல்லம் – 50 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், மோர் – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டை மேல் தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி நாரை நீக்கிப் பொடியாக நறுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் ஊற்றி நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, நறுக்கிய வாழைத்தண்டை எடுத்து அதனுடன் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். அதில் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு தாளித்து இறக்கவும்.

குறிப்பு: வாழைத்தண்டு பித்தப்பையில் கல் சேராமல் தடுக்கும். நார்ச்சத்து உடையது. ஜூஸ் செய்தும் குடிக் கலாம்.

புரோட்டீன் தானிய கூட்டு #Ecr_special

தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, மொச்சை, பச்சைப் பட்டாணி, முளைகட்டிய பாசிப் பயறு, முளைகட்டிய கொள்ளு – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 4 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, மொச்சை, பாசிப் பயிறு, கொள்ளு எல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் சேர்த்து, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து… இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பயறு வகையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, வேக வைத்த பயறுடன் கலந்து  இறக்கவும்.

குறிப்பு: பயிறு வகைகளில் புரோட்டீன் அதிகம் என்பதால்… சுண்டல், சாலட், அடை, வடை என்று பல விதமாக பயிறு வகைகளைப் பயன்படுத்தலாம்.

ரத்ன லட்டு

தேவையானவை: கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, சாமை அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, கொள்ளு, சிவப்பரிசி – தலா ஒரு சிறிய கப், பார்லி – 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மில்லி, சர்க்கரை – 250 கிராம்.

செய்முறை: கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், சாமை அரிசி, பொட்டுக் கடலை, ஜவ்வரிசி, பார்லி, கொள்ளு, சிவப்பரிசி எல்லாவற்றையும் கல் நீக்கி, தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து, அரைத்த மாவுடன் கலந்து, நெய்யை சூடாக்கி விட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு:  விலை மலிவாக கிடைக்கும் இந்த தானியங்களில்  நிறைய சத்துகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு தினம் ஒரு உருண்டை கொடுத்தால், நல்ல வளர்ச்சி இருக்கும். முந்திரி, பாதாம் சேர்த்தும் அரைக்கலாம்.

சோயா  மொச்சை கிரேவி

தேவையானவை: சோயா – 100 கிராம், மொச்சை – 100 கிராம், தக்காளி – 2, மிளகாய் வற்றல் – 2, தனியா – ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 2 பல், தயிர் – 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயா, மொச்சையைக் குக்கரில் வைத்து, தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும் தக்காளி, மிளகாய் வற்றல், தனியா, இஞ்சி, பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை, சோயாவைப் போட்டுக் கொதிக்க வைத்து, தயிர் விட்டு இறக்கவும்.

குறிப்பு: சோயா மொச்சையுடன் இஞ்சி, பூண்டு சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது.

பிரெட் பக்கோடா

தேவையானவை: பிரெட் – 10 துண்டுகள், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டின் ஓரத்தை கட் செய்து நீக்கவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு  ஆகியவற்றை பிரெட்டுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்ததை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:  சட்னி அல்லது சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 500 கிராம், துருவிய கேரட், துருவிய முள்ளங்கி – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்- ஒரு கப், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். முள்ளங்கி துருவல், கேரட் துருவல், வெங்காயத்தாள் எல்லாம் சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: இதே முறையில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கோஸ் துருவல் போட்டும் தயாரிக்கலாம். புதினா, கொத்தமல்லி நறுக்கிப் போட்டும் தயாரிக்கலாம்.

முருங்கைக்கீரைப் பொரியல்

தேவையானவை: ஆய்ந்து எடுத்த முருங்கைக்கீரை – 250 கிராம், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் – ஒன்று, பெருங்காயத்தூள், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்கீரையைப் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, வெந்த கீரையை பிழிந்து போட்டு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: முருங்கைக்கீரையில் அடை, வடை, கூட்டு என்று பல விதமாக தயாரிக்கலாம்.

கார்ன் ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி – 200 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், சோளம் – 2, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து அரைக்கவும். சோளத்தை உரித்து முத்துக்களை எடுத்து தனியாக அரைத்து, மாவுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை உற்றி தோசைகளாக வார்த்து,  இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.

குறிப்பு: சோளம் கிடைக்கும் சமயத்தில் வித்தியாசமான இந்த ஊத்தப்பம் தயாரித்து சாப்பிடலாம்.

நோன்பு அடை

தேவையானவை: அரிசி – 250 கிராம், சிவப்பு காராமணி- 50 கிராம், வெல்லம் – கால் கிலோ, ஏலக்காய்த்தூள், தேங்காய் (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு.

செய்முறை: அரிசியை ஊற வைத்து களைந்து ஒரு துணியில் பரவலாகப் போட்டு, ஈரம் உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்து, மாவு சல்லடையால் சலித்து, பொன்னிறமாக மாவை வறுக்கவும். ஒரு பங்கு மாவுக்கு ஒன்றரை பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு வெல்லத்தைக் கரைத்து வடிக்கட்டி, சூடாக்கி… கொதிக்கும்போது மாவைத் தூவி கிளற வேண்டும். காராமணியை வறுத்து ஊற வைத்து வேகவிடவும். கிளறிய மாவுடன் ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய தேங்காய், காராமணி சேர்த்துப் பிசைந்து வடை போல தட்டி, இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும்.

குறிப்பு: இதற்கு வெண்ணெய் சிறந்த காம்பினேஷன். இதே முறையில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து உப்பு அடையும் தயாரிக்கலாம்.

பப்பாளி கூட்டு

தேவையானவை: பப்பாளிக்காய் (சிறியது) – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், பச்சை மிளகாய்  – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு கப், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய்  – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும் . பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை போட்டு கலந்து… கொதிக்க வைத்து இறக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு அடை

தேவையானவை: இட்லி அரிசி – 250 கிராம், மரவள்ளிக்கிழங்கு – ஒன்று, துவரம்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய் வற்றல் – மூன்று, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு,

செய்முறை: இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய் வற்றல் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து களைந்து தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்று சேர்க்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி, கேரட் துருவியில் துருவி, மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கறிவேப்பிலை நறுக்கிப் போடவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மரவள்ளிக்கிழங்கு அதிகமாக கிடைக்கும்போது வறுவல் தயாரித்து வைக்கலாம்.  வேக வைத்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.

சோனைக்கிழங்கு சாண்ட்விச்

தேவையானவை: சேனைக்கிழங்கு – 250 கிராம், சோம்பு – ஒரு டீஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், சின்ன வெங்காயம் – 2, மிளகாய் வற்றல் – 6, தனியா – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோனைக்கிழங்கை தோல் சீவி பிரெட் ஸ்லைஸ் வடிவத்தில் நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். சோம்பு, கசகசா, பூண்டு, மிளகாய் வற்றல், தனியா, வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைக்கவும். வேக வைத்த சேனைத் துண்டுகளின் இருபுறமும் அரைத்த மசாலாவை தடவி, நான்-ஸ்டிக் தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுத்து இறக்கவும்.

குறிப்பு: மசாலா வாசனையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

பரங்கிக்காய் காரக்குழம்பு

தேவையானவை: பரங்கிக்கீற்று – ஒன்று, புளி – ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து, புளியைக் கரைத்து விட்டு, தேவை யான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கூடவே பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு நன்கு வெந்ததும் பெருங் காயத்தூள் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: விருப்பமான காய்களில் இதே முறையில் காரக்குழம்பு தயாரிக்கலாம்.

பூசணிக்காய் மோர் கூட்டு

தேவையானவை: பூசணிக் கீற்று – 2, தேங்காய் துருவல், தயிர் – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூசணிக்காயை தோல் சீவி, பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து பூசணிக்காயுடன் சேர்க்கவும். பிறகு… தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, தயிர் விட்டு கலக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

மல்டி பருப்பு வடை

தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு – தலா ஒரு கப், துவரம்பருப்பு, உளுந்து – தலா ஒரு கப் (ஊற வைக்கவும்), மிளகாய் வற்றல் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக் கடலை, கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து… மிளகாய் வற்றல், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதே முறையில் சோளம், முளைவிட்ட பச்சைப் பயறு, மொச்சை போன்றவற்றை வைத்தும் தயாரிக்கலாம்.

வெங்காயத் துவையல்

தேவையானவை: சின்ன வெங்காயம் – 200 கிராம், மிளகாய் வற்றல் – 2, உளுத்தம்பருப்பு – 50 கிராம், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து,  மிக்ஸியில் அரைக்கவும். சிறிது மசிந்ததும் புளி, உப்பு சேர்த்து அரைத்து, அதற்குப் பிறகு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடக்கூடாது.

குறிப்பு: இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சிறந்த காம்பினேஷன்.

கலவைக் காய் சொதிகுழம்பு

தேவையானவை: கேரட், குடமிளகாய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் – தலா ஒன்று, அவரைக் காய் – 4, வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப், புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் – 100 மில்லி, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாய், கத்திரிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் ஓரளவு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்து காய்களையும் வதக்கி உப்பு சேர்த்து, புளி கரைத்துவிட்டு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பால் விட்டுக் கலக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: எல்லா காய்களும் மிச்சப்பட்டிருக்கும்போது இந்த குழம்பு தயாரிக்கலாம். தேங்காய்ப் பாலுக்கு பதில் தேங்காயை அரைத்து சேர்த்தும் கொதிக்கவிட்டு இறக்கலாம்.

சுண்டைக்காய் பொரியல்; #Nachikulam_special

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் – 250 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காயை காம்பு ஆய்ந்து சிறிது நசுக்கி,  எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த சுண்டைக்காய், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: வீட்டுக்கு ஒரு சுண்டைச் செடி இருந்தால் போதும்… வற்றல் தயாரித்து வைக்கலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமாக தயாரிக்கலாம்.

கார்ன்   காலிஃப்ளவர் சூப்

தேவையானவை: காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், ஸ்வீட் கார்ன் (உதிர்த்தது) – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சோள மாவு  – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி –  சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து, அதில் சோள மாவை  கரைத்து விட்டு… உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் கோஸ் , கேரட், பட்டாணியிலும் சூப் தயாரிக்கலாம்.

பரங்கிக்காய் ஓலன்

தேவையானவை: பாதி முற்றிய பரங்கிக்காய் – 2 கீற்று, தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பரங்கிக்காயை வறுவலுக்கு நறுக்குவது போல நறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய பரங்கிக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

குறிப்பு: சிறிய பரங்கிக்காயில் (பரங்கிப் பிஞ்சு) அடை, பால் கூட்டு தயாரிக்கலாம். பாதி முற்றியதும் ஓலன் தயாரிக்கலாம். நன்கு முற்றியதும் அல்வா, பொரியல், சாம்பார் செய்யலாம்.

கோவைக்காய் துவட்டல்

தேவையானவை: கோவைக்காய்  – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, மிளகாய்த்தூள்  – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த கோவைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.

குறிப்பு: இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாதிக்கும் தொட்டு சாப்பிடலாம்.

வெந்தயக் கீரை பணியாரம்

தேவையானவை: வெந்தயக் கீரை – ஒரு கட்டு, இட்லி மாவு – 250 கிராம், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், எண்ணெய் – 100 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காயத்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். வெந்தயக் கீரையில் சாம்பாரும் செய்யலாம்.

எள்ளு சாதம்

தேவையானவை: அரிசி – 250 கிராம், எள்ளு – 50 கிராம், மிளகாய் வற்றல் – 2, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலை வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் இந்தப் பொடியை சேர்த்து எண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: இதற்கு தயிர் பச்சடி சிறந்த காம்பினேஷன். எள் எலும்புக்கு வலிமை தரும். எள் உருண்டையும் தயாரித்து சாப்பிடலாம்.

வேப்பம்பூ பச்சடி

தேவையானவை: வேப்பம்பூ – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் – ஒன்று, எண்ணெய்  – ஒரு டீஸ்பூன், வெல்லம் – 100 கிராம், உப்பு – சிறிதளவு

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து… புளிக் கரைசல், உப்பு சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன் வேப்பம்பூவை வறுத்துப் போட்டு இறக்கவும்.

குறிப்பு: வேப்பம்பூ சீஸனில் வேப்பம்பூவை சேகரித்து வைத்தால்… பொடி, துவையல், ரசம் என்று பலவிதமாக பயன்படுத்தலாம். பித்தத்துக்கு மிகவும் நல்லது.

கேப்சிகம் ரைஸ்

தேவையானவை: அரிசி – 250 கிராம், குடமிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 2, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். குடமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்துமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: குடமிளகாயுடன் பேபி கார்ன், புதினா சேர்த்தும் தயாரிக்கலாம்.
Thanks Aval Vikatan