செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நீண்ட நாட்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் சந்தோஷமா வாழணுமா?


நீண்ட நாட்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் சந்தோஷமா வாழணுமா?

 அப்போ ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள் அப்படினு பலரும் சொல்லி கேட்டிருப்போம், அது உண்மையும் தான்.

ஆனால், அதே சமயம் எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதைச் சாப்பிடுவதற்கும் ஒரு நேரம் காலம் உள்ளது.

நமக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அதைக் குணப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையைச் சாப்பிடுவதற்கு கூட ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லப் படுகிறது.

 அப்படியிருக்கையில் கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் இந்த 10 உணவுப் பொருட்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்து உங்கள் உயிருக்கே ஆபத்தாகவும் அமையலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

இந்த 10 உணவு வகைகள் கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் அல்ல நம் அன்றாட வாழ்வில் சாப்பிடும், தவிர்க்கவே முடியாத இடத்தைப் பிடித்த உணவுகள் தான் அவை. வாருங்கள் அந்த 10 என்னவென்று தெரிந்துகொள்வோம்.

1. வாழைப்பழம்:


எல்லாப் பருவங்களிலும் எல்லா இடத்திலும் மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு பழம் வாழை.

நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை வாழைப்பழத்திற்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு.

அதிக பொட்டாஷியமும், நார் சத்தும் நிறைந்த வாழைப்பழத்தைக் காலை உணவாகவே பலரும் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறோம், அதன் ஆபத்து தெரியாமல்.

 வாழைப்பழம் அமிலத் தன்மை கொண்டது, இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்னைகளை இது உண்டாக்கும்.

 அதே போல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களைப் பலவீனமாக்குவதோடு, சோர்வான உணர்வைத் தரும்.

 பின் நாட்களில் குடல் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள்.

2. தயிர்:


வெயில் காலம் வந்துவிட்டாலே வெப்ப சலனத்தில் இருந்து நமது உடலைப் பாதுகாக்க நாம் நாடும் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது தயிர். ஒரு சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடே இறங்காது.

ஆனால், என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

 இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தயிர் சாப்பிட்டால் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்னையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு, இரும்பல் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

3. கிரீன் டீ:

உடல் எடை குறைய வேண்டுமா? ‘என்னுடைய அழகான உடல் அமைப்பிற்குக் காரணம் கிரீன் டீ!’ என்று பல சினிமா பிரபலங்கள் சொல்லக் கேட்டு பிடித்தும் பிடிக்காமலும் அந்த கிரீன் டீ குடிப்பவர்கள் பலர்.

ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

அதில் இருக்கும் கஃபைன் உடலில் உள்ள நீர் சத்தை குறைத்து தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்.

 அது மட்டுமின்றி 3 அல்லது 4 மணி நேரத்திலேயே உடல் சோர்வை ஏற்படுத்தி நம்மைப் பலவீனமாக்கி விடும்.

4. சாதம்:

நீரிழிவு, ரத்த கொதிப்பு எனப் பல பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் சொல்லும் முதல் கண்டிஷன் இரவில் சாதம் சாப்பிடாதீர்கள் என்பது தான்.

ஏன் நாள் முழுக்க நாம் சுறுசுறுப்புடன் செயல்படத் தேவையான கர்போஹைட்ரேட்டை தருவது இந்தச் சாதம் தான், ஆனால் அதே சமயம் இரவு நேரத்தில் சாதம் சாப்பிட்டால் அதில் அதிகமாக இருக்கும் ஸ்டார்ச் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, உடல் எடையை அதிகரிக்கும்.

அதிகமான உடல் எடை பின் நாட்களில் ரத்த அழுத்தம், இதய நோய் என நம் உயிருக்கே ஆபத்தாகக் கூடிய பல நோய்களை வரவழைக்கும்.

5. பால்:


எந்தச் சத்து உடலில் குறைந்தாலும் சரி அது சரி செய்யப் பால் மட்டுமே போதும். கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு என அனைத்துச் சத்துக்களும் பாலில் நிறைந்துள்ளது.

 பாலை இரவு உறங்கப் போவதற்கு முன்பு குடித்தால் நல்ல நிம்மதியான தூக்கம் வருவதோடு பாலில் உள்ள மொத்த சத்துக்களையும் உடல் ஈர்த்துக்கொள்ளும், ஆனால் அதே சமயம் பகல் வேலையில் பால் குடிப்பது மந்தமான உணர்வைக் கொடுக்கும்.

6. ஆப்பிள்:

நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் உண்டு என்பதை நமது பள்ளி காலம் முதலே நாம் படித்து இருப்போம்.

ஆனால் அத்தனை ஆரோக்கியமான ஆப்பிளைக் கூட இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது.

 ஆப்பிளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தித் தூக்கத்தை கெடுக்கும்.

இரவு வேளையில் உணவு செரிமானம் ஆக மிகவும் நேரம் எடுக்கும் என்பதால் அமிலம் நிறைந்த இந்த ஆப்பிள் நீண்ட நேரம் நம் வயிற்றில் தங்கி வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

7. சாக்லேட்:

சாக்லெட்டில் இருக்கும் ஆர்கானிக் கலவைகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

 ஆனால் டார்க் சாக்லேட்டில் குறைவாக இரு

சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும் உணவுப்பழக்கம்.



  1. சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும் உணவுப்பழக்கம்.


தற்காலத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்தரபாண்டியன் சிறுநீரக பாதிப்பு பிரச்சனை குறித்து விளக்குகிறார்.

*🔻தீட்டிய அரிசி🔻*

கடந்த காலங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே சிறுநீரக பாதிப்பு வரும். தற்போது, 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கூட சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சைக்கு வருகிறார்கள். சிறுநீரக பாதிப்புக்கு சர்க்கரை நோய் ஒரு முக்கிய காரணமாகும். சர்க்கரை நோய்க்காக சிகிச்சைக்கு போனால் மருத்துவர்கள் அரிசி உணவை குறைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

நமது முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியை உண்டார்கள். சர்க்கரை நோய் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், நாம் இன்று தீட்டிய அரிசியை சாப்பிடுகிறோம். இந்த தீட்டிய அரிசி என்பது அரிசி மணியின் மேல்புறத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் பல்வேறு சத்துகளும் நீக்கப்பட்ட சர்க்கரை மட்டுமே.

எந்த சத்துகளும் இல்லாத இந்த தீட்டப்பட்ட சர்க்கரை அரிசியை உண்டு வந்தால் உடலில் சர்க்கரை உயரும். சத்து நிரம்பிய கைக்குத்தல் அரிசியையும் சிறுதானியங்களையும் உண்டால் சர்க்கரை நோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைவு. இதனால், சர்க்கரை நோய் மூலம் ஏற்படும் சிறுநீரக பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம்.

*🔻பாக்கெட் உப்பு தப்பு🔻*

சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவர்கள் நோயாளியிடம் உணவில் உப்பு சேர்ப்பதை நிறுத்தச் சொல்வார்கள். நாம் உண்ணத் தகுந்த உப்பு என்பது கடலில் இருந்து நேரடியாக கிடைக்கும் பழுப்பு நிறத்தில் காணப்படும் ஒரு வகை உப்பு.

இதில் மாங்கனீஸ், பொட்டாஷ் உள்பட உடலுக்கு மிகத்தேவையான சத்துகள் இருக்கின்றன. இந்த உப்பு வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்று பாலிஸ் செய்து சத்துகளை நீக்குகிறார்கள். கடைசியில் மிஞ்சுவது சோடியம் குளோரைடு உப்புதான்.

இந்த சத்தற்ற உப்பையே நாம் பயன்படுத்துகிறோம். இது அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் போது சிறுநீரகம் பழுதடையவே செய்யும். தீட்டப்படாத பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு.

*🔻கசக்கும் சர்க்கரை🔻*

நமது முன்னோர்கள் கரும்புச்சர்க்கரையை பயன்படுத்தினார்கள். இது உடலுக்கு நன்மை தரும். இன்று இந்த சர்க்கரையில் உள்ள சத்துகளை நீக்கி விட்டு சீனியாக விற்பனை செய்கிறார்கள்.

இந்த சீனி உடலில் சர்க்கரை அளவை உயர்த்தும். சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்புகளை உருவாக்கும். சீனியை தவிர்த்தால் சிறுநீரகம் பாதிப்படைவதை தடுக்கலாம். சீனிக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.

*🔻புதிய புதிய எண்ணெய்🔻*

பல காலங்களாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினர். இவை இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட ஜீவ உறுப்புகளை பலப்படுத்துபவை.

குறிப்பாக, இவை இதயம் தொடர்பான நோய்களை தடுக்க வல்லவை. இவற்றை விட்டு விட்டு சந்தையில் கிடைக்கும் புதிய புதிய தாவர எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறோம். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

எனவே, சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு வரும் முன் தடுக்க மற்ற எல்லாவற்றையும் விட உணவு முறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இதன் மூலம் உடலின் சீரான இயக்கத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யலாம். குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான நோய்களை தடுக்கலாம்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

கிராமத்து சமையல் ஐம்பது வகையான சமையல் குறிப்புகள்


கிராமத்து சமையல் ஐம்பது வகையான சமையல் குறிப்புகள்

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ”D” யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.


30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

புதன், 14 பிப்ரவரி, 2018

எதிர் உணவுகள்



எதிர் உணவுகள்
____________________
எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக்கூடாது!

எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் அவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து உடல்நிலையை பாதிக்கும்.

உடலுக்குப் பெருங்கேடு உண்டாகும்!
எல்லோரும் இதை அறிந்து எதிர் உணவுகளை உண்ணாமல தவிர்க்கவும்.

எதிர் உணவுகள்
மீன் X முள்ளங்கி
பசலைக்கீரை X  எள்
திப்பிலி X மீன்.
தயிர் X மீன் .
திப்பிலி X தேன்.
துளசி X  பால்.
தேன் X  நெய்.
பால் X  புளிப்பான பொருள்கள்.
மோர் X  வாழைப்பழம்
இறைச்சி X  விளக்கெண்ணெய்
முள்ளங்கி X  பால்
அகத்திக்கீரை X ஆல்கஹால்

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பலருக்கும் பகிருங்கள்!

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.


வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
குடலை சுத்தமாக்க :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.


ரத்த சோகை :
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.


மாதவிடாய் வலிக்கு :
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


டீன் ஏஜ் பெண்கள் :
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.


தாய்ப்பால் அதிகரிக்க :
முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.


கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.


மலச்சிக்கல் :
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.


உடல் எடைக்கு :
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.


இதய நோய்கள் :
தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.


அசிடிட்டி :
அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.


சர்க்கரை வியாதி :
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


கூந்தல் வளர்ச்சி :
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.


பித்த நோய்கள் :
நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்


சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்

இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.

''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.

''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்'' என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார்.

''சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய சாப்பிடுவதால்தான், உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, தவிர்ப்பது முக்கியம்'' என்கிற ஷீலா பால், சர்க்கரை நோய்க்கான சில ஸ்பெஷல் ரெசிபிகளைச் சொல்ல, அவற்றைச் செய்து காட்டி அசத்தினார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

சத்துமாவு பாசிப்பருப்பு அடை
--------------------------------------------
தேவையானவை: எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு, பாசிப்பருப்பு - தலா அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

கம்பு தயிர் சாதம்
-------------------------
தேவையானவை: கம்பு - ஒரு கப், தண்ணீர் - 5 கப், பால் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, 'விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.

உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்
----------------------------------------------------------------

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4, மாங்காய் இஞ்சி - 50 கிராம், கொத்துமல்லித் தழை - கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, புளி - சிறு அளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்’ தயார்.

கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்
--------------------------------------------

தேவையானவை: சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் - தலா பாதி அளவு, லெட்டூஸ் இலை - சிறிதளவு, தக்காளி - 1, ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன், வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.

முளைகட்டிய பாசிப்பயறு சூப்
--------------------------------------------

தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.

செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.

விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.

நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்
--------------------------------------------------------------
தேவையானவை: கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 6 பல், வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.

குறிப்பு: நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்..!


மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்..!

கோதுமை வடநாட்டு உணவுப்பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்துவிட்டது. சப்பாத்தி மற்றும் பூரி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ்...

* சுக்கா ரொட்டிக்கு மாவு தயாரிக்கும்போது, கோதுமை மாவுடன் கொதிக்கும் வெந்நீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான சுக்கா ரொட்டிகளைப் பெறலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும்.

* சமோசாவிற்கு மாவு பிசையும்போது மைதா மாவுடன் சிறிது சோளமாவு சேர்த்து பிசைந்தால் வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.

* கோதுமை அடை செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் சேர்த்து பிசைந்தால் அடை மிருதுவாக இருக்கும்.

* பூரி தயாரிக்க மைதாவுடன், கோதுமை மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* பூரி மாவுடன் சிறிது குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து பிசைந்தால் பூரிக்கு சூப்பர் டேஸ்ட் கிடைக்கும்.

* சோளமாவு சப்பாத்தி செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* பாதுஷா செய்ய மைதா மாவுடன், தயிர், டால்டா சேர்த்து தண்ணீர்விடாமல் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக திரிதிரியாக வரும்.

* தந்தூரி ரொட்டி செய்ய மாவில் கொதிக்கும் தண்ணீர், உப்பு, சோடாமாவு சேர்த்து பிசையலாம்.

* கடலை மாவு பப்படம் செய்ய கடலைமாவுடன் சிறிது மைதா கலந்து பிசைந்து தயாரியுங்கள்.

* சோமாஸ் செய்யும்போது மைதாவுடன் சூடான பால் கலந்து மாவு தயாரிக்கவும்.

* பரோட்டா செய்ய மைதாவுடன், கால் பங்கு கோதுமை மாவு கலந்து காய்ச்சிய எண்ணெய், தண்ணீர் கலந்து இலகுவாக பிசையவும்.

* ருமாலி ரொட்டி (மிகவும் மெல்லிய மைதா சப்பாத்தி) செய்ய மைதாவுடன் காய்ச்சிய எண்ணெய் தண்ணீர், சிறிது சீஸ் சேர்க்கவும்.

* தேப்னா செய்ய கோதுமை மாவுடன், கடலைமாவு, ரவை, அரிசிமாவு சேர்த்து பிசையுங்கள்.

* மசாலா சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி, மசித்த பாலக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து பிசையலாம்.

* பருப்பு- தயிர் கூட்டு செய்யும்போது வேக வைத்த பருப்புடன், காய்கறி, தயிர் கலந்து, இறக்கும்போது சிறிது மைதா கலந்து விட்டால் கூட்டு வெண்மையாக, சுவையாக இருக்கும்.